விவாத களம் | பெண்ணெழுத்தைச் சூழும் தடைகள் என்னென்ன?

By செய்திப்பிரிவு

தமிழ்ச் சிறுகதை நூறு வயது கடந்துவிட்டது. வெகுஜன இதழ்கள், தீவிர இலக்கியம் என்று மொத்தமாகப் பார்த்தால் இன்று ஆண்களை விடவும் பெண்கள் எண்ணிக்கை அளவில் அதிகமாக எழுதுகிறார்கள். நாம் இங்கு தீவிர இலக்கியச் சிறுகதைகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். பெண்களின் பங்கு இதில் காத்திரமாகவே இருக்கிறது. கவிதைகளை எழுதாமல் நேரடியாகக் கதைகள் எழுதும் பெண்களும் இருக்கிறார்கள். மொழிபெயர்ப்பின் மீது ஈடுபாடு கொண்டு சிறுகதைகளை எழுதும் பெண் எழுத்தாளர்களும் உண்டு.

இவர்கள் பெரும்பாலும் அகவாழ்க்கை தொடர்பாகத்தான் எழுதுகிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் தனித்த பார்வையற்று, ஒரே மாதிரியான சமூக அவதானிப்பு கொண்ட படைப்புகளாக இருக்கின்றனவா என்பதை நிச்சயம் ஆய்வு செய்யத்தான் வேண்டும்.

பெண்கள் மிகத் தாமதமாகத்தான் கல்வி கற்கத் தொடங்கினார்கள். எழுதக் கற்றுக்கொண்ட பின்பு பெண்கள் யாருடைய உந்துதலும் இல்லாமல் எழுதியிருக்கிறார்கள் என்பது முக்கியம். 50 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் தன் பெயரையும் அடையாளத்தையும் மறைத்து எழுத வேண்டியிருந்தது. தன் கணவருக்கும், புகுந்த வீட்டுக்கும் தெரியாமல் எழுத வேண்டிய சூழல்தான் இருந்தது. இதற்கிடையே கதை எழுதுவதென்பது ஒருவித அச்சத்தைக் குடும்பத்தினரிடம் ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் எழுதுதல் என்பது ஒருவகையில் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளுதல். ‘நமக்குத் தெரியாம அப்படி என்ன எழுதறது?’ என்கிற மனோபாவமே தன் வீட்டுப் பெண்கள் எழுதுவதற்கான தடையை ஏற்படுத்தியிருந்தது. இதிலிருந்து வெளிவர முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றனவே தவிர, இன்னும் முழுமையடையவில்லை என்பதே யதார்த்தம்.

தனித்த பார்வை என்பது தன்னை பாதித்த ஒன்றை ஒவ்வொரு எழுத்தாளரும் எப்படிக் கைக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. அநேகமாக, அத்தனை பெண் எழுத்தாளர்களும் குடும்ப அமைப்பில் பெண்களின் அடையாளம் தொலைந்துபோவது குறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது குடும்ப அமைப்பு பற்றி மட்டுமே எழுதுகிறார்கள் என்கிற தோற்றம் ஏற்படும். எது ஒருவரைப் பாதிக்கிறதோ எது சார்ந்த அனுபவம் இருக்கிறதோ, எது அவர்களை எழுதத் தூண்டுகிறதோ அதைத்தான் எழுத முடியும். உதாரணத்துக்கு, கடலோடிகளைப் பற்றி எழுத வேண்டும் என்று ஒரு பெண் ஆசைப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம், அதை வீட்டின் சமையலறையில் அமர்ந்துகொண்டு எழுதிவிட முடியாது இல்லையா? எர்னெஸ்ட் ஹெமிங்வே போன்ற எழுத்தாளர்கள் மீனவர்களுடன் வாழ்ந்து அவர்களைப் பற்றி எழுதியது போன்ற அனுபவம் வேண்டும். இது பெண்களுக்கு வாய்க்கும் என்று நினைத்துப் பார்க்க முடியுமா? ஆக, தன்னுடைய வட்டத்தில் தனக்கு பாதிப்பை ஏற்படுத்துவதைத்தான் பெண்கள் இங்கு எழுதுகிறார்கள். இது தனித்த பார்வையைத் தரவில்லை என்றால், பிரச்சினை எழுதுபவர்களிடம் இல்லை.

பணிக்காக வெவ்வேறு தளங்களில் பயணப்படும் பெண்களின் கதைகளில் வெவ்வேறு தளங்களை நாம் வாசிக்க முடியும். இதற்கு காரணம் அவர்களின் அனுபவம் பரந்து விரிகிறது, அது எழுத்தில் தெரிகிறது. வரலாறு பற்றியும், தொல்குடிகள் குறித்தும், காவல்துறையால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் பற்றியும், குழந்தைத் தொழிலாளர்கள் சார்ந்தும் பெண்கள் எழுதுகிறார்கள். இது எப்படித் தனித்த பார்வையற்றதாக இருக்கும்?

பெண்கள் முன்புபோல் இல்லை, எல்லாத் தடைகளையும் தாண்டுகிறார்கள் என்பது மேலோட்டமான கருத்து. ‘குருபீடம்’ என்றொரு கதை எழுதினேன். சிறு வயதில் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் கதை. சிலர் என்னிடம் நேரடியாகவே இது உங்களுக்கு நிகழ்ந்ததா என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் கேட்டிருக்கிறார்கள். சக பெண் எழுத்தாளர் ஒருவர், கணவனுக்கும் மனைவிக்குமான ஒரு பிரச்சினை குறித்துக் கதை எழுதியிருக்கிறார். அவரிடம், “உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் ஏதேனும் பிரச்சினையா?” என்று நண்பர்களே விசாரித்ததாகச் சொன்னார். இது மாபெரும் சிக்கல். ஒரு பெண் ‘தன்னிலை’ தொனியில் ஒரு கதையை எழுதுவதற்கே பெரும் தயக்கம் கொள்ள வேண்டியிருக்கிறது. எழுத நினைப்பதையெல்லாம் பெண்கள் எழுத முடிவதில்லை என்பதே யதார்த்தம். கவிதைகளில் பெண்கள் பாலியல் சார்ந்து எழுதியதற்குத் தொடக்கத்தில் வந்த எதிர்ப்புகளை நாம் அறிவோம். அதில் அவர்கள் உறுதியாக இருந்தே பலரின் வாயை அடக்க வேண்டியிருந்தது.

இவையெல்லாம் “ஐயகோ! நாங்கள் இத்தனை நெருக்கடிகளுக்குள் எழுதுகிறோம்!” என்கிற சுயவிளக்கமோ கழிவிரக்கமோ அல்ல. யதார்த்தம். தன்னைக் கடந்து ஒரு பெண் எதையும் எழுதும்போது பாராட்டுகள் கிடைக்கலாம், ஆனால் அதற்குப் பின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் வாய்ப்புகள் உண்டு. ஆனாலும், எழுதுகிறார்கள் என்பதே முக்கியம்.

- ‘நீலம் பூக்கும் திருமடம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், ஆவணப் பட இயக்குநர். தொடர்புக்கு: deepaj82@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

15 days ago

மேலும்