மனநலத்துக்கான நிதிப் பங்கீடு: அரசின் பார்வை விரிய வேண்டும்!

By சிவபாலன் இளங்கோவன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ‘கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடரும் பெருந்தொற்றுக் கால நெருக்கடிகளால் மக்கள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்கான மனநலச் சேவைகள் தங்குதடையில்லாமல் கிடைப்பதை அரசு உறுதி செய்திடும்’ என்று குறிப்பிட்டது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், மனநலத் துறை என்பது புறக்கணிப்பட்ட துறையாகவே இருந்துவருகிறது.

‘சமூக விலக்கல், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடிகள், குடும்ப உறவுகளுக்கிடையேயான சிக்கல்கள், இணையவழி வேலை, இணையவழிக் கல்வி போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் ஏதேனும் ஒரு உளவியல் சிக்கலால் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்த மனநலப் பிரச்சினைகளை உணர்ந்துகொண்டு அதற்கான தீர்வை அறிவியல்பூர்வமாக அரசாங்கங்கள் பரிசீலித்தால் மட்டுமே அதிகரித்துவரும் இந்தப் பிரச்சினைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவைப் பொறுத்தவரை, பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பாகவே மனநலப் பிரச்சினைகள் அதிகமாக இருந்திருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தப் பிரச்சினைகள் இன்னும் தீவிரமடைந்துவிட்டன.

லான்செட் இதழ் (அக்டோபர் 2021) ‘இந்தியாவில் மனநலப் பிரச்சினைகள் 35% அதிகரித்திருக்கின்றன’ என்கிறது. நவம்பர் 2021-ல் வெளியான தேசியக் குற்றவியல் பதிவேட்டின்படி இந்தியாவில் தற்கொலைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது, குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தற்கொலைகள் இந்தியாவில்தான் மிக அதிகம். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி இந்தியாவில் பத்தில் மூன்று பேருக்கு ஏதேனும் ஒரு மனநலப் பிரச்சினை இருக்கிறது. 2016-ல் வெளிவந்த தேசிய மனநலக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 14% பேருக்கு உடனடி மனநலச் சேவைகள் தேவையாக இருக்கின்றன; 70-லிருந்து 80% மனநோயாளிகளுக்கு அதற்கான அறிவியல்பூர்வமான மனநல சிகிச்சைகளும், அதற்கான வசதிகளும் கிடைப்பதில்லை.

பெருந்தொற்றுக் கால நெருக்கடிகள் உட்பட பல்வேறு காரணங்களால் மனநலப் பிரச்சினைகள் தொடர்ச்சியாக அதிகரித்துவந்தாலும் மனநல சேவைகளின் பற்றாக்குறையும் இங்கு அதிகமாகவே இருக்கிறது. இந்தச் சூழலில்தான் நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் ‘மனநலப் பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டதையே கொஞ்சம் மாற்றமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்குத் தீர்வாக ‘தேசியத் தொலைதூர மனநல மையங்கள் ஏற்படுத்தப்படும்’ என்று சொல்வதைத்தான் முழுமையான தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நிதிப் பங்கீடுகளில் பிரச்சினைகள்

வளர்ந்த நாடுகள் உடல் ஆரோக்கியத்துக்காகச் செலவிடும் நிதியில் 10% மனநல சேவைகளுக்குச் செலவுசெய்கின்றன. அதுவே குறைவு என்பது உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து. இந்தியாவில் ஒரு சதவீதத்துக்கும் கீழாகவே மனநலத் திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு மக்கள் நல்வாழ்வு குடும்பநலத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.71,269 கோடி. இதில் வெறும் ரூ.597 கோடிதான் மனநலத்துக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதிகரித்துவரும் மனநலப் பிரச்சினைகளால் உருவாகும் வருவாய் இழப்போடு ஒப்பிட்டால், இந்த நிதி ஒதுக்கீடு ஒன்றுமேயில்லை. மனநலத்துக்கென்று ஒதுக்கப்படும் நிதியில் கிட்டத்தட்ட 93% தொகையானது நாட்டில் உள்ள இரண்டு தேசிய மனநல நிறுவனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. வெறும் 7% நிதி மட்டுமே தேசிய மனநலத் திட்டத்துக்கு வழங்கப்படுகிறது.

2021-ஐப் பொறுத்தவரை மனநலத் துறைக்கென்று ஒதுக்கப்பட்ட ரூ.597-ல் பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் மையத்துக்கென்று மட்டுமே ரூ.500 கோடியும், தேஜ்பூரில் உள்ள லோக்பிரியா கோபிநாத் மண்டல மனநல மையத்துக்கு ரூ.57 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்ட மனநலத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் தேசிய மனநலத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் ரூ.40 கோடி மட்டுமே.

அதிலும் மாற்றியமைக்கப்பட்டு வழங்கப்பட்ட தொகை வெறும் ரூ.5 கோடி மட்டுமே. மனநலத்துக்கென்று ஒன்றிய அரசால் ஒதுக்கப்படும் மிகக் குறைவான நிதியும் பெரும்பாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே போய்ச்சேர்கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும்கூட ‘தேசியத் தொலைதூர மனநல மையங்கள்’ பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் மையத்தால் ஏற்படுத்தப்படும் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் பெருகிவரும் மனநலப் பிரச்சினைகளுக்கு இங்குள்ள சமூக, அரசியல், பொருளாதாரச் சூழல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த மனநலப் பிரச்சினைகளுக்கான தீர்வை உண்மையில் பெற வேண்டுமென்றால், சமூகத்தின் கடைக்கோடியிலிருந்தே அதைத் தொடங்க வேண்டும். ஆனால், மனநல சேவைகளும் அவற்றுக்கான நிதியும் பெரும்பாலும் மத்தியிலேதான் குவிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பரவலாக்கும்போதுதான் உண்மையான பலன்களைப் பெற முடியும்.

தேசிய மனநலத் திட்டம்

தொண்ணூறுகளில் தொடங்கப்பட்ட இந்த தேசிய மனநலத் திட்டங்கள் இரண்டு இலக்குகளைக் கொண்டிருக்கின்றன: ஒன்று, ஒவ்வொரு மாநிலத்திலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த உயர் சிறப்பு மனநல நிறுவனங்களைத் தொடங்க வேண்டும். அதன் வழியாக மனநலம் தொடர்பான நவீன ஆராய்ச்சிகளையும் திறன் மேம்பாடுகளையும், சிறப்பு நிபுணத்துவத்தையும் உருவாக்க வேண்டும்.
இரண்டாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மனநலத் திட்டம் தொடங்கப்பட்டு, மனநல சேவைகளைக் கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை எளிய ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். மேலும், மனநலம் தொடர்பான விழிப்புணர்வையும், சுகாதாரப் பணியாளர்களுக்கான பயிற்சியையும் அளிக்க வேண்டும்.

எந்த மாநிலத்திலும் இதுவரை அதிமுக்கியத்துவம் வாய்ந்த உயர் சிறப்பு மனநல நிறுவனங்கள் தொடங்கப்படவில்லை. மேலும், மாவட்ட மனநலத் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் இன்னும் சென்றுசேராமல்தான் இருக்கிறது. சமீப காலமாக மாவட்ட மனநலத் திட்டங்கள் தேசிய சுகாதார திட்டத்தால் ‘தொற்றா நோய்களுடன்’ சேர்க்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன. அதனால், மாவட்ட மனநலத் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும்கூட தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தில் கரைக்கப்படுகிறது.

மனநலத் துறையின் இன்றைய தேவைகள்

சமூகப் பிரச்சினைகளால் உருவாகக்கூடிய மனநலச் சிக்கல்கள் தொடர்பாக ஒரு புரிந்துணர்வு அரசாங்கத்திடம் உருவாக வேண்டும். நீட், விவசாய, வாழ்வாதாரப் பிரச்சினைகளால் தொடர் தற்கொலைகள் நிகழும்போது ‘கவுன்சலிங் மையம் ஏற்படுத்தப்படும்’ என்று கண்துடைப்பு செய்யாமல், அதற்கான முழுமையான தீர்வைப் பரிசீலிக்க வேண்டும். அதுபோல பல்வேறு சமூக, அரசியல், பொருளாதாரச் சூழல்களுக்கும் மனநலத்துக்குமான தொடர்பு பற்றி அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். மனநோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வையும், பயிற்சியையும் மாவட்ட மனநலத் திட்டங்கள் வழியாகச் செய்ய வேண்டும்.

மனநல சேவைகளும், சிகிச்சை வசதிகளும் கிராமப்புறங்களிலும்கூடக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். வெறும் ‘டெலிகவுன்சலிங்’ மூலம் மனநோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. அதற்கான மருத்துவமனைகளை கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த உயர் சிறப்பு மனநல நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும். மனநலம், நரம்பியல், போதைப் பொருள் தொடர்பான பல்வேறு உயர் படிப்புகளையும் ஆராய்ச்சிகளையும் சிகிச்சைகளையும் வழங்கக்கூடிய மையங்களாக அவை இருக்க வேண்டும்.

மனநலத்துக்கென்று ஒதுக்கப்படும் நிதியை அதிகரித்து அதை ஒரு இடத்தில் குவிக்காமல், ஒவ்வொரு மாநிலத்துக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். தீவிர மனநோய்களுக்குப் பிறகான மனநோயாளிகளின் வாழ்க்கையைப் புனரமைப்பதற்கான திட்டங்களையும் அவர்களுக்கான நல உதவிகளையும் மேம்படுத்தி, அவர்களின் கண்ணியமான சமூகப் பங்களிப்பை உறுதிசெய்ய வேண்டும்.

இன்றைய சூழலில் மனநலத் துறையின் தேவைகளாக நான் மேற்கண்டவற்றையே பார்க்கிறேன். இந்தத் தேவைகளை முழுமையாக உணர்ந்து, அவற்றுக்கு ஏற்றவாறு மாநிலங்களுக்கு நிதிப் பங்கீட்டை அளிப்பதன் மூலமாகவே நாம் அனைவருக்குமான மனநலத்தை நோக்கிய முதல் அடியை எடுத்து வைக்க முடியும். அதற்காக, தொலைதூர மனநல ஆற்றுப்படுத்துதலுக்கான மையங்கள் தேவையில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், அதற்கும் முன்பாக நாம் மனநலத் துறையில் செய்ய வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன என்பதுதான் உண்மை!

- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர், எழுத்தாளர். தொடர்புக்கு: sivabalanela@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்