வசந்திதேவியும் ராமச்சந்திரனும்

By சமஸ்

சத்தியமங்கலம் வனப் பகுதிக்குச் சென்றிருந்தேன். மலைக்கு மேலே ஓரளவுக்கு மேல் சென்றுவிட்டால், நாம் எதிர்கொள்ளும் இந்தியாவில் பெரிய அளவில் மாநில வேறுபாடுகள் தெரிவதில்லை. நாடு முழுவதும் பழங்குடி மக்கள் பெருமளவில் ஒரே மாதிரியான துயரங்களையே எதிர்கொள்கிறார்கள். அவர்களுடன் பேசும்போது, தேர்தல் தொடர்பான அவர்களுடைய எண்ணப்போக்குகள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. பலதும் பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சு அவர்களுடைய தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தொடர்பாகச் சென்றது. ஆச்சரியமான விஷயம், நிறையப் பேர் திருப்தியாகப் பேசினார்கள்.

ஊழியர் சுந்தரம்

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதி அது. காடு, மலை, பள்ளம் என்று பரப்பளவில் பரந்து விரிந்த மிகப் பெரிய தொகுதி. சட்டமன்ற உறுப்பினரைப் பார்க்க வேண்டும் என்றால், சாதாரணமாக 100 கி.மீ. பயணித்து வர வேண்டிய அளவுக்குத் தொலைவிலுள்ள கிராமங்களைக் கொண்டது. இப்போதைய சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். மக்கள் அவரைப் பார்க்க வருவது சிரமம் என்பதால், மலையிலேயே ஒரு அலுவலகத்தைத் திறந்து, அவரே மக்களைப் பார்க்க வருகிறார் என்றார்கள்.

குன்றி மலைப் பகுதியில், சுதந்திரம் அடைந்த காலத்திலி ருந்து சாலையே இல்லாத காளிதிம்பம், இராமரணை, மாவ நத்தம் உள்ளிட்ட பல கிராமங்களுக்குச் சாலை வசதியை உண்டாக்கித் தந்திருக்கிறார். காலங்காலமாக சாதிச் சான்றிதழுக்காகப் போராடிவந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குச் சான்றிதழ்கள் வாங்கித் தந்திருக்கிறார். தொகுதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டா வாங்கிக் கொடுத்திருக்கிறார்; இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முதியோர் ஓய்வூதியம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். முக்கியமான விஷயம், கை சுத்தம் என்றார்கள். மனைவி அஞ்சல் துறையில் வேலை செய்கிறாராம். சுந்தரத்தின் குடும்ப வாழ்க்கை மனைவியின் வருமானத்தில் ஓடுவது என்றார்கள். மீண்டும் இதே தொகுதியில் நிற்கிறார் சுந்தரம்.

எளியவர் ஜெயசீலன்

இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களில் நாம் கவனிக்க வேண்டிய ஒருவர் எம்.ஜெயசீலன். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லால்குடியில் நிறுத்தப்பட்டிருப்பவர். பள்ளிவிடை கிராமத்தில் வெறும் 210 சதுர அடி அளவே உள்ள வீட்டில் தாய், மனைவி, இரு மகள்களோடு வாழ்ந்துவரும் மனிதர். கட்சி தரும் சிறு தொகையில் வாழ்க்கையை ஓட்டிவரும் ஜெயசீலன், இவ்வளவு காலம் வங்கிக் கணக்குகூட இல்லாமல் இருந்திருக்கிறார். ஏராளமான மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்திருக்கும் ஜெயசீலன், எந்தப் பிரச்சினை என்றாலும் கூப்பிட்ட உடன் ஓடிவருபவர் என்கிறார்கள்.

சர்வமும் பணமயம் ஆகிவிட்ட இந்திய அரசியலில் இப்படியான வேட்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கான சாத்தியங்களை கம்யூனிஸ்ட் கட்சிகளே பெருமளவில் மிச்சம் வைத்திருக்கின்றன. இடதுகளின் மக்கள் நலக் கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பிலும் நிறுத்தப்பட்டிருக்கும் பல வேட்பாளர்கள் இப்படிக் கவனிக்கவைக்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளின் தனித்துவமும் பலமும் இது. எனினும், இயக்கத்துக்குள் வளர்ந்துவந்த இவர்களையெல்லாம் தாண்டி, வெளியே வளர்ந்து இடதுகளின் மநகூ சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களே இன்றைக்குப் பெரும் கதையாடலாக மாறியிருக்கிறார்கள். முதலாமவர் வசந்திதேவி; இரண்டாமவர் ராமச்சந்திரன்!

வசந்திதேவியின் ஆளுமை

முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து, ஆர்கே நகர் தொகுதியில், விசிக சார்பில் மநகூவின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் வசந்திதேவி.

திண்டுக்கல்லில் பிறந்த இவர், சுதந்திரப் போராட்ட வீரரும் தொழிற்சங்கவாதியுமான சர்க்கரை செட்டியாரின் பேத்தி. தமிழகத்தின் மிகச் சிறந்த கல்வியாளர்களில் ஒருவர். “ஒரு மாணவர் எந்தத் துறையை வேண்டுமானாலும் படிப்பவராக இருக்கலாம்; அவர் படித்து முடித்து வெளியே செல்லும்போது சமூகக் கல்வியையும் சேர்த்து முடித்திருக்க வேண்டும். இந்தியக் கல்வி நிறுவனங்களோ சமூகத்துடன் மாணவர்கள் கலந்துவிடாமல், தம்மைச் சுற்றி தடித்த சுவர்களை உயரமான அளவில் எழுப்பி வைத்திருக்கின்றன” என்று அடிக்கடி கூறும் வசந்திதேவி, தன்னுடைய பணிக் காலம் முழுவதும் இந்தச் சூழலை மாற்றச் செயல்பட்டவர்.

சமூகக் கல்வியைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக்கினார் வசந்திதேவி. ஆய்வகத்திலிருந்து களத்துக்கு என்ற பெயரில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் வெளியே கொண்டுசென்றார்; படைப்பாளிகளையும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் உள்ளே அழைத்து வந்தார்.

இன்னும் நினைவிருக்கிறது.. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக அவர் பணியாற்றுகையில் கொண்டுவந்த முக்கியமான திட்டங்களில் ஒன்று கிராமப்புறப் பெண்களுக்கு சைக்கிள் பயிற்சி அளிக்கும் திட்டம். இன்றைய போக்குவரத்து வசதி அன்றைக்கு நம்முடைய குக்கிராமங்களில் கிடையாது. பெண் பிள்ளைகள் பலர் படிப்பைப் பாதியில் நிறுத்த போக்குவரத்து வசதியின்மை ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. மேலும், கிராமப்புறங்களில் குடிசைத் தொழில்களில் ஈடுபட்டிருந்த பல பெண்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை நகரங்களுக்குக் கொண்டுவந்து விற்பதற்கும் இது ஒரு தடையாக இருந்தது.

வசந்திதேவி முதலில் கல்லூரி மாணவிகளுக்கும், பின் அவர்கள் மூலமாக கிராமப்புறப் பெண்களுக்கும் சைக்கிள் பயிற்சி அளிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார். சைக்கிள் வாங்குவதற்கான உதவிகளுக்கும் ஏற்பாடு செய்தார். தன் பல்கலைக்கழக ஆளுகைக்குட்பட்ட அறுபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இதை அவர் கொண்டுவந்தபோது, ஆயிரக் கணக்கான பெண்கள் கிராமங்களைவிட்டு வெளியே வர அது வழிவகுத்தது. இப்படி சின்ன விஷயங்கள் மூலமாகச் சட்டகங்களுக்கு வெளியே நிறைய சிந்தித்தவர் அவர்.

மகளிர் ஆணையத் தலைவராக இருந்தபோது, அதன் குறுகிய அதிகார எல்லைக்கு உட்பட்டு, அவர்கள் மேம்பாட்டுக்காக உழைத்தார். பெண்களுக்கு எதிரான எல்லா அதிகார மையங்களோடும் மோதினார். முடியாதபோது, இயலாமையை வெளிப்படையாகப் பேசினார்.

கல்வி உரிமை, மனித உரிமைகள், தலித்துகளின் நலன், பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுவருபவர் வசந்திதேவி.

ராமச்சந்திரனின் ஆளுகை

தருமபுரி, தளி தொகுதியில் மநகூ சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் ராமச்சந்திரன். வரகானப்பள்ளி மலைக் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்றைக்குத் தமிழகத்தின் செல்வந்த சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர். நம்முடைய அரசியல், அதிகார, ஊடக மையங்களின் பார்வையிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் தமிழக-கர்நாடக எல்லையோரப் பகுதி இவருடைய தொகுதி. மலையோரக் கிராமங்கள் சூழ்ந்த தளி தொகுதியில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிக்கொண்டிருப்பவர் ராமச்சந்திரன்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் ராமச்சந்திரனைப் பகைத்துக்கொண்டு எவரும் அரசியல் நடத்த முடியாது என்கிறார்கள். அவர் நினைப்பவரே ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஒன்றியத் தலைவர்கள், மாவட்டக் குழுப் பிரதிநிதிகள்; அவரை மீறி ஜெயிக்க முடியாது; ஜெயித்தால் செயல்பட முடியாது என்கிறார்கள். சுரங்கத் தொழிலில் திளைக்கும் ராமச்சந்திரனின் அத்துமீறல்களை எழுத எவரும் உள்ளே நுழைய முடியாது; அப்படி நுழைந்தால் ஊர் திரும்ப முடியாது என்கிறார்கள். கட்சியையும் சரி, மக்களையும் சரி; பணத்தையும் பயத்தையும் வைத்து அடித்துவிடலாம் என்று நம்புபவர் என்கிறார்கள்.

ராமச்சந்திரனின் மிக முக்கியமான பின்புலம் இந்தப் பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் வலுவான சக்திகளில் ஒன்றாக இருந்த லகுமையா. ராமச்சந்திரனின் மாமனார். மூன்றாண்டுகளுக்கு முன் பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் பழனி துப்பாக்கியால் சுடப்பட்டும் கழுத்து அறுக்கப்பட்டும் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்தபோது தமிழகம் ராமச்சந்திரனைக் கவனிக்க ஆரம்பித்தது. அடுத்து, மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பாஸ்கர் கடத்திக் கொல்லப்பட்டார்.

மூன்று கொலை வழக்குகள், 15-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, அடிதடி, கிரானைட் குவாரி முறைகேடு வழக்குகள் என்று ராமச்சந்திரன் மீது அடுத்தடுத்து வழக்குகள் விரிந்தன. ராமச்சந்திரன், லகுமையா, அவரது அடிப்பொடிகள் என 17 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தருமபுரி ஆட்சியர் கிரானைட் மோசடி தொடர்பாக ஆய்வு நடத்தியபோது, ரூ.100 கோடி மதிப்பிலான முறைகேடு குற்றச்சாட்டு ராமச்சந்திரன் மீது சுமத்தப்பட்டது. அவரது குவாரிகள், சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் ரௌடிகள் பட்டியலில் ராமச்சந்திரன் பெயர் இடம்பெற்றது.

இந்த ராமச்சந்திரன் தன் வளர்ச்சிக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பயன்படுத்திக்கொண்ட கதை முக்கியமானது. முதலில் மார்க்ஸிஸ்ட் கட்சியில் இருந்தார். அப்போதே அடாவடிகள் தொடங்கிவிட்டன என்றாலும், இவ்வளவு மோசமாக அவர் மாறவில்லை. 2006 தேர்தலில் தளி தொகுதியை ராமச்சந்திரன் கேட்டிருந்தார். மாறாக, கூட்டணியில் அந்தத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த ராமச்சந்திரன் சுயேச்சையாக போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் தமிழகத்தில் வென்ற ஒரே சுயேச்சை வேட்பாளர் ராமச்சந்திரன். தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல்களிலும் தன் கைவரிசையைக் காட்டினார் ராமச்சந்திரன். மார்க்ஸிஸ்ட் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கியது. அதேசமயம், எந்தக் கட்சி வேட்பாளரை ராமச்சந்திரன் தோற்கடித்தாரோ அந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரனை சுவீகரித்துக்கொண்டது. தா. பாண்டியனின் அணுக்கத் தொண்டரானார் ராமச்சந்திரன்.

இந்த விசுவாசத்துக்கான பரிசாக 2011 தேர்தலில் ராமச்சந்திரனுக்கு மீண்டும் தளி தொகுதி கிடைத்தது. ராமச்சந்திரன் வென்றார். தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் வழக்கம்போல் ராமச்சந்திரனின் ஆளுகை தொடர்ந்தது. தொடர்ந்துவந்த காலத்தில் ராமச்சந்திரன் கடுமையாக அம்பலப்பட்டுவிட்ட சூழலில், இந்தத் தேர்தலில் நிச்சயம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவரைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, எல்லா விமர்சனங்களையும் கடந்து அவருக்கு தொகுதியை அளித்திருக்கிறார்கள்.

இரு நபர்கள் ஒரு கேள்வி

வசந்திதேவியின் அரை நூற்றாண்டு பொது வாழ்க்கையில் அரசியல்ரீதியாக அவர் இணைந்து செயல்பட்ட பல ஆளுமைகள் கம்யூனிஸ்ட் இயக்கங்களைச் சார்ந்தவர்கள். கல்வி உரிமை, மனித உரிமைகள், ஒடுக்கப்பட்டோர் உரிமைகள் என்று வசந்திதேவி பேசிய மேடைகளில் பெரும் பாலானவை இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவை. வசந்தி தேவியைத் தேர்தலில் போட்டியிட சம்மதிக்க வைத்ததில் ஜி.ராமகிருஷ்ணனுக்கும் முத்தரசனுக்கும் பங்கு உண்டு என்றாலும், திருமாவளவனின் விசிக சார்பிலேயே அவர் போட்டியிடுகிறார். அடிப்படையில் செயல்பாட்டில் ஒரு இடதுசாரியான வசந்திதேவியை ஏன் கம்யூனிஸ்ட் இயக்கங் களால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை? அடிப் படையில் இடதுசாரிக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணான ராமச்சந்திரனை எது கம்யூனிஸ்ட் இயக்கங்களால் வெளியே தள்ள முடியாமல் பிணைத்துவைத்திருக்கிறது?

இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் பின்னடைவுக்கும் இந்தக் கேள்விக்கும் மிக முக்கியமான தொடர்பு இருப்பதாகத் தோன்றுகிறது!

-சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்