இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், அமைச்சருமான நாமல் ராஜபக்ச பதவி விலகியதைத் தொடர்ந்து, அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் ஒன்றாகப் பதவி விலகியிருக்கிறார்கள். உடனடியாக அமைச்சுகளைப் பொறுப்பேற்கவும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் தன்னுடன் இணையுமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரியிருக்கிறார். இவ்வாறாக இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதொரு மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது இந்த மக்கள் எழுச்சி.
மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடங்கியதன் பிறகு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி முதன்முதலாக நாடாளுமன்றம் கூடியதும் அங்கே செல்லும் வழியில் மக்கள் ஒன்றுகூடத் தொடங்கினார்கள். இதனால் அச்சமுற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரவு வேளையில் நாடாளுமன்றத்தின் பின்வாசல் வழியாக வெளியேற நேர்ந்தது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கை முடியப்போவதை அறிந்துகொண்ட கூட்டணிக் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள்.
இவ்வளவு காலமும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசியலில் இவ்வாறான பாரிய மாற்றம் ஏற்பட, லட்சக்கணக்கான பொதுமக்கள் ஒன்றாகத் திரண்ட மக்கள் எழுச்சிதான் காரணமாகும். கடந்த வாரம் முதல் இலங்கையில் மாத்திரமல்லாமல் சர்வதேசம் முழுவதும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராகப் பொதுமக்கள் இரவும் பகலுமாக வெயிலிலும் மழையிலும் ஒன்றுதிரண்டிருக்கிறார்கள். சர்வதேச ஊடகங்களின் பிரதான செய்திகளில் இந்த மக்கள் எழுச்சியும், இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
என்னதான் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியிருந்தும், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை விதித்திருந்தும், சமூக வலைதளங்களைத் தடைசெய்திருந்தும் அனைத்துச் சமூகங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக, குழந்தைகளைக்கூட கைகளில் ஏந்தியவாறு தெருவில் இறங்கி கோஷங்களை எழுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். இந்த மக்கள் அனைவருமே சுயேச்சையாகத்தான் ஒன்றுதிரண்டிருக்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். எ
ந்த அரசியல் கட்சியையோ அமைப்பையோ இனத்தையோ சமூகத்தையோ சார்ந்தவர்களாக எவருமில்லை. சுயேச்சையான இந்த மக்கள் போராட்டத்தைத் தமது கட்சியின் போராட்டமாகச் சித்தரித்துக்கொள்வதற்காக அதில் கலந்துகொள்ள வந்த அமைச்சர்களையும், எதிர்க்கட்சி அமைச்சர்களையும், பௌத்த பிக்குகளையும் பொதுமக்கள் கூச்சலிட்டு, விரட்டியடித்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு பிரம்மாண்டமானதும் ஒருமித்ததுமான மக்கள் எழுச்சி இதுவரை இலங்கையில் நிகழ்ந்ததேயில்லை.
உண்மையில், உயிர் வாழ்வதற்காகவும் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்வதற்காகவும் மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள்தான் அவர்களை இவ்வாறு ஒன்றுகூடவும் அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழவும் செய்திருக்கின்றன. அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகுவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பைப் பொய்ப்பித்து, ஜனாதிபதி அதே அமைச்சர்களை அழைத்து வேறு பிரதானமான அமைச்சுப் பொறுப்புகளை வழங்கியுள்ளமை மக்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களினதும் நெருங்கிய உறவினர்களினதும் நண்பர்களினதும் குடும்பங்கள் இரவோடு இரவாக வேறு நாடுகளுக்குத் தப்பித்துப் போய்விட்டதுமே, அவர்கள் அவ்வளவு காலமும் முறைகேடாகச் சேர்த்த மக்கள் சொத்துக்களையும் களவாக எடுத்துச் சென்றுள்ளார்களா என்ற கேள்வி மக்களுக்குள் எழுந்துள்ளது.
ஆகவே, மக்கள் ஒன்றுதிரண்டு ஜனாதிபதியினதும் பிரதமரினதும் அமைச்சர்களினதும் வீடுகளையும் நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்டிருக்கிறார்கள். இவற்றைக் கண்டு இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அரசியல்வாதிகளும், அவர்களுக்குச் சார்பான அதிகாரிகளும் பயந்துபோயிருக்கிறார்கள். எந்த அளவுக்கென்றால், மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்து, பதவி விலகியுள்ள ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, சசீந்திர ராஜபக்ச ஆகியோர் புதிய அமைச்சரவையில் தாம் பதவிகள் எவற்றையும் ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஜனாதிபதியும் உடனடியாக அவசரகாலச் சட்டத்தை நீக்கியிருக்கிறார்.
தற்போதைய ஜனாதிபதியையும் பிரதமரையும், அவர்களது அடிவருடிகளான அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரையும் முற்றுமுழுதாகப் பதவிகளிலிருந்து அகற்றிவிட்டு, பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, தொழில்நுட்பம் உட்பட அனைத்துப் பிரதான அமைச்சுகளிலும் துறைகளிலும் அறிவும் நிபுணத்துவமும் கொண்ட தகுதிவாய்ந்த இளைஞர்களைப் பதவியில் அமர்த்துவதற்காகத்தான் மக்கள் இவ்வளவு தூரம் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு காலமும் மக்கள் பணத்தையும் பொதுச் சொத்துகளையும் முறையற்ற வழிகளில் பயன்படுத்தி, ஊழல்களில் ஈடுபட்டு, கறுப்புப் பணம் பெருக வழிவகுத்து நாட்டைக் கடனுக்குள் தள்ளி இலங்கையை வறுமைக் கோட்டுக்குள் தள்ளியிருப்பதாகக் குற்றம்சாட்டப்படும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உட்பட அனைவரையும் சட்டத்தின் முன்னால் நிறுத்தி, தண்டனை வழங்கி அவர்களது அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கிய பிறகுதான் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் இடமளிக்க வேண்டும் என்பதுதான் மக்கள் எழுச்சியின் தற்போதைய இலக்கு.
இலங்கையில் இன்று தீவிரமாகியிருக்கும் இந்த மக்கள் எழுச்சிப் போராட்டமானது, மக்களை இந்த நெருக்கடிக்குள் தள்ளிய அரசாங்கத்துக்கும், அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் எதிரான போராட்டமாகும். காவல் துறையாலும் ராணுவத்தாலும் எவ்வேளையிலும் கைதுசெய்யப்படக்கூடுமான, சித்ரவதை செய்யப்படக்கூடுமான ஒரு சூழ்நிலையில், பொதுமக்கள் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தெருவில் இறங்கியும், வீடுகளிலும் வாகனங்களிலும் கறுப்புக் கொடியைத் தொங்கவிட்டும் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இலங்கையில் இன்று தெருக்கள் முழுதும் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளமானது, இன்னும் பெருக்கெடுத்து வழிந்தோடி ஊழல் அரசியல்வாதிகளை விரைவில் இல்லாதொழிக்கும் என்று நம்பலாம். அந்த வெள்ளத்தில் அனைத்து அழுக்குகளும் கழுவப்பட்டு, நாடே தூய்மையாகிவிடும். இந்த மக்கள் எழுச்சிக்குப் பிறகு, ஜனநாயகமும் ஊடக சுதந்திரமும் மனித உரிமைகளும் பேணப்படக்கூடிய நாடு உருவாகும். தமது உரிமைகளுக்கு எதிரான சூழ்ச்சிகளை இனங்கண்டு அடக்குமுறையாளர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தைரியமுள்ள மக்கள் உருவாவார்கள். இந்த மாற்றங்கள் உடனடியாக ஏற்படாவிட்டாலும், வருங்காலத்தில் அது நிச்சயமாக நடக்கும். இன்று போராடிக்கொண்டிருக்கும் அனைத்து மக்களினதும் சந்ததிகள் அன்று அவ்வாறான உரிமைகளையும் சந்தோஷத்தையும் நிம்மதியையும் நிச்சயமாக அனுபவிப்பார்கள்.
ஜனநாயகத்துக்காகப் பொதுமக்கள் ஒன்றுதிரண்டிருக்கும் இந்தப் போராட்டமானது, இலங்கை போன்ற ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுள்ள, பலவீனமான ஆட்சியுள்ள, மோசடிகளும் ஊழல்களும் சர்வாதிகாரமும் நிறைந்த, இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி மக்களிடையே குரோதத்தை வளர்க்கும் அனைத்து நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கக் கூடும்.
- எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலர், இலங்கை. தொடர்புக்கு: mrishansh@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago