லண்டனில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதற்கு வெளிநாட்டினரின் வருகைதான் முக்கியக் காரணம்...
லண்டன் இப்போது குற்றவாளிகளின் நகரமாக மாறிக்கொண்டுவருகிறது. கள்வர்கள், போதைப்பொருள் கடத்துபவர்கள், சிறுவர்களைப் பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்கிறவர்கள், கொலைசெய்கிறவர்கள், பிள்ளைகளைக் கடத்துகிறவர்கள், பெண்கள் மீதான வன்முறையைப் பிரயோகிப்பவர்கள் என்று குற்றங்கள் நிறைந்த இடமாகக் காணப்படுகிறது. உள்ளூர் ஆங்கிலத் தொலைக்காட்சிகளிலெல்லாம் ‘கள்வர்கள் கவனம்’ என்று விளம்பரம் போட்டுச் சொல்லுமளவுக்குக் குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கின்றன.
இறக்குமதியாகும் குற்றங்கள்
லண்டனில் வெளிநாட்டவர்களின் வருகைக்குப் பின்னர்தான் களவும், கொள்ளையும் குற்றச் செயல்களும் அதிகரித்துவிட்டதாக வெள்ளைக்கார நண்பர் ஒருவர் சொன்னார். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. வெளிநாட்டவர்களின் வருகை, சமூகரீதியிலான பெரும் அசௌகரியங்களை லண்டனில் ஏற்படுத்தியிருக்கிறது. நான் ஜூரியாக நீதிமன்றம் போன இரண்டு கிழமைகளில் பார்த்த வழக்குகளிலெல்லாம் குற்றவாளிக் கூண்டில் நின்றவர்கள் எல்லோருமே வெளிநாட்டுக்காரர்கள்தான்.
உள்ளூர் வெள்ளைக்காரர்கள் செய்யும் கிரிமினல் குற்றங்களில் கொலைகள், பிள்ளைகள் மீதான பாலியல் பலாத்காரம் போன்றவைதான் அறியப்படுகின்றன. ஆனால், அவை லண்டனில் உள்ள வெளிநாட்டுக் காரர்கள் செய்யும் குற்றங்களோடு ஒப்பிடும்போது எண்ணிக்கையில் மிகவும் குறைவானவை.
ஜெர்மனி, சுவிஸ், நோர்வே போன்ற நாடுகளில் காவல்துறையின் பிடி மிகவும் இறுக்கமாகவே இருக்கும். சுவிஸ்ஸில் எந்தக் கடுமையான குற்றவாளி களையும் ஒடுக்கும் வல்லமையும் திறமையும் காவல் துறையினரிடம் இருக்கிறது. கடும் தண்டனையும் உண்டு. நண்பர் ஒருவரோடு சுவிஸ்ஸில் சுற்றித்திரிந்த காலங்களில் அவர் காரின் கதவைப் பூட்டாமலே திரிவதைக் கண்டிருக்கிறேன். ஆனால், லண்டனில் அப்படி ஒருபோதும் செய்ய முடியாது. பூட்டி இருக்கும் காரை உடைத்துத் திருடிக்கொண்டு போய்விடுவார்கள். லண்டனில் காவல்துறையினர் சட்டங்களைத் தற்போது இறுக்கிக்கொண்டுவருகின்றனர். ஆனால், கள்வர்கள் பெருமளவில் வியாபித்துவிட்டனர்.
கனவு நகரா, களவு நகரா?
சைக்கிள் திருடர்கள், கைப்பை திருடர்கள், வீட்டுக் குள் நுழைந்து திருடுபவர்கள் என்று கள்வர்கள் லண்டனில் அதிகமாகிவருகின்றனர். அல்பேட்டனில் ஒரு இடத்தில் ஒரு கார் பார்க்கிங்கில் வைத்திருந்த காசு இயந்திரத்தை இரும்பு வெட்டும் பிளேடால் வெட்டி எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். இப்போது அங்கு காசு இயந்திரத்தையெல்லாம் கொங்கிறீட் போட்டுக் கட்டி வைத்திருக்கின்றனர். இதெல்லாம் உலகத்தின் கனவு நகரான லண்டனில்தான் நடக்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
கடந்த மாதம் இங்கு தொலைக்காட்சியில் ஒரு விவரணப்பட நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். அது பாகிஸ்தானியர்களின் கைங்கரியத்தைப் புட்டுப்புட்டு வைத்தது. கள்ள பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் நம்பர் கார்டு செய்வதற்கு ஒரு அலு வலகமே நடத்தியிருக்கிறார்கள். ரகசிய கேமராவில் பிடித்த விடயங்களைப் போட்டுக் காட்டினார்கள். பாகிஸ்தானியர்கள் ஆள் கடத்தி லண்டனுக்குக் கொண்டுவருவதிலும் பெரும் வின்னர்களாக இருக்கின்றனர். இலங்கைத் தமிழர்கள் செய்துவந்த கடன் அட்டை மோசடி, கொலைகள், குழு சேர்ந்து அடித்து நொறுக்குதல், கப்பம் கேட்டு மிரட்டுதல் போன்றவை இப்போது குறைந்துவிட்டன. ‘ஒப்பறேசன் என்வர்’ என்று ஒரு நடவடிக்கை மூலம் தமிழ் சண்டியர்களை லண்டன் காவல்துறை ஒடுக்கியது.
இங்கு காவல்துறையினருடன் உரையாடும்போது வழிப்பறித் திருட்டுக்களையும் கைபேசித் திருட்டுக் களையும் குறிப்பாகச் சொல்கிறார்கள். கடந்த வாரம் சாலையில் வைத்து ஒரு சப்பாத்துக் கடையில் மகனுக்குச் சப்பாத்து வாங்கிக்கொண்டிருந்தபோது ஒரு தமிழ்ப் பெண்மணியின் கைப்பையைப் பறித்துக்கொண்டு போய்விட்டார்கள். சாலையில் நின்றுகொண்டு அந்தப் பெண் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தார். போலீஸுக்குப் போக பயந்ததால் போகவில்லை. மொழி தெரியாத பயம் அவருக்கு.
கட்டுப்பாடுகள்
பல கள்வர்கள் குழுக்களாகவே இயங்குவதாக காவல் துறை சொல்கிறது. இப்போது இங்கே கூரிய ஆயுதங்களை வைத்திருப்பவர்களைப் பிடித்துச் சிறையில் போட்டுவிடுகிறார்கள். கூரிய ஆயுதங்களைக் காரில் வைத்திருப்பதையும் தடைசெய்திருக்கிறார்கள்.பல இடங்களில் காகிதம் வெட்டும் கத்தியால் வெட்டிவிட்டுக் கொள்ளையடித்த சம்பவங்களைத் தொடர்ந்துதான் இந்தக் கட்டுப்பாடு.
குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இப்போது லண்டனில் பல கட்டுப்பாடுகளை விதித்துவரும் காவல் துறையினர் மது அருந்தக் கூடாத இடங்கள் என்று பல இடங்களை அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். பேருந்துகளில், சுரங்கப்பாதை ரயில்களில் மது அருந்து
வதற்குத் தடை. அத்தோடு கடற்கரையின் பல இடங் களிலும் இன்னும் பல நகரப்புறங்களின் கடைவீதிகளிலும் பகிரங்கமாக பியர் குடித்துக்கொண்டு போவது முற்றிலு மாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. போதை மூலமாக ஏற்படும் குற்றங்களைத் தடுப்பதற்குத்தான் இந்தக் கட்டுப்பாடுகள். மது அருந்தத் தடைசெய்யப்பட்ட இடங் களில் மது அருந்திப் பிடிபட்டால் 500 பவுண்ட் (சுமார் ரூ. 50,000) குற்றக்காசு கட்ட வேண்டும். அவரது நடத்தையைப் பொறுத்து 2,500 பவுண்ட்வரை (சுமார் ரூ. 2,50,000) குற்றக்காசு கட்ட வேண்டிவரும். அவர் மது அருந்திவிட்டுக் குழப்பம் விளைவித்தால் 2 மாதத் திலிருந்து 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை.
மாணவக் கத்திகள்
சமூகத்தில் குழப்படி செய்யும் சிறுவர்களுக்கும் பல அறிவுறுத்தல்களைக் காவல்துறையினர் வழங்கி வருகின்றனர். லண்டனில் சிறுவர்கள் கூரான கத்தி வைத்திருப்பதைப் பெருமையாக நினைக்கின்றனர். அத்தோடு அதனை வேறு சிறுவர்களின் கைகளை வெட்டிப் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். கத்தியை வைத்துக்கொண்டு பாடசாலை போகும் சிறுவர்களின் இலவச பஸ் பிரயாணச் சீட்டு பறிக்கப்படும் என்று இப்போது சட்டம் வந்திருக்கிறது. மேலும், பேருந்தில் பிறருக்கு இடையூறு விளைவிக்கும் மாணவர்களின் இலவச பஸ் பிரயாணச் சீட்டு பறிக்கப்படும் என்றும் காவல்துறை விளம்பரங்களைப் போட்டிருக்கின்றனர். போன வருடம் மட்டும் கத்தியால் வெட்டிய சம்பவங் கள் என்று தோராயமாக 2,000 சம்பவங்கள் லண்டனில் பதிவாகியிருப்பதாகக் காவல்துறையினர் சொல்கிறார்கள். இவ்வாறான குற்றச் செயல்களிலிருந்து சிறுவர்களைத் தடுப்பதற்கு நடனப் பயிற்சிகளிலும் நிகழ்ச்சிகளிலும் சிறுவர்களை ஈடுபடச் செய்து அவர்களின் கவனத்தைத் திருப்பும்படி பெற்றோரைக் காவல்துறையினர் கேட்கின்றனர்.
இங்கிலாந்து அரசாங்கம் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு வருடம்தோறும் 100 மில்லியன் பவுண்டை (சுமார் ரூ. 1000 கோடி) செலவழிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. குற்றமும் ஊழலும் நிறைந்த நாடுகளிலிருந்து வந்து இங்கு குடியேறியவர்கள்தான் தொடர்ந்து பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஊழலின் பிறப்பிடங் களும் குற்றச் செயல்களின் பிறப்பிடங்களுமான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, அல்ஜீரியா, பொஸ்னியா, பலஸ்தீன், இராக், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றிலிருந்து வந்தவர்கள் பெரும் கள்வர்களாக இருக்கின்றனர்.
ஒரு கைப்பையைக் கொண்டு நிம்மதியாக லண்டன் தெருக்களில் நடமாட முடிவதில்லை. உண்மையில் பயமாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் வெளிநாட்டுக்காரர்களின் வருகை அதிகரிக்க அதிகரிக்க குற்றச் செயல்கள் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வீடுகளைப் பூட்டிவிட்டுப் பக்கத்து ஊருக்குக்கூட பிரயாணம் போக முடியாத நிலைமை காணப்படுகிறது. கள்வர்கள் பார்த்திருந்து உடைத்துக் களவெடுக்கிறார்கள்.
லண்டன் லண்டன் என்று பெருங்கனவோடு ஜெர்மனியிலிருந்து வந்த தமிழ்க் குடும்பமொன்று இங்கு வந்துவிட்டுக் கள்வர்களிடம் தங்கள் வீட்டுச் சாமான் களைப் பறிகொடுத்துவிட்டுப் பெரும் கவலையில் மூழ்கி யிருக்கிறது. பாதையில் பாதுகாப்பில்லை. எப்போதும் ஒரு கள்வனின் கண் உங்களைப் பின்தொடரலாம். அதனால்தான் லண்டன் - கள்வர்களின் நகரம் என்று சொல்கிறேன் நான்.
- இளைய அப்துல்லாஹ், புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தாளர், தொடர்புக்கு: anasnawas@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago