கரோனா பலி: தப்பிய கணக்கும் தரவு எழுப்பும் கேள்விகளும்

By ஆதி வள்ளியப்பன்

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. கரோனா வைரஸுக்குப் பலியானோர் எண்ணிக்கை தொடர்பாக இவ்வளவு காலம் நிலவிவந்த மர்மம் கடைசியாக விலகப்போகிறது. கரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை குறித்து இதுவரை திட்டவட்டமாக யாருக்கும் தெரியாது. உலக சுகாதார நிறுவனம் (உ.சு.நி) அந்தத் தரவு சார்ந்த கணக்கீட்டை மேற்கொண்டுவருகிறது. டிசம்பர் 2021 வரை கரோனாவுக்கு 60 லட்சம் பேர் பலியாகியிருப்பதாகப் பல்வேறு நாட்டு அரசுக் கணக்கீடுகள் கூறுகின்றன. ஆனால், உலக சுகாதார நிறுவனக் கணக்குப்படி, பலியானவர்கள் எண்ணிக்கையோ 1.5 கோடி.

கரோனா வைரஸ் எப்படிப்பட்ட உயிரிழப்பு சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைப் புரிந்துகொள்ள இந்த அறிக்கை உதவும். கரோனா வைரஸின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தொற்றுநோய்கள் பரவினால் எதிர்கொள்வதற்கான கொள்கைகளை வகுக்கவும், திட்டமிடவும், தடுப்பூசிகள் எவ்வாறு நமக்கு உதவின என்பதை அறியவும் இந்தத் தரவுகள் அவசியமாகின்றன. ஓராண்டுக்கு மேலாக ஆராய்ச்சி, பகுப்பாய்வு நடத்தப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட இந்தத் தரவு இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. கரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானவர்கள் குறித்த தரவை உ.சு.நி. தற்போது வெளியிடக் கூடாது, இந்த வெளியீட்டை 10 ஆண்டுகளுக்கு ஒத்திப்போட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்திவருகிறது.

இழந்தது அதிகம்

கரோனா தாக்கத்தால் இந்தியாவில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5.2 லட்சம் என்று மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால், உ.சு.நி. கணக்கீட்டின்படி கரோனாவுக்கு இந்தியாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 40 லட்சம். இது அரசு கூறுவதைவிட 8 மடங்கு அதிகம். இறந்த 8 பேரில் ஒருவர் மட்டுமே அரசுக் கணக்கீட்டில் வந்திருக்கிறார். இந்தப் புதிய தரவின்படி, கரோனா வைரஸுக்கு மிக அதிக மக்களைப் பலிகொடுத்த நாடாக இந்தியா மாறுகிறது. கரோனா வைரஸ் இரண்டாம் அலையில் இந்தியா இழந்தது அதிகம் என்பது பட்டவர்த்தனமாகிவிட்டது. கரோனாவுக்குப் பலியானவர்களில் கணக்கில் விடுபட்டுப்போனவர்கள் குறித்து தரவு இதழாளர் எஸ்.ருக்மிணி உள்ளிட்டோர் முன்வைத்த கேள்விகளையும் தரவு சார்ந்த இடைவெளிகளையுமே உ.சு.நி. அறிக்கை அழுத்திச் சொல்லியிருக்கிறது.

கணக்கிடும் முறை பிரச்சினைகள்

இறந்தவர்கள் எண்ணிக்கை தொடர்பான ஒட்டுமொத்தத் தேசியத் தரவு, உள்ளூர் அளவில் கிடைத்த தகவல்கள், வீடுவாரி ஆய்வு, புள்ளியியல் மாதிரி ஆகியவற்றின் அடிப்படையில் அரசுக் கணக்கீடுகள் தவறவிட்ட இறப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. கரோனாவால் நேரடியாக இறந்தவர்கள், ஏற்கெனவே இருந்த உடல் சிக்கல் கரோனா நோயால் தீவிரமடைந்து இறந்தவர்கள், பெருந்தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறந்தவர்கள் ஆகியோர் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து மரண எண்ணிக்கை தவிர்க்கப்பட்டுள்ளது.

ஒருவர் இறந்தபோது அவரது உடலில் கரோனா வைரஸ் இருந்தால்தான் கரோனா வைரஸால் இறந்தவராகக் கருதப்படுவார் என்று மத்திய அரசு கூறியது ஏற்கெனவே சர்ச்சையாகியிருந்தது. ஒருவருடைய இறப்புக்கு ஏதேனும் ஒரு வகையில் கரோனா காரணமாக இருந்தால், அதை கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட இறப்பாகவே கருத வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்தத் தரவைத் தயாரிப்பதில் உலகெங்கும் உள்ள மக்கள்தொகை ஆய்வாளர்கள், பொதுச் சுகாதார நிபுணர்கள், புள்ளியியலர்கள், தரவு அறிவியலர்கள் ஈடுபட்டார்கள்.

இந்தத் தரவு வெளியிடப்படும் தேதி தொடர்ச்சியாகத் தள்ளிப்போவது தொடர்பாக ‘நியூயார்க் டைம்ஸ்’ ஒரு விமர்சனக் கட்டுரையைக் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனத்தின் தரவைக் கணக்கிடும் முறை தவறு என்று மத்திய அரசு விமர்சனம் செய்தது. இந்திய சுகாதார அமைச்சகத்தின் இந்த எதிர்வினை அடிப்படையிலேயே தவறானது என்கிறார் உ.சு.நி.யின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினரும் பேராசிரியருமான ஜான் வேக்ஃபீல்ட்.

“உலகளாவிய கணிப்பு முறைகள் இந்தியக் கணக்கீட்டுக்குப் பயன்படுத்தப்படவில்லை. இந்தியா எங்களுக்கு அளித்த தரவுகளின் அடிப்படையிலேயே கணக்கில் தவறவிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது” என்கிறார் அவர். உ.சு.நி. தரவு மட்டுமல்ல, 2022 பிப்ரவரியில் பிரபல ஆய்வு இதழான ‘சயின்ஸ்’-ன் ஆய்வும் இதையே சுட்டிக்காட்டுகிறது. அரசுக் கணக்கைவிட ஏழு-எட்டு மடங்கு அதிக இறப்பு நிகழ்ந்திருக்கும் என்று அது கூறியது. அதேபோல் 2022 மார்ச்சில் புகழ்பெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செட்’, இந்தியாவின் மொத்த கரோனா இறப்பு 40 லட்சம் என்று மதிப்பிட்டது.

ஒரு பெருந்தொற்று பரவிக்கொண்டிருக்கும்போது, அதன் காரணமாக இறப்பவர்களைத் துல்லியமாகக் கணக்கில் எடுத்துக்கொள்வது பெரும் சவால் என்பதில் மறுகேள்விக்கு இடமில்லை. இந்தப் பின்னணியில், மருத்துவ அறிவியல், ஆய்வுத் தேவைகளுக்காக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சார்ந்த தரவுகள் உரிய நெறிமுறைகளின்படி பிற்பாடு திரட்டப்படுகின்றன. அது உலக அளவில் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

எதிர்காலத்தில் ஒரு பெருந்தொற்று பரவும்போது பொது முடக்கம் தேவையா, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டாலும் இதயம், நீரிழிவு போன்ற நோயாளிகளுக்குச் சிகிச்சையைத் தொடரலாமா-நிறுத்தலாமா என்பது போன்ற சிக்கலான கேள்விகளுக்கு விடை தேடவும், மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கான கொள்கையை வரையறுக்க இதுபோன்ற தரவுகள் பெரிதும் உதவும்.

வெறுமனே மறுக்க முடியுமா?

கரோனாவால் 3 லட்சம் பேர் இறந்ததாக 2021 இறுதியில் ரஷ்ய அரசு தெரிவித்திருந்தது. அதே நேரம், ரஷ்யப் புள்ளியியல் நிறுவனமும் உ.சு.நி-யின் தரவும் 10 லட்சம் பேர் இறந்ததாகத் தெரிவிக்கின்றன. அந்தத் தரவை ரஷ்ய அரசு ஏற்க மறுத்தாலும்கூட, அந்தத் தரவு வெளியிடப்படுவதைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் அந்நாட்டு அரசு எடுக்கவில்லை. “ஒரு தரவை நீங்கள் மறுக்கிறீர்கள் என்றால், அதற்கான பதிலீட்டுத் தரவை அறிவியல் அடிப்படையில் முன்வைக்க வேண்டும். அதற்குப் பதிலாக ஒரு தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என வெறுமனே மறுக்க முடியாது” என்கிறார் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகப் பொதுச் சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த உயிரிப் புள்ளியியல் பேராசிரியர் பிரமர் முகர்ஜி.

பெருந்தொற்றால் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்த தரவு வெளியிடப்படுவது பெரும் எதிர்வினைகளை உருவாக்கும் என மத்திய அரசு அஞ்சுவதால், அதைத் தடுக்க முயலலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

“இது வெறும் உலகளாவிய கணக்கீடு மட்டுமல்ல, அரசுகளின் பொறுப்புடைமை சார்ந்தது” என்கிறார் உ.சு.நி. நிபுணர் குழுவின் உறுப்பினரான டாக்டர் பிரபாத் ஜா.

முரணான உண்மைகள்

2018-19-ல் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட இறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 7.2 பேர். 138 கோடிப் பேருக்கு இதைக் கணக்கிட்டால், ஒரு நாளைக்கு 27,200 இறப்புகள் வரும். கரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவில் ஒரு நாளைக்கு கரோனாவால் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 4,000 என்றது அரசு. அது இயல்பான இறப்புகளைவிட 15% மட்டுமே அதிகம். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டது, இடுகாடுகள் - சுடுகாடுகளில் ஏற்பட்ட நெருக்கடி நிலைகளுடன் ஒப்பிட்டால், இந்த எண்ணிக்கை எப்படி உண்மையாக இருக்க முடியும்?

கரோனாவால் இறந்ததற்கு இழப்பீடு கேட்டு அரசுக்கு வந்த விண்ணப்பங்கள், கரோனா இறப்பு எண்ணிக்கை என்று அரசு காட்டும் கணக்கைவிட குஜராத்தில் 9 மடங்கு அதிகமாகவும் தெலங்கானாவில் 7 மடங்கு அதிகமாகவும் வந்துள்ளன. அதில் பெருமளவு இழப்பீட்டு மனுக்களுக்கு அரசு இழப்பீடும் வழங்கியுள்ளது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையை அரசு தவறாகக் கணக்கிட்டதையே இது காட்டுகிறது. இந்தப் பின்னணித் தரவுகள், இந்திய அரசு முன்வைக்கும் வாதத்துக்கு எதிராக உள்ளன.

அறிவியல்பூர்வமான பார்வை, வெளிப்படைத்தன்மை, நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு நகரும் உந்துதல் போன்றவை அரசிடம் இருந்தால் ஆய்வாளர்கள், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய வகையில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தரவு இடைவெளியை நிரப்பும் வகையில் ஒரு நாட்டின் தரவு சேகரிப்பு அமைப்பு வலுவாகக் கட்டமைக்கப்படவும் வேண்டும்.

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

To Read this in English: Corona death data: what’s the ground reality?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

28 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்