அரசியலைப் பொறுத்தவரை இந்தியாவின் இதயமாகக் கருதப்படுவது உத்தர பிரதேசம். இதன் சட்டமன்றத் தேர்தல் வெற்றி, மக்களவைத் தேர்தலிலும் ஆட்சி அமைக்க உதவும் என்ற கருத்து உண்டு. இச்சூழலில், உ.பி.யில் தங்கள் தோல்வி குறித்தும், தவறுகள் குறித்தும் ஆராய வேண்டிய கட்டாயம் எதிர்க் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
உ.பி.யின் 403 தொகுதிகளில் 255 (கூட்டணியாக 273) தொகுதிகளை வென்ற பா.ஜ.க.வுக்கு ஓரளவு போட்டியாளராக ஆகியிருக்கிறது சமாஜ்வாதி கட்சி (எஸ்.பி.). இதன் தலைவரான அகிலேஷ் யாதவ், பா.ஜ.க.வைப் போல் ஓபிசி வாக்குகளைக் குறிவைத்தார். எஸ்.பி.யின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்.எல்.டி.), சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்.பி.எஸ்.பி.) ஆகிய இரண்டும் அகிலேஷ் கூடுதலான தொகுதிகள் பெற உதவியுள்ளன. மற்ற இரண்டு கூட்டணிக் கட்சிகளான மகான் தளம், அப்னா தளம் (கமர்வாத்) கட்சிகளால் எஸ்.பி.க்குப் பெரிய பலன் கிடைக்கவில்லை. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் நோட்டாவைவிடக் குறைந்த வாக்குகள் பெற்றிருந்தனர்.
உ.பி.யின் 33 தொகுதிகளில் போட்டியிட்ட ஆர்.எல்.டி.க்கு 8 தொகுதிகள் கிடைத்துள்ளன. எஸ்.பி.எஸ்.பி. 17 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவு வாக்குகள் உ.பி.யின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சுமார் 40 தொகுதிகளில் கிடைக்க எஸ்.பி.க்கு உதவியுள்ளன. இதன் பலனாக எஸ்.பி.க்கு முந்தைய தேர்தலில் கிடைத்திருந்த 47 தொகுதிகள் இந்தத் தேர்தலில் 111 (கூட்டணிக்கு 125) என்று உயர்ந்தன. இதனால், எஸ்.பி.க்கு உறுதியான எதிர்க் கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. கடந்த 2017 தேர்தலில் 21% வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது 32% வாக்குகள் கிடைத்திருக்கிறது. இதுவே, பா.ஜ.க.வுக்கு 39%-லிருந்து 42% என உயர்ந்துள்ளது.
இதர எதிர்க் கட்சிகளான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி.), காங்கிரஸின் நிலை மேலும் மோசமாகியிருக்கிறது. தேசியக் கட்சியான பி.எஸ்.பி.யின் தலைவர் மாயாவதி, உ.பி.யில் நான்கு முறை முதல்வராக இருந்தவர். இவருக்கு இந்தத் தேர்தலில் ஒரு தொகுதி மட்டும் கிடைத்துள்ளது. தலித் ஆதரவுக் கட்சியான பி.எஸ்.பி.க்கு அதன் வாக்காளர்கள் 2019 மக்களவைத் தேர்தலில் எஸ்.பி.யுடன் கூட்டணி வைத்தது முதல் விலகத் தொடங்கினார்கள். மீதமிருந்த முக்கியப் பிரிவான ஜாதவ் சமூகமும் தற்போது மாயாவதியைக் கைவிட்டுள்ளது. பி.எஸ்.பி.யின் நிரந்தர வாக்கு வங்கியான ஜாதவ்களின் ஒரு பகுதியினர், இந்த முறை பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர்.
இதற்கு மாயாவதி மிகக் குறைவாகவே பிரச்சாரம் செய்ததும் காரணம். 2007-ம் ஆண்டு தேர்தலில், தலித்துகளுடன் பிராமணர்கள் உள்ளிட்ட மேல்தட்டுச் சமூகத்தினரின் வாக்குகளையும் பெற்று உ.பி.யில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தார் மாயாவதி. பிராமணரான சதீஷ்சந்திர மிஸ்ராவைக் கட்சிக்குத் தேசியப் பொதுச்செயலாளராக்கினார். இதையடுத்து, தலித் சமூகத்தின் தலைவர்கள் ஒவ்வொருவராக பா.ஜ.க., எஸ்.பி. கட்சிகளில் சேரத் தொடங்கினார்கள். உ.பி.யின் செல்வாக்கை வைத்துப் பிரதமராக ஆவதற்கும் முயன்ற மாயாவதிக்குத் தற்போது சட்டமன்றத்தில் ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டும் மிஞ்சியுள்ளார். 2017-ல் 22.23% வாக்குகள் பெற்ற மாயாவதி கட்சிக்குத் தற்போது 12.5% வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.
உ.பி.யில் சுமார் 34 ஆண்டுகள் ஆட்சிசெய்த காங்கிரஸுக்கு அடிமட்டத் தொண்டர்கள் தட்டுப்பாடு உருவானது. இச்சூழலில், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகக் கட்சியில் நேரடியாகக் களமிறங்கினார் பிரியங்கா. கட்சியின் மோசமான நிலையால், அதை மீண்டும் புதிதாகக் கட்டமைக்கத் திட்டமிட்டார். இதில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக உ.பி.யில் அவர் நடத்திய போராட்டங்களுக்கு வரவேற்புக் கிடைத்தன. அடுத்து, பிரச்சாரப் பொறுப்பு உ.பி. முழுவதற்கும் பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. பெண்களை மட்டும் குறிவைத்தவர், அவர்களில் 40% பேருக்குப் போட்டியிட வாய்ப்பளித்தார்.
உ.பி.யில் பாலியில்ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தின் 5 பெண்களையும் வேட்பாளராக்கினார். இவர்களில் ஒருவருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்குப் பல சலுகைகளை அறிவித்தார். முதல்வர் யோகிக்கு இணையாகச் சுமார் 200 பிரச்சாரக் கூட்டங்களில் பிரியங்கா மட்டுமே பேசினார். இவருடன், தான் ஒரு முன்னாள் எம்.பி. என்பதால், அமேதியிலும் பிரதமர் நரேந்திர மோடியால் வாராணசியிலும் மட்டுமே ராகுல் இருந்தார். இது பலரும் எதிர்பார்த்ததுபோல், காங்கிரஸுக்குச் சிறிதும் கைகொடுக்கவில்லை. 2017-ல் 7 தொகுதிகள் வென்றிருந்த நிலையில், தற்போது 2 தொகுதிகள் மட்டுமே வென்றிருக்கிறது. இதன் பிறகும், பிரியங்காவின் உழைப்பு, கட்சிக்கு 2024-ல் பலன் அளிக்கும் என காங்கிரஸில் பலர் நம்புகின்றனர்.
உ.பி.யில் ஆட்சியமைக்க முறையே 18%, 28% யாதவர், முஸ்லிம்களின் வாக்குகள் அவசியம். இவற்றில் முஸ்லிம் வாக்குகள் பிரிந்ததாலும், பா.ஜ.க. வென்றுள்ளது. தன் மூன்று எதிர்க் கட்சிகளையும் வீழ்த்திய பா.ஜ.க. யாதவர், முஸ்லிம்களை முற்றிலுமாகக் கண்டுகொள்ளவில்லை. 2014, 2019 மக்களவைத் தேர்தல்களையும், 2017 சட்டமன்றத் தேர்தலையும்போல் இந்த முறையும் பா.ஜ.க.வில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் இல்லை. இந்தத் தேர்தல், 80:20 போட்டிக்கானது என முதல்வர் யோகி கூறிய கருத்து முஸ்லிம்களைக் குறிவைப்பதாகச் சர்ச்சையானது. பா.ஜ.க. கூட்டணியான அப்னா தளம் (சோனுலால்) கட்சியில் போட்டியிட்ட ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கும் தோல்வி ஏற்பட்டுள்ளது.
ஆனால், எஸ்.பி. - 64, பி.எஸ்.பி. - 88, காங்கிரஸ் 75 முஸ்லிம்களை வேட்பாளராக்கின. முடிவில், சமாஜ்வாதி கூட்டணியில் 34 முஸ்லிம்களுக்கு எம்.எல்.ஏ.க்களாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களால் வெற்றியை இழந்தனர். முக்கியத் தலைவரான ஆஸம் கானும், நாஹீத் ஹசனும் சிறையிலிருந்தே வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம், உ.பி.யில் இரண்டாவது முறையாக அசாதுதீன் ஒவைசியின் கட்சியும் போட்டியிட்டது. இதில் வாய்ப்பளிக்கப்பட்ட 60 முஸ்லிம்களுக்கு 400 முதல் 2,600 வாக்குகளுடன் 0.46% மட்டுமே கிடைத்துள்ளன. ஒரு வேட்பாளர் மட்டும் 4,700 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்த வகையில், வெளியான முடிவுகள் சாதி, மத அரசியலுக்கே சாதகமாக உள்ளன. உ.பி. தேர்தல் கணக்கு 2024 மக்களவைக்கும் பொருந்துமா? மக்களவையின் 80 தொகுதிகளில், பெரும்பாலான தொகுதிகளைப் பெறுவதற்கு எதிர்க் கட்சிகள் செய்ய வேண்டியது என்ன? இப்படியெல்லாம் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடினால் மட்டுமே உ.பி.யின் எதிர்க் கட்சிகளுக்கு மக்களவைத் தேர்தலில் பலன் கிடைக்கும்.
- ஆர்.ஷபிமுன்னா: தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago