இனி விவசாயம் உங்களை தூங்கவிடப் போவதில்லை!

By சமஸ்

ஜாட் உள்ளிட்ட ஐந்து சமூகங்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை 10 நிமிடங்களுக்குள் ஒருமனதாக நிறைவேற்றி யிருக்கிறது ஹரியாணா அரசு. ஏப்ரல் 3-ம் தேதிக்குள் தங்கள் இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். இல்லையெனில், கிளர்ச்சி தீவிரம் அடையும் என்று கெடு விதித்திருந்தனர் ஜாட் தலைவர்கள். முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையிலான அரசு கெடுவுக்குள் இடஒதுக்கீட்டை அறிவித்துவிட்டாலும், பிரச்சினை தீர்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை. ஏனென்றால், பிரச்சினைக்கான தீர்வு அது இல்லை.

ஹரியாணாவில் ஜாட்டுகள் நடத்திய போராட்டங்களில் ரூ.20,000 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகச் சொன்னது அசோசேம். கலவரங்களின் தொடர்ச்சியாக முதலீட்டாளர்கள் மாநாடும் ரத்தானது. மீண்டும் மாநாடு நடத்தப்படலாம். ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த முதலீடுகள் வருமா என்பது கேள்விக்குறி. இந்தப் போராட்டங்களின்போது 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்தியாவில் சாமானிய உயிர்களுக்கு என்றைக்கு மதிப்பு இருந்தது? அதேசமயம், அசோசேம் குறிப்பிடும் இழப்பும் முதலீட்டாளர்கள் மாநாடு ரத்தானதால் ஏற்படும் இழப்பும் ஆட்சியாளர்களை யோசிக்கவைக்கக் கூடியவை. யோசிக்கட்டும்!

குஜராத்தை நிலைகுலைய வைத்த படேல்களின் இடஒதுக்கீடு போராட்டத்தின் பின்னணியில் இருந்த ஹர்திக் படேலை, தேச விரோதச் சட்டத்தின் கீழ் சிறைக்குள் தள்ளிவிட்டது அரசு. போராட்டக்காரர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள் என்றாலும் அங்கு போராட்டம் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது.

தீயாகப் பரவும் வேலையின்மை

ஹரியாணாவின் ஜாட்டுகள், குஜராத்தின் படேல்கள் மட்டும் அல்ல; ராஜஸ்தானின் குஜ்ஜார்கள், ஆந்திரத்தின் காப்புகள், மகாராஷ்டிரத்தின் மராத்தாக்கள் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடஒதுக்கீட்டுக்கான குரல்களை ஆதிக்கச் சமூகங்கள் பலவும் தொடர்ந்து முன்வைக்கின்றன. காலங்காலமாக சாதிய ஆதிக்கத்திலும் பெருமிதத்திலும் திளைத்த நிலவுடைமைச் சமூகங்கள், சமூக அடிப்படையிலான இடஒதுக்கீடு கோருவது நியாயமற்றது; புறக்கணிக்கப்பட வேண்டியது. எனினும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை நாம் புறக்கணிக்க முடியாது என்று தோன்றுகிறது. மிக முக்கியமான பிரச்சினை ஒன்று இந்த இடஒதுக்கீட்டுக்கான போராட்டங்களுக்குப் பின் கனன்றுகொண்டிருக்கிறது: இந்தியக் கிராமப் புறங்களில் தீயாகப் பரவும் வேலையின்மையே அது.

கிராமப்புறப் பொருளாதாரத்தின் அழிவு

நவீனப் பொருளாதாரக் கொள்கை கொண்டுவந்த துயரங்களில் மிகக் கொடுமையானது, நம்முடைய விவசாயத்தை நசுக்கியதும் சுயசார்புத்தன்மை அடிப்படையிலான கிராமப்புறப் பொருளாதாரத்தை நொறுக்கியதுமே ஆகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 16% பங்களிக்கும் தொழிலாக விவசாயம் இருக்கலாம். இன்னமும் குறைந்தபட்சம் 49% பேருக்கு அதுவே பிழைப்புக் களம். கால்நடை வளர்ப்பு வெறும் 4% பங்கையே அளிக்கலாம். இந்தியக் கிராமங்களில் 70% குடும்பங்களுக்கு அதுவே ஊன்றுகோல்.

விவசாயம் தொடர்ந்து காவு கொடுக்கப்படும் நிலையில், ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடம்கூடத் தன் குடும்பத்தை நடத்தும் குறைந்தபட்ச வருமானத்துக்கான உத்தரவாதம் இல்லை. தன் வாரிசுகளை விவசாயத்தை நோக்கித் திருப்ப ஒரு இந்திய விவசாயிக்கு எந்த நியாயங்களும் இன்றைக்கு இல்லை. விவசாயம் சார்ந்த தொழில்களும் நசிகின்றன. விவசாயத்துக்கு அப்பாற்பட்ட கிராமப்புறத் தொழில்கள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றன. சிறுநகரங்களை நோக்கி சிறுதொழில் கனவுகளோடு வரும் சூழலும் இல்லை. ஒரு சிறுநகரத்தில் பல தலைமுறைகளாக சிறு நகைக்கடையையோ துணிக்கடையையோ நடத்திவந்தவர்களின் பிள்ளைகள் அதே சிறுநகரத்தைப் புதிதாக வந்தடையும் பெருநிறுவனங்களின் பிரம்மாண்ட கிளைகளில் தொழிலாளர்களாகப் போய்ச்சேர வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

உத்தரப் பிரதேச அரசு 368 பியூன் பணியிடங்களுக்கு ஆளெடுப்பு அறிவிப்பை வெளியிட்டபோது, அதற்கு 23 லட்சம் பேர் விண்ணப்பித்த செய்தியை நாம் அறிவோம். உத்தரப் பிரதேசத் தலைநகரம் லக்னௌவின் மக்கள்தொகையான 45 லட்சத்தோடு ஒப்பிட்டால், கிட்டத்தட்ட சரிபாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கை இது. 5-ம் வகுப்புத் தேர்ச்சியைக் கல்வித் தகுதியாகக் கொண்ட இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் 2.22 லட்சம் பேர் பொறியாளர்கள். 255 பேர் முனைவர்கள். இது உணர்த்தும் செய்தி என்ன?

நவீனப் பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக கல்வி பெருமளவில் வணிகமயமானது. படித்தவர்கள் எண்ணிக்கையை அது அதிகரித்தது. ஆனால், திறன்களை அது எந்த அளவுக்கு வளர்த்தெடுத்திருக்கிறது? இந்தியப் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. ஆனால், வேலைகள் எந்த அளவுக்குப் பெருகியிருக்கின்றன? கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி வருவோருக்குச் சிறு வேலைகள் நிறையக் கிடைக்கின்றன. ஆனால், இந்த வேலைகளின் தரம் என்ன, கொடுக்கப்படும் கூலி என்ன, முக்கியமாக வேலைக்கான உத்தரவாதம் என்ன?

ஒரு உதாரணம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். 2006 கொள்கைக்குப் பின், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகளிடம் இருந்த நிலங்களைப் பறித்து பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்குத் தாரை வார்த்தது அரசு. ஆரம்ப கால வரிவிலக்கு உட்பட ஏராளமான சலுகைகளை வாரி இறைத்தது. விளைவு என்ன? எத்தனை பேருக்கு அவை வேலை அளித்திருக்கின்றன? 564 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 204 மட்டுமே செயல்படுகின்றன. அவற்றிலும் பெரும்பான்மை இடங் களை ஆக்கிரமித்திருப்பவை வரிச் சலுகைக்காக அங்கு மையமிட்டிருப்பவை; பெருமளவில் இயந்திரமயமாக்கல் தொழில்களை அடிப்படையாகக் கொண்டவை.

அமைப்பு சாராதவர்களுக்கு என்ன பாதுகாப்பு?

நாட்டின் 90% பேருக்குச் சோறு போடும் அமைப்புசாராத் துறைகளையும் அவற்றில் பணியாற்றுவோரையும் நம்முடைய ஆட்சியாளர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகளில் ஒன்றாக, எவ்வளவு பெரிய நிறுவனங்களில் பெரும் பதவிகளில் இருப்பவர்களையும் நிச்சயமின்மை துரத்துகிறது. கூடவே, சீரமைப்பு என்ற பெயரில், பெயரளவில் இருக்கும் குறைந்தபட்சத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களையும் அரசு கடாசுகிறது. நாட்டில் உத்தரவாத வேலைகளுக்கான முக்கியமான பெரிய களம் அரசுத் துறைகள். அங்கும் புதிய பொருளாதாரக் கொள்கை யின் விளைவாகக் கொண்டுவரப்பட்ட அயல்பணி ஒப்படைப்புக் கலாச்சாரத்துக்குப் பின் வேலைகளின் எண்ணிக்கை வளரவில்லை; நாளுக்கு நாள் குறைகிறது. துரத்தும் வேலையின்மையும், விவசாய நிச்சயமின்மையும் கிராமப்புற நிலவுடைமைச் சமூகங்களின் கழுத்தை நெரிக்கின்றன. விவசாயம் மூச்சுவிடத் திணறும்போது தத்தளிக்கும் அவர்கள், தங்கள் கைகளை சந்தைப் பொருளாதாரத்தின் கழுத்தில் வைக்கிறார்கள். ஒரு சாதியச் சமூகத்தில் இயல்பாக அது சாதிவழிப் போராட்டமாக வெளிப்படுகிறது, எதிர்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் வேலைக்கான களத்தில் நிற்கும் 15- 64 வயதுக்குட்பட்ட சுமார் 65 கோடிப் பேர் தவிர, ஒவ்வொரு ஆண்டும் 1.3 கோடி இளைஞர்கள் புதிதாகக் களத்தில் இறங்குகிறார்கள். இவ்வளவு பெரிய மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாட்டுக்கு விவசாயம்போல பெருந்தொகை, உடலுழைப்பு வேலைகளை வழங்கும் துறை கிடையாது. அங்கு விழும் எந்தத் தெறிப்பும் ஒட்டுமொத்த நாட்டிலும் அதிர்வுகளை உண்டாக்கவே செய்யும். இந்தியாவில் விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு ஏனைய சமூகங்கள் நிம்மதியாக இருக்க முடியாது. உண்மையில், மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் இன்றைய கிராமப்புறங்களின் பெரும் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறது. ரொம்ப நாள் இப்படியே கடத்திவிட முடியாது. விவசாயிகள் தூக்கமிழக்கும்போது இந்த அரசும், சந்தையும் நிம்மதியாகத் தூங்க முடியாது!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்