முதல் முறை வாக்களித்த நரிக்குறவர்களின் வாழ்வு மேம்படுமா?

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக நரிக்குறவர்கள் (வாக்ரிகள்) மற்றும் மலைப் பகுதியில் வாழும் பழங்குடியினர் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிக்கு உற்சாகமாக வந்தனர். அவர்கள் முதல் முறையாக வாக்களிக்க வந்திருந்ததால், அவர்களுக்கு வேண்டிய பயிற்சியும் வழிகாட்டுதலும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் கொடுக்கப்பட்டன.

நரிக்குறவர்கள் உள்நாட்டுப் பகுதியில் வாழும் மக்கள். பெரும்பாலும் அவர்கள் ஓர் இடத்தில் நிரந்தரமாகத் தங்கி வசிப்பதில்லை. அடிக்கடி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்துகொண்டே இருப்பவர்கள். வேட்டையாடுதல், கைவினைப் பொருட்களைச் செய்து பொது இடங்களில் விற்பனை செய்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள். தங்களுக்கென்று சொந்த இடம், சொந்த வீடு எதுவும் இல்லாதவர்கள். சாலை ஓரத்திலும், ரயில் நிலையங்களிலும், பாலங்களுக்கு அடியிலும், அரசுக்குச் சொந்தமான பொதுவெளியிலும் சின்னச் சின்னக் குடிசைகள் போட்டு வாழ்கின்றனர்.

ஒரு இடத்தில் நிரந்தரமாக இவர்கள் இருப்பதில்லை என்பதால், அரசாங்கம் தரும் எந்த விதமான அடையாள அட்டையும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தாசில்தார் அலுவலகத்தில் இவர்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என்று எது கேட்டுப் போனாலும் நிரந்தர முகவரியுடன் கூடிய எந்த விதமான அத்தாட்சியும் இல்லையென்பதால், தர முடியாது என்று சொல்லிப் பல நேரங்களில் அரசு அதிகாரிகள் நிராகரித்துவிடுகிறார்கள். மேலும், அரசு கொடுத்திருக்கும் அட்டவணையில் எந்தப் பிரிவில் நீங்கள் வருகிறீர்கள் என்று தெரியவில்லை என்று சொல்லியும் அவர்களைக் குழப்பி, திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.

கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஜெய்பீம்’ திரைப்படம், இருளர் என்ற பழங்குடி இன மக்கள் எப்படித் தங்களுடைய அடிப்படை உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடினார்கள் என்பதை அழகாகச் சித்தரித்திருந்தது. அதன் பிறகு, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின் பேரில், அரசு அதிகாரிகள் பழங்குடியினர் இருக்கும் பகுதிக்கே சென்று சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை வழங்குவதைப் பார்க்க முடிந்தது. இதனுடைய நீட்சியாகவே திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட நரிக்குறவர்களுக்கும் பழங்குடியினருக்கும் எல்லா அடையாள அட்டைகளும் துரிதமாக வழங்கப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் தங்களுக்குக் கீழ் செயல்படும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகிய அதிகாரிகளின் துணையுடன் சிறப்பு முகாம்களை நடத்தினார்கள்.

அப்படிச் சிறப்பு முகாம் நடத்தியதில் பத்தே நாட்களுக்குள் நரிக்குறவர்களுக்கு வேண்டிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என்று அனைத்தும் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டன. எனவே, ஆறு மாதங்கள், ஒரு வருடம் என முயற்சி செய்தும் கிடைக்காத இந்த அடையாள அட்டைகள் 10 நாட்களுக்குள் கிடைத்தது மிகப் பெரிய ஆச்சரியமாக அவர்களுக்குப் பட்டது.

இந்த நரிக்குறவர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பின்பு, அரசு தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்; சொந்தமாக வீடு கட்டித் தர வேண்டும்; பிள்ளைகளின் படிப்புக்கு உதவ வேண்டும், அதன் மூலம் தங்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களோடு உரையாடியபோது, ‘‘உங்களுக்கு நிரந்தர வீடு வேண்டுமென்றால், நீங்கள் முதலில் உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டும். பொது இடங்களில் பொருட்களை விற்பதற்குப் பிள்ளைகளைப் பயன்படுத்தக் கூடாது. அதேபோல, பெண் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம்செய்து வைப்பதை நிறுத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளையும் முன்வைத்தார். வருங்காலத்தில் இவையெல்லாம் நிறைவேறினால், அவர்களின் வாழ்க்கைத்தரம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயரும்.

திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டைக்கு அருகில் இருக்கும் ஆனைமலை புலிகள் சரணாலயத்தின் எல்லைக்குள் வருகின்ற நான்கு பழங்குடியினர் கிராமங்கள் சமீபத்தில்தான் நகர்ப்புற எல்லைக்குள் சேர்க்கப்பட்டன. இங்கு வாழும் மக்கள் முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முன்வந்தனர். இவர்கள் முதல் முறையாக வாக்களித்ததால் கிராமத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற ஆசையோடும் கனவுகளோடும் இருக்கிறார்கள்.

வாக்களித்த பின்பு, அந்த மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து இயல்பாகக் கோரிக்கைகளை முன்வைத்தது கவனிக்கத்தக்கது. காட்டுக்குள் எங்கள் கிராமம் இருப்பதால் சரியான சாலை வசதி கிடையாது; மருத்துவ வசதி, கல்வி வசதி என்று எதுவும் கிடையாது. குறிப்பாக, எங்கள் குழந்தைகள் நகரத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படித்தவர்கள்; கரோனா பொதுமுடக்கக் காலத்தில் திடீரென்று வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், வீட்டில் இணையதள வசதி இல்லாததால், அவர்களால் எந்த இணையவழி வகுப்புகளிலும் இணைய முடியவில்லை. எனவே, எங்களுக்குக் கைபேசி அலைவரிசை கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தால், அது மிகப் பெரிய நன்மை பயக்கும் என்றெல்லாம் கூறினார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதே அந்தப் பகுதியில் உள்ள மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் என்ன, அடிப்படைத் தேவைகள் என்ன என்பதையெல்லாம் அறிந்துகொண்டு, அவற்றை நிறைவேற்றும் வகையில் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஒவ்வொரு மாவட்டத்திலும் நரிக்குறவர்கள், பழங்குடியினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பை முதலில் நடத்த வேண்டும். அப்படிக் கணக்கெடுப்பு நடத்தும்போதுதான் எவ்வளவு பேரிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை இருக்கின்றன என்பதைப் பரிசோதிக்க முடியும். அடையாள அட்டை இல்லாத ஒவ்வொருவருக்கும் உடனடியாக அது வழங்கப்பட வேண்டும்.

அப்போதுதான் அவர்களுக்கு ஒரு நிரந்தர அடையாளமும், நிரந்தர அங்கீகாரமும் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் முக்கியமான உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்குச் சரியாகச் சென்று சேரும். இதன் மூலம் அவர்களுக்குச் சமூகத்தில் மற்றவர்களோடு சரிசமமாக நிற்பதற்கும், மாண்போடு வாழ்வதற்கும் ஒரு வாய்ப்பு ஏற்படும். பாரம்பரியமாக, அவர்கள் செய்துகொண்டிருந்த தொழிலிலிருந்து விடுபட்டு, அவர்களுடைய பிள்ளைகள் அடிப்படைக் கல்வி பெறுவதற்கும், உயர் கல்விக்குச் செல்வதற்கும் நிச்சயமாக அது வழிவகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

- அ.இருதயராஜ், காட்சித் தகவலியல் துறைப் பேராசிரியர், தொடர்புக்கு: iruraj2020@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்