பள்ளி மேலாண்மைக் குழு: ஜனநாயகத்தையும் கல்வியையும் காப்போம்!

By வே.வசந்தி தேவி

ஒரு தேசத்தின் தலைவிதி அதன் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது. வகுப்பறையின் விதி எங்கு வகுக்கப்படுகிறது? அதிகார மையங்களால் வகுப்பறைகள் தொலைவிலிருந்து ஆதிக்கத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. நவீனத் தொழில்நுட்பத்தின் வழியே மாநிலத்தின் ஆயிரமாயிரம் வகுப்பறைகளிலிருந்து தினந்தோறும், ஒவ்வொரு நிமிடமும் விவரங்கள் அதிகார மையங்களிடம் வந்து கொட்டுகின்றன.

எத்தனை மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர், மாதாந்திரத் தேர்வுகளில் என்ன மதிப்பெண் பெற்றனர், எவ்வளவு மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டனர்… இப்படி ஏராளமான விவரங்கள். இந்த விவரக் குவியலிலிருந்து விடிவு பிறந்திருக்கிறதா? மாணவர் ஒவ்வொருவரின் கற்றல் திறனும் அதிகரித்திருக்கிறதா? ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் தனிக் கவனம் செலுத்திக் கற்பிக்கின்றனரா? பள்ளியில் தண்ணீர், கழிப்பறைகள், கட்டிடங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றனவா? எதிலும் முன்னேற்றமில்லை.

காரணம், பள்ளியின் பயனாளிகள், மாணவர்களின் பெற்றோர், பாதிக்கப்படுவோர், உள்ளாட்சி உறுப்பினர் இவர்கள் எவருக்கும் பள்ளி நிர்வாகத்தில் பங்கில்லை. தங்கள் ஒரே நம்பிக்கையான குழந்தைகள், வாழ்வின் ஒரே நம்பிக்கையான கல்வியை எவ்வாறு பெறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கோ, முடிவெடுப்பதில் பங்கேற்பதற்கோ வாய்ப்பே இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் வளாகத்துக்குள் நுழையவே பெற்றோர் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம், அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் விளிம்புநிலையினர், சாதிரீதியாகவும் வர்க்கரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்; குரலற்றவர்.

கல்வியில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் பள்ளி நிர்வாகம் முழுதும் உள்ளூர் ஆட்சி உறுப்பினர், பெற்றோர் கொண்ட குழுக்களால்தான் நடத்தப்படுகின்றன. அதற்கு மாறாக, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், அதிகார வர்க்கத்தினரின் கையில் முடங்கிக் கிடக்கின்றன. அதன் விளைவுதான், அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி.

இது சமூக அநீதி மட்டுமல்ல; சட்ட மீறலும்கூட. நாடு முழுவதும் குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் கல்வி உரிமைச் சட்டம்-2009, பள்ளிகளை நிர்வகிக்கும், கண்காணிக்கும் பொறுப்பையும் அதிகாரத்தையும் பள்ளி மேலாண்மைக் குழுக்களிடம் ஒப்படைத்துள்ளது. பெற்றோர் 15 பேர், உள்ளாட்சி உறுப்பினர் இருவர், தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், கல்வியாளர் அடங்கிய குழு இது. இதில் பாதிக்கும் அதிகமானோர் பெண்கள், தலைவர் பெண். இப்படிப்பட்ட குழு அடிப்படைநிலை ஜனநாயகத்தின் ஒரு எடுத்துக்காட்டு.

பள்ளிக்கான ஆண்டுத் திட்டம் உருவாக்குவதிலிருந்து, பள்ளியின் தேவைகளைத் தீர்மானங்கள் நிறைவேற்றி, உரிய இடத்திலிருந்து பெறுதல், வரவு-செலவுகளைக் கண்காணித்தல், மாணவர் சேர்க்கை, ஆசிரியர் வருகை, கற்றுத்தருதல், ஒவ்வொரு மாணவரும் வகுக்கப்பட்ட திறன்களைப் பெறுகிறார்களா, பின்தங்கிய மாணவருக்குத் தனிக் கவனம் அளிக்கப்படுகிறதா, வன்முறைகள் தடுக்கப்படுகின்றனவா என்று அனைத்தையும் கண்காணிக்கும் அமைப்பு அது.

தமிழ்நாட்டில் இந்தக் குழு பெயரளவில் அமைக்கப்பட்டு, கேலிக்கூத்தாகிக் கிடக்கிறது. தலைமை ஆசிரியர் தன்னிச்சையாக அமைத்துக்கொண்ட குழு, என்றும் கூடாத குழு, எவரும் அறியாத குழு. ஒருசில விதிவிலக்குகள் உண்டு. சட்டம் நடைமுறைக்கு வந்த 12 ஆண்டுகளாக மறைத்து, அமிழ்த்தி வைக்கப்பட்டிருந்த இந்த ஆதார அமைப்பு, இன்று தமிழ்நாட்டின் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இன்றைய தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை, பள்ளி மேலாண்மைக் குழுவைக் கல்வி மறுசீரமைப்பின் தொடக்கப் புள்ளியாகப் பாவிக்கிறது. கடந்த சில மாதங்களாகப் பள்ளிதோறும் பள்ளி மேலாண்மைக் குழுவை அமைக்க, அதனை உயிர்த் துடிப்பு கொண்ட அமைப்பாக மாற்ற, அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர், விளிம்புநிலையினர்ஆகியோரின் உரிமைகளை மீட்டெடுப்பதற்குக் கல்வித் துறை, குறிப்பாக, மாநிலத் திட்ட இயக்குநரகம் பிரம்மாண்டமான முயற்சிகளை எடுத்துவருகிறது.

சட்டம் மேலும் எல்லோரையும் உள்ளடக்கும் வகையில் ஆக்கப்பட்டு, பட்டியலினத்தோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் பயனடையும் வண்ணம் நூற்றுக்கணக்கான அதிகாரிகள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், பெற்றோர்கள், சிவில் சமூக அமைப்பினர், தன்னார்வலர்கள் அனைவருக்கும் இடைவிடாத பயிற்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், கலைப் பயணங்கள், காணொளிகள், சுவரொட்டிகள் ஆகியவை குழுவின் முக்கியத்துவம், அதன் உறுப்பினர்கள் யார், அதன் பணிகள், அதிகாரங்கள், பொறுப்புகள் போன்றவை குறித்துப் பேசிவருகின்றன. பள்ளி மேலாண்மைக் குழுக்களைச் சிறப்பாக அமைத்து, கல்வியைக் காப்பதற்குத் தமிழ்நாடு முதல்வர் விடுத்த வேண்டுகோள் ஊரெங்கும் ஒலிக்கிறது.

குழு உறுப்பினர்களுக்கான தேர்தலின் முன்னோட்டமாக, கடந்த மார்ச் 20 அன்று மாநிலம் முழுவதிலும் சுமார் 37,700 அரசுப் பள்ளிகளில் பெற்றோர் கூட்டங்கள் நடைபெற்றன. ஒரு நாள் கூலியை இழப்பதற்கும் இயலாத விளிம்புநிலையினர் என்ற கரிசனத்துடன், ஞாயிறு அன்று ஆசிரியர்களின் எதிர்ப்பை ஏற்காமல் கூட்டம் நடத்தப்பட்டது. 24 லட்சத்துக்கும் மேற்பட்ட பெற்றோர் நம்பிக்கையுடன் கலந்துகொண்டனர். தங்கள் குழந்தைகளுக்கு இன்னும் மேம்பட்ட உலகம் சாத்தியம்; அந்த உலகத்தை ஒரு அடி அருகில் கொண்டுவருவதில் தங்களுக்கும் சிறு பங்கு உண்டு என்ற நம்பிக்கை சாளரம் அன்று திறந்திருக்கும். பள்ளி மேலாண்மைக் குழு என்பது அடிப்படைநிலை ஜனநாயக அமைப்பு.

ஜனநாயகத்தின் இலக்கணமான அதிகாரப் பரவல், பயனாளிகள் பங்கேற்பு, நிறுவனக் கடப்பாடு ஆகியவற்றில் நிலை கொண்டது. இத்தகைய உயர் விழுமியங்களெல்லாம் ஆதிக்கங்கள் கோலோச்சும் சமுதாயத்தில் சாத்தியமாகுமா? பெரிய ஆதிக்கங்கள், குட்டி ஆதிக்கங்கள் ஆகியவை உடைபட்டால்தான் சாத்தியமாகும். சாதியம்போல் ஒவ்வொரு மட்டத்திலும் நிலைகொண்டிருக்கும்ஆதிக்கங்கள். அம்பேத்கர் சாதிய அமைப்புக்குப் ‘படிநிலை சமத்துவமின்மை’ என்று பெயரிட்டார். மேலதிகாரிகளிடம் தொடங்கி பலநிலை அதிகாரிகள். பள்ளிகளை அடைந்தால், தலைமை ஆசிரியரின் ஆதிக்கம், அவர்களுக்குக் கீழ் ஆசிரியர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குட்டி ராஜ்ஜியம். அதற்கு உட்பட்டவர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் கேள்வி கேட்கக் கூடாது. இந்த அமைப்பில் ஜனநாயக தீபத்தை ஏற்றுவதற்குக் கடுமையான போராட்டம் தேவை.

இதற்கு ஒரு எச்சரிக்கையை மார்ச் 20 அன்று நடந்த பெற்றோர் கூட்டங்களின் பங்கேற்பு விவரங்கள் அளித்திருக்கின்றன. தொடக்கப் பள்ளிகளில் அதிகமாக இருக்கும் பெற்றோர் பங்கேற்பு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வெகுவாகக் குறைந்திருக்கிறது. பெற்றோர் பங்கேற்பு விவரங்கள்: தொடக்கப் பள்ளிகள்: 64%. நடுநிலைப் பள்ளிகள்: 49% உயர்நிலைப் பள்ளிகள்: 45%, மேல்நிலைப் பள்ளிகள்: 28%. மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மிகப் பெரும்பாலானோர் பெற்றோர்களுக்குச் செய்தி அனுப்புவதிலோ அவர்களைக் கூட்டுவதிலோ அக்கறை காட்டவில்லை. இதற்கு மாறாக, பல தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பெற்றோர்களை ஒன்றுதிரட்டினர், ஊக்குவித்தனர்.

ஏணியின் மேல்படியிலோ அலட்சியம். இந்நிலையை மாற்றுவதற்குப் பெரும் முயற்சிகள் தேவை. அடுத்து, அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் தேர்தல் நடக்கவிருக்கிறது. அது சிறப்பாக நடந்து அக்கறையும் ஆர்வமும் கொண்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அரசின் மேல் மட்டத்திலிருந்து ஆணைகள் பிறந்தால் மட்டும் போதாது. மொத்த சமூகத்தின் பங்கேற்பும் தேவை. கல்வி ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர், பெற்றோர், குடிமைச் சமூக அமைப்பினர், முன்னாள் மாணவர் பலரும் முயற்சி செய்ய வேண்டும். வெளியிலிருந்து நேசக்கரம் நீட்டப்பட வேண்டும். புதிய காற்று வீசுவது உகந்ததல்ல என்ற பள்ளிகளின் மேல்மட்ட அச்சம் போக்கப்பட வேண்டும். பெற்றோரும் சமூகமும் தங்கள் எதிரிகளல்ல, தோழர்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்குப் பிறக்க வேண்டும்.

உள்ளாட்சிகளுக்குப் பள்ளி மேலாண்மைக் குழுவில் முக்கியப் பங்கு உண்டு. ஊர்ப் பள்ளி நம் பள்ளி என்ற ஆழ்ந்த புரிதலுடன் அதனை அரவணைக்க வேண்டும். ஆதிக்கம் செலுத்துவதற்கு அல்ல; அர்ப்பணிப்புடன் வளர்த்து, பெருமை பெறுவதற்குத்தான் என்ற பொறுப்புணர்வு மேலோங்க வேண்டும். களமிறங்குவோம், தோள் கொடுப்போம், ஜனநாயகம் காப்போம், கல்வி காப்போம்.

- வே.வசந்தி தேவி, தலைவர், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம், தொடர்புக்கு: vasanthideviv@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்