படைப்பு என்ற தொடரோட்டத்தில் அயர்வின்றி நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுள் இரா.முருகன்(69), யுவன் சந்திரசேகர்(61), இமையம்(56), எஸ்.ராமகிருஷ்ணன்(55) ஆகியோர் முக்கியமானவர்கள். இந்தப் புத்தகக்காட்சியை ஒட்டி இவர்களின் நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தருணத்தில் அவர்களின் உணர்வுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்:
மிளகு: மல்ட்டிவெர்ஸ்-வரலாற்றுப் பெருநாவல் - இரா.முருகன்
இன்றைய கர்நாடகத்தின் உத்தர, கன்னட மாவட்டத்தில் ஹொன்னவர், கெருஸொப்பா போன்ற பகுதிகளிலிருந்துதான் மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட வாசனைப் பொருட்கள் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பகுதி ஒரு மிளகு அரசாகவே இருந்துள்ளது. கெருஸொப்பா பகுதியை சென்னபைராதேவி என்னும் அரசி ஆண்டுவந்தார். இங்கு மிளகு வாங்கவந்த போர்த்துக்கீசியர்கள் அவருக்கு மிளகு ராணி என்றே பட்டம் கொடுத்திருந்தார்கள். அருகில் இருந்த பிற குறுநில மன்னர்கள் சென்னபைராதேவியின் ஆட்சியைக் கைப்பற்றி, அவரைக் கைதுசெய்தனர். சிறையிலேயே அவர் இறந்துவிட்டார். வரலாற்றின் அடிக்குறிப்பாகக்கூட இடம்பெறாமல் சென்னபைராதேவி மறைந்துவிட்டார். கன்னட எழுத்தாளர் கஜானனிடமிருந்து நிறைய தகவல்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டும் நானாக நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டும் இந்த நாவலை எழுதத் தொடங்கினேன். அது வளர்ந்து, கிட்டத்தட்ட 1,200 பக்கங்களுக்குப் போய்விட்டது. இந்த நாவலில் அக்காலத் தமிழகமும் வந்து வந்து போகும். தமிழர்கள் வருவார்கள். கொங்கணி மக்களும் வருவார்கள். சென்னபைராதேவி கொங்கணி மகாராணிதான். 21-ம் நூற்றாண்டிலிருந்து ஒரு கதாபாத்திரம் பின்னோக்கிச் செல்லும். அந்தக் கதாபாத்திரம் மட்டுமல்லாமல், அந்தக் கதாபாத்திரத்தின் பிரதிகள் ஒருவர் பின்னால் ஒருவராக மாற்றி மாற்றிச் செல்வார்கள். இதை மல்டிவெர்ஸ் (Multiverse) என்பார்கள். இப்படியாக இந்த நாவலில் வரலாறு மட்டுமல்லாமல் அறிவியல் புனைவும் உள்ளது.
மிளகு
இரா.முருகன்
எழுத்துப் பிரசுரம்
விலை: ரூ.1,400
****
‘எண்கோண மனிதன்’: காணாமல்போன கலைஞரைத் தேடும் பயணம் - யுவன் சந்திரசேகர்
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் குறிப்பிட்ட ஒரு விஷயம் மீது கூடுதல் ஆர்வமும் பிடிப்பும் இருக்கும். சிலருக்குத் தத்துவம் மீது, சிலருக்கு அறிவியல் மீது, சிலருக்கு மெய்யியல் மீது. அப்படியாக எனக்கு இசை. நான் 35 ஆண்டுகளாக இசையை மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக, இந்துஸ்தானி இசையை. எப்போதும் இசையுடன் பயணித்துக்கொண்டிருப்பதால், அதைச் சுற்றியே என் மனம் இயங்குகிறது. அதுதான் என் படைப்புகளில் வெளிப்படுகிறது. இசையைப் பற்றிய தகவல் குறிப்புகள் வழியாக இல்லாமல், அது வழங்கும் அனுபவம் வழியாகவே என் படைப்புகளை உருவாக்க விரும்புகிறேன். இசை கேட்கும்போது மனித மனதுக்குள் என்ன நிகழ்கிறது என்பதுதான் என்னுடைய அக்கறையாக இருக்கிறது. எனினும், ‘எண்கோண மனிதன்’ முற்றிலுமாக இசையைப் பற்றிய நாவல் அல்ல. இந்த நாவலில் வரும் இரண்டு மையக் கதாபாத்திரங்களில் ஒருவர் இசைக் கலைஞராகவும் இருந்திருக்கிறார். அவ்வளவுதான். அவருடைய பிரச்சினை இசை கிடையாது. அவருடைய பெருமிதமும் இசை கிடையாது. அந்த வகையில், காணாமல்போன கலைஞரைத் தேடிப்போகும் பயணம்தான் இந்நாவல். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டியில் ஜெயமோகன் நடத்திய கவிதைப் பட்டறையில், நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, வி.வி.சடகோபன் என்ற பழைய தலைமுறை இசைக் கலைஞரைப் பற்றிப் பேச்சுவந்தது. அவர் 1980 வரை பொதுவெளியில் இருந்தவர். அதன் பிறகு மாயமாகிவிட்டார். ‘எண்கோண மனிதன்’ நாவலுக்கான விதை அந்த உரையாடலின்போதுதான் விழுந்தது.
எண்கோண மனிதன்
யுவன் சந்திரசேகர்
எழுத்துப் பிரசுரம்
விலை: ரூ.300
*****
‘இப்போது உயிரோடிருக்கிறேன்’: ஒரு உலகத் துயரத்தின் கதை - இமையம்
இந்த நாவல் 15 வயதிலேயே சிறுநீரகம் செயலிழந்துவிட்ட ஒரு சிறுவனின் துன்பத்தைப் பேசுகிறது. சிறுநீரகச் செயலிழப்புக்காகத் தினமும் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை செய்துகொள்கிறவர்கள், தமிழக அளவில் சுமார் 2 லட்சம் இருக்கலாம். இந்திய அளவில், உலக அளவில் இந்த எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு உலகத் துயரம். இதற்கான ஒரே மாற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான். அதிலும் வெற்றி-தோல்வி விகிதம் உள்ளது. பலருக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் மாற்றுச் சிறுநீரகம் பயனளிப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் ஒரு 15 வயதுச் சிறுவனின் பார்வையில் இந்தக் கதை நகர்கிறது. ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் அவன் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை நாவல் பேசுகிறது. சிறுநீரகக் கொடை அளிப்பவரைக் கண்டறிவது, பின் சிறுநீரகத்தைப் பெறுவதற்கான சிக்கலான, கடுமையான நடைமுறைகள் ஆகியவற்றைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. அறுவை சிகிச்சைக்கும் டயாலிசிஸுக்கும் ஆகும் செலவுகளால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, ஒரு குடும்பத்தை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிடும். நாவலில் மருத்துவர் கூறுவார்: ‘உங்க பையனுக்குப் பணம்தான் இனிமே கடவுள். அத நீங்க நெறய சம்பாதிச்சு வைங்க’. ஒவ்வொரு நிமிடமும் பணம் இருந்தால்தான் உயிர் வாழ முடியும். அரசு இலவச அறுவை சிகிச்சை வழங்குகிறது. ஆனால்,
ரூ.75,000-க்குக் குறைவான குடும்ப வருமானம் உள்ளவர்கள் மட்டும்தான் அதன் மூலம் பயன்பெற முடியும். அதேபோல் இதற்கான மருந்துகளை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும்தான் வாங்க முடியும். மேலும், இலவச மருந்து வாங்குவதற்கான சான்றை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இந்த நாவலை 15 வயதுச் சிறுவனின் மனநிலையிலிருந்து எழுதியிருக்கிறேன். என்னுடைய மற்ற நாவல்களிலிருந்து மொழி மாறுபட்டது, கதை சொல்லல் மாறுபட்டது. இந்த நாவல் வெளியாகியிருக்கும் தருணத்தில், அரசுக்கு நான் முன்வைக்கும் கோரிக்கை இதுதான்: டயாலிசிஸ் செய்துகொள்ளும் அனைவருக்கும் மாதம் ரூ.5,000 உதவித்தொகை அளிக்க வேண்டும்.
இப்போது உயிரோடிருக்கிறேன்
இமையம்
க்ரியா வெளியீடு
விலை: ரூ.345
******
‘மண்டியிடுங்கள் தந்தையே’:டால்ஸ்டாய் பற்றி தமிழில் ஒரு நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன்
தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், செக்காவ் உள்ளிட்ட ரஷ்ய இலக்கிய மேதைகளைப் போலவே அவர்களின் கதாபாத்திரங்கள், நிலப்பரப்பு ஆகியவையும் எப்போதும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. என் நில மக்களின் கதைகளைச் சொல்வதுபோல், என்னை உருவாக்கிய படைப்பாளிகளைப் பற்றியும் ஒரு புனைவு எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. என்னுடைய தேர்வு டால்ஸ்டாய். ஏனென்றால், என்னுள் தாக்கம் செலுத்தியவர்களில் முதன்மையானவர் அவர். மகத்தான கதாபாத்திரத்தை உருவாக்கிய ஒரு படைப்பாளியையே ஒரு கதாபாத்திரமாக மாற்றுவது என் முன்னிருந்த பெரிய சவால். மாபெரும் படைப்பாளி, சீர்திருத்தவாதி, குடும்பஸ்தர் என டாஸ்டாய்க்குப் பல முகங்கள் உண்டு. இதில் எந்தப் பக்கத்தை எழுதுவது என்ற கேள்வி என் முன் இருந்தது. அவருடைய எல்லாப் பக்கங்களையும் எழுதலாம் என்று முடிவுசெய்தேன். ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவலில் டால்ஸ்டாயின் பலம், பலவீனம், ஞானம், வெகுளித்தனம், குடும்ப உறவுகள் என எல்லாமும் இருக்கும். டால்ஸ்டாயை மையப்படுத்தி நாவல் எழுதும் எண்ணம் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே எனக்குத் தோன்றிவிட்டது. அந்நாவலை எழுதுவதற்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அவரைப் பற்றி தேடித் தேடி படிக்கத் தொடங்கினேன். கடந்த மூன்று ஆண்டுகளில் அந்தப் பயணம் தீவிரமானது. அப்படியாக உருவாகிவந்ததுதான் ‘மண்டியிடுங்கள் தந்தையே’. இந்திய மொழிகளிலே டால்ஸ்டாயைப் பற்றி இதுவரை நாவல் வந்ததில்லை என்று நினைக்கிறேன். அந்த வகையில், இந்த நாவல் ஒரு முன்னோடியாக இருக்கும். ரஷ்ய அரசு சார்பில் இந்நாவலை ரஷ்ய மொழியில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஓராண்டுக்குள் இந்நாவலை ரஷ்ய மொழியிலும் எதிர்பார்க்கலாம்.
மண்டியிடுங்கள் தந்தையே
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி
பதிப்பகம்
விலை: ரூ.350
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago