காட்டழிப்பை நிறுத்தாமல் எதுவுமே செய்ய முடியாது - ஒளிப்படக் கலைஞர் செந்தில் குமரன் பேட்டி

By ஆசை

ஒளிப்படக் கலைக்கு உலக அளவில் வழங்கப்படும் மிக முக்கியமான விருதுகளுள் ஒன்றான ‘வேர்ல்டு பிரெஸ் ஃபோட்டோ’ விருதுக்கு ஆசியப் பிராந்தியத்திலிருந்து தேர்வாகியிருக்கும் நால்வருள் மதுரையைச் சேர்ந்த செந்தில் குமரனும் ஒருவர். மேலும், இந்த விருதின் உலக அளவிலான பிரிவுக்கான பரிசீலனையிலும் செந்தில் குமரனின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. நேஷனல் ஜியாகிரபிக் சொஸைட்டியின் ‘எமெர்ஜிங் எக்ஸ்ப்ளோரர் விருது’ உள்ளிட்ட 20 சர்வதேச அங்கீகாரங்கள் இவருக்குக் கிடைத்திருக்கின்றன. ‘நேஷனல் ஜியாகிரபிக்’, ‘இந்தியா டுடே’ உள்ளிட்ட இதழ்களில் இவருடைய படங்கள் பிரசுரமாகியிருக்கின்றன. ஆவண ஒளிப்படக் கலைஞரான செந்தில் குமரனுடன் உரையாடியதிலிருந்து…

இந்தப் பயணம் எப்படித் தொடங்கியது?

சிறு வயதிலிருந்து எனக்குக் காட்சிக் கலையில் விருப்பம் அதிகம் என்பதால் ஒளிப்படக் கலைத் துறைக்கு வந்தேன். நானாகவேதான் கற்றுக்கொண்டேன். ஒளிப்படங்கள் சார்ந்து பயணங்கள் செல்வதற்கும் படச்சுருள்கள் வாங்குவதற்குமான செலவுகளுக்காக நான் 2001-ல் தொழில்முறையில் ஒளிப்படங்கள் எடுத்துத்தரத் தொடங்கினேன். சிறிய விளம்பர நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தினேன்.

இந்தியாவில் பல இடங்களுக்கு நான் மேற்கொண்ட பயணங்கள்தான் சமூகம் பற்றியும் மக்களைப் பற்றியும் புரிந்துகொள்ள உதவின. இதன் தொடர்ச்சியாகத்தான் நான் எடுத்த ஒளிப்பட வரிசைகளும் அமைந்தன. 2005-06 வாக்கில் ஜல்லிக்கட்டு தொடர்பான ஒளிப்பட வரிசை. பிறகு திருநங்கைகள், மனிதக் கழிவை மனிதர்கள் அகற்றும் அவலம், சர்க்கஸ் போன்றவற்றைப் பற்றிய ஒளிப்பட வரிசைகளை உருவாக்கினேன்.

மனிதர்கள்-விலங்குகள் எதிர்கொள்ளல் தொடர்பான படங்களை எடுப்பதில் எப்போது ஈடுபட ஆரம்பித்தீர்கள்?

முதுமலையைச் சேர்ந்த கலைவாணன் என்றொரு கால்நடை மருத்துவருடன் 2012-ல் வால்பாறைக்குச் சென்றேன். ஊருக்குள் ஒரு புலி, உடம்பு முழுக்கக் காயங்களுடன் வந்திருந்தது. அதைப் பிடித்து, மறுநாள் காட்டுக்குள் விடுவதாகத் திட்டம். அந்த ஒட்டுமொத்தச் செயல்பாட்டையும் ஒளிப்பட ஆவணமாக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். புலியோ உடல்நிலை குன்றி இறந்துவிட்டது. அப்போது எனக்குள் நிறைய கேள்விகள் எழுந்தன.

இந்தியாவிலேயே மிக முக்கியமான வனப் பாதுகாப்புச் செயல்பாட்டாளரும், ‘யானை மனிதர்’ என்று அழைக்கப்படுபவருமான அஜய் தேசாயும் அப்போது என்னுடன் இருந்தார். மனிதர்கள்-விலங்குகள் எதிர்கொள்ளல், வனப் பாதுகாப்பு போன்றவற்றை எப்படிப் பார்ப்பது என்றெல்லாம் அவர் எனக்குச் சொல்லித்தந்தார். அவருடன் நான் 10 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். அவருடைய 35 ஆண்டுகால அனுபவங்களை நான் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது பெரிய வாய்ப்பு.

கடந்த 10 ஆண்டுகளாக மனிதர்கள்-புலிகள் எதிர்கொள்ளல் தொடர்பாக இந்தியா முழுவதும் 12 புலிகள் காப்பகங்களில் ஒளிப்பட ஆவணமாக்கலில் இயங்கிவந்திருக்கிறேன். வனங்களின் மையப் பகுதியில் உள்ள 60 கிராமங்களுக்குச் சென்று, மனிதர்கள்-புலிகள் எதிர்கொள்ளல் தொடர்பாக ஒளிப்பட ஆவணமாக்கல் செய்திருக்கிறேன். இதனால் விலங்குகள் தரப்பு, மக்கள் தரப்பு, வனத் துறையினர் தரப்பு, அரசுத் தரப்பு என்று அனைத்துத் தரப்புகளின் கோணத்தையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வனவுயிர் பாதுகாப்பாளர்கள் எல்லாம் பழங்குடியினர் மீதுதான் தவறு என்பார்கள். செயல்பாட்டாளர்கள் எல்லாம் புலிகள் காப்பகங்கள் பழங்குடியினருக்கு எதிராக இருக்கின்றன என்பார்கள். வனத் துறையினரைப் பார்த்தால் அவர்கள் விலங்குகள், மக்கள் இரண்டு தரப்புகளையும் ஒரே சமயத்தில் காப்பாற்ற வேண்டும். இந்த அனைத்துக் கோணங்களும் எனக்கு 10 ஆண்டு அனுபவத்தில் கிடைத்தன.

மனிதர்கள்-விலங்குகள் எதிர்கொள்ளலுக்கு முக்கியக் காரணம் என்ன?

காடுகளுக்கு ஓரமாக உள்ள மக்கள் வனப் பகுதிகளை ஆக்கிரமித்ததுதான் இதற்குக் காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். வயல்கள், ஆக்கிரமிப்பு போன்றவை மூன்று சதவீதம்தான். 84% காட்டழிப்புக்குக் காரணம் சுரங்கங்கள்தான். சுரங்கம் ஏன் தேவையாக இருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் நகர்ப்புற வளர்ச்சியும் உலகமயமாக்கலும் இருக்கின்றன. நாம் பயன்படுத்தும் உலோகங்கள், கைபேசி, கணினி போன்ற சாதனங்களில் இருக்கும் கனிமங்கள் எல்லாமே காடுகளில் உள்ள சுரங்கங்களிலிருந்துதான் பெறப்படுகின்றன. நாம்தான் இதற்கெல்லாம் நேரடியான காரணம் என்பதைப் பிரதானப்படுத்திக் காட்ட வேண்டும் என்றுதான் நான் முயன்றுகொண்டிருக்கிறேன்.

இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?

காட்டழிப்பை நிறுத்தாமல் எதுவுமே செய்ய முடியாது. 2010-12 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 1,700 புலிகள் இருந்தன. இப்போது 3,000-க்கும் மேற்பட்ட புலிகள் இருக்கின்றன. ஆனால், காடுகளின் பரப்பளவு 2010-ஐவிடத் தற்போது மிகவும் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அன்று இருந்த காடுகளைவிட இப்போது உள்ள காடுகளின் ஓரங்களில் இடையூறுகள் அதிகமாகிவிட்டன. இந்தியாவில் உள்ளவற்றில் கிட்டத்தட்ட 29% புலிகள், பாதுகாக்கப்பட்ட வனமையப் பகுதிகளுக்கு (core zone) வெளியில்தான் இருக்கின்றன.

ஆக, காட்டின் பரப்பளவை அதிகப்படுத்தாமல் புலிகளை மட்டும் அதிகப்படுத்துவது என்பது மிகவும் தவறான விஷயம். இருக்கும் காடுகளையாவது இனிமேல் அழிக்காமல் பார்த்துக்கொள்வது, காட்டுயிர்களுக்கு வழித்தடங்களை ஏற்படுத்துவது போன்றவைதான் தீர்வுகள். ஆனால், நாம் வழித்தடங்களை ஏற்படுத்தாமல் சுற்றிவளைத்துவிடுகிறோம். அணைகள், ரயில் பாதைகள் என்றெல்லாம் இடையூறுகளை ஏற்படுத்திவிடுகிறோம். இப்படிப்பட்ட சூழல் மனிதர்கள்-புலிகள் எதிர்கொள்ளலுக்குத்தான் வித்திடும்.

விவசாயிகள் - யானைகள் எதிர்கொள்ளலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

யானைகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயரும் இயல்புடையவை. இந்தியாவில் அவற்றின் வழித்தடங்கள் 84% ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனால் திசைமாறி விவசாய நிலங்களுக்கு வந்து கரும்பு, நெல், சோளம் போன்ற பயிர்களைத் தின்கின்றன. அந்தப் பயிர்களின் சுவை அவற்றுக்குப் பிடித்துப்போனதால், காட்டுக்குப் போக வேண்டிய அவசியமில்லாமல் அங்கேயே தங்கிவிடுகின்றன. இதனால் ஏற்படும் எதிர்கொள்ளலில் ஒன்று மனிதர்கள் சாகிறார்கள், இல்லையென்றால் யானைகள் சாகின்றன. பெருவிவசாயிகளெல்லாம் தங்கள் நிலங்களைச் சுற்றி சூரிய மின்சக்தி வேலிகள், நீள்குழிகள் போன்ற பாதுகாப்புகளை அதிக செலவில் ஏற்படுத்திக்கொள்வார்கள்.

ஒன்றரை ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்கள் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு இதற்கெல்லாம் வசதி இருக்காது. ஆறு மாத உழைப்பை யானைகள் அழித்துவிடக் கூடுமோ என்று அஞ்சி, சூரிய மின்வேலி அல்லாமல் வழக்கமான மின்வேலிகளை வைத்துவிடுகிறார்கள். இதனால் யானை செத்தாலும் அவர்களுக்குத்தான் பிரச்சினை. இன்னொரு புறம் யானைகளால் தாக்கப்பட்டு இறப்பவர்களும் வாட்ச்மேன்கள், ஏழை விவசாயிகள் போன்றோர்தான். நாம் அந்தக் கோணங்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது. முக்கியமாக, விலங்குகள் பாதுகாப்பு என்பதை மட்டும் மனதில் கொண்டு நாம் செயல்பட்டால், மக்களின் மனநிலை விலங்குகளுக்கு எதிரானவர்களாக மாறிவிடும். பிறகு, நம்மால் விலங்குகளைக் காப்பாற்ற முடியாது. விலங்குகளிடம் உள்ளூர் மக்கள் மூர்க்கமாக நடந்துகொள்ள நேரிடும்.

வேர்ல்டு பிரெஸ் ஃபோட்டோ விருது குறித்துச் சொல்லுங்கள்...

ஒளிப்படங்களுக்கு உலக அளவில் வழங்கப்படும் உயரிய விருது இது. இந்த விருதைப் பெறுவது என்னுடைய 20 ஆண்டுக் கனவு. இந்த ஆண்டு விருதுக்கான வகைமையை விரிவுபடுத்தினார்கள். உலக அளவில் ஆறு பிராந்தியங்களாகப் பிரித்தார்கள். நான் 30 படங்கள் கொண்ட ஒரு ஒளிப்பட வரிசையை அனுப்பியிருந்தேன். எனக்கு விருதுக் குழுவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. நான் எடுத்த ஒளிப்படங்கள், அதன் மையப்பொருள் ஆகியவற்றுக்கும் எனக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றிக் கேட்டார்கள். என்னுடைய திட்டப் பணிகள் எல்லாம் என்னுடைய சொந்தச் செலவில் மேற்கொண்டவை; மேலும், நானும் உள்ளூர் நபர் என்பதால் மனிதர்கள்-விலங்குகள் எதிர்கொள்ளலில் உள்ளூர் மக்களின் நிலையை, சிக்கல்களை நன்கு அறிந்தவன். இந்த இரண்டு விஷயங்களும் எனக்குச் சாதகமாக ஆயின.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்