நடந்து முடிந்த சென்னை புத்தகக்காட்சியில், சிறார் இலக்கியம் சார்ந்த புத்தகங்களும் சிறார்களின் வருகையும் அதிகரித்திருந்தது. பாடப் புத்தகங்களைக் கடந்த தங்களின் தேடலை விரிவுபடுத்துவதற்காக அரசு நீண்டகாலத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை இதன் வழியாகக் குழந்தைகள் உணர்த்தியுள்ளார்கள். பல்வேறு நாடுகள் தங்கள் குழந்தைகளின் இலக்கிய வாசிப்பில் அக்கறை கொண்டுள்ளன. குழந்தைகள் எளிதில் ஒன்றுகூடவும், திறமைகளை வெளிப்படுத்தவும், இலக்கிய ஆளுமைகளை அறிந்துகொள்ளவும் உதவும் வகையில், அந்த நாடுகள் திட்டமிடுகின்றன. பயணங்களின்போது இதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.
சர்வதேச நூலகம்: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கிறது, ‘குழந்தைகள் இலக்கியம் சார் சர்வதேச நூலகம்’. நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இங்கே உள்ளன. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக ஜப்பானில் வெளியாகும் அனைத்துப் புத்தகங்களையும் இங்கே சேகரிக்கிறார்கள். 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, பதின்ம வயதினருக்கு, இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதற்கு, ஆராய்ச்சியாளர்களுக்கு எனத் தனித்தனி அறைகள் உள்ளன. ஒவ்வோர் அறையும் தனித்துவமானது. உதாரணமாக, ‘உலகை அறிந்துகொள்’ என்னும் அறையில், பல்வேறு நாடுகளின் புவியியல், கலாச்சாரம், சமயம், நாட்டாரியல் குறித்த படக் கதைகள் உள்ளன. சனிக்கிழமைகளில், நான்கு மற்றும் ஐந்து வயதுக் குழந்தைகளும், ஏழு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் தனித்தனியாகக் கதை சொல்லும் அமர்வு நடக்கிறது.
அறிவுப் பூங்கா: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சென்ட்ரல் வேர்ல்டு வணிக வளாகத்தின் எட்டாவது மாடியில் ‘தாய்லாந்து அறிவுப் பூங்கா’ அமைந்துள்ளது. இது குழந்தைகளுக்கான நவீன நூலகத்தின் அடையாளமாகும். குழந்தைகள் இப்படித்தான் அமர்ந்து படிக்க வேண்டும் என்பதல்ல! சாய்ந்து, படுத்து, குத்துக்கால் வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பிடித்தபடி வாசிக்கலாம். அதற்கேற்றவாறு இருக்கைகளை அமைத்துள்ளார்கள். குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் புத்தகங்கள், சிறு குழந்தைகள் ஏறி அமரும் உயரத்தில் மெத்தைகள், விளையாட்டின் வழியாகக் கற்றுக்கொள்ளப் படங்கள் மற்றும் உருவங்கள் அங்கே உள்ளன. தங்கள் திறமைகளை வெளிப்படுத்த விரும்புகிறவர்களுக்காகக் ‘கனவு முற்றம்’, கற்றதைப் பிறருடன் பகிரவும் கலந்துரையாடவும் தனி அறை, நாற்பரிமாணத்தில் திரையரங்கம், இசை நூலகம் மற்றும் பல்லூடகவியல் அறை என எல்லா வயதினரையும் வரவேற்கிறது அறிவுப் பூங்கா. இரவு 7.30 மணிக்கு நான் சென்றபோது, அறிவுப் பூங்கா மாணவர்களால் நிரம்பி வழிந்ததைக் கண்டுவியந்தேன்.
குழந்தைகளின் அருங்காட்சியகம்: கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில், 0 - 12 வயதினருக்கான ஹெலனிக் குழந்தைகள் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ‘நான் கேட்கிறேன்… மறந்துவிடுகிறேன்; நான் பார்க்கிறேன்… நினைவில் வைத்திருக்கிறேன்; நான் செய்கிறேன்.. புரிந்துகொள்கிறேன்’ என்னும் தத்துவத்துடனேயே இதை உருவாக்கியுள்ளார்கள். இந்த அருங்காட்சியகம் – விளையாட்டுகள், கலந்துரையாடல்கள் வழியாக, தேட, ஆய்வுசெய்ய, புதியவற்றை உருவாக்கக் குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறது. ஒவ்வொருவரின் தனித்துவத்தை மதிப்பது குறித்தும், தனியாகவும் குழுச் செயல்பாடுகளின் வழியாகவும் தான் வாழப்போகும் உலகை வடிவமைப்பது குறித்தும் குழந்தைகள் கற்றுக்கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு குழந்தையும் தன் மீதான மரியாதையையும் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்துக்கொள்வதற்கு வழிகாட்டுகிறது. ‘நடமாடும் அருங்காட்சியகம்’ வழியாகக் கல்வி சார்ந்த கருத்தரங்குகளைக் கிரேக்கம் முழுமைக்கும் முன்னெடுக்கிறார்கள்.
வடிவியல் குறித்துக் குழந்தைகள் புரிந்துகொள்ள, வெவ்வேறு கட்டிடங்களைக் கட்டுவதற்குத் தேவையான பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ள, பொருட்கள் விற்பனை மற்றும் செயற்கையாகத் தேவை அதிகரிப்பது குறித்துக் கற்க, உணவு சமைப்பதற்கான பொருட்கள் குறித்த அறிவைப் பெற, வேற்றுமையில் ஒற்றுமை குறித்த புரிதல் பெற தனித்தனி அரங்குகள் இங்கே உள்ளன. குழந்தைகள் சமைத்துப் பார்க்கவும், கட்டிடம் கட்டிப் பார்க்கவும் பொருட்களும் அனுமதியும் உண்டு. மிகச் சிறு வயதில் வாழ்வின் அடிப்படையையும் அறத்தையும் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடிகிறது.
ஓவிய அருங்காட்சியகம்: ஏதென்ஸில் 5-14 வயதுக் குழந்தைகளுக்காக ஓவிய அருங்காட்சியகமும் உள்ளது. குழந்தைகள் வரைந்த 10,000-க்கும் அதிகமான படங்களும், முப்பரிமாணப் படைப்புகளும் இங்கே உள்ளன. குழந்தைகளால் உருவாக்கப்பட்ட செறிவான ஓவியங்கள் வழியிலான கல்வி முறையை அருங்காட்சியகம் முன்மொழிகிறது. குழந்தைகளுக்கு நலம் பயக்கும் ஓவிய முறைகளை ஆராய்ச்சி செய்கிறார்கள். கலை ஆர்வமுள்ள பெற்றோர்களும் கலைஞர்களும் கூடித் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். வெளிநாட்டு ஆய்வாளர்களுடன் கிரேக்கக் குழந்தைகளின் திறமைகளைப் பகிர்ந்துகொள்ள சர்வதேசக் கண்காட்சிகள் நடக்கின்றன. கிராமத்துப் பள்ளிகளுக்குச் சென்று ஓவியக் கருத்தமர்வுகள் நடத்தி, சிறார்கள் தங்கள் திறமைகளை அடையாளம் காண உதவுகிறது.
நாமும் முன்னெடுக்கலாம்: அண்மைக் காலத்தில், சிறார் எழுத்தாளர்களும் குழந்தைகள் நலன்சார் செயற்பாட்டாளர்களும் தமிழ்நாட்டில் கவனம்பெறத் தொடங்கியுள்ளார்கள். சிறுவர்களுக்கான வாசிப்பு, விளையாட்டு, கலை உள்ளிட்டவற்றைப் பேசவும், சிறார் செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைக்கவும், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கம் உருவாகியுள்ளது. இச்சூழலில், சிறாருக்காக எழுதுகிறவர்களின் நூல்களைத் தொகுப்பதையும் மாணவர்களிடம் கொண்டுசேர்ப்பதையும் அரசு தன் கடமையாகக் கொள்ள வேண்டும். அறைக்கலன் பூங்காபோல, மாவட்டத் தலைநகரங்களில் இலக்கியப் பூங்காக்கள் அமைக்கலாம். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தொடர்ச்சியாகக் குழந்தைகளுக்கான புத்தகங்களுடன் கூடிய கிராம அல்லது வீதி நூலகங்களைத் தொடங்கலாம். வண்ணப் படங்களுடன் குழந்தைகளுக்காக வெளிவரும் இதழ்களுக்கும், புத்தகங்களுக்கும் நிதி உதவி வழங்கிக் குறைந்த விலையில் சிறாரிடம் கொண்டுசேர்க்கலாம். ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகளுக்காக வெளியாகும் சிறந்த புத்தகங்களை அறிஞர்களின் உதவியுடன் தெரிவுசெய்து நூற்பட்டியலைப் பள்ளிகளுக்கு வழங்கினால், ஆசிரியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் சூழ் நூலகம் தமிழ்நாட்டின் முகவரியாகட்டுமே!
- சூ.ம.ஜெயசீலன், ‘வாழ்வைத் திறக்கும் சாவி: கொஞ்சும் வாழ்வியல் கொஞ்சம் உளவியல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago