கே.பி.எஸ்.மணி: ஒடுக்கப்பட்டோரின் முன்னோடிப் போராளி!

By இரா.வினோத்

தமிழக தலித் அரசியலுக்குத் தனித்துவமான, நீண்ட வரலாறு இருக்கிறது. சற்றேறக்குறைய ஜோதிபா பூலேவின் சமகாலத்தைச் சேர்ந்த பண்டிதர் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் பூலே போன்றே தீர்க்கமான முற்போக்குப் பார்வையுடன் செயல்பட்டுள்ளனர். அம்பேத்கரின் வருகைக்கு முன்பே எம்.சி.ராஜாவும், என்.சிவராஜும் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

சுவாமி சகஜாநந்தா, கக்கன், சத்தியவாணி முத்து, எல்.இளையபெருமாள் போன்றோர் மாநில அளவில் அறியப்பட்ட நிலையில், வட்டார அளவிலும் ஏராளமானோர் ஆளுமையோடு செயல்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ‘மாவீரர் கே.பி.எஸ்.மணி’ என கீழ்த்தஞ்சை மக்களால் மரியாதையோடு அழைக்கப்பட்ட கதிர்வேல் பால சுப்பிரமணி (22.2.1922 - 16.3.1990). தலையில் முண்டாசு, முறுக்கேறிய கட்டுடல், கையில் காப்பு, இடையில் தற்காப்பு ஆயுதம் என அடைமொழிக்கு இலக்கணமாகவே வாழ்ந்திருக்கிறார்.

உள்நாட்டில் செய்த சமர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிறந்த கே.பி.எஸ். மணி ஊழியக்காரன் தோப்பு நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். சீர்காழி எல்.எம்.சி. பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்ததும், ராணுவத்தில் இணைந்தார். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் இந்திய வீரராகப் பணியாற்றிய சமயத்தில், இவர் இறந்துவிட்டதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் வந்தது. இறுதிச் சடங்குகளும் முடிந்த நேரத்தில், 1946-ல் மறுபிறவி எடுத்தாற்போல் கே.பி.எஸ்.மணி வீட்டுக்கு வந்து நின்றார்.

ராணுவத்தில் வெளிநாட்டு எதிரிகளுக்கு எதிராகச் சமர் செய்தவருக்கு உள்ளூரில் நிலவிய சாதிய, பண்ணையார் ஆதிக்கம் கோபத்தை ஏற்படுத்தியது. பண்ணையாள் முறையால் மிகக் குறைந்த கூலிக்கும், கால் வயிற்றுக் கஞ்சிக்கும் சாணிப்பால் கொடுமையையும் சவுக்கடியையும் அனுபவித்ததைக் கண்டு கொதித்தார். அடிபட்டுக் கிடந்தோருக்காக உள்ளூர் எதிரிகளுடன் சமர்செய்யத் தொடங்கினார். விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இயக்கம் கட்டிப் போராடியதால் 1947-லிருந்து 1967 வரை 4 முறை சிறை சென்றதாக கே.பி.எஸ்.மணியின் நாடாளுமன்றக் குறிப்புகள் கூறுகின்றன.

கல்வியோடு வீரமும் தேவை

ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்குக் கல்வியும் வீரமும்தான் தேவை என கே.பி.எஸ்.மணி கருதினார். ஏழை மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக சீர்காழியில் ‘சாதுவர் ஏழை மாணவர் இல்லம்’ தொடங்கினார். 1947-49 காலகட்டத்தில் அரசு மானியம் கிடைக்காத நிலையிலும் 60 மாணவர்களுக்குத் தன் சொந்த செலவில் கல்வி கிடைக்கச் செய்தார். 1949-ல் மானியம் கிடைத்த பின்னர், 1967 வரை ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரது விடுதியில் தங்கிப் படித்திருக்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கும் கீழே வைக்கப்பட்டிருந்த வாக்ரிகளின் (நரிக்குறவர்கள்) மேம்பாட்டுக்காகவும் கே.பி.எஸ்.மணி பாடுபட்டார். அந்த சமூகக் குழந்தைகளுக்குத் தலைவர்களின் பெயர்களைச் சூட்டிப் பள்ளிக்கூடங்களில் சேர்த்துவிட்டார். 1976 வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தன் பணத்தில் ‘நரிக்குறவர் மாணவர் விடுதி’ நடத்தியிருக்கிறார். ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்கு ஆங்கிலக் கல்வியும் தொழிற்கல்வியுமே கைகொடுக்கும் என நம்பி, அதற்கு முன்னுரிமை கொடுத்தார். உடலை வலுவாக்க அன்றாடப் பயிற்சிகளைக் கற்றுத்தந்ததோடு போராட்டக் குணத்தை விதைக்கும் கால்பந்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இதற்காக ‘புளூ ஸ்டார்’ கால்பந்து அணியையும் நடத்தினார்.

ஃபெடரேஷனில் அரசியல் பயின்றவர்

1950-களில் செல்வாக்காக இருந்த அம்பேத்கரின் ‘ஷெட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனில்’ இணைந்த கே.பி.எஸ்.மணி அதில் இருந்த ஒழுங்கையும் சமூக ஓர்மையையும் கற்றுக்கொண்டார். தஞ்சையில் தீண்டாமை ஒழிப்பு, சாதிய வன்முறை சம்பவங்களுக்கு எதிராக முழு வீச்சில் செயல்பட்டார். இதனால் என்.சிவராஜ் இவரைத் தமிழகத்தின் இணைச் செயலாளராக நியமித்தார். அக்காலகட்டத்தில் எல்.இளையபெருமாள், புலவர் ஆறுமுகம் ஆகியோருடன் இணைந்து பறை ஒழிப்பு, இழிதொழில் மறுப்பு போன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.

1952-ம் ஆண்டு ஃபெடரேஷன் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட கே.பி.எஸ்.மணி தோல்வியடைந்தார். 1957-ல் குடியரசுக் கட்சி சார்பில் சுயேச்சையாக சீர்காழியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் எல்.இளையபெருமாளைப் பின்தொடர்ந்து காங்கிரஸுக்குச் சென்ற இவர், 1967 தேர்தலிலும் வெற்றிபெற்றார். அந்தக் காலகட்டத்தில் நடந்த கீழ்வெண்மணிப் படுகொலையைக் கண்டித்து சட்டமன்றத்தில் பேசுகையில், ‘நாங்கள் எத்தகைய போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்பதை அரசாங்கமும், மற்ற சமூகத்தவருமே நிர்ணயம் செய்யப்போகிறீர்கள்’ என எச்சரிக்கைவிடுத்தார்.

1980 நாடாளுமன்றத் தேர்தலின்போது, கே.பி.எஸ்.மணிக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என்று தஞ்சாவூர் பண்ணையார்கள் இந்திரா காந்தி வரை அழுத்தம் கொடுத்தார்கள். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்த எதிர்ப்பை மீறி எல்.இளையபெருமாள் கடைசித் தருணத்தில், ‘பெரம்பலூரில் கே.பி.எஸ்.மணி போட்டியிடுவார்’ என அறிவித்தார். எம்ஜிஆரின் பிரச்சாரத்தையும் மீறி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்கராஜை 99,172 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வாக்கு வித்தியாசம் கே.பி.எஸ்.மணிக்கு மக்களிடம் இருந்த அபரிமிதமான செல்வாக்கைக் காட்டுகிறது.

‘திருப்பி அடி' முழக்கத்தை முன்னெடுத்தவர்

ராணுவ வீரராகப் பணியாற்றியிருந்ததால் கே.பி.எஸ்.மணி சமூக எதிரிகளை ஒடுக்கவும் தாக்குதல் பாணி அரசியலைக் கடைப்பிடித்திருக்கிறார். முதலில் சம்பந்தப்பட்ட பிரச்சினையைக் கைவிடுமாறு ஆதிக்கவாதிகளுக்கும் அரசுக்கும் கெடு விதிப்பார். அதைக் கேட்காவிடில் அவரே களத்தில் இறங்கிப் பிரச்சினையை நிர்மூலமாக்கிவிடுவார். இதனை எழுத்தாளர் பூவிழியன் ‘கே.பி.எஸ்.மணி: ஒரு போராளியின் வரலாறு’ நூலில் பதிவுசெய்திருக்கிறார்.

பட்டியல் சாதியினர் பிணத்தை எடுத்துச்செல்லும்போது யாரேனும் வழிமறித்தால், பிணத்தை அதே இடத்தில் எரிப்பேன் என கே.பி.எஸ்.மணி சொன்னதால், எடமணலில் தடுத்தவர்களே பிணத்தைப் புதைக்க வழிவிட்டிருக்கின்றனர். செத்துப்போன மாட்டை அப்புறப்படுத்தக் கூப்பிட்டால், கூலியாக அந்த மாட்டின் இணை மாட்டைக் கேட்க வேண்டும் எனவும் சாவுக்குக் குழிவெட்டக் கூப்பிட்டால், நிலம் தர வேண்டும் எனவும் கே.பி.எஸ்.மணி பேசினார்.

இதனால் பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதால், ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்டோரை செத்துப்போன மாட்டைத் தூக்கவும், சாவுக்குக் குழி வெட்டவும் கூப்பிடும் வழக்கம் நின்றுபோனது. புல்லட் வண்டியில் மீசை முறுக்கியவாறு கிராமங்களில் நுழையும் கே.பி.எஸ்.மணி, ‘அன்றாடும் அடி உதைபடுவோருக்கு அரசும் போலீஸும் உதவாது. அடி மட்டுமே உதவும். எனவே திருப்பி அடி. அப்போதுதான் அடிப்பவன் நிறுத்துவான்’ என்பாராம். அவரது இந்த ‘அறிவுரை’யாலே சவுக்கடிச் சத்தமும், சாட்டையடிச் சத்தமும் தஞ்சை வட்டாரத்தில் அற்றுப்போனது’ என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

வரலாறு அவரைப் பெரிதாக அங்கீகரிக்காவிட்டாலும், எளிய மக்களின் நெஞ்சங்களில் கே.பி.எஸ்.மணி என்றும் வாழ்வார்!

- இரா.வினோத், தொடர்புக்கு :vinoth.r@hindutamil.co.in

இன்று கே.பி.எஸ்.மணியின் 100-வது பிறந்த நாள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்