பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, ‘புதியதோர் தமிழகம் செய்வோம்’ என்ற தலைப்பில் ஓர் ஆவணமாக, மிக நன்றாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஓர் அரசியல் கட்சியின் தொலைநோக்குப் பார்வை எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான அடிப்படையாகக்கூட இந்த ஆவணத்தைக் கருதலாம்.
பாமகவுக்கும் மக்களுக்கும் இடையேயான சமூக ஒப்பந்தம் என்ன என்பதை சமூக ஜனநாயகம் (Social Democracy) என்ற அடிப்படைக் கொள்கையை வரையறுப்பதன்மூலம் தேர்தல் அறிக்கை விளக்குகிறது. வெறும் தேர்தல் வாக்குறுதிகளாக இல்லாமல், மக்களுக்கும் தங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம், மக்களாட்சியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய மாண்புகள், பிற நாடுகளுடன் ஒப்பிட்டு தமிழகம் எம்மாதிரி முன்னேற வேண்டும் என்ற விருப்பம், இதனைச் சாதிக்க எந்தெந்தத் துறைகளில் என்ன செய்ய வேண்டும் என்ற தங்கள் பார்வை என்று ஆவணம் படிப்படியாக விரிகிறது.
இந்த ஆவணத்திலும் பிற நேர்காணல்களிலும் அன்புமணி தன் நிலையைத் தெளிவாக விளக்கியுள்ளார். தமிழகத்தை மாற்ற இவர்கள் வைக்கும் திட்டத்தைச் சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம்: “மது, ஊழல் ஒழிப்பு; கல்வி, சுகாதாரம் முற்றிலும் இலவசம். வேளாண்மையை வளர்க்கவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் தனியான திட்டங்கள்.”
சொல்வதற்கு எளிது, ஆனால் இவை செயல் படுத்த மிக மிகக் கடினம். மது ஒழிப்பை ஒற்றைக் கையெழுத்தில் கொண்டுவர வேண்டும் என்று பாமகவும் வேறு சில அரசியல் கட்சிகளும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அவ்வாறு செய்வதில் பல நடைமுறைச் சிக்கல்களும் மருத்துவச் சிக்கல்களும் உள்ளன. இலக்கு அதுவாக இருந்தாலும் நடைமுறையைக் கருத்தில் கொண்டு படிப்படியான மாற்றங்களைச் செய்வதே சிறந்தது என்று நான் எண்ணுகிறேன்.
ஊழல் ஒழிப்பு குறித்து தேர்தல் அறிக்கை முன்வைக்கும் தன்னாட்சி அதிகாரம் படைத்த லோக் ஆயுக்தா, பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம், வலிமையான தகவல் ஆணையம் ஆகியவை போதா. இதுவும் காலம் எடுத்து, படிப்படியாகச் செயல்படுத்த வேண்டிய ஓர் இலக்கு. ஐம்பது, அறுபது ஆண்டுகளாகப் படிப்படியாக வளர்ந்து பரவியிருக்கும் ஊழலை ஒழிக்க அரசு, கட்சிகள், தொழில்துறை, பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், ஆன்மிக அமைப்புகள் எனப் பலரும் சேர்ந்து உழைக்க வேண்டியிருக்கும். லோக் ஆயுக்தா என்னும் அமைப்பை ஊழலை ஒழிக்கும் சர்வரோக நிவாரணியாகப் பார்க்கக் கூடாது.
ஆனால், பாமக முன்வைத்திருக்கும் லோக் ஆயுக்தா, பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் போன்றவை திமுகவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றிருப்பது, கட்சிகளிடையே பொதுக்கருத்தை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கும். செயல்பாடு என்று வரும்போது இவையெல்லாம் நீர்த்துப்போய்விடுமா அல்லது வலிமையாக இருந்து மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதுதான் கேள்வியே.
கல்வியையும் சுகாதாரத்தையும் இலவசமாக அனைத்து மக்களுக்கும் தர முடியுமா என்னும் கேள்வியைப் பலரும் எழுப்புகின்றனர். பள்ளிக் கல்வி வரை இலவசமாகத் தர முடியும் என்று நான் நினைக்கிறேன். பாமக தேர்தல் அறிக்கை பள்ளி மட்டுமல்ல, ஆய்வு வரையிலான கல்லூரிப் படிப்பையும் இலவசமாகத் தர முடியும் என்று கருதுகிறது. இவ்வாறு செயல்படும்போது தனியாரையும் சேர்த்தே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்து பாமக அறிக்கையில் வரவேற்கப்பட வேண்டியது. கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து பாமக அறிக்கை பல புள்ளிகளைத் தொட்டுச் செல்கிறது. இவை ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிகோலும் என்றால் நல்லது.
சுகாதாரத்திலும் தனியாரின் பங்கு குறித்துத் தெளிவு இல்லாமல் இருக்கிறது. கல்வியைப் போன்றே, சுகாதாரத்தில் தனியார் மருத்துவமனை, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியோரின் பங்கு இன்றி எடுத்துக்கொண்டிருக்கும் இலக்கை எட்ட முடியாது. பாமக தலைமையில் உள்ளோர் மருத்துவர்கள், அன்புமணி மத்தியில் சுகாதார அமைச்சராக இருந்தவர் என்றாலுமே இதுகுறித்து மேலும் ஆவணம் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
நீர்ப்பாசனம் குறித்து திமுக, நாம் தமிழர் கட்சிகளும் நல்ல பல கருத்துகளை வைத்துள்ளன. பாமகவும் அவ்வாறே செய்துள்ளது. வேளாண்மை வளர்ச்சி குறித்து அனைவரும் மேலோட்டமாகப் பேசிவிட்டுச் செல்கிறார்கள். பாமகவின் குறையும் அதுதான். எந்த வளர்ந்த நாட்டிலும் இவ்வளவு பெரும் விகிதத்தில் மக்கள் வேளாண்மையில் ஈடுபடுவதில்லை.
சிறுசிறு துண்டு நிலங்கள், இடுபொருளுக்கே தவிக்கும் விவசாயி, பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பிரச்சினைகள், கட்டுமானத்தின் போதாமை, சந்தையில் வலுவாகத் தன் தரப்பைப் பேரத்தால் வலுவாக்கும் திறன் இன்மை ஆகியவற்றால் வேளாண்மைத் துறை தவிக்கிறது. நீர்ப்பாசனம், ஓரளவுக்கு உதவும். ஆனால், இது போதாது. உண்மையில், வேளாண்மை சிறக்க, அதில் பணிபுரிவோரின் எண்ணிக்கை குறைந்து, துறையில் இருப்போர் ஒவ்வொருவரும் அதிக வருமானத்தை நிலையாக ஈட்ட வேண்டும். அதற்கான திட்டங்களைத் தைரியமாக எந்தக் கட்சியும் முன்வைக்காதவரை, மாற்றம் சாத்தியமில்லை.
வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும் பாமக அறிக்கை பல பக்கங்களை ஒதுக்கியுள்ளது. இவற்றில் சிலவற்றை ஏற்க முடியும், சில செயல்பாட்டுக்குச் சரிவராதவை. அரசு வருமானத்தைப் பெருக்க, கல், மண் வியாபாரத்தை அரசே கையில் எடுக்கும் என்கிறது பாமக அறிக்கை. திமுக வேலை இல்லா இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு இந்தச் செயலைச் செய்யும் என்ற நிலையை எடுத்துள்ளது.
இந்தக் கருத்தில் அடிப்படைப் பிழை உள்ளது. ஆற்றுமண், கருங்கல் ஜல்லித் தேவை ஓராண்டுக்கு எவ்வளவு, தொழில்நுட்ப மாற்றத்தால் நாளை இவை எவ்வாறு மாறும், இயற்கை வளங்களைப் பாதுகாக்க, இவற்றை எவ்வளவு குறைவாகப் பயன்படுத்தலாம் என்பன போன்றவை ஆராயப்படவில்லை என்பதே என் கருத்து. மிகப்பெரும் துறையை அரசு கையில் எடுக்கும்போது திறனின்மைதான் அதிகரிக்கும். ஏற்கெனவே இந்தத் துறையில் இருப்போரின் கடும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டிவரும்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பாமக அறிக்கையுடன் நம்மால் உரையாடவாவது முடியும். அதில் ஓர் அடிப்படை நேர்மை உள்ளது. கடந்த பல ஆண்டுகளில் அவர்கள் உருவாக்கியிருக்கும் ஆவணங்களின் பட்டியல் அவ்வளவு காத்திரமானது.
கட்டுரையாளர் பதிப்பாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: badri@nhm.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
37 mins ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago