ஊழல் குற்றச்சாட்டைப் பேசுபவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டாமா?
நம்முடைய ‘தி இந்து’வில் அன்புமணியின் நேர்காணல் படித்தேன். தமிழ்நாட்டில் 82% பேர் திமுக, அதிமுகவுக்கு மாற்று வேண்டும் என்று நினைப்பதாகச் சொல்கிறார். சரிதான். ஆனால் அந்த மாற்று என்ன என்பதுதான் ஒரு சராசரித் தமிழனுக்குப் புரியவில்லை. விஜயகாந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியைக் கொடுத்தார்கள். அவர் சட்டசபைக்கே போகவில்லை. எதிர்க்கட்சிப் பணியையே செய்ய மறுத்து விட்டவரிடம் ஆளுகின்ற பொறுப்பைக் கொடுக்க மக்கள் பிரியப்படாததுபோல் தெரிகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளுக்கு மாற்றாக, மாற்றமாக பாமக இருக்கும் என்று நினைப்பதற்கும் சராசரி மனிதருக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதுதான் எதார்த்தம்.
அன்புமணியின் பேட்டியைப் படித்தபோது, 25 ஆண்டுகளுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். அ. மார்க்ஸ், கல்யாணி, ரவிக்குமார் மற்றும் நண்பர்களால் ‘நிறப்பிரிகை’ என்ற பத்திரிகை தொடங்கப்பட்டு அரசியல், தத்துவ ரீதியான பல விவாதங்களை முன்னெடுத்துச் சென்றது. அப்பத்திரிகையின் சொல்லாடல்கள்தான் இன்றைய வெகுமக்கள் கலாச்சாரத்தில் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.
குடிதாங்கியில் விடியல்
அப்போது குடிதாங்கி என்ற ஊரில் தலித் மக்கள் வாழும் பகுதியில் ஒரு மரணம் நிகழ்ந்தது. பிரேதத்தை எடுத்துச் செல்லும் வழியில் வன்னியர் குடியிருப்பு உள்ளது. போக முடியவில்லை. சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும். பிரச்சினையாகிவிட்டது. கலவரம் ஏற்படும் சூழல். மருத்துவர் ராமதாஸ் அப்போது திண்டிவனத்தில் மிக எளிய மனிதராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். போக்குவரத்தெல்லாம் சைக்கிளில்தான். என்னைப் போன்ற இளைஞர்களுக்கு காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களுக்குப் பிறகு அவர்களைப் போன்ற ஒரு தலைவர் வந்துவிட்டார் என்பதாக ஒரு நம்பிக்கை.
ராமதாஸ் சம்பந்தப்பட்ட குடிதாங்கிக்கு வந்தார். தலித் பிணத்தைத் தன் தோளில் போட்டுக் கொண்டு வன்னியர் வீதிகளின் வழியே சுடுகாட்டை நோக்கி நடந்தார். கேள்விப்பட்டபோது நான் அழுதுவிட்டேன். தமிழ்நாட்டுக்கு ஒரு விடிவு வந்துவிட்டது என்றே நம்பினோம். ஆனால், இன்றைய நிலவரம் என்ன?
வாரிசு அரசியல்
தமிழ்நாட்டின் சாதிக் கலவரங்களில் பின்னணியில் சும்மாவா பாமகவைச் சுட்டி எல்லோரும் பேசுகிறார்கள்? ராமதாஸை மேடையில் வைத்துக்கொண்டே எவ்வளவு சாதி வெறுப்பை எத்தனை மேடைகளில் விதைத்திருக்கிறார்கள்? அவருக்குத் தெரியாமலும் கேட்காமலும்தான் இதெல்லாம் நடக்கிறதா?
தொடர்ந்து பாமக அரசியல் களத்தில் தீவிரமானது. அரசியலில் வாரிசு ஆட்சியை ஒழிப்போம் என்று சபதமிட்டார் ராமதாஸ். தமிழகம் அறிந்த மற்ற அரசியல்வாதிகளைப் போல் அல்லாமல் இலக்கிய வாதிகளோடும் மிகக் கீழ்மட்டத்து மனிதர்களோடும் தோளோடு தோள் போட்டு உரையாடினார், உறவாடினார். என் கட்சியில் வாரிசுகளுக்குப் பதவி கொடுத்தால், நானே அப்படிச் செய்தாலும்கூட என்னைக் கட்டி வைத்து அடியுங்கள் என்றார்.
இன்றைய நிலை என்ன? அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதற்காக ராமதாஸ் செய்துகொண்ட சமரசங்கள் என்ன? வாரிசுக்குப் பதவி கொடுத்தால் கட்டிவைத்து அடியுங்கள் என்றீர்களே என்று ஊடகங்கள் கேட்டபோது “கட்சித் தொண்டர்களின் வேண்டுகோள்; புறக்கணிக்க முடியவில்லை” என்றார். இந்த பதிலைத்தானே வாரிசுகளை உருவாக்கும் அத்தனை தலைவர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?
ஊழலற்ற அரசியல்
சரி, நிகழ்காலத்துக்கு வருவோம். இரண்டு கட்சிகளும் சரியில்லை. பாமக இரண்டு விஷயங்களைச் செய்திருந்தால் இன்றைய தினம் இரண்டு பெரிய கட்சிகளுக்கு மிகப் பெரிய மாற்றாக வந்திருக்கும். வன்னியர் அடையாளத்தை விட்டிருக்க வேண்டும் (செய்யவில்லை); ஆரம்பத்திலிருந்தே இரண்டு கட்சிகளின் தோளின் மீது ஏறி சவாரி செய்திருக்கக் கூடாது. 2016 தேர்தல் வரை ராமதாஸ் செய்தது என்ன? ஒன்று, திமுகவுடன் கூட்டணி; இல்லாவிட்டால் அதிமுகவுடன் கூட்டணி. இப்போது திடீரென்று இரண்டு கட்சியும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப் படும் என்று ஒரே போடாகப் போட்டால் எப்படி? நம்பகத்தன்மை போய் விடுகிறதே? விஜயகாந்தைப் பற்றி ஏக வசனத்தில் பேசுகிறார் அன்புமணி. இதெல்லாம் போன மக்களவைத் தேர்தலில் அவரோடு கூட்டணியில் நின்றபோது தெரியாதா?
சகோதரரே, ஒரு சராசரி மனிதனாக அடிப்படையில் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஊழல். இன்றைய இந்தியாவில் இளைஞர்கள் அரசியல்வாதிகளை வெறுப்பது ஊழலால்தான். இந்தப் பிரச்சினையை முன்வைத்துத்தான் மோடி மிகப் பெரிய வெற்றியை அடைந்தார். அர்விந்த் கேஜ்ரிவால் என்ற ஒரு எளிய மனிதர் இந்தியா முழுவதும் பிரபலமானதும் டில்லியின் முதலமைச்சர் ஆனதும் அதனால்தான். ஆனால் ஊழல் குற்றச்சாட்டைப் பேசுபவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டாமா? சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பதுபோல் அரசியல்வாதிகள் இருக்க வேண்டும் என்று சாமான்ய மனிதர்கள் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
சபர்மதி ஆசிரமத்தில் கஸ்தூர் பாவின் பெட்டியை ஒரு திருடன் திருடிக்கொண்டு போய்விட்டான். அதிலிருந்த புடவைகளுக்காக. மகாத்மாவுக்கு ஒரே ஆச்சரியம். கஸ்தூர் பாவிடம் அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? “ஆசிரமத்தில் எல்லோரும் இரண்டு உடுப்புகளே வைத்திருக்க வேண்டும் என்பது விதி. உன்னிடம் எப்படி இரண்டுக்கு மேல் புடவைகள் வந்தன?” என்று கேட்டார். “நம்மைப் பார்க்க வரும் அன்பர்கள் கொடுத்தது; நம் குழந்தைகள் வரும்போது அணிந்துகொள்ளக் கொடுப்பதற்காக வைத்திருந்தேன்” என்றார் கஸ்தூர் பா. கடும் கோபம் அடைந்த மகாத்மா, “இனி ஒருபோதும் அப்படிச் செய்யாதே” என்று கடிந்ததோடு ஏனைய ஆசிரமவாசிகளிடம் அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
ஊழலற்ற அரசியல் என்பது வாழ்க்கையில் இருக்கிறது, வார்த்தையில் இல்லை. மாற்றம் என்பதும் அப்படித்தான்!
- சாரு நிவேதிதா, எழுத்தாளர், தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago