தமிழ்நாட்டில் சாதி அரசியல் சம்பந்தமாகப் பேசப்படும்போதெல்லாம், மன்னார்குடி ஞாபகம் வரும். எதையும் வாழ்வில் நேரடியாகப் பார்க்கும் களங்கள் மறக்க முடியாதவை அல்லவா! செய்தித்தாள்கள், புத்தகங்களில் நாம் படிக்கும் கதைகளும், களத்தில் யதார்த்தத்தில் நிலவும் சூழல்களும் எல்லா விஷயங்களிலும் அப்படியே பொருந்திப்போவது இல்லை. இந்தியாவில் சாதி அரசியலுக்கு இது நிறையவே பொருந்தும்.
மன்னார்குடியில் கு.பா. என்றொரு தலைவர் இருந்தார். கு.பாலகிருட்டிணன் என்பது முழுப் பெயர். திமுகக்காரர். மன்னை நாராயணசாமி காலத்துக்குப் பின், மன்னார்குடியில் கருணாநிதியின் முன்னுரிமைப் பட்டியலில் முதல் வரிசையில் இருந்தவர். கட்சியில் மூத்தவர், கடுமையாக உழைக்கக் கூடியவர், நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் இன்னல்களை எதிர்கொண்டவர் இப்படி ஏராளமான பின்னணிகள் அவருக்கு இருந்தன. முதல் நாள் பகலில் மன்னார்குடியில் கருணாநிதி கூட்டத்தில் அதிமுகவை ஆவேசமாகப் பேசும் பாலகிருட்டிணன், மறுநாள் இரவு சசிகலாவின் தம்பி திவாகரனுடன் உட்கார்ந்து உறவாடிப் பேசிக்கொண்டிருப்பார். அதிமுகவும் ஜெயலலிதாவும் அவருக்கு எதிரி. திவாகரன் அப்படி அல்ல; வேண்டப்பட்டவர்; சொந்தக்காரர்!
திமுகவின் ‘நீல நட்சத்திரப் பேச்சாளர்’களில் ஒருவரான வெற்றிகொண்டான் ஜெயலலிதா தொடர்பாகக் கடுமையாகவும் ஆபாசமாகவும் பேசிய எத்தனையோ மேடைகளில் சசிகலா தொடர்பாகப் பேச்சு வரும்போது, “பாவம், அது நம்ம வூட்டு புள்ள, ஒண்ணும் தெரியாத அப்பாவிப் புள்ளைய எல்லாத்துலேயும் சிக்கவெச்சிட்டாங்க” என்று வெளிப்படையாகச் சாதிரீதியிலான உறவில் கடப்பதை நான் நேரில் கேட்டிருக்கிறேன்.
மன்னார்குடியில் சிவா ராஜமாணிக்கம் அப்போது காங்கிரஸில் இருந்தார். தேர்தலில் அவரை எதிர்த்துத் தம் கட்சி வேட்பாளரோடு தெருத்தெருவாகப் பகலில் சுற்றும் அதிமுககாரர்கள் இரவில் தம் சாதிக்காரர்கள் வீட்டுக்கு மட்டும் போய், “ஆயிரம் இருந்தாலும் ராஜமாணிக்கம் நம்மாளு, கட்சி பார்த்து விட்டுர முடியாது” என்று மாற்றி ஓட்டு கேட்பதைப் பார்த்திருக்கிறேன்.
பொதுச் சமூகம் முக்குலத்தோர் என்று அகமுடையர், கள்ளர், மறவர் மூன்று சமூகங்களையும் ஒன்றாகக் குறித்தாலும், உள்ளுக்குள் அப்படி அல்ல. அகமுடையர், கள்ளர் சமூகங்கள் பெருமளவில் வசிக்கும் மன்னார்குடியில் அதிகாரப் போட்டி என்றைக்குமே இந்த இரு சமூகங்களிடையேதான் இருந்திருக்கிறது. பெரிய கோயில் திருவிழா அரசியல் முதல் திமுக, அதிமுக உள்கட்சி அரசியல், தேர்தல் அரசியல் வரை எதுவும் இதில் இன்றைக்கு வரை விதிவிலக்கு அல்ல.
ஒரு ஊர், இரு கட்சிகள் அல்லது இரு சமூகங்கள் சார்ந்த வரையறைகள் அல்ல இவை. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கட்சியிலும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இப்படியான பல பல உள்கதைகளை, கிளைக் கதைகளைப் பார்க்க, கேட்க முடியும்.
வேரடி சாதி
இந்தியாவின் ஏனைய மாநிலங்களைப் போல, தமிழ்நாட்டு அரசியலும் சாதி ஆதிக்கம் கொண்டதா? இந்தக் கேள்விக்கு, ஆம் அல்லது இல்லை என்ற ஒரு வார்த்தைப் பதிலைச் சொல்லிவிட முடியாது. ஒருபுறம் சுதந்திரம் அடைந்த காலகட்டத்திலிருந்தே வெறும் சாதி அடிப்படையில் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் இங்கே உட்கார்ந்திருந்தார் என்ற வரலாறு கிடையாது. அதிலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இங்கே ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா மூவருமே சாதிய அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழர்களால் நேசிக்கப்படுபவர்கள்; மிகச் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மறுபுறம், கீழே உள்ளூர் அரசியலில் நாளுக்கு நாள் சாதிய ஆதிக்கம் வலுவடைகிறது; பெரும்பான்மை இனங்களைச் சார்ந்தவர்களையன்றி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது அரிதாகிறது.
தமிழ்நாட்டு அரசியல் இன்றைக்கு யார் கையில் இருக்கிறது என்று கேட்டால், கருணாநிதி, ஜெயலலிதா பெயர்களைச் சொல்வது சுலபமான பதில். அது உண்மையும்கூட. அதேசமயம், அது மட்டுமே உண்மை அல்ல. தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளின் நிர்வாகிகளின் சாதிப் பின்னணி இது தொடர்பான உண்மைகளை நாம் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.
கட்சிகள் யார் கையில்?
தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள் 7. பொதுத் தொகுதிகள் 32. மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 32 இடங்கள் அதிமுக வசம் இருக்கின்றன. பொதுத்தொகுதிகளில் அதன் பிரதிநிதிகளின் சமூகம்சார் பின்னணி இது: வன்னியர் 23.33%, கவுண்டர் 23.33%, முக்குலத்தோர் 20%, நாடார் 6.7%, நாயுடு 3.33%.
தமிழகத்தின் சட்டசபைத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள் 46. பொதுத் தொகுதிகள் 188. வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் தன் கட்சிக்காரர்களாகச் சேர்த்து நிறுத்தியிருக்கிறது அதிமுக. பொதுத் தொகுதிகளில், அதிமுக வேட்பாளர்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ள சமூகங்களின் வரிசை இது: முக்குலத்தோர் 22.3%, வன்னியர் 21.3%, கவுண்டர் 14.9%, நாயுடு 4.8%, நாடார் 5.9%. திமுக 172 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக வேட்பாளர்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ள சமூகங்களின் வரிசை இது: வன்னியர் 18.7%, முக்குலத்தோர் 12.9%, கவுண்டர் 11.5%. நாயுடு 8.6%, நாடார் 7.2%.
தமிழகத்தில் அதிமுக, திமுக இரு பெரிய கட்சிகளிலும் மாநிலத் தலைமை நிர்வாகிகளுக்கு அடுத்த நிலையிலுள்ள சக்தி வாய்ந்த பதவிகள் மாவட்டச் செயலர்கள். உண்மையில், இவர்களே நேரடியாகக் கட்சியை ஆள்பவர்கள்.
தமிழகத்தின் 32 மாவட்டங்களை அதிமுக 50 மாவட்டங்களாகப் பிரித்து நிர்வகிக்கிறது. இந்த 50 மாவட்டச் செயலர்களில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் சமூகங்கள்: முக்குலத்தோர் 26%, வன்னியர் 18%, கவுண்டர் 14%, நாயுடு 8%. நாடார் 2%. தமிழகத்தின் 32 மாவட்டங்களை திமுக 65 மாவட்டங்களாகப் பிரித்து நிர்வகிக்கிறது. இந்த 65 மாவட்டச் செயலர்களில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் சமூகங்கள்: முக்குலத்தோர் 23%, வன்னியர் 15.4%, கவுண்டர் 12.3%. நாயுடு 9.2%, நாடார் 3%.
சமூகரீதியிலான பிரதிநிதித்துவம் இருக்கிறதா?
அதிமுகவில் இஸ்லாமிய, கடலோடிச் சமூகங்களைச் சேர்ந்தவர் ஒருவர்கூட மாவட்டச் செயலர் பொறுப்பில் இல்லை. அதன் 50 மாவட்டச் செயலர்களில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலர் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரே பிரதிநிதி. திமுகவில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர், கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பதவியில் இருக்கிறார்கள். இதேபோல, இந்த வேட்பாளர் பட்டியலில் (கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து) இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேருக்கு மட்டுமே அதிமுக வாய்ப்பளித்திருக்கிறது; திமுக 14 பேருக்கு வாய்ப்பளித்திருக்கிறது. எனினும், இந்தப் பிரதிநிதித்துவம் நியாயமானது அல்ல.
அதிமுக, திமுகவில் மட்டும் அல்ல; பெரும்பாலான கட்சிகளில் மேலே குறிப்பிட்ட ஐந்து சமூகங்களும் கிட்டத்தட்ட ஐந்தில் மூன்று பங்கு வரையிலான அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கின்றன. அரசியல்வாதிகள் சொல்லும் ஓட்டுக்கணக்குபடி பார்த்தாலே, மக்கள்தொகை அடிப்படையில் ஐந்தில் மூன்று பங்கு இந்த ஐந்து சமூகங்களும் அல்லாதவர்கள் வசிக்கும் மாநிலம் இது.
ஏனைய சமூகங்களும் அவையவை பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் பிரதிநிதித்துவம் பெறுகின்றன என்றாலும், இந்தப் பிரதிநிதித்துவம் உள்ளபடி அந்தந்தச் சமூகங்களின் எண்ணிகையை ஒட்டியதாக இல்லை என்று ஒலிக்கும் குற்றச்சாட்டைப் புறக்கணிக்க முடியவில்லை. குறிப்பாக, விளிம்புநிலைச் சமூகங்கள் இதில் மோசமான புறக்கணிப்பை எதிர்கொள்கின்றன.
இடஒதுக்கீட்டுக்கு அப்பாற்பட்ட சமூகநீதி இங்கு சாத்தியம் என்று வாதிடுபவர்கள் நம்மிடையே உண்டு. தொகுதி ஒதுக்கீட்டில் தனித் தொகுதி இடஒதுக்கீடு இல்லாவிடில், ஒடுக்கப்பட்டோரின் நிலை இங்கு என்னவாக இருக்கும் என்பதற்கு, கட்சிப் பதவிகளில் அவர்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் ஒரு சான்று. இஸ்லாமிய சமூகம் நாளுக்கு நாள் மைய நீரோட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து விலகுவதாகப் பேசுபவர்களும் இதற்கான நியாயத்தை நம்முடைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தில் கண்டடைய முடியும். இப்படி பல சமூகங்களைக் குறிப்பிட முடியும்.
சாதியத்தைச் சுவீகரித்தல்
தமிழகத்தை இந்தத் தேர்தல் சமயத்தில் குறுக்கும் நெடுக்குமாக சமீபத்தில் சுற்றியதும் உள்ளூர் மக்களிடம் பேசியதும் பெரிய அனுபவம். பொதுச்சமூகமும் ஊடகங்களும் நம்புவதுபோல, சின்ன அளவில் அல்ல; பெரிய அளவில் இங்கே அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறது சாதி. எனினும், தமிழ்நாட்டில் சாதியை நேரடியாக முன்னிறுத்தும் கட்சிகள் பெரிய அளவில் இதுவரை ஆதிக்கம் செலுத்தியது இல்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்கான பதில் எளிமையானது. இங்கு மைய நீரோட்டக் கட்சிகளே உள்ளூர் அளவில் சாதியைப் பெரிய அளவில் சுவீகரித்துக்கொண்டிருக்கின்றன.
சாதிசார் அரசியல் கட்சிகள் என்றால், உடனே பாமக, கொதேமக, அஇமூமுக என்று பட்டியலிடுவது நம்முடைய இயல்பு. பெரிய கட்சிகள் பல இடங்களில் இப்படியான கட்சிகளுக்கே சவால் விடுகின்றன. இதில் உச்சம் தொட்டு நிற்பது அதிமுக. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 பொதுத் தொகுதிகளிலும் அதிமுக நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் கவுண்டர்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 பொதுத் தொகுதிகளிலும் அதிமுக நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் வன்னியர்கள்.
பெரிய கட்சிகளே சாதியை இப்படிச் சுவீகரித்துக்கொள்ளும் நிலையில், சாதியை நேரடியாக முன்னிறுத்தும் கட்சிகள் பின்தள்ளப்படுகின்றன. எனினும், இப்போது காட்சிகள் மாறுகின்றன. பெரிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கீழ் நிலையில் மக்களிடம் தொடர்புகளைப் பராமரிப்பது குறைந்துவரும் சூழலில், சாதியை மட்டுமே பலமாகக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் புழங்குகிறார்கள். திருமணம், பிள்ளைகளுக்குக் காது குத்தும் வைபவம், புதுமனை புகுவிழா என்று வீட்டு விசேஷங்களும் கோயில் திருவிழாக்கள் போன்ற ஊர் விசேஷங்களும் இந்த அரசியல் ஒன்றுகூடலுக்கான தருணங்கள் ஆகின்றன. இவை நீங்கலாக உள்ளூர் சமூகங்களின் கலாச்சாரங்களையும் சாதி அரசியல் பயன்படுத்திக்கொள்கிறது. மொய் விருந்துகளுக்குப் பேர் போன அறந்தாங்கி தொகுதியில் ஒரு வேட்பாளர் பல நூறு பேர் பங்கேற்கும் கறி விருந்துகளை நடத்தி விருந்தின் முடிவில், தனக்கு வாக்களிக்கும்படி உறுதி கேட்பதாகச் சொன்னார் உள்ளூர் நண்பர்.
சாதி அடிப்படையிலான கட்சிப் பிரதிநிதிகள் இப்படி உள்ளூர் அளவில் ஆதிக்கம் பெறும்போது, போட்டி மேலும் அதிகரிக்கிறது; பெரிய கட்சிகள் மேலும் பெரும்பான்மைச் சாதிமயமாகின்றன.
அபாயகரமான எதிர்காலம்
தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளும் நேரடி சாதிப் பெரும்பான்மையின் கைகளில் இல்லாத நிலையில், வேரடி பெரும்பான்மைச் சாதியம் இன்னும் வெளிப்படையான தாக்கங்களை பொதுச்சமூகத்தில் அப்பட்டமாக வெளிப்படுத்தவில்லை. நாளைக்குப் பிரதான கட்சிகளின் தலைமைப் பீடங்கள் மாறினால், கீழேயும் கடுமையான அதிர்வுகளை நாம் பார்க்க நேரிடலாம்.
சாதி தொடர்பாகப் பேசாமல், சாதியை ஒழிக்க முடியாது. பொதுவெளியில் சாதி ஆதிக்கத்தைப் பேசுவதைத் தவிர்ப்பதன் மூலமாக சாதி ஒழிப்பு அக்கறையை வெளிக்காட்டுவதாக பாவனைசெய்வது இந்தியப் பொதுச் சமூகத்தின் போலியான முகங்களில் ஒன்று. சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் அதன் வெளிப்படையான தரவுகளும் வெளியே வரும்போது, நம்முடைய அன்றாட அரசியலில் எவ்வளவு சாதிய ஆதிக்கம் ஊறியிருக்கிறது என்பது அம்பலத்துக்கு வரும். இந்திய அரசியலில் சாதி ஒழிப்புக்கான விவாதங்களை அங்கிருந்தே முழு வீச்சில் தொடங்க முடியும்!
- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
5 days ago