தலைவர்கள் போட்டியிடாதது பின்னடைவா?

By ஆர்.முத்துக்குமார்

இருபதாண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. தற்போது சாதி மோதல் உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி, போட்டியிலிருந்து விலகியிருக்கிறார். இந்த முடிவு இரண்டு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஒன்று, மதிமுகவுக்கோ, மக்கள் நலக் கூட்டணிக்கோ பின்னடைவு ஏற்படுமா எனும் கேள்வி? கட்சியின் தலைவரே தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது தேர்தல் களத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் வகையில் வரலாற்றுப் பக்கங்கள் சிலவற்றைப் புரட்டிப் பார்க்கலாம். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலின்போது சென்னை மாகாணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சுப்பராயன் சட்டமன்றத் தேர்தலில் நிற்காமல், திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தலைவர் பொறுப்பைத் தவிர, அனைத்தையும் தூக்கிச் சுமந்து காங்கிரஸுக்காகக் களப்பணி ஆற்றிய காமராஜரும் திருவில்லிபுத்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்துதான் போட்டியிட்டாரே தவிர, சட்டமன்றத் தேர்தலில் நிற்கவில்லை. ஆனால், முதலமைச்சராக இருந்த குமாரசாமி ராஜாவோ சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் வந்தபோது காங்கிரஸுக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. விளைவு, தேர்தல் களத்திலிருந்து வெகுதூரம் விலகி நின்ற ராஜாஜியே முதலமைச்சரானார்.

விசித்திர முடிவுகள்

1967 சட்டமன்றத் தேர்தலின்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தபோதும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில்தான் காமராஜர் போட்டியிட்டார். மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்தலைச் சந்தித்த திமுகவோ விநோதமான முடிவை எடுத்திருந்தது. திமுகவின் நிறுவனர் அண்ணாதுரை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலின் முடிவில் அண்ணா போட்டியிடாத சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றிபெற்றது. ஆனால், காமராஜர் சட்டமன்றக் களத்திலிருந்தும் காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து அவரும் தோற்றுப்போனார்.

ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி நடந்த 1971 தேர்தலில் காமராஜரும் ராஜாஜியும் கைகோத்துக் களமிறங்கினர். ஸ்தாபன காங்கிரஸ் சுதந்தரா கூட்டணி வெற்றிபெற்றால் காமராஜரே முதலமைச்சர் என்பதுதான் அன்றைய அரசியல் சூழல். ஆனால், காமராஜரோ சட்டமன்றத் தேர்தலைத் தவிர்த்துவிட்டு, நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது நாகர்கோவிலில் காமராஜர் வென்றாரே தவிர, தமிழ்நாட்டில் அவருடைய கட்சி ஆட்சியைப் பிடிக்கவில்லை.

1984 தேர்தலில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தார் எம்.ஜி.ஆர். அதன் காரணமாக அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியிருந்தது. எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்து சந்தேகம் எழுப்பிய திமுக, இந்த விவகாரத்தைத் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வரைக்கும் கொண்டுசென்றிருந்தது.

“எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்து எழுந்துள்ள ஐயப்பாடுகளைத் தெளிவுபடுத்தவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்தும், அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கைகள் குறித்தும் அறிந்து, தமிழக மக்களுக்கு உண்மையைக் கூறுவதற்கு ஒரு விசாரணை கமிஷன் அமைத்து விசாரிப்போம்” என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தது திமுக. மேலும், “எம்.ஜி.ஆர் உடல்நலம் பெற்று முதலமைச்சராகப் பணியாற்றக்கூடிய உடல் நலத்தோடும் செயல்படக்கூடிய தகுதியோடும் வருவாரேயானால், அப்போது ஒருவேளை நான் முதலமைச்சராக இருந்தால், அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு, அந்த இடத்தில் எம்.ஜி.ஆரை அமரவைப்பதற்கு தயாராக இருக்கிறேன்” என்று பேசினார் திமுக தலைவர் கருணாநிதி.

எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்து சர்ச்சைகள் தீவிரமாக எழுந்த நிலையில், எம்.ஜி.ஆரைத் தேர்தல் களத்தில் போட்டியிட வைப்பதே பாதுகாப்பான முடிவு, தவறினால் பாரதூர விளைவுகள் ஏற்படும் என்று கணித்தனர் அதிமுகவின் முன்னணித் தலைவர்கள். விளைவு, அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர், படுத்துக்கொண்டே ஜெயித்திருந்தார். இன்னொரு தகவல், இந்த முறை திமுக தலைவர் கருணாநிதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. அப்போது அவர் மேலவை உறுப்பினர். தேர்தல் அரசியலுக்கு வந்தது முதல் அவர் போட்டியிடாதது இந்தத் தேர்தலில் மட்டுமே.

வைகோவின் தோல்வி

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக 1989 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது காங்கிரஸ். அந்தக் கட்சி வெற்றிபெற்றால் கருப்பையா மூப்பனாரே முதல்வர் என்ற சூழ்நிலையில், அவர் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றபோதும் அவருடைய கட்சிக்குப் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. அந்தத் தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா, ஜானகி எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல தலைவர்கள் போட்டியிட்டபோதும் கருணாநிதியும் ஜெயலலிதாவுமே வெற்றிபெற்றனர்.

1996 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த மறுமலர்ச்சி திமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் களத்தில் இருந்தார். என்ன ஒன்று, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார்; சிவகாசி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டார். இறுதியில் இரண்டிலுமே தோற்றுப்போனார்.

2001 சட்டமன்றத் தேர்தலில் ஒரு வித்தியாசமான சூழல் உருவானது. அப்போது ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி என்ற நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. வேட்புமனு பரிசீலனையின்போது நான்கு மனுக்களும் தள்ளுபடியாகவே, அந்தத் தேர்தலில் போட்டியிட இயலவில்லை. ஆனாலும், ஜெயலலிதா களம் காணாத அந்தத் தேர்தலின் முடிவில் அவருடைய அதிமுக அபார வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அவரே முதல்வரானார்.

ஒற்றை வெற்றி

2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று சொல்லித் தேர்தலைச் சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், விருத்தாசலத்தில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலின் முடிவில் தேமுதிக சார்பில் அவரைத் தவிர வேறு எவரும் வெற்றிபெறவில்லை.

தற்போது 2016 சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி தொடக்கம் முதலே எழுந்தது. குறிப்பாக, பிரதானக் கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக தவிர்த்து, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், தமாகா, பாஜக, நாம் தமிழர், இடதுசாரிக் கட்சிகள் ஆகியோரின் மீதே இந்தக் கேள்விகள் எழுந்தன. இவற்றில் சில தலைவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள்; சிலர் தவிர்க்கிறார்கள். ஆனால் வைகோ மட்டுமே முதலில் போட்டியிடுவதாகச் சொல்லி, பிறகு தனது முடிவைத் திரும்பப் பெற்றிருக்கிறார்.

விளைவு என்ன?

கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது, கட்சியின் தலைவர் தேர்தலில் நிற்பதோ, நிற்காமல் தவிர்ப்பதோ ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக, அந்தக் கட்சியின் அல்லது ஆட்சியின் மீது வாக்காளர்கள் வைத்திருக்கும் மதிப்பீடே தேர்தலின் முடிவைத் தீர்மானித்திருக்கிறது. ஆனால், இன்றைக்குள்ள சூழல் முற்றிலும் வித்தியாசமானது. நடப்பு ஆட்சிக்கான மதிப்பீடாக அல்லாமல், கடந்த கால ஆட்சிகள் மற்றும் அவற்றை நடத்திய கட்சிகளின் மீதான மதிப்பீடாக இந்தத் தேர்தல் களம் தயாராகியிருக்கிறது.

அந்தக் கோணத்தில் பார்க்கும்போது, மாற்றை முன் வைக்கும் மக்கள் நலக் கூட்டணியின் சார்பாக வைகோ போன்ற தலைவர்கள் தேர்தல் களத்திலிருந்து விலகி நிற்பது விவாதத்துக்குரியது. உண்மையில், மதிமுக தொண்டர்களுக்கு வைகோ தேர்தலில் போட்டியிடுவது, போட்டியிடாமல் இன்னொருவருக்கு வாய்ப்புத் தருவது, அமைச்சர் பதவியே கிடைத்தாலும் அடுத்தவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு ஒதுங்கி நிற்பது என்பதெல்லாம் பழகிப்போனவை.

மாறாக, மதிமுக அங்கம் வகிக்கும் மக்கள் நலக் கூட்டணியின் பயணத்துக்கு இதுவொரு வேகத்தடையாக மாறக்கூடும். வெற்றியின் சாத்தியத்தை அதிகப்படுத்தவே கடந்தகாலத்து ‘தொகுதி உடன்பாடு’களை எல்லாம் கடுமையாக விமரிசித்து, ‘கொள்கைக் கூட்டணி’ அமைத்த இடதுசாரிகள், இப்போது தேமுதிகவுடனும் தமாகாவுடனும் அதே தொகுதி உடன்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள். தற்போது தேர்தல் நெருக்கத்தில் திடீரென வைகோ போட்டியிலிருந்து விலகுவது மக்கள் மத்தியில் மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைத்திருக்கும் மதிப்பைக் குறைக்கவே செய்யும்! கவனம்!

- கட்டுரையாளர் ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்