நுண்ஞெகிழி - நம்மை நெருங்கும் பேராபத்து!

By கு.கணேசன்

கோடை வெயில் இப்போதே கொளுத்தத் தொடங்கிவிட்டது. தாகம் தீர்க்க எந்தத் தயக்கமும் இல்லாமல் பாட்டில் தண்ணீரை லிட்டர் கணக்கில் வாங்கிக் குடிக்கிறோம். அந்தத் தண்ணீரில் நுண்ஞெகிழி கலந்திருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நம் கண்ணுக்குத் தெரியாமல், தண்ணீர் வழியாக வயிற்றுக்குள் செல்லும் ‘மைக்ரோபிளாஸ்டிக்’ (Micro plastic) எனும் நுண்ணிய ஞெகிழித் துகள்கள் உடலுக்கு நஞ்சாவது குறித்து சூழலியலாளர்கள் எச்சரித்துக் கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால், அந்த ஆபத்தை அறியாமல் இருப்பவர்கள்தான் நம்மிடம் அதிகம். இந்தச் சூழலில், ஞெகிழித் துகள்கள் ஆபத்தை 100% உறுதிசெய்யும் விதமாக, நெதர்லாந்தில் நடைபெற்ற ஆய்வின் முடிவு ஒன்று தற்போது மருத்துவத் துறையில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, நுண்ஞெகிழித் தொடர்பில் சில அரிய செய்திகளை அறிவோம்.

அளவில் 5 மி.மீ.க்கும் குறைவாக உள்ள ஞெகிழித் துகள்களை ‘நுண்ஞெகிழி’ என்கிறோம். பொதுவாக, ஞெகிழிப் பொருட்கள் சிதையும்போது உருவாகும் நுண் துகள்தான் இந்த ‘வில்லன்’கள். காலையில் எழுந்ததும் பல் துலக்கப் பயன்படுத்தும் பற்பசை, பல்துலக்கி, முகம் கழுவ உதவும் ‘ஃபேஸ்வாஷ்’ தொடங்கி, ஆடைகள், உணவுக் கலம், தண்ணீர் பாட்டில், பைகள் என நம் அன்றாடப் பயன்பாடு பலவற்றிலும் ஞெகிழிப் பயன்பாடு உள்ளது. சாதாரணமாக நாம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் ஞெகிழிப் பொருட்கள் உடைந்தும் சிதைந்தும் நிலத்திலும் நீரிலும் கலந்துவிடுகின்றன.

அந்த நிலத்தில் விளையும் காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடும்போது அவை நம் உடலுக்குள் புகுந்துவிடுகின்றன. ஞெகிழிக் கலத்தில் உள்ள நீரையோ ஞெகிழி கலந்த நீரையோ பருகும்போது இதே பிரச்சினை ஏற்படுகிறது. ஞெகிழிக் கழிவுகள் வருடந்தோறும் டன் கணக்கில் கடல்நீரில் கொட்டப்படுகின்றன. இவற்றை உணவாகக் கொள்ளும் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளால் உணவுச் சங்கிலி மூலம் நுண்ஞெகிழி நம்மை வந்தடைகிறது. ஞெகிழிப் பொருட்கள் எரிக்கப்படுவதால் விளையும் நச்சுப்புகை காற்றில் கலக்கும்போது, நாம் சுவாசிக்கும் காற்று மாசடைகிறது. அந்தக் காற்றின் வழியாக நுண்ஞெகிழித் துகள்கள் நம்மை வந்தடைகின்றன. இந்த வழிகள் மட்டுமல்லாமல், நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள் வழியாக நுண்ஞெகிழி நம் உடலில் சேர்வதும் உண்டு.

கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை நுண்ஞெகிழித் துகள்களால் உயிரிப் பன்மைக்கு ஆபத்து இல்லை என்றே அறிவியல் உலகம் நம்பிக்கொண்டிருந்தது. 2008-ல் மார்க்கஸ் எரிக்ஸனும் மார்க் பிரவுனியும் தனித்தனியாக மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள் இந்த நம்பிக்கையைக் குலைத்துப்போட்டன. வடக்கு பசிபிக் கடலில் இருந்த மீனின் உடலுக்குள் 18 வகை நுண்ஞெகிழிகள் இருந்ததைப் படம்பிடித்தார் எரிக்ஸன். இது பெரும் அதிர்வலையை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து நுண்ஞெகிழித் துகள்களால் உருவாகும் ஆபத்துகளை உணரத் தீவிரமாகப் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

‘நுண்ஞெகிழிகளைக் கடல்வாழ் உயிரினங்கள் இரையாக நினைத்து உட்கொள்கின்றன. இதனால் அவற்றின் உடல் உறுப்புகள் சிதைவடைகின்றன. சுவாசப் பிரச்சினை, உணவுச் சங்கிலி பாதிப்பு என அவை எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம். இவற்றோடு அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. பல லட்சக்கணக்கான கடல்வாழ் உயிரிகள் அழிகின்றன’ என்கின்றனர் கடல் ஆராய்ச்சியாளர்கள். இவர்களின் அறைகூவலை உறுதிசெய்யும் விதமாக சென்னை பட்டினப்பாக்கத்தில் விற்கப்பட்ட 7 மீன் வகைகளில் ஞெகிழித் துகள்கள் கலந்திருப்பதாகத் தேசியக் கடலோர ஆராய்ச்சி மையம் நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்தது.

இந்தத் தகவல்களைத் தொடர்ந்து மனிதர்களின் உடலுக்குள்ளும் நுண்ஞெகிழிகள் புகுந்துள்ளன எனும் தகவல் அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இவற்றில் 2018-ல் ஆஸ்திரேலியாவில் வியன்னா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு முக்கியமானது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து 3 ஆண்கள், 5 பெண்கள் என 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். ஒரு வாரம் அவர்கள் எடுத்துக்கொண்ட கடல் உணவு வகைகள், ஞெகிழி உறையில் கொண்டுவரப்பட்ட உணவு வகைகள், ஞெகிழி பாட்டில் தண்ணீர் ஆகியவை குறிப்பெடுக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் அவர்களின் கழிவுகள் சோதிக்கப்பட்டன. ஆய்வின் முடிவில் மனிதக் கழிவுகளில் நுண்ஞெகிழிகள் இருப்பது கண்டறியப்பட்டன. இதைத் தொடர்ந்து, இத்தாலியில் 8 கர்ப்பிணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பனிக்குடச் சவ்விலும் நஞ்சுக்கொடியின் அருகிலும் சிசுவின் மலத்திலும் நுண்ஞெகிழிகள் இருக்கின்றன என்று வந்த தகவல் மருத்துவத் துறையினரைத் திடுக்கிட வைத்துள்ளது.

சமீபத்தில் நெதர்லாந்தில் 22 தன்னார்வலர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 17 பேரின் ரத்த அணுக்களில் நுண்ஞெகிழிகள் காணப்பட்டன. இவர்களிடம் காணப்பட்ட முக்கிய நுண்ஞெகிழிகள், தண்ணீர் பாட்டிலில் பயன்படுத்தப்படும் பாலிஎத்திலின் டெரிப்தலேட் (PET), பேக்கிங் பொருட்களில் பயன்படுத்தப்படும் பாலிஸ்டிரின் (Polystyrene), கேரிபேக்குகளில் பயன்படுத்தப்படும் பாலிஎத்திலின் (Polyethylene). 2040-ல் இந்த நுகர்பொருட்களின் உற்பத்தி 2 மடங்காக அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் அறிவித்திருக்கும் சூழலில், இந்த ஆய்வின் முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

நுண்ஞெகிழிகள் ரத்தத்தின் வழியாக உடலுக்குள் பயணம் செய்யலாம் என்றுதான் இதுவரை அறியப்பட்டது. இப்போது முதல் முறையாக நுண்ஞெகிழிகள் ரத்த அணுக்களையே பாதிக்கும் எனும் தகவல் வெளிவந்திருக்கிறது. இதை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. காரணம், இந்தத் துகள்கள் ரத்த அணுக்களைச் சிதைப்பதில் தொடங்கி, உடலுக்குள் ஆக்ஸிஜன் விநியோகத்துக்குத் தடை போடுவது, குடல், எலும்பு, நரம்பு, சிறுநீரகம் எனப் பல்வேறு உடல் உறுப்புகளில் பதியமாகி அந்த உறுப்புகளையும் சிதைப்பது எனப் பேராபத்துகளை ஏற்படுத்துவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மலட்டுத்தன்மை, ஹார்மோன் பாதிப்புகள், புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்துகளையும் இவை ஏற்படுத்தலாம் என்ற அளவில் பேசப்படுகிறது. போகப்போக இந்த ஆய்வுகளை விரிவுபடுத்தும்போது மேற்சொன்ன ஆபத்துகள் உறுதிசெய்யப்படலாம். தற்போதைய காரணம் தெரியாத மரணங்களுக்கு இவைகூடக் காரணமாக இருக்கலாம்.

ஞெகிழிப் பயன்பாடு இல்லாத உலகை இப்போது நினைத்துப் பார்ப்பது சிரமம்தான். என்றாலும், பொதுமக்களுக்கு நுண்ஞெகிழிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மேற்கத்திய நாடுகள் பலவகை முன்னெடுப்புகளை எடுத்துள்ளன. இந்தியாவில் நுண்ஞெகிழி தொடர்பான ஆய்வுகள் குறைவு என்பதால், இதன் பாதிப்புகள் நம் கண்களுக்குத் தெரியாமல் கண்ணாமூச்சி காண்பிக்கின்றன. தற்போது, திடக்கழிவுகளாக நம் முன்னால் காட்சியளிக்கும் ஞெகிழியை அகற்றவே திணறிக்கொண்டிருக்கிறோம். 2016-ல் உருவான திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கையாலாகாத நிலைமையில்தான் உள்ளது. ஞெகிழிப் பொருட்கள் தயாரிப்பு குறித்த மத்திய அரசின் விதிகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன.

நுகர்பொருட்கள் மூலம் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் புதிது புதிதாகப் பாதிப்புகள் ஏற்படும்போது, அவை குறித்த விளைவுகளை மக்களுக்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்த வேண்டியது அரசின் கடமை. அந்த விளைவுகளை உடனடியாக மக்கள் எதிர்கொள்வதற்கும் காலப்போக்கில் அவற்றை நிரந்தரமாகத் தவிர்ப்பதற்கும் தேவையான வழிமுறைகளைச் சுட்டிக்காட்டி, பொது ஆரோக்கியம் காப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். தேவைப்பட்டால், ஞெகிழிப் பொருட்கள் பயன்பாடு குறித்த பழைய சட்டங்களை நீக்கிவிட்டு, புதிய சட்டங்களை இயற்றி, அவற்றை மிகுந்த கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த அரசு இயந்திரம் தயாராக வேண்டும்.

ஞெகிழிப் பயன்பாட்டை அறவே நிறுத்தும்வரை திடக்கழிவு மேலாண்மையில் இன்னும் அதிக கவனம் செலுத்தி, அதன் பயன்பாட்டைக் குறைக்கவும், ஞெகிழிக் கழிவுகளை அகற்றவும் அரசுகள் வழிகாட்ட வேண்டும். உபயோகிப்பது உடையானாலும், உபகரணம் ஆனாலும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய, முழுதாக மறுசுழற்சி செய்யக்கூடிய ஞெகிழிப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்பதில் மக்களும் அரசுகளும் அக்கறை காட்ட வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவில் கண்ணுக்குத் தெரியும் ஞெகிழிப் பொருட்களால் ஏற்படும் ஆபத்துகளைவிட கண்ணுக்குத் தெரியாத நுண்ஞெகிழிகளால் ஏற்படும் ஆபத்துகள் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். ஆகவே, அரசுகளும் பொதுமக்களும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது!

- கு.கணேசன், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்