அரசியலதிகாரமே வலிய ஆயுதம்! - திருமாவளவன் சிறப்புப் பேட்டி

By சமஸ்

தேர்தலில் அம்பேத்கர் அன்று தலித்துகளுக்கு முன்மொழிந்த தனித்தொகுதி ஒதுக்கீட்டு முறை, இன்றைக்கு நடைமுறையில் உள்ள தனித்தொகுதி ஒதுக்கீட்டு முறை இரண்டையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இப்போது நடைமுறையில் உள்ள தனித்தொகுதி முறை என்பது எந்த வகையிலும் தலித் மக்களுக்கான பாதுகாப்பை வழங்கக் கூடியதாகவோ, அவர்களின் பிரச்சினைகளைச் சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பேசக்கூடியதாகவோ அமையவில்லை. தலித்துகளுக்கு இத்தனை இடங்கள் தனித்தொகுதிகளாக அளிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், ஒரு கட்சி ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, ஒரு தலித் பிரதிநிதி அங்கு சாதிக்க முடிவது என்ன? அவர்களால் சுதந்திரமாக தலித் மக்களின் பிரச்சினைகளையே பேச முடியாத நிலைதான் யதார்த்தம்.

உதாரணத்துக்குச் சொல்கிறேன். சிதம்பரம் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தனித் தொகுதி. நான் அங்கு மக்களவைத் தேர்தலில் 2.57 லட்சம் ஓட்டுகள் வாங்கினேன். தலித் மக்களுடைய 95% ஓட்டு எனக்கு விழுகிறது. ஆனால், பெரும்பான்மை தலித் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் ஆதிக்கச் சாதி ஓட்டுகளை வாங்கி அங்கு ஜெயிக்கிறார். கோளாறு இங்கேயே ஆரம்பமாகிவிடுகிறது.

இப்படியெல்லாம் ஜெயிப்பவர்கள் நாடாளுமன்றத்துக்குச் சென்றாலும் அவர்களுடைய கட்சிக்குக் கட்டுப்பட வேண்டிய நிலையில் எதுவுமே மக்களுக்காகப் பேச முடிவதில்லை. இந்த ஆட்சியில் எத்தனை ஆணவக் கொலைகள் நடந்திருக்கின்றன? அதிமுகவில் 28 தலித் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒருவராலாவது இந்த விஷயத்தைச் சட்டமன்றத்திலோ, கட்சிக்குள்ளோ விவாதிக்க முடிந்திருக்கிறதா? இப்படியான பிரதிநிதித்துவ முறை எந்த வகையில் தலித்துகள் வாழ்க்கையை மேம்படுத்தும்?

அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் அன்றைக்கு வலியுறுத்திய இரட்டை வாக்கு முறை - அதாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதியை ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டும் பொதுவான பிரதிநிதியை எல்லோருடனும் சேர்ந்து தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டும் அளிக்கும் முறை - இருந்திருந்தால் இன்றைய நிலை வேறாக இருந்திருக்கும்.

இதை இன்னொரு வகையிலும் அதாவது தலித்துகள் அல்லாதோருடனும் தலித்துகள் ஒரு இணக்கமான சூழலை உருவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் இரு தரப்புக்குமான நிர்ப்பந்தமாகவும்கூட இப்போதைய தேர்தல் முறையைப் பார்க்கலாம் அல்லவா?

அப்படி நடக்கவில்லையே? சாதியத்துக்கு எதிராகப் பேசும் ஒரு தலித்தை ஒட்டுமொத்த தலித் அல்லாதோருக்கும் எதிரியாகக் கட்டமைக்கும், பார்க்கும் அணுகுமுறைதானே இங்கு இருக்கிறது?

நிச்சயம் இது மிகச் சிக்கலான அதேசமயம், கடந்தே தீர வேண்டிய தடை. இந்தச் சவாலை எதிர்கொள்ள உங்களுடைய வியூகம் என்ன?

ஆரம்பக் காலத்தில் இரட்டை வாக்குரிமை உள்ள தனித்தொகுதி வேண்டும் என்று வலியுறுத்தி நாங்களே மதுரையில் இரட்டை வாக்குரிமை மாநாடெல்லாம் நடத்தினோம். அது இன்றைய சூழலின் அவலத்தைக் கொண்டுசெல்வதற்காக எடுத்த ஒரு முயற்சி. இன்றைய சூழலில், அதைப் பற்றிப் பேசுவதில் பலனில்லை. தலித்துகளைப் பெருமளவில் அரசியல் சக்தியாகத் திரட்ட வேண்டும்; அதோடு சாதிய விடுதலை இல்லாமல் இங்கு சமூக விடுதலை சாத்தியம் இல்லை என்று நம்பும் தலித் அல்லாத ஜனநாயகச் சக்திகளையும் ஒரு குடைக்குள் திரட்ட வேண்டும். அவற்றின் மூலமே இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறோம்.

தமிழகத்தில் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை எல்லாம் கூட்டினால், எப்படியும் 40% வரும். ஆனால், விளிம்புநிலைச் சமூகங்களுக்காகப் பேசுபவர்களால் தனியே 2% வாக்குகளைக்கூட இதுவரை வாங்க முடிந்ததில்லை. இதற்கான காரணம் என்ன?

அவர்களுடைய சமூக நிலையே காரணம். உதாரணமாக, தலித்துகளையே எடுத்துக்கொள்வோம். தமிழகமெங்கும் பரந்துபட்டு இருந்தாலும், அவர்களுக்குள் மண உறவைத் தாண்டிய உறவுகளோ உரையாடல்களோ இல்லை. தனித் தனித் தீவுகளாகவே அவர்கள் இருக்கிறார்கள். அரசியல்ரீதியாக அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். இதை ஒரு கட்சி செய்ய வேண்டும் என்றால், அதற்குக் கொள்கையும் கோட்பாடுகளும் மட்டும் போதாது. அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கப் பொருளாதாரம் வேண்டும். அப்படியான பொருளாதார சக்தியைக் கொண்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பேசும் கட்சிகளில் இயல்பாகவே கிடையாது. ஆக, பொருளாதாரம் பெரிய குறை.

நாங்கள் பெற்றிருக்கும் இந்த வாக்கு வீதம் தமிழகம் முழுவதும் நாங்கள் தேர்தலில் நின்று வாங்கியது அல்ல. எங்களுக்குப் பெரிய கட்சிகள் வழங்கும் குறைந்த இடங்களில் போட்டியிட்டுக் கிடைத்ததை அடிப்படையாகக் கொண்ட கணக்கு இது. இங்கே ஒரு கட்சியைப் பெரியதாக எது தீர்மானிக்கிறது? பொருளாதாரம். இந்தத் தேர்தல் முறையே ஒரு முதலாளித்துவச் சமூக அமைப்பு முறை எப்படியிருக்கிறதோ அப்படித்தான் இருக்கிறது. ஆக, தேர்தல் அரசியலிலும் ஒடுக்கப்பட்டவர்கள் அரசியலைப் பேசும் இயக்கங்களை அது கீழே தள்ளுகிறது.

முக்கியமான புள்ளியை நோக்கி நாம் நகர்கிறோம் என்று நினைக்கிறேன். இந்தத் தேர்தல் அரசியல் முறை முதலாளிகளுக்குச் சாதகமானதாக இருப்பது உண்மை. விளிம்புநிலைச் சமூகங்களின் அரசியல் பேசுபவர்கள் முதலாளித்துவத்தோடு நெருக்கமாக இருக்கும் பெரிய கட்சிகளோடு போட்டி போட முடியாது என்பதும் உண்மை. அப்படியென்றால், இதை எப்படி எதிர்கொள்வீர்கள்?

அதற்காகத்தான் தேர்தல் முறையில் சீர்திருத்தம் கோருகிறோம். எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்பதையும், வேட்பாளர்களுக்கெனச் சில வரையறைகளையும் உருவாக்க வேண்டும். அவர்களுடைய செலவை அரசே ஏற்றுக்கொள்வதுடன், அதற்கு மேல் ஒரு தம்படி பைசா செலவு செய்தால்கூட அந்த வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும். இந்த மாற்றம் நடந்தால் மட்டுமே பணமுள்ளவர்கள் கைகளிலிருந்து எளிய மக்களின் கைகளை நோக்கியும் அரசியலதிகாரம் நகரும்.

தேர்தல் முறையில் மாற்றம் தேவை என்பது சரி. என் கேள்வி என்னவென்றால், முன்னதாக அமைப்புரீதியாக எதிர்கொள்ள மாற்று அரசியல் பேசும் நீங்கள் என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள் என்பதுதான். இந்தத் தேர்தல் முறையில் ஏனைய கட்சிகள் செல்லும் இதே பாதையில் போனால், எவரையும் ஊழல் இயல்பாக வந்து ஒட்டிக்கொள்ளத்தானே செய்யும்?

இதற்கு மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்றால், முதலில் கட்சி அமைப்பில் கம்யூனிஸ்ட்களைப் போல ஒரு மாற்றம் வேண்டும் இல்லையா? நன்கொடைகள், கட்சி உறுப்பினர்களிடம் லெவி போன்ற நிதித் திரட்டு முறை; கட்சி ஊழியர்களுக்கு ஊதியம், அவர்களுடைய செலவுகளைக் கட்சியே ஏற்பது போன்ற ஒரு அமைப்பு முறை. இன்றைக்கு நீங்கள் கிட்டத்தட்ட பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக மாதிரியில்தான் பயணிக்கிறீர்கள். எளிய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு கட்சி இப்படியான செலவாளிப் பாதையில் எப்படி நேர்மையாகப் பயணிக்க முடியும்?

அப்படி ஒரு முறையை நோக்கி நகர்ந்துதான் ஆக வேண்டும். இப்போது நாங்கள் கம்யூனிஸ்ட்களைப் போல, முறையாகக் கட்டமைக்கப்பட்ட நிதியாதார முறையைக் கையாளவில்லை என்றாலும், கிட்டத்தட்ட அப்படியான முறையையே கையாள்கிறோம். அரசுப் பணிகளில் உள்ளவர்கள் மாதந்தோறும் ஆயிரம், இரண்டாயிரம் என்று தருபவர்கள் இருக்கிறார்கள். சிறு சிறு தொழில்களில் இருப்பவர்கள் ஒரு கட்சி நிகழ்ச்சி நடக்கிறது என்றால், சாப்பாட்டுச் செலவைச் சிலர் பகிர்ந்துகொள்வது, மேடைச் செலவுகளைச் சிலர் பகிர்ந்துகொள்வது, வாகனச் செலவுகளைச் சிலர் பகிர்ந்துகொள்வது இப்படித்தான் கட்சி நகர்கிறது.

இயக்கத்துக்கு என்று ஒரு காட்சி ஊடகம் வேண்டும் என்று முடிவெடுத்தபோது என்னுடைய 50-வது பிறந்த நாள் விழா சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன். ஒவ்வொரு கிளையிலிருந்தும் குறைந்தது ஒரு கிராம் தங்கமேனும் தாருங்கள் என்று கேட்டேன். மாவட்டம் மாவட்டமாகச் சென்று திரட்டினோம். ஒரு சவரன் தங்கத்தை ஒருவராகக் கொடுத்தவர்களும் உண்டு; ஒரு கிராம் தங்கத்தைப் பத்துப் பேராகச் சேர்ந்து கொடுத்தவர்களும் உண்டு. இயக்கம் பெரிய அளவில் வளரும்போது இத்தகைய மாற்றங்களும் இயல்பாக வரும்.

விளிம்புநிலை மக்களின் சமூக, பொருளாதார மாற்றங்களைப் பிரதானமாகப் பேசும் ஒரு இயக்கம் அமைப்புரீதியாக அதன் ஆரம்ப நிலையிலிருந்து தன் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய தேவையிருக்கிறது. இதை உணர்ந்திருக்கிறீர்களா?

அடிமட்டத்திலிருந்து தொண்டர்களுக்குப் பயிற்சி அளித்து அரசியல்மயப்படுத்தாவிட்டால், நாம் என்ன உழைத்தும் பயனில்லை என்பதை முழுமையாக உணர்ந்திருக்கிறேன். விளிம்புநிலைச் சமூகங்களைக் கொண்டு எழும் ஒரு அரசியல் இயக்கத்தில் இந்தப் பரிணாம வளர்ச்சி காலப்போக்கில்தான் உருமாறும். அதனால்தான் ஏனையக் கட்சிகளைப் போல வெறும் இளைஞர் அணி, பெண்கள் அணி போன்ற வழக்கமான துணைநிலை அமைப்புகளை மட்டும் நிறுவாமல், கல்விப் பொருளாதார விழிப்புணர்வு இயக்கம், நிலவுரிமை விழிப்புணர்வு இயக்கம் போன்ற பல துணை நிலை அமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம். தனிநபர்கள் ஒரு அமைப்பாகத் திரளும்போது நம்மை எப்படியெல்லாம் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைக் கட்சிப் பத்திரிகையில் தொடர்ந்து நான் எழுதிவருகிறேன்.

ஏனைய அரசியல் தலைவர்களைக் காட்டிலும் பெண்கள் அரசியல் மீதான கரிசனம் உங்களிடம் இருப்பதை உணர முடிகிறது. விசிகவில் பெண்களுக்கு எந்த அளவுக்குப் பிரநிதித்துவம் கொடுக்கிறீர்கள். ஏனென்றால், 25 ஆண்டுகளாகியும் ஒரு திருமாவளவன் மட்டுமே விசிகவில் தெரிகிறார்…

நான் 25 ஆண்டுகளாக எப்படிப் பேசிக்கொண்டிரு க்கிறேனோ அப்படித்தான் இன்றைக்கு உங்களிடமும் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தத் திருமாவளவன் ஒரு பொருட்டாகத் தெரியவே இந்தச் சமூகத்துக்கு 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறதே! இன்றைக்கு நீங்கள் ‘தி இந்து’வில் மட்டும்தானே இவ்வளவு விரிவான ஒரு நேர்காணலை எடுக்கிறீர்கள்! எங்களை யார் கண்டுகொண்டார்கள்! லட்சக் கணக்கானோர் கூடும் எங்கள் மாநாடுகளை எந்த அளவுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன!

ஆழ்ந்த ஆய்வுக்குப் பின் மாநாடுகளில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானங்களை எத்தனை பேர் விவாதித்திருக்கிறார்கள்? சமூக விடுதலையிலும் சரி; சமூக அவலங்களிலும் சரி.. ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது தோழர். நான் குறை கூறவில்லை; மிகுந்த மன வலியோடு பேசுகிறேன்.

சாதி ஒழிப்பைப் பேசும் இயக்கத்துக்கும் சாதியத்தைப் பேசும் ஒரு இயக்கத்துக்கும்கூட வித்தியாசம் தெரியாமல் அணுகும் ஊடகர்கள் இருக்கிறார்கள். எனக்கு இணையான ஆளுமைகள் எங்கள் இயக்கத்தில் பொதுச்செயலர்களாக இருக்கிறார்கள். பல ஊடகர்களுக்கு அவர்கள் பெயரே தெரியாது. அவர்கள் பெயர் மட்டும் அல்ல; தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளின் நிர்வாகிகளின் பெயர்களைத் தவிர, வேறு எந்த இயக்கத்தைச் சார்ந்த எவருமே ஒரு பொருட்டு அல்ல என்பதே இங்குள்ள சூழல்.

ஆரம்பக் காலம் தொட்டே, எங்கள் கட்சியில் உயர்ந்தபட்ச ஜனநாயக மாண்புகளைக் கடைப்பிடிக்கிறோம். எந்த முடிவையும் தனித்து எடுப்பதில்லை. கட்சியின் அனைத்து அமைப்புகளிலும் ஆண்களுக்கு இணையாகப் பெண்களையும் பதவியில் வைத்திருக்கும் ஒரே இயக்கம் இது. ஒரு அணி, அது இளைஞரணியோ, தொழிலாளர் அணியோ எதுவானாலும் அதற்கு இரு அமைப்பாளர்கள் - ஒருவர் ஆண்; ஒருவர் பெண். எல்லாக் கூட்டங்களிலும் எல்லா முடிவுகளையும் யாரையும் யாரும் விமர்சித்துப் பேச முடியும். பெண்களை அதிக அளவில் முன்னிறுத்த முயற்சிக்கும் அமைப்பு இது.

இதையெல்லாம் தாண்டியும் இன்னொரு விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன். இந்த இயக்கத்தின் ஆரம்ப வரலாற்றில் தனிநபர் ஈர்ப்பு ஒரு முக்கிய புள்ளியாக இருந்திருக்கலாம்; எதிர்காலம் அப்படி இருக்காது!

எந்தவொரு பெரும் தலைவரின் வெற்றியும் தோல்வியும் அடுத்து வருபவர்களுக்குப் பாடம் ஆகிறது. அந்த வகையில், அம்பேத்கர் வாழ்க்கையிலிருந்து நீங்கள் அதிகம் தாக்கம் பெற்ற வெற்றி, தோல்வி எது?

அவருடைய மிகப் பெரிய வெற்றியாகக் கருதுவது, நம்முடைய தலையெழுத்து தீர்மானிக்கப்பட்டது என்றிருந்த சமூகச் சூழலை உடைத்தெறிந்து இந்தச் சுதந்திர இந்தியாவின் தலையெழுத்தான அரசியல் சட்ட சாசனத்தை எழுதுபவராகத் தன்னை உருவாக்கிக்கொண்ட ஆளுமை. அவருடைய தோல்வி, பின்னாளில் அவரே அது தான் செய்த தவறு என்று வருந்தியது. புணே ஒப்பந்தம். அம்பேத்கரின் ஒவ்வொரு நகர்விலும் பாடம் கற்கிறேன்.

கடைசிக் கேள்வி. சாதிய விடுதலைக்கான பாதைகளில் இரு பார்வைகள் இருக்கின்றன. இந்து மதத்துக்கு உள்ளேயான சாதிய விடுதலை, இந்து மதத்தை உடைத்தெறியும் சாதிய விடுதலை. அம்பேத்கருக்குப் பிந்தைய இந்த அறுபதாண்டு வரலாறு நமக்குச் சுட்டும் அனுபவம், சாதியத்தைக் கடக்கும் அளவுக்கு இந்து மதத்தைக் கடந்து வெளியே வருவது எளிதானதாக இல்லை என்பது.

அன்றைக்கிருந்த சூழல் மாறி இந்து மதம் குறிப்பிடத்தக்க அளவில் தலித்துகளை இன்றைக்கு உள்வாங்கியிருக்கிறது. பல இடங்களில் தீவிரமான அம்பேத்கரியர்களால்கூட தங்கள் வீட்டளவில்கூட இந்துப் பண்பாட்டை மாற்ற முடியவில்லை. அம்பேத்கரியம் எவ்வளவு விரிந்தாலும் பௌத்தம் விரியவில்லை. இந்து மதம் வெறும் பெயரளவிலான அடையாளமாக அல்ல; பண்பாடாக தலித்துகள் வாழ்வில் கலந்திருக்கிறது. இது தொடர்பான உங்கள் பார்வை என்ன?

மிக சிக்கலான, நுட்பமான கேள்வியும் பிரச்சினையும் இது. அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேற நினைத்தது, மதம் எனும் அமைப்புக்கு எதிராக அல்ல. அதில் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியத்தை எதிர்த்தே அம்பேத்கர் வெளியேறினார். சாதியம் நீடிக்கும்வரை இந்து மதம் மீதான நம்முடைய பார்வையில் மாற்றம் இல்லை. அதேசமயம், அம்பேத்கருக்குப் பிந்தைய இந்த அறுபதாண்டு வரலாற்றையும் கணக்கிலெடுத்துக்கொண்டே இந்தப் பிரச்சினையை நாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் மதமாற்றம் தலித்துகள் மீதான சாதிய வேறுபாட்டைப் பெரிய அளவில் மாற்றவில்லை; அப்படி மதமாற்றம் மூலம் சாதிய அடையாளங்களை ஒருவன் மீறி வந்தாலும் இந்துத்வம் அங்கே மத அடிப்படையிலான அடக்குமுறையை அவன் மீது திணித்துவிடுகிறது.

ஒரு கிராமத்தில் 100 தலித் குடும்பங்கள் இருக்கின்றன; அவற்றில் 20 குடும்பங்கள் கிறிஸ்தவத்துக்கும் 10 குடும்பங்கள் இஸ்லாமுக்கும் மாறிவிட்டன என்றால், 70 குடும்பங்கள் இந்து தலித் குடும்பங்களாக மிஞ்சுகின்றன. இந்துத்வத்தின் அடக்குமுறையை மூன்று தரப்பும் வெவ்வேறு பெயர்களால் எதிர்கொள்கிறார்கள். அதாவது, ஏற்கெனவே சிறுபான்மையினராக இருக்கும் ஒரு சமூகம் மேலும் சிறுபான்மையாகச் சிதற அங்கே ஆதிக்கமும் அடக்குமுறையும் மேலும் கிளர்ந்தெழவே வழிவகுக்கிறது. இதற்கு அர்த்தம் மதமாற்றத்தை நான் மறுதலிக்கிறேன் என்பது அல்ல. மதமாற்றம் என்பது ஒரு தப்பித்தலாக அல்ல; முழு விடுதலையாக இருக்க வேண்டும். வெறுமனே அது அரசியல் சார்ந்த அடையாள மாற்றமாக அல்லாமல், பண்பாட்டு மாற்றமாக இருக்க வேண்டும்.

இன்றைய சூழலில், எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் அரசியல் ஆதிக்கத்தினூடாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அரசியல் அதிகாரமே எல்லாவிதமான விடுதலைக்குமான முதல்நிலைக் கருவியாக இருக்கும் என்பதை மாறும் காலமும் களச் சூழலும் சொல்கிறது. நாம் விளிம்புநிலை மக்கள் என்று பேசிக்கொண்டிருக்கும் இனச் சிறுபான்மையினர், மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளையும் ஒரே களத்தில் திரட்டுவதை அரசியல் களமே சாத்தியப்படுத்தும். இந்த வட்டத்துக்கு வெளியே பெரும்பான்மையினராக நிற்கிறது நாம் சமத்துவத்துக்காகப் பேச வேண்டிய தரப்பு. ஜனநாயக சக்தியாக நாம் மாற்ற வேண்டிய தரப்பு. அதோடான உரையாடலுக்கும் அரசியல் களமே வழிவகுக்கும்.

சமூக விடுதலைக்கு ஒரே சமயத்தில் ஏராளமான பாதைகளில் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஒரு அரசியல் இயக்கமாக அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான பாதையில் பயணிப்பதே விசிகவின் பிரதான பணியாக இருக்கும்!

(நிறைவு)

- சமஸ்,
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்