தேர்தல் களத்தில் யானைகளும் எறும்புகளும்!

By ஆர்.முத்துக்குமார்

2016 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலி தாவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் போட்டி; திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் போட்டி என்றெல்லாம் சில ஊகங்கள் உலா வந்தன. முத்தரசன் போட்டியிடவில்லை என்பது தெளிவாகிவிட்டது. திருமாவளவன் என்ன செய்யப்போகிறார் என்பது முடிவாகவில்லை. பெரிய தலைவர்களை எதிர்த்து நிற்பது தேர்தல் ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும் காரியம் என்கிறார்கள் சிலர். ஆனால், அரசியல் நாகரிகத்துக்கு அப்பாற்பட்ட செயல் என்பது மற்றொரு தரப்பின் வாதம்.

உண்மையில், பெரிய தலைவர்களை எதிர்த்து எளிமையான, சாதாரண வேட்பாளர்களை நிறுத்தி அரசியல் நாகரிகம் காப்பதும் இங்கே நடந்திருக்கிறது. மாறாக, அரசியல் தலைவர்களை எதிர்த்து பலம் பொருந்திய வேட்பாளர்களை நிறுத்தி போட்டியைக் கூர்மைப்படுத்தியதும் இங்கே நடந்திருக்கிறது. அப்படி நிறுத்தப்பட்ட பலர் படுதோல்வி அடைந்து அடையாளம் தெரியாமல் போயிருக்கிறார்கள். வெகுசிலர் எதிர்பாராமல் வெற்றிபெற்று வரலாற்றுப் பக்கங்களில் அழுத்தம்திருத்தமாகப் பதிவாகியிருக்கிறார்கள்.

அண்ணாவும் காமராஜரும்

1957 தேர்தலில் 15 இடங்களை வென்ற திமுகவுக்கு எதிராக 1962 தேர்தலில் நுணுக்கமான வியூகத்தை வகுத்திருந்தார் காமராஜர். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அண்ணாவுக்கு எதிராக அவர் நிறுத்திய வேட்பாளர் தொழிலதிபர் எஸ்.வி. நடேச முதலியார். ஒருபக்கம் பலமான போட்டியாளர், இன்னொரு பக்கம் பலமான பிரச்சாரம். இரண்டையும் சமாளிக்க அண்ணாவால் முடியவில்லை. அந்த இடத்தில்தான் காமராஜர் வகுத்த வியூகம் வென்றது. எஸ்.வி. நடேச முதலியார் வென்றார். 50 தொகுதிகளில் திமுக வென்றபோதும் அண்ணாவின் தோல்வி கட்சியினரைக் கலக்கமுறச் செய்தது. அந்தத் தேர்தல் குறித்து ‘காஞ்சிபுரத்துத் தேர்தல் ரகசியம்’ என்ற தலைப்பில் அண்ணா ஒரு புத்தகமே எழுதினார்.

அண்ணாவை வீழ்த்த வியூகங்களை வகுக்க வேண்டியிருந்தது காமராஜருக்கு. ஆனால், 1967 தேர்தலில் காமராஜரை எதிர்த்து திமுக நிறுத்தியது விருதுநகர் சீனிவாசன் என்கிற மாணவர் தலைவரை. இவர் 1965 மொழிப் போராட்டத்தின் தளகர்த்தர்களுள் ஒருவர். பலத்த போட்டி இருக்கும் என்றெல்லாம் எவரும் கற்பனைகூடச் செய்திருக்க மாட்டார்கள். ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போதுதான் போட்டியின் உக்கிரம் புலப்பட்டது. ஆம், வெறும் ஆயிரத்துச் சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார் காமராஜர். தமிழக வாக்காளர்களால் இன்றளவும் மறக்க முடியாத தோல்வி இது. தேர்தல் ஜனநாயகத்தில் எதுவும் சாத்தியம் என்பதற்கான சாட்சியமும்கூட.

துவந்த யுத்தம்?

காங்கிரஸுக்கும் திமுகவுக்குமான இந்த யுத்தம் 1971 தேர்தலிலும் நீடித்தது. இளைஞரைக் கொண்டு காமராஜரை வீழ்த்திய திமுகவுக்குப் பதிலடி கொடுக்க, சைதாப்பேட்டையில் போட்டியிட்ட கருணாநிதிக்கு எதிராக குடந்தை ராமலிங்கம் என்ற இளைஞரை நிறுத்தியது ஸ்தாபன காங்கிரஸ். இவர் இளைஞர் காங்கிரஸ் தலைவரும்கூட. “ராமலிங்கம் என்னுடைய அபேட்சகர்.. ராமலிங்கம் ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாதிரி” என்று சொல்லி காமராஜரே வந்து வாக்கு சேகரித்தார். ஆனால், 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார் குடந்தை ராமலிங்கம்.

எதிரிகளுக்கு எதிராக வியூகம் வகுப்பதில் எம்.ஜி.ஆரும் சளைத்தவரல்ல. 1980 தேர்தலில் கருணாநிதியும் அன்பழகனும் தமிழகம் முழுக்கப் பிரச்சாரம் செய்வதைத் தடுக்க வேண்டும்; இருவரையும் இரண்டே தொகுதிகளுக்குள் அதிகக் காலம் முடக்க வேண்டும். அதற்காக அவர் தேர்வுசெய்தது இரண்டு பலமான வேட்பாளர்களை. கருணாநிதிக்கு எதிராக ஹெச்.வி.ஹண்டே. அன்பழகனுக்கு எதிராக வலம்புரி ஜான்.

எதிர்பார்த்தது போலவே கருணாநிதியும் அன்பழகனும் தங்கள் சொந்தத் தொகுதிகளில் அதிக நாட்கள் பிரச்சாரம் செய்தே வெற்றிபெற்றனர். இதனை வலம்புரி ஜான் தனது நூலில் பதிவுசெய்திருக்கிறார். அதே தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு எதிராக மதுரை மேற்கில் செல்வாக்கு நிரம்பிய பொன். முத்துராமலிங்கத்தை நிறுத்தியது திமுக. வெற்றி எம்.ஜி.ஆருக்கே.

வெற்றிமுகம்

தமிழக அரசியல் களத்தில் இன்றளவும் பேசப்படும் தொகுதி, துறைமுகம். 1991 தேர்தலில் துறைமுகத்தில் போட்டியிட்ட கருணாநிதியை எதிர்த்து காங்கிரஸின் க.சுப்பு போட்டியிட்டார். ஒருகாலத்தில் திமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்தவர். கருணாநிதியோடு அணுக்கமாக இருந்தவர். தேர்ந்த அனுபவசாலி. ஆகவே, போட்டி கடுமையாக இருந்தது. ராஜீவ் கொல்லப்பட்ட அந்தத் தேர்தலில், “கிட்டத்தட்ட தோற்றே போய்விட்டார்” என்று சொல்லப்பட்ட கருணாநிதி, இறுதியாக வெறும் 800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கருணாநிதியின் சட்டமன்றத் தொடர் வெற்றிகள் பற்றிப் பேசும்போதெல்லாம் துறைமுகம் வெற்றியின் வாக்கு வித்தியாசத்தைப் பற்றியும் பேசப்படும்.

அதே தேர்தலில் பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதாவை எதிர்த்து நடிகர் டி.ராஜேந்தர் தனது தாயக மறுமலர்ச்சிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டார். போட்டி கடுமையாக இருந்த சூழலில், ராஜேந்தருக்கு ஆதரவாக, திமுக வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். ஆனாலும், ஜெயலலிதாவே வெற்றிபெற்றார்.

1996 தேர்தலில் மீண்டும் பர்கூரில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா திமுக வேட்பாளர் ஏ.ஜி. சுகவனத்திடம் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். அப்போது சுகவனம் ‘யானை காதில் புகுந்த எறும்பு’ என்று வர்ணிக்கப்பட்டார். அதே தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது சொந்தத் தொகுதியான விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ரவிசங்கரிடம் சுமார் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். அதன்பிறகு, எந்தவொரு சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடாத வைகோ, 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கோவில்பட்டியில் போட்டியிடுகிறார்.

ஏறக்குறைய சமபலம் பெற்ற மூத்த தலைவர்கள் பொதுவாகத் தேர்தல் களத்தில் பரஸ்பரம் மோதிக்கொள் வதில்லை. ஆனால், 2001 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் போட்டியிட்டார். இருவருக்கும் இடையே இழுபறியாக இருந்த அந்தத் தொகுதி இறுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அன்பழகன் வசம் சென்றது.

2006 தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியை எதிர்த்து தன்னுடைய கூட்டணியின் ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளராக காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகானை நிறுத்தியது அதிமுக. ஆனால், கருணாநிதியே வெற்றிபெற்றார். அதே தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து பாமக சார்பில் கோவிந்தசாமி நிறுத்தப்பட்டிருந்தார். விஜயகாந்தை எதிர்த்து ஏ.விஜயகாந்த், கே.விஜயகாந்த், சி.விஜயகாந்த் என்று மூன்று பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

உண்மையில், பெரிய தலைவர்களை எதிர்த்து பலமான வேட்பாளர்களை நிறுத்துவது தேர்தல் ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கக்கூடிய விஷயம்தான். ஆனால் பெரிய தலைவர்களை எதிர்த்து பெரிய தலைவர்களே போட்டியிட்டு, ஒருவரையொருவர் வென்றோ, வீழ்த்தியோ மட்டும்தான் அந்த ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. தேர்தல் களம் என்பது மற்போர் நடக்கும் இடமல்ல. இன்னும் சொல்லப்போனால், பல்வேறு சித்தாந்தங்களைப் பின்பற்றக்கூடிய பெரிய தலைவர்களும் அனுபவசாலிகளும் திறமையாளர்களும் வெற்றிபெற்று, சட்டமன்றத்துக்கு வருவதும் ஆக்கபூர்வமான விவாதங்களை முன்னெடுப்பதும் அறிவார்ந்த ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்வதும்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மெய்யான செயல்கள்!

கட்டுரையாளர் ‘மதுவிலக்கு’, ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்