திரைகடலோடிய தொல் தமிழர்கள்

By செய்திப்பிரிவு

இந்தியா, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5 அன்று ‘தேசியக் கடல்வழி நாள்’ கொண்டாடிவருகிறது. 1919-ல் இதே நாளில் இந்தியாவின் சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் என்ற நிறுவனம் தயாரித்த ‘எஸ்.எஸ்.லாயல்டி’ என்ற கப்பல் முதன்முதலாக மும்பையிலிருந்து இங்கிலாந்துக்கு இயக்கப்பட்டதன் நினைவாக, இந்த நாள் கடல்வழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், நமது முன்னோர்கள் ஏறக்குறைய 5,000 ஆண்டுகளுக்கும் முன்பாகவே பெரும் மரக்கலங்களில் கடல் கடந்து சென்று கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர் என்பதைத் தொல்லியல் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது.

திராவிட நாகரிகம் எனக் கருதப்படும் சிந்துவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள், மிகச் சிறந்த கடலோடிகளாக விளங்கினர். குஜராத் பகுதியில் லோத்தல் என்ற இடம் பெரும் துறைமுகமாக அக்காலத்தில் விளங்கியது. இதனை அகழாய்வு செய்த தொல்லியல் அறிஞர் எஸ்.ஆர்.ராவ், இவ்வூரில் கப்பல் தளம் ஒன்றைக் கண்டறிந்து, சிந்துவெளி மக்கள் அயல்நாடுகளுடன் கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறிவித்தார்.

மொகஞ்சதாரோவில் கிடைத்த முத்திரை ஒன்றில், கப்பலின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததும் இதை உறுதிசெய்கிறது. ஆனால், நமது பாட நூல்களில் உலகத்தில் கடல் வழியைக் கண்டுபிடித்தவர்கள் 16-ம் நூற்றாண்டைச் சார்ந்த மாலுமிகளான வாஸ்கோடகாமா, அமெரிக்கோ வெஸ்புகி, பார்த்தலோமியா டையஸ், கொலம்பஸ் ஆகியோர்தான் என்று மாணவர்களுக்கு ஆங்கிலேயர்கள் வகுத்துத் தந்த பாடத்திட்டங்களையே இன்னும் கற்பித்துக்கொண்டிருக்கிறோம்.

கடல்களால் சூழப்பட்ட பண்டைத் தமிழக நிலப் பகுதிகள் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் ஆட்சியின் கீழ் இருந்தன. அவர்கள் கடல்வழிப் பயணத்தையும் கடல் வணிகத்தையும் ஊக்கப்படுத்தினர். முசிறி, காவிரிப்பூம்பட்டினம், கொற்கை போன்ற பெரிய துறைமுகங்களும் பல சிறிய துறைமுகங்களும் சங்க காலத்தில் இருந்தன. இத்துறைமுகங்களுக்கு வெளிநாட்டு வணிகர்கள் வந்தனர். உள்நாட்டிலிருந்து தமிழ் வணிகர்கள் மேலை மத்தியத் தரைக்கடல் நாடுகளுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் குழுக்களாகச் சென்றுள்ளனர்.

திசையாயிரத்து ஐந்நூற்றுவர், மணிக்கிராமத்தார், நாணதேசிகள், அய்யப்பொழில், அஞ்சுவண்ணம் என இவர்கள் வழங்கப்பட்டனர். மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் என்ற இடத்தில் கிடைத்துள்ள பொ.ஆ.மு. 6-ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழிக் கல்வெட்டில் ‘கடலன் வழுதி நெடுஞ்செழியன்’ என்ற பெயர் காணப்படுகிறது. எனவே, பாண்டியர்கள் கடலோடிகளாக அக்காலத்தில் விளங்கினர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பூலாங்குறிச்சி என்ற இடத்தில் பொ.ஆ. 3-ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளில் ‘கடலகப் பெரும்படைத் தலைவன்’ என்ற பெயர் காணப்படுகிறது. கடலில் தனது ஆதிக்கத்தைச் செலுத்திய பெரும் படைத் தலைவரை இது குறிக்கிறது.

சேரர்களின் முசிறித் துறைமுகத்திலிருந்து பெரும் கப்பல்களில் பல பொருட்களைத் தமிழர்கள் ஏற்றுமதிசெய்து ஆப்பிரிக்க நாடுகளின் கிழக்குப் பகுதியில் செங்கடலை ஒட்டி இருந்த துறைமுகங்களான பெரினிகே, குசிர்-அல்-குதாம் ஆகிய துறைமுகங்களுக்கு ஏற்றிச் சென்றனர். காற்றின் போக்குக்கேற்பத் திசை அறிந்து, பல கலங்களைத் தமிழர்கள் செலுத்தினர். கடல் கொள்ளையர்களின் அச்சுறுத்தலும் அக்காலத்தில் இருந்துள்ளன. சேர மன்னன் செங்கோட்டு வேலன் இக்கடல் கொள்ளையர்களை அழித்து ‘கடல்பிறகோட்டிய செங்கோட்டு வேலன்’ என்ற பட்டம் பெற்றான்.

முசிறியிலிருந்து சென்ற தமிழ் வணிகர் ஒருவர், செங்கடல் பகுதியில் இருந்த தனவந்தர்களிடம் தனது வணிகத்துக்காகப் பெருமளவில் கடன் பெற்ற செய்தி ஒன்றை கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ஆவணம் ஒன்று குறிப்பிடுகிறது. இது தற்போது அலெக்சாண்டிரியா அருங்காட்சியகத்தில் உள்ளது. முசிறியிலிருந்து ஹெர்மபோலிஸ் என்ற கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இன்றைய மதிப்பில் அச்சரக்குகள் மூன்று பெரிய கப்பல்களில் ஏற்றக் கூடியவை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செங்கடலை ஒட்டி இருந்த குசிர்-அல்-குதாம், பெரினிகே துறைமுகங்களில் தமிழகக் கப்பல்கள் நங்கூரமிட்டு, அத்துறைமுகங்களிலிருந்து நில வழியாக ஆப்பிரிக்காவின் உள்பகுதிக்கு ஒட்டகங்கள் மூலமாகப் பயணப்பட்டு, நைல் நதியில் இருந்த துறைமுகத்தை அடைந்தன. சூயஸ் கால்வாய் வெட்டப்படாத அக்காலத்தில், நைல் நதி வழியாகப் பெருங்கப்பல்கள் தமிழகத்தின் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, மத்தியத் தரைக்கடல் பகுதியில் இருந்த அலெக்சாண்டிரியாவைச் சென்றடையும். இச்சரக்குகள் அலெக்சாண்டிரியாவிலிருந்து மத்தியத் தரைக்கடல் வழியாகப் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக ரோமாபுரிக்குக் கொண்டுசெல்லப்படும். மேற்குறித்த முசிறி வணிகரைக் குறிக்கும் கிரேக்க ஆவணம் பொ.ஆ.1-ம் நூற்றாண்டைச் சார்ந்தது.

யவனர் எனக் குறிக்கப்படும் அயல்நாட்டவர், தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் பணியாற்றியுள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள வசவசமுத்திரம், அரிக்கமேடு, அழகன் குளம் ஆகிய துறைமுகங்களில் கிடைத்த தொல்பொருட்கள் பலவும் யவன நாட்டிலிருந்து வந்தவை. ‘யவனத் தேறல்’ எனப்படும் மதுவை யவனர்கள் ஆம்போரா எனப்படும் குடுவைகளில் எடுத்துவந்துள்ளனர். இம்மதுக்குடங்கள் இத்துறைமுகங்களில் பெருமளவில் கிடைத்துள்ளன.

இதே போன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் என்ற இடத்தில் செய்யப்பட்ட அகழாய்வில் கப்பல் உருவம் பொறித்த இரண்டு மட்கலன்கள் கிடைத்துள்ளன. அழகன்குளம் சங்க காலத்தில் கடல் வணிகம் மேற்கொண்ட நகரமாக விளங்கியிருந்தது. மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் உற்பத்தி செய்யப்பட்ட மணி வகைகள் மற்றும் ஆடைகள் அழகன்குளம் வழியாக ஏற்றுமதிசெய்யப்பட்டன. யவன வணிகர்கள் தமிழகத்தில் பொன் நாணயங்களைக் கொடுத்து, நறுமணப் பொருட்களை வாங்கினர். ‘பொன்னொடு வந்து கறியோடு பெயர்ந்து’ எனச் சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பொன் கொடுத்து, கறி எனப்படும் மிளகை ரோமானியர்கள் வாங்கினர்.

செங்கடல் பகுதியில் குசிர்-அல்-குதாம், பெரினிகே மற்றும் ஏமன் பகுதியின் கோரொரி ஆகிய துறைமுகப்பட்டினங்களில் அண்மையில் அகழாய்வுகளில் தமிழி எழுத்து பொறித்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவ்வோடுகளில் கணன், சாதன், கொற்றபூமான், ..ந்தை கீறன் போன்ற தமிழ் வணிகர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.

தமிழர்கள் கீழை நாடுகளான சுமத்ரா, ஜாவா, சீனம் ஆகிய நாடுகளிலும் 2,500 ஆண்டுகளுக்கும் முன்பாகவே கடல்வழிப் பயணம் மேற்கொண்டிருந்தனர். தாய்லாந்து நாட்டிலுள்ள கோலங் தோம் அருங்காட்சியகத்தில் பொ.ஆ. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பொன் உரசும் கல் ஒன்றில் ‘பெரும்பதன் கல்’ என்ற தமிழி எழுத்துப் பொறிப்பு இதனை உறுதிசெய்கிறது.

தக்கோபா என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டில், தமிழர்கள் குடியிருப்புகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. காவிரிப்பூம்பட்டினம் அருகிலுள்ள மணிக்கிராமத்தைச் சார்ந்த வணிகர்கள் தென்கிழக்காசியப் பகுதிகளில் கடல் வணிகத்தில் ஈடுபட்டனர். சீனர்கள் தங்கள் தூதுவர்களைத் தமிழகத்துக்கு அனுப்பி வைத்தனர் என்பதை சீன ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பல்லவர்கள் காலத்தில் சீனப் பயணியான யுவான் சுவாங் பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்துக்கு வந்துள்ளார். காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயிலின் சிற்பங்களில் சீனப் பயணியின் சிற்பம் உள்ளது. காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தைப் பற்றிக் குறிப்பிடும் ‘பட்டினப்பாலை’யில் சீனர்கள் இன்றளவும் ‘சுங்’ என்ற பெயரில் பயன்படுத்திவருகின்ற தொங்கு நாவாய் என்னும் பெரிய கப்பல் பற்றிக் குறிப்பு உள்ளது.

சோழ மன்னர்களான ராஜராஜனும் ராஜேந்திர சோழனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். ஸ்ரீவிஜய மன்னன் விஜயதுங்கன் தனது தந்தையின் பெயரில் சூடாமணிபன்ம பௌத்த விகாரை ஒன்றை நாகப்பட்டினத்தில் கட்டுவதற்கு ராஜராஜ சோழனின் அனுமதியைப் பெற்றார். சீனாவில் செங்கிஸ் கான் காலத்தில் அவரது பெயரால் சிவன் கோயில் ஒன்றைத் தமிழர்கள் கட்டியுள்ளனர். இத்தகைய தொன்மை வரலாற்றைக் கொண்ட கடல்வழிப் பயணம் குறித்தும், தமிழகத் தொன்மைக் கடற்கரைத் துறைமுகங்கள் குறித்து அறிவதற்கும் ஆழ்கடல் அகழாய்வு செய்வதற்குத் தமிழக அரசு இவ்வாண்டு பெரும் நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

- சு.ராஜவேலு, மேனாள் துறைத் தலைவர், தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை. தொடர்புக்கு: rajavelasi@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்