தெற்காசியாவின் வறிய நாடாக மாறிவரும் இலங்கை

By செய்திப்பிரிவு

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்கொண்டே வருகிறது. டாலருக்கான பெறுமதி கூடிக்கொண்டே வருகையில், இலங்கை ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே வருவதோடு, நாட்டின் வெளிநாட்டு நிதிப் பிரிவு நெடுங்காலமாகச் சரிவைச் சந்தித்துவருகிறது. அதனால், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்ததற்கு ஏற்றுமதிச் செலவுக்கும், இறக்குமதிச் செலவுக்கும் இடையே பாரிய வேறுபாட்டையும் முக்கியக் காரணமாகக் குறிப்பிடலாம். இதனால், 500 கோடி டாலர்களுக்கும் அதிகமான நஷ்டம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.

இவ்வளவு சரிவுகளைச் சந்தித்துக்கொண்டிருந்தபோதிலும், கடந்த மாதம் வரைக்கும் இலங்கை மத்திய வங்கி, ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியை 202 ஆகவே தொடர்ந்து பேணுவதாகவும், எந்தக் காரணத்துக்காகவும் அதை மாற்றப்போவதில்லை என்றும் அறிவித்தது. அந்தக் காலகட்டத்தில் ஒரு டாலரின் பெறுமதி இலங்கை மத்திய வங்கியில் 202 ஆக இருந்தபோது, கறுப்புச் சந்தையில் ஒரு டாலருக்கு 240 ரூபாயைப் பெற்றுக்கொண்டிருந்ததும் நடந்தது. அதனால், மக்களும் வர்த்தக நிறுவனங்களும் தம்மிடம் இருந்த டாலர்களை மாற்றுவதற்குக் கறுப்புச் சந்தையை நாடத் தொடங்கினர். தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கியில் டாலரின் தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. மத்திய வங்கியானது சந்தைப் போக்குகளைக் கண்டறிந்து, அதற்கேற்ப டாலரின் பெறுமதியைத் தீர்மானிப்பதற்கு அப்போதே அனுமதித்திருந்தால், ரூபாயின் பெறுமதி இந்த அளவு வீழ்ச்சியடைந்திருக்காது. இலங்கை மத்திய வங்கிக்குத் தொலைநோக்குப் பார்வை இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

இன்று ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி முந்நூறைக் கடந்துள்ளது. ஆகவே, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை நாளுக்கு நாள் படுவேகமாக, பல மடங்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவ்வாறே, இலங்கை அரசாங்கம் மீளச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களின் ரூபாய் பெறுமதியும் அதிகரித்துவருகிறது. இவ்வாறான அதிகரிப்புகள் அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்திலும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்தச் சுமைகள் அனைத்தையும், தொலைநோக்குப் பார்வையற்ற அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகக் குறைபாட்டின் பிரதிபலனையும் பொதுமக்கள்தான் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தற்போதைய அரசாங்கம் 2019-ல் ஆட்சிக்கு வந்தபோதே பொருளாதார ஸ்திரமின்மைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருந்தன. அப்போதே அரசாங்கம் தீர்க்கமானதும் சரியானதுமான முடிவுகளை எடுத்திருந்தால், இந்த அளவுக்குப் பாரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்திருக்காது. தற்போது அரசாங்கம் தனது கையிருப்பில் உள்ளதாகக் காண்பிக்கும் டாலர்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்தொகைகளாகவே இருக்கின்றன எனும்போது இதன் பாரதூரம் உங்களுக்கு விளங்கும். தெற்காசியாவில் இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் ஒரே நாடு தற்போதைக்கு இலங்கைதான். ஏனைய நாடுகள் இந்தக் காலகட்டத்தில் தமது டாலர் கையிருப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் அதிகரிப்பைக் காண்பித்திருக்கின்றன. அந்த நாடுகள் அனைத்தும் பொருளாதாரத்தைச் சரியான முறையில் நிர்வகிப்பதால்தான் இந்த அளவு வளர்ச்சியை அடைந்திருக்கின்றன.

இலங்கை அரசாங்கம் தற்போதும் தொடர்ந்து ரூபாயை அச்சிட்டுவருகிறது. இதனால் பணவீக்கம் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருட காலத்துக்குள் மட்டும் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் குறைந்தது 25% அதிகரித்துள்ளது. தொடர்ந்து ரூபாய் அச்சிடப்படுவதும் இவ்வாறான விலை அதிகரிப்புக்கு ஒரு காரணம் ஆகும். கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம், இலங்கை மத்திய வங்கி 3,000 பில்லியன் ரூபாய் தாள்களை அச்சிட்டுள்ளது. இவ்வாறாகப் பண விநியோகம் அதிகரிக்கும்போது, பணவீக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்த வருடம் ஜூலை மாதத்துக்குள் அரசாங்கம் கொடுத்துத் தீர்க்க வேண்டிய வெளிநாட்டுக் கடன்கள் பல உள்ளன. அத்தியாவசியமான பொருட்களை வாங்க இலங்கை, இந்தியாவிடமிருந்து தொடர்ந்து கடன் வாங்கிவருகின்றபோதும், அதைத் தொடர்ந்தும் செய்வது மேலும் பொருளாதாரச் சீர்குலைவுக்கே வழியமைக்கும்.

இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகத் திறனில் உள்ள குறைபாடுகளால்தான் தற்போதைய நெருக்கடி நிலை வந்திருக்கிறது என்பதை இப்போதாவது அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான நிலை ஏற்படும் என்று அப்போதே எச்சரித்த சர்வதேசக் கடன் தரநிர்ணய நிறுவனங்களின் எச்சரிக்கையை ‘அவை மேற்கத்திய நாடுகளின் சதி’ என்று எளிதாகக் கூறி, அப்போது புறக்கணித்தது இலங்கை அரசாங்கம். அன்று அந்த எச்சரிக்கைகளைப் புறந்தள்ளியதால், இன்று ஒவ்வொரு வெளிநாடாகக் கையேந்திப் பெறும் கடன் தொகையில், தமது அன்றாடத் தேவைகளுக்காக எரிபொருட்களையும் மருந்துகளையும் உணவுப் பொருட்களையும் அரசாங்கம் தரும்வரை நாட்டிலுள்ள மக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மின்சாரத் தடை காரணமாக இருளுக்குள் மூழ்கியுள்ளது. குடிநீர் விநியோகமும் தடைபட்டிருக்கிறது. உணவுப் பொருட்கள், மருந்துகள், பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு சிலிண்டர் வரிசைகளில் மக்கள் இரவு பகலாகக் காத்திருக்கிறார்கள். பலர் வரிசையிலேயே நின்று மயங்கி விழுந்து இறந்திருக்கிறார்கள். உயிர் பிழைக்க வேண்டிப் பலரும் இந்தியாவுக்குப் படகில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு பொருளாதார நெருக்கடியில் நாடு பற்றி எரிந்துகொண்டிருக்கையில் ஜனாதிபதி தொலைக்காட்சியில் தோன்றி, இந்த நெருக்கடிக்குக் காரணம் தானோ, தனது அரசாங்கமோ அல்ல என்று உரையாற்றிவிட்டு, மறு தினமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான விலையையும், நீர், மின்சார, தொலைபேசிக் கட்டணங்களையும், பேருந்து, புகையிரதக் கட்டணங்களையும் அதிகரித்துள்ளார். பொதுமக்கள் இந்த அளவுக்குக் கஷ்டப்படும்போது, ஜனாதிபதியின் குடும்பமும் அமைச்சர்களும் அரசாங்கத்தின் சகலவிதமான வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் இந்தப் பொறுப்பற்ற தன்மையால் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது, விரைவில் மிக உக்கிரமான சமூக நெருக்கடியாக மாறுவது உறுதி. இப்போதே பல தொழிற்சாலைகளும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பலரும் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளார்கள். செல்வந்தர் - ஏழை என்ற பாரபட்சம் இல்லாமல், அனைவரது வீடுகளிலும் வறுமையும் பட்டினியும் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன.

இந்த சமூக நெருக்கடி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும். ஆப்பிரிக்க வறிய நாடுகளில் உணவுக்காக அடித்துக்கொள்வது, திருடுவது, கொள்ளையடிப்பது போன்ற மோதல்களும், குற்றச் செயல்களும் இலங்கையிலும் ஏற்படக் கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. ஆகவே, சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்வதுதான் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான பாதையில் கொண்டுசெல்ல உதவும். சர்வதேச நாணய நிதியமானது, அரசாங்கச் செலவுகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, கடன் மேலாண்மையையும் நிதி நிர்வாகத்தையும் ஒழுங்காகச் செய்யும். இலங்கை மக்கள் தற்போதைய ஒரே நம்பிக்கையாக அதைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஊடகர், இலங்கை. தொடர்புக்கு: mrishansh@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்