ஃபோக்ஸ்வாகன் வாகனங்களுக்கு எரிபொருள் தொட்டிகளை உற்பத்திசெய்யும் ஆஸ்திரியாவின் ஒரு தொழிற்சாலை அது. அங்கு உற்பத்தியான ஆயிரக்கணக்கான எரிபொருள் தொட்டிகளின் உலோகச் சுவரில் மயிரிழை அளவில் விரிசல். விரிசலுக்கான காரணமோ தீர்வோ தெரியாமல் நிர்வாகிகள் தத்தளித்த சூழலில், அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட வந்திருந்தார் ஜி.டி.நாயுடு.
உலோகத் தகடுகளைத் தொட்டிகளாக மாற்றும் பிரஸ்ஸிங் இயந்திரத்தைச் சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்தார். சிகரெட் பெட்டியிலிருந்து வழவழப்பான மெழுகுத்தாளை எடுத்து, பிரஸ்ஸிங் இயந்திரத்துக்கும் தகடுக்கும் இடையில் விரிசல் வரும் இடம் பார்த்து வைத்து, இயந்திரத்தை இயக்கச் சொன்னார். அதன்பிறகு உருவாக்கப்பட்ட தொட்டியில் விரிசல் இல்லை. அசந்துபோனார்கள் ஆஸ்திரியப் பொறியாளர்கள்.
‘அமெரிக்காவில் ஃபோர்டு தொழிற்சாலையில் பிரஸ்ஸிங் இயந்திரத்தில் உராய்வைத் தடுக்கத் திமிங்கிலத்தின் கொழுப்பைத் தடவித் தகடுகளை அச்சடிப்பதைக் கவனித்தேன். உராய்வைத் தவிர்த்தால் விரிசலைத் தடுக்கலாம். அதனால் மெழுகுத்தாளை உபயோகித்துப் பார்த்தேன். விரிசல் தவிர்க்கப்பட்டது’ என்றார் ஜி.டி.நாயுடு. அதுதான் ஜி.டி.நாயுடு. கூர்ந்த கவனிப்பு, பரந்துபட்ட அனுபவ அறிவு, சோதனை முயற்சிகள், நடைமுறைத் தீர்வுகள், புதுமைக் கண்டுபிடிப்புகள் எனப் பொறியியல் உலகில் துவளாமல் களமாடியவர் கோபாலசாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடு.
பல்கலைக்கழகப் பட்டங்களால், ஆராய்ச்சிக் கட்டுரைகளால் வரையறுக்கப்பட்ட பொறியியல் நிபுணத்துவத்துக்குப் புதிய பரிமாணத்தைத் தந்த பொறியியல் வித்தகர் அவர். மின்சார சவரக்கத்தி, வாக்குப் பதிவு இயந்திரம், பழச்சாறு எந்திரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளோடு நின்றுவிடாமல் வெற்றிகரமான தொழிலதிபராகவும் கொடிநாட்டியவர். ஒரு கட்டத்தில், அவருடைய யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற போக்குவரத்து நிறுவனத்தில் இருநூறுக்கும் அதிகமான பேருந்துகள் இயங்கின. அந்த நிறுவனத்தின் முதல் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர், சுத்தம் செய்பவர், மெக்கானிக், கணக்கர், முதலாளி என எல்லாமுமாக இருந்தவர் ஜி.டி.நாயுடு!
படிப்பாளி: முறையான பொறியியல் கல்வியைப் பெறாவிட்டாலும் ஜி.டி.நாயுடு ஒரு தேர்ந்த படிப்பாளி. அறிவியல் சார்ந்த 16,000 புத்தகங்களையும் உளவியல் சார்ந்த 3,000 புத்தகங்களையும் அவர் வைத்திருந்தார் என அவரது புதல்வர் ஜி.டி.கோபால் ஒரு நூலில் பதிவுசெய்திருக்கிறார். இடையூறு இல்லாமல் படிப்பதற்காக ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வாராம் ஜி.டி.நாயுடு.
பட்டறிவு: உலக அளவிலான பொறியியல் அனுபவத்தை அவர் தேடிப் பெற்றார். ஏறக்குறைய 40 முறை வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பொருட்காட்சிகள், கருத்தரங்குகள் என அறிவுசார் பயணங்களாக அவை இருந்தன. 1932-ல் அவருடைய முதல் வெளிநாட்டுப் பயணத்தில், ஏறக்குறைய ஒரு ஆண்டு காலம் பல நாடுகளில் தங்கியிருந்து, தொழில்நுட்பங்களையும் வர்த்தக நுணுக்கங்களையும் ஆவணப்படுத்திக்கொண்டு திரும்பினார். உண்மையிலேயே அனுபவ ஞானம் பெற விரும்பும் ஒவ்வொரு மனிதரும் பல நாடுகளைச் சுற்றிப்பார்க்க வேண்டியது இன்றியமையாதது என அவர் தீவிரமாக நம்பினார்.
தொடர் தேடல்கள்: கையெழுத்துக் குறிப்புகள், புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் எனப் பல தளங்களில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனது அறிவுத் தேடல்களைத் தொடர்ந்தவர் ஜி.டி.நாயுடு.
1940-களிலேயே ஏறக்குறைய 1,000 தலைப்புகளில் 500 மணி நேரம் ஓடக்கூடிய 100 வீடியோ காட்சிகளை வைத்திருந்தவர் அவர். அறிவியல் ஆவணப்படுத்தலுக்காகக் கற்ற புகைப்பட வீடியோ கலையில் அவர் தேர்ந்தவராகி நேரு, காந்தி, ஹிட்லர், முசோலினி உள்ளிட்டவர்களையும் படம்பிடித்தது இன்னொரு சுவாரசியம். தனது நான்கு வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களையும் பற்றி ஜி.டி.நாயுடு எழுதிய ‘நான் கண்ட உலகம்’ சாதிக்கத் துடிக்கும் அனைவருக்குமான ஒரு உன்னதமான உள்ளீடு.
தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டுவந்த அவர், அவ்வப்போது தன்னைச் சுய அலசல் செய்துகொண்டு தனது போக்குகளை மாற்றிக்கொள்ளவும் தயங்கியதில்லை. அவர் ‘நான் செய்த தவறுகள்’ என்று ஒரு தனி கோப்பு ஏற்படுத்தி வைத்திருந்தார் என ‘அப்பா’ என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார் எழுத்தாளர் சிவசங்கரி.
கொள்கை உறுதி: அவரது பல புதிய கண்டுபிடிப்புகளுக்கான உற்பத்தி உரிமத்தை அப்போதைய பிரிட்டிஷ் - இந்திய அரசாங்கம் தர மறுத்தது. ஆனாலும், விடாப்பிடியாகப் புதிய கண்டுபிடிப்புகளில் தனது கவனத்தைச் செலுத்தினார். பொறியியல் துறையில் மட்டுமின்றி விவசாயம், மருத்துவம் போன்ற துறைகளிலும் பல சோதனைகளைச் செய்தவர் ஜி.டி.நாயுடு. பருத்தி, சோளம், பட்டாணி, துவரை, பப்பாளி ஆகியவற்றின் பரிசோதனை வெற்றிகளும், நீரிழிவு நோய்க்கான சித்த வைத்திய மருந்து உருவாக்கும் முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை.
தேச பக்தி: தனது தொழில்நுட்பத் தேடல்களின் பலன் தேசத்தின் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். 1960-களில் ஜி.டி.நாயுடு நடத்திவந்த ஏறத்தாழ 36 தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு, உள்நாட்டுத் தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி எனப் பல நிலைகளில் நாட்டின் வளர்ச்சியில் பங்காற்றின. 1936-ல் இவரது புதுமைப் படைப்பான ‘ரேஸண்ட் மின் சவரக்கத்தி’ இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பெருத்த வரவேற்பைப் பெற்றது. லண்டனில், ஒரே மாதத்தில் 7,500-க்கும் மேற்பட்ட ரேஸர்கள் விற்பனையாயின. ஒரு அமெரிக்க நிறுவனம் 3 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு அதன் உரிமத்தை விலை பேசியது. “நான் செய்யும் காரியத்தின் எந்த நல்ல விளைவும் இந்தியாவையே சென்றடைய வேண்டும்” என்று தீர்க்கமாக மறுத்துவிட்டார் ஜி.டி.நாயுடு.
அறிவியல் நண்பர்கள்: அறிஞர்களோடு நட்புறவைப் பேணித் தன்னை மென்மேலும் மெருகேற்றிக்கொண்டார் ஜி.டி.நாயுடு. நோபல் பரிசுபெற்ற அறிவியலர் சர்.சி.வி.ராமன், புகழ்பெற்ற பொறியாளர் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா ஆகியோர் இவரின் நட்பு வட்டத்தில் இருந்த குறிப்பிடத்தக்க அறிவியல் ஆளுமைகள். குரலையும் இசையையும் தேனிரும்புக் கம்பியில் பதிவுசெய்யும் ரெக்கார்டரை சி.வி.ராமனுக்கு ஜி.டி.நாயுடு பரிசளித்தார். இதைப் பயன்படுத்தி, 1952-ல் சி.வி.ராமனின் அறிவியல் காங்கிரஸ் உரையைத் தான் பதிவுசெய்ததாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார், ராமனின் வரலாற்றை எழுதிய அறிவியலர் ஏ.ஜெயராமன்.
வாழ்க்கைச் செய்தி: தொழிற்கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த அவர், தனது நன்கொடைகளின் மூலம் கோவையில் பல்தொழில்நுட்பப் பயிலகமும், பொறியியல் கல்லூரியும் உருவாகக் காரணமானார். அப்படித் தொடங்கப்பட்ட ஆர்தர் ஹோப் பொறியியல் கல்லூரியே இன்று அரசு தொழில்நுட்பக் கல்லூரியாக விழுதுவிட்டுச் செழித்திருக்கிறது.
வாழ்க்கையில் முதல் 25 ஆண்டுகள் கல்வி கற்று, அடுத்த 25 ஆண்டுகள் உழைத்துப் பொருள் ஈட்டி, பின்னர் சமூக சேவைக்காக உழைக்க வேண்டும் என்பதே ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கைக் கோட்பாடு. வெற்றிகளால் மட்டுமே நிரம்பியவையல்ல அவரது நாட்கள். தனது கண்டுபிடிப்புகளுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்ட உற்பத்தி உரிமங்கள், தனது சில தொழில்முனைவு முயற்சிகளில் பெற்ற தோல்விகள், தேர்தல் தோல்வி எனப் பல சவால்களையும் தனது வாழ்வில் அவர் சந்தித்தார்.
ஜி.டி.நாயுடு என்ற கண்டுபிடிப்பாளர் இந்தியாவின் பொறியியல் வரையறைகளை மாற்றியமைத்த புதுமையாளர் என்பதுதான் வரலாறு. புதுமையான தொழில்முனைவுகளால் ‘ஸ்டார்ட் அப்’ கலாச்சாரத்தை நாட்டில் பதியமிட்ட தொழில்நுட்பத் தலைமகன் அவர்.
- வி.டில்லிபாபு, டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானி. ‘பொறியியல் புரட்சிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com இன்று ஜி.டி.நாயுடு பிறந்தநாள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago