காலம் கருணையற்றது... கருணாநிதியிடம் இன்னும் உழைப்பைக் கேட்கிறது
கடுமையான விமர்சனங்களுடன் நரேந்திர மோடியை எதிர்கொள்பவர்கள்கூட ஒரு விஷயத்தில் இன்றைக்கு அவரை மெச்சுகிறார்கள். சமூகத்தில் பின்தங்கிய ஒரு சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து, நாட்டின் மிக உயரிய பிரதமர் பதவியை நோக்கி அவர் உயரக் காரணமாக இருந்த அவருடைய கடுமையான உழைப்பு. சற்றேறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் முதல்வர் பதவியில் அமர்ந்த கருணாநிதியின் குடும்பப் பின்னணி, தமிழகத்தின் அன்றைய சமூக நிலை ஆகியவற்றோடு மோடியின் சூழலை ஒப்பிட்டால், கருணாநிதியின் உழைப்பு இன்னும் அபாரமானது, அசாதாரணமானது. அதற்குப் பிறகும் கிட்டத்தட்ட மோடியின் வயதில் மூன்றில் இரு பங்குக்கும் அதிகமான காலம் இன்னும் கூடுதலாக உழைத்திருக்கிறார் கருணாநிதி. ஆனால், காலம் எத்தனை இரக்கம் அற்றது? கருணையே இல்லாமல் இன்னும் கருணாநிதியிடம் உழைப்பைக் கேட்கிறது!
சங்கடமான விஷயம்தான். 91-வது வயதில் அடியெடுத்துவைக்கும் தருணத்தில், தனது பரமவைரியான அ.தி.மு.க. அதன் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டுகள், மக்களவைத் தொகுதிகளுடன் நாட்டின் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் சூழலில், மறுபுறம் தான் கட்டிவளர்த்த கட்சி இந்திய அளவில் இந்தத் தேர்தலில் பூஜ்ஜியம் வாங்கிய 1,652 கட்சிகளில் ஒன்றாக உருச்சிதைந்திருப்பதை ஒரு பெரியவர் எதிர்கொள்வது! நிச்சயம் தி.மு.க-வின் முந்தைய தேர்தல் தோல்விகளைப் போல், பத்தோடு ஒன்று பதினொன்று அல்ல இது என்பது கருணாநிதிக்குத் தெரியும். இதுவரை இல்லாத பிரம்மாண்டமான வெற்றியை அ.தி.மு.க. குவிக்கவும் மாபெரும் வீழ்ச்சியைத் தி.மு.க. சந்திக்கவும் என்ன காரணம்? எல்லோரும் சொல்வதுபோல, தமிழகத்தில் ஜெயலலிதா அலை சுற்றிச் சுழன்று வீசுகிறதா? மக்களுக்கு அ.தி.மு.க. அரசின் மீது புகார்களே இல்லையா? நிச்சயம் கிடையாது. தமிழக மக்கள் எத்தனையெத்தனை பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் முக்கியமாக, இந்தத் தேர்தல் காலத்தில்கூட மின்வெட்டுப் பிரச்சினையும் தண்ணீர் பிரச்சினையும் மக்களை எப்படியெல்லாம் வாட்டி வதைத்தன என்பதும் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். மக்களுக்குப் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை; புகார்கள் இல்லாமல் இல்லை; ஆனால், அவற்றையெல்லாம் தாண்டியும் ஜெயலலிதாவைவிட்டு அவர்கள் நகரத் தயாராக இல்லை. காரணம் என்ன?
சரியாகச் சொல்வதானால், அடிப்படையில், கடலைப் போலத்தான் தேர்தல் ஜனநாயகமும். அலைவீச்சு ஒரு அலையால் மட்டும் உருவாவதில்லை. முன்னது மோடி அலை என்றால், பின்னது அதை உந்தித்தள்ளிய காங்கிரஸ் எதிர்ப்பு அலை. முன்னது ஜெயலலிதா அலை என்றால், பின்னது அதை உந்தித் தள்ளிய தி.மு.க. எதிர்ப்பு அலை. ஆனால், மோசத்திலும் மோசம் தோல்வி அல்ல; இவ்வளவு பெரிய தோல்விக்குப் பின்னரும் வீழ்ச்சியிலிருந்து எழ எந்த வியூகமும் இல்லாமல் கட்சி ஸ்தம்பித்து நிற்பது!
மக்கள் உணர்வுகளுக்கு என்ன மதிப்பு?
மக்கள் தி.மு.க-வினரின் சகிக்க முடியாத ஊழல்களால் வெறுப்படைந்துதான் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற முடியாத அளவுக்கு அதைத் தண்டித்தார்கள். ஆனால், தோல்விக்குப் பின் தி.மு.க. தன்னை எந்த அளவுக்குத் திருத்திக்கொண்டிருக்கிறது?
கட்சிப் பத்திரிகையான ‘முரசொலி'யில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கைப் பற்றி பக்கம்பக்கமாக எழுதுகிறார் கருணாநிதி. நல்ல விஷயம். மறுபுறம் அதே சொத்துக்குவிப்பு வழக்கையும் ஊழல் புகார்களையும் எதிர்கொள்ளும் தன்னுடைய சகபாடிகள் மீது என்ன நடவடிக்கையை அவரால் எடுக்க முடிந்திருக்கிறது?
மக்கள் உணர்வுகளுக்குக் கட்சி கொடுக்கும் மரியாதைக்கு இரு சின்ன உதாரணங்கள் ஆ.ராசாவும் டி.ஆர்.பாலுவும். நாடு முழுவதும் இன்னமும் அலைக்கற்றை முறைகேடு பேசப்படுகிறது. சொல்லப்போனால், காங்கிரஸைப் படுகுழிக்கு அனுப்பிய முக்கியப் புள்ளிகளில் ஒருவர் ராசா. குற்றமற்றவர் என்று தன்னை இன்னமும் நிரூபிக்காத அவருக்கு மீண்டும் தேர்தலில் இடம் கொடுத்ததன் மூலம் தி.மு.க. சொல்ல விரும்பிய செய்தி என்ன? வடசேரியில், டி.ஆர்.பாலுவை மறக்காமல் இன்னமும் வருடா வருடம் துக்க நாள் அனுஷ்டித்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள் - எரிசாராய ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக காவல் துறையாலும் கூலிப் படையாலும் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட வடுக்களோடு. அங்கு துணிந்து கட்சி பாலுவைக் களம் இறக்குகிறது என்றால், மக்கள் உணர்வுகளுக்கு அது கொடுக்கும் மதிப்பு என்ன?
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம், தாது மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம், மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம், கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்ட எதிர்ப்புப் போராட்டம் என்று தமிழகத்தின் ஒவ்வொரு முனையிலும் ஏதோ ஒரு போராட்டத்தைக் கையில் ஏந்தியிருந்த சூழலிலேயே மக்கள் இந்தத் தேர்தலை எதிர்கொண்டார்கள். இந்தப் போராட்டங்களிலெல்லாம் தி.மு.க. காட்டிய அக்கறை என்ன? எதுவொன்றிலும் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க- வுக்கும் வேறுபட்ட நிலைப்பாடுகள் இல்லை என்பதே உண்மை. கடந்த மூன்றாண்டுகளில் கட்சி நடத்திய ஒரே பெரிய போராட்டம் தங்களை வழக்குகளிலிருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக நடத்திய போராட்டம் மட்டுமே.
தலைமுறை மாறுகிறது
தமிழகத்தில் இத்தனை லட்சம் பேர் இன்றைக்குக் கணினி முன் உட்கார்ந்திருக்க ஒருவகையில், தி.மு.க-வும் காரணம். ஆனால், சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்படும் இயக்கமாக தி.மு.க-வே இருக்கிறது. ஏன்? கட்சியின் காலம் கடந்த அணுகுமுறை. ஒருகாலத்தில், ஊழல்பற்றிப் பேசும்போது, “தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமலா இருப்பான்?” என்று கருணாநிதி கேட்டால், ஊழலை மறந்துவிட்டு, கருணாநிதியின் சொல்வன்மையை மெய்மறந்து பேசிய ஒரு தலைமுறை இருந்தது. இன்றைக்கு அந்தத் தலைமுறை போய்விட்டது. இந்தத் தலைமுறை வெட்டு ஒன்று; துண்டு இரண்டு தலைமுறை. அதற்கு, உள்ளே வெளியே ஆட்டத்தில் துளியும் விருப்பம் இல்லை. தி.மு.க-வுக்கு இது புரியவில்லை. திருச்சியில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தி ‘திருப்புமுனை மாநாடு' என்று தனக்குத் தானே உச்சி முகர்ந்துகொண்டது கட்சி. வெளியே, “ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு செலவு என்றால், எவ்வளவு இருப்பு வைத்திருப்பார்கள்” என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தான் சாமானியன். கட்சிக்குக் கள நிலவரம் புரியவில்லை.
சீரழிவா, பேரழிவா?
சென்னையில் 1949 செப்டம்பர் 17-ம் தேதி அன்று தொடங்கப்பட்ட தி.மு.க. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் பங்கேற்கவில்லை. தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பதைத் தீர்மானிக்க 1951 நவம்பர் 17 அன்று கட்சியின் முதல் பொதுக்குழுவை மதுரையில் கூட்டியது. திராவிடர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்காத இந்நாட்டின் தேர்தலைப் புறக்கணிப்பது என்றும் மாறாக, தி.மு.க- வின் கொள்கைகளோடு நெருக்கமானவர்களை ஆதரிப்பது என்றும் முடிவெடுத்தது. அப்போது தி.மு.க-விடம் ஆதரவு கோரும் வேட்பாளர்களிடம் அது கோரிய முக்கியமான உறுதிமொழிகளில் ஒன்று இது: “நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஊழலையும் சர்வாதிகாரத்தையும் வேரறுக்கப் பாடுபடுவேன்…”
இன்றைக்கு 16-வது பொதுத் தேர்தல் தோல்வியைப் பற்றிப் பேச தி.மு.க-வின் உயர்நிலைக்குழு கூடும் தருணத்தில், 63 ஆண்டுகளுக்கு முந்தைய அதன் முதல் பொதுக்குழுக் கூட்டத்தை நினைவுகூர்ந்து பாருங்கள்… வெற்றி – தோல்வி ஒருபுறம் கிடக்கட்டும்… கட்சி எங்கே வந்து சேர்ந்திருக்கிறது?
எங்கே ஜனநாயகம்?
தி.மு.க-வின் முகமே அண்ணாதான் என்று அறியப்பட்ட அதன் ஆரம்ப நாட்களிலேயே – 1955 ஏப்ரல் 4 பொதுக்குழுக் கூட்டத்திலேயே – ஜனநாயக விழுமியங்களுக்கு வழிகாட்டி, பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகி இரா.நெடுஞ்செழியன் அந்தப் பதவியில் அமர வழிவகுத்தார் அண்ணா. இன்றைக்குக் கட்சியின் நிலைமை என்ன?
கட்சியில் கருணாநிதி குடும்பம் ஒரு சக்ரவர்த்தி குடும்பம் என்றால், கீழே மாவட்டச் செயலாளர்களின் குடும்பங்கள் குறுநில மன்னர்களின் குடும்பங்களாகக் கோலோச்சுகின்றன. கட்சியின் தலைமைப் பொறுப்பில் 45 ஆண்டுகளாகக் கருணாநிதி இருக்கிறார் என்றால், என். பெரியசாமி 28 ஆண்டுகளாகவும் சுப. தங்கவேலன் 26 ஆண்டுகளாகவும் மாவட்டச் செயலர் பதவிகளைப் பிடியில் வைத்திருக்கின்றனர். திருச்சியில் நேரு வைத்தது சட்டம் என்றால், விழுப்புரத்தில் பொன்முடி வைத்ததே சட்டம். உலகில் எங்காவது ஒரு கட்சியில் 61 வயதுக்காரர் கட்சியின் இளைஞர் அணியின் பொறுப்பைக் கையில் வைத்திருக்க முடியுமா? அதுவும் 32 ஆண்டுகளாக? தி.மு.க-வில் மட்டும்தான் சாத்தியம்.
என்ன சிகிச்சை?
தி.மு.க-வுக்கு இப்போது என்ன வைத்தியம் தேவை? எதைச் செய்தால் அதை மீட்க முடியும்? கருணாநிதிக்கு அது நன்றாகவே தெரியும். கருணாநிதி அவர்களே… கட்சியைக் குடும்பத்திடமிருந்து விடுவியுங்கள். ஊழல் நிர்வாகிகளைப் பூண்டோடு வெளியே அனுப்புங்கள். இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள், உங்கள் கண்ணெதிரே வீழ்ந்துகொண்டிருக்கும் கழகத்தைக் காப்பாற்ற இது ஒன்றே வழி. உங்களால் முடியும்; உங்களால் மட்டும்தான் முடியும் கருணாநிதி!
- சமஸ், samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago