நாடு முழுவதும் 2014-ல் வீசிய மோடி சூறாவளி மேற்கு வங்கத்திலும் வீசியது. 2011-ல் சட்டமன்றத் தேர்தலில் 6.15% வாக்குகள் வாங்கிய பாஜக 2014-ல் 17.02% வாக்குகள் வாங்கியது. ஆனால், 2016-ல் பாஜக இத்தனை சதவீதம் வாக்குகள் வாங்குமா என்பது சந்தேகம்தான். மோடியின் கூட்டங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்கிறது என்றுதான் நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால், மோடியின் குரல் நகரங்களில் கேட்குமே தவிர, கிராமங்களுக்குச் செல்லாது என்று அவர்கள் சொல்கிறார்கள்.
மோடி தனது கூட்டங்களில் மம்தாவைச் சாடினாலும் பாஜகவுக்கும் திரிணமூல் கட்சிக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது என்பது தெளிவு. மம்தாவுக்குப் பல ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள கட்சித் தலைவர்களை மத்திய அரசின் கிடுக்கிப்பிடியிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டிய கட்டாயம். பாஜகவுக்கு மாநிலங்களவையில் திரிணமூல் ஆதரவு தேவை. எல்லாவற்றுக்கும் மேலாக 2019 தேர்தலில் மோடியின் பாதை பெருந்தடைகள் இல்லாமல் இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, திரிணமூலுடன் கூட்டுச் சேர்ந்தால்தான் திரும்பப் பதவிக்கு வர முடியும் என்ற நிலை ஏற்படலாம். அதற்கான ஆயத்தங்களைச் செய்ய அமித் ஷா இப்போதே இறங்கிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
நண்பர் டிங்கு ஆசார்யா 25 ஏப்ரல் காலையில் கொல்கத்தாவிலிருந்து பேசினார். மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெல்லும் என்றார். நான் அது கனவு என்றேன். கட்சியின் பெருந்தலை ஒருவருடன் பேச ஏற்பாடு செய்கிறேன். அவரைக் கேட்ட பிறகு, நான் சொல்வது சரி என்பது உனக்குப் புரியும் என்றார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு, பெருந்தலையிடம் பேசினேன். பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் குறிப்பிடவில்லை.
“இன்று வரையில் மக்கள் பெருத்த எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள். 80% ஓட்டுகள் பதிவாகி இருக்கின்றன. பஞ்சாயத்துத் தேர்தல்களில் இவ்வாறான முறையில் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. இதுவே பெரிய மாற்றம். எங்களுக்குச் சாதகமானது. ஆட்சியைத் தூக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகப் பெருமளவில் வருகிறார்கள்.”
“இரு கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் அரசு அமைப்பீர்களா?”
“நாங்கள் அதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. முதலில் திரிணமூல் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்.’’
‘‘இந்த முயற்சி வெற்றிபெற்றால், மோடிக்கு எதிராக நாடு தழுவிய கூட்டணி காங்கிரஸுடன் ஏற்படுமா?”
‘‘ஏற்படலாம். அதனால்தான் இந்தத் தேர்தல் மிக முக்கியம் வாய்ந்தது என்கிறோம்.’’
மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். கம்யூனிஸ்ட்டுகள் இத்தனை உற்சாகத்துடன் பேசக் கேட்டு வெகுநாட்கள் ஆகிவிட்டன.
ஆனால், டெல்லியிலிருக்கும் திரிணமூல் நண்பர் இடதுசாரிக் கூட்டணி மண்ணைக் கவ்வும் என்கிறார். ‘‘எங்கள் தலைவருக்குக் கிராமப்புறங்களில் குறையாத ஆதரவு இருக்கிறது. நக்சல்வாதிகளை முழுவதுமாக ஒடுக்கியிருக்கிறார். கூர்க்கா போராட்டம் இருந்த இடம் தெரியவில்லை. சிறுபான்மையினர் அவரையே நம்புகிறார்கள். எனவே, அசைக்க முடியாதவர் மம்தா, உங்கள் ஜெயலலிதாவைப் போல. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும்போதே அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. மம்தா மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.’’
“பாலம் விழுந்ததே.. அது தாக்கத்தை ஏற்படுத்தாதா?’’
“பாலம் விழுந்த இடத்தில் மட்டும் பதற்றம் இருக்கும்.. அவ்வளவுதான். அவர் கூட இருந்து தள்ளினாரா? அதுவாக விழுந்ததற்கு அவர் என்ன செய்வார்?’’ நாஞ்சில் சம்பத் போல நண்பர் பேச ஆரம்பித்துவிட்டதால், நான் பேச்சைத் தொடர விரும்பவில்லை.
இதுவரை வந்த கருத்துக் கணிப்புகள் எல்லாம் திரிணமூல் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்றுதான் சொல்கின்றன. 160 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புக்கள் இருக்கின்றன என்கின்றன. இடதுசாரி ஜனநாயக முன்னணி 120 தொகுதிகளில் வெற்றிபெறலாம் என்கின்றன. ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது என்று தொடர்ந்து செய்திகள் வருகின்றன. வன்முறை திரிணமூல் தரப்பிலிருந்து அதிகமாக இருப்பதால் அதற்குத் தோல்வி பயம் வந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.
எந்தக் கட்சியையும் ஆதரிக்காத நண்பர் ஒருவரிடம் “மாற்றம் வருமா” என்று கேட்டேன். அவர் என்னிடம் திரும்ப ஒரு கேள்வியைக் கேட்டார்.
“தமிழ்நாட்டில் மனிதன் இழுக்கும் கைரிக்ஷாவை ஒழித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்?”
‘‘கருணாநிதி ஆட்சிக்கு வந்து சில ஆண்டுகளிலேயே ஒழித்துவிட்டார். 45 ஆண்டுகள் இருக்கும்.’’
‘‘இங்கு கொல்கத்தாவில் இன்னும் அவை இயங்குகின்றன தெரியுமா? பெங்காலி எதையும் மாற்றுவதற்குச் சிறிது தயங்குவான். ஒரே சட்டையை இந்தப் புழுக்கத்திலும் இரண்டு மூன்று நாட்கள் போட்டுக்கொண்டால்தான் அழுக்காகும் என்று நினைப்பவன் பெங்காலியாகத்தான் இருக்க முடியும்.’’
‘‘இந்த ஆட்சி இன்னும் அழுக்காகவில்லையா?’’
‘‘இல்லை. அழுக்காவதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.’’
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மக்கள் அப்படி நினைக்கக் கூடாது என்றும் நினைக்கிறேன்.
(தொடரும்)
- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago