கிடைத்ததா கல்வி உரிமை?

By சு.மூர்த்தி

கல்வி உரிமைச் சட்டம் ஏப்ரல் 1, 2010-ல் நடைமுறைக்கு வந்தது. சட்டம் நடைமுறைக்கு வந்த முதலாண்டில், முதல் வகுப்பில் நுழைந்த குழந்தைகள் இந்த ஆண்டில் 12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை முடித்து, பதின்பருவப் பிள்ளைகளாக வெளியில் வரவிருக்கிறார்கள். கடந்த 12 ஆண்டுகளில் பள்ளிக் கட்டமைப்புகள் மாறியுள்ளனவா, அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான, சமமான கல்வி கிடைத்ததா, பள்ளிகளில் மகிழ்ச்சியான கற்றல் சூழலை அனுபவித்தார்களா, அரசுப் பள்ளிக்கும் தனியார் பள்ளிக்குமான இடைவெளி குறைந்துள்ளதா, அரசுப் பள்ளிகள் அனைத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றனவா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவோம்.

ஒரு கி.மீ. தொலைவுக்குள் அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதே கல்வி உரிமைச் சட்டத்தின் முதன்மையான இலக்கு. ஆனால், அருகில் அரசுப் பள்ளி இருந்தும் ஓரளவு வசதியான, நடுத்தர வசதியுள்ள குழந்தைகள் தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். அரசுப் பள்ளிகள் அனைவருக்கும் நம்பிக்கையளிக்கும் கனவுப் பள்ளிகளாக மாறவில்லை. போக்குவரத்து நெருக்கடிகள் அதிகமாகும் அளவுக்குத் தனியார் பள்ளி வாகனங்கள் பெருகியுள்ளன. பள்ளி வாகனங்களில் சிக்கி, பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழக்கும் பரிதாபங்கள் அடிக்கடி நடக்கின்றன. அருகமைப் பள்ளி மூலமான கல்வி என்பது எட்ட முடியாத தொலைவில் உள்ளது.

கல்வி உரிமைச் சட்டம், தொடக்கக் கல்வியைத் தாய்மொழி வழியில் பயிற்றுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. 2012–13 கல்வியாண்டு முதல் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி நடைமுறைக்கு வந்தது. தற்போது பல அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகள் இல்லாத அவல நிலை உருவாகியுள்ளது. இதன்மூலம், ஏழைப் பெற்றோரின் ஆங்கிலவழிக் கல்விக் கனவு நனவாகும் என்று கல்வித் துறை நம்புகிறது. ஆனால், புரிதல் என்பதே இல்லாத வெறும் மனப்பாடக் கல்வியால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் உண்மை.

குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதும் தக்கவைப்பதும் நடக்கின்றன. ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்குத் தரமான, சமமான கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. மருத்துவம், வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம் போன்ற தொழில்முறைப் பட்டப் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 5% அளவைக்கூட எட்டவில்லை. கல்லூரிப் படிப்பைத் தொடர்வதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இடையில் பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது.

அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் பெரிதாக மேம்படவில்லை. ஆங்கிலவழிக் கல்விக்காக மட்டும் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லவில்லை. பல அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் இன்றும் பெற்றோர்களையும் குழந்தைகளையும் அச்சப்படுத்தும் நிலையில்தான் உள்ளன. இப் பெரும் குறையை சரிசெய்வதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகளும் நிதி ஒதுக்கீடும் கல்வித் துறையில் இதுவரை போதுமானதாக இல்லை. பிற கட்டமைப்பு வசதிகளான நூலகம், ஆய்வகம், உடற்கல்வி போன்றவையும் பல அரசுப் பள்ளிகளில் சொல்லும்படியாக இல்லை.

நலிவுற்ற பிரிவினர்களின் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு 25% வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால், அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் எண்ணிக்கை குறையும் நிலை உருவானது. எட்டாம் வகுப்புக்குப் பிறகு இக்குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டிய நிலை உள்ளது. தனியார் கட்டணக் கல்வியை ஊக்குவிக்கக் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் வாய்ப்பளித்துள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் பயிற்சி முடித்த தகுதியுள்ள ஆசிரியர்களை நியமித்தல் என்ற இலக்கை 2015-க்குள் எட்ட வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டம் கூறியது. ஆனால், 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இந்த இலக்கு எட்டப்படவில்லை. தனியார் பள்ளிகளில் முறையான ஆசிரியர் கல்வித் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர்களாக மிகக் குறைந்த ஊதியத்தில் நியமனம் செய்யப்படுகின்றனர். அந்த ஆசிரியர்கள் கண்ணியமாகவும் நடத்தப்படுவதில்லை.

மது, போதை, பாலியல் வன்முறை, குழு மோதல், தனிமனித நடத்தைக் கோளாறுகள் போன்ற சமூகச் சீர்கேடுகள் பள்ளிக்குள்ளும் எதிரொலிக்கும் அபாயம் இன்று ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிகளில் உடல் அளவிலோ மனதளவிலோ பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால், பள்ளிகளை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளாக மாற்ற வேண்டிய நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், ஒவ்வொரு வகுப்புக்கும், பாடத்துக்கும் தனித்தனி ஆசிரியர் என்ற நிலை இல்லை. இதனால் பாடம் சொல்லிக்கொடுக்கும் பணியில் முழுமையாகக் கவனம் செலுத்தவும், பதின்பருவப் பிள்ளைகள் நடத்தைக் கோளாறுகளுக்கு ஆளாகாமல் நெறிப்படுத்தவும் ஆசிரியர்களால் முடிவதில்லை.

கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் 12 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் பெரிய முன்னேற்றங்கள் நடக்கவில்லை. ஆனாலும், குழந்தைகளின் கல்வி உரிமையை உறுதிசெய்வதற்கு ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உள்ள சட்டப்பூர்வமான கடமைகளைக் கல்வி உரிமைச் சட்டம் வரையறுத்துள்ளது. கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இவை. நிறைவேற்றத் தவறும்போது கேள்வி கேட்கும் உரிமையும் நீதி கேட்கும் உரிமையும் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. மக்கள் இயலாமையிலும் அறியாமையிலும் இருப்பதால் கல்வி உரிமைச் சட்டம் நீர்த்துப்போய்விட்டது.

“கல்விக்கான மேல் வரியாக வசூலிக்கப்பட்ட ரூ.94 ஆயிரம் கோடியைச் செலவிடாதது ஏன்?” என்று திமுக எம்.பி. கனிமொழி, அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைப்பதைக் கல்வி உரிமைச் சட்டம் கட்டாயமாகியுள்ளது. தற்போது அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குப் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்து திறம்பட செயல்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டம் செயல்வடிவம் பெறுவது நம்பிக்கை அளிக்கிறது.

அனைத்துக் குழந்தைகளுக்கும் இடையில் சமத்துவத்தையும் உடன்பிறப்பு உணர்வையும் வளர்க்கப் பொதுப்பள்ளி முறையை உருவாக்க வேண்டும். பள்ளி முன்பருவக் கல்வியிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி அவரவர் தாய்மொழியில் அருகமைப் பள்ளியில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தக் கொள்கைகள் தமிழ்நாடு அரசு உருவாக்கப்போகும் புதிய கல்விக் கொள்கையின் முகப்புரையாக இடம்பெற வேண்டும். சமூகநீதியில் முன்னணியில் திகழும் தமிழகம், குழந்தைகளின் கல்வி உரிமையை உறுதிசெய்வதிலும் இந்திய ஒன்றியத்தில் முன்னணியில் திகழ வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு. தொடர்புக்கு: kmktamilnadu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்