அம்பேத்கர், ஜே.சி.குமரப்பா: ஒடுக்கப்பட்டோருக்கான பொருளாதாரச் சிந்தனையாளர்கள்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த குடியரசு தின விழா அணிவகுப்பின் அலங்கார ஊர்தியில் காந்தியப் பொருளியலர் ஜே.சி.குமரப்பாவின் சிலை இந்த ஆண்டு இடம்பெற்றது மிகவும் பொருத்தமாகும். தமிழ்நாடு அதிகம் அறிந்திராத, ஆனால் உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட தமிழ் ஆளுமைகளில் ஜே.சி.குமரப்பாவும் ஒருவர். வாழ்வின் பெரும் பகுதியை வெளிநாடுகளிலும் வடமாநிலங்களிலும் அவர் செலவிட்டதால் தமிழ்நாடு அவரை அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. அவருடைய ‘நிலைத்த பொருளாதாரம்’ எனும் நூல் பசுமை சார்ந்த பொருளாதாரப் பார்வையை, சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பே உலகுக்குத் தந்தது. அறம் சார்ந்த தற்சார்பான பசுமைப் பொருளாதாரமே உலகுக்கு நிலைத்த வளர்ச்சியைத் தரும் என்ற மாற்றுச் சிந்தனையை குமரப்பா விதைத்தார்.

‘புத்தர் அல்லது கார்ல் மார்க்ஸ்’ என்ற சிறுநூலை 1956-ல் அம்பேத்கர் வெளியிட்டபோது, உலகம் ஆச்சரியமாகப் பார்த்தது. புரட்சியாளராகவும் போராட்டக்காரராகவும் அறியப்படும் அம்பேத்கர் அதே வேளையில் வன்முறையும் பேராசையும் இல்லாத புதிய பொருளாதாரத்துக்கான பார்வையையும் தந்தார். சமத்துவம், சமூகநீதி, மனித உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும் என அம்பேத்கர் கூறினார். பாட்டாளிகளின் சர்வாதிகாரம் எனும் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்பாட்டை அம்பேத்கரும் குமரப்பாவும் நிராகரித்தனர். குமரப்பா, காந்தியின் பார்வையில் பொருளாதாரத்தைப் பார்த்தார். பௌத்த நெறிகளின் அடிப்படையிலான புதிய பொருளாதாரச் சிந்தனையை அம்பேத்கர் முன்னெடுத்தார்.

1956, நவம்பர் 20 அன்று, அம்பேத்கர் இறப்பதற்கு 16 நாட்களுக்கு முன்னர் நேபாளத்தின் காத்மண்டு நகரில் ‘அகிம்சையும் பௌத்தமும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையை அவரது மிக முக்கியமான பொருளாதாரக் கொள்கை விளக்கங்களுள் ஒன்றாகக் கருதலாம். கம்யூனிஸம் அல்ல, பௌத்தமே ஒடுக்கப்பட்டோரின் அரசியல், பொருளாதார, கலாச்சார மீட்சிக்கான வழி என்று உறுதியாக எடுத்துரைத்தார்.

குமரப்பாவின் பொருளாதாரக் கருத்துகள், அவருக்குப் பின் ‘பௌத்த பொருளாதாரம்’ என்ற புதிய பார்வைக்கு வழிவகுத்தது. பௌத்தப் பொருளாதாரம் குறித்த ஆழ்ந்த விவாதங்களும் கோட்பாடுகளும் எழுந்தன. புவிவெப்பமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் சார்ந்த பொருளாதார வளர்ச்சி, நுகர்வு ஒழுக்கம், பரவலாக்கப்பட்ட பொருளாதாரம், பொருத்தமான தொழில்நுட்பம், மரபுசாரா எரிசக்தி, குன்றாவளம், தற்சார்பு எனப் பல திசைகளில் புதிய பொருளாதாரச் சிந்தனைகள் பயணிக்கின்றன.

அம்பேத்கரும் குமரப்பாவும் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியரும் உலகப் புகழ்பெற்ற பொருளாதார மேதையுமான செலிக்மென்னின் மனம்கவர்ந்த மாணவர்கள் என்பது சுவைமிக்க செய்தி. அமெரிக்கப் பொருளாதார வரலாற்றில் செலிக்மென் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறார். அமெரிக்க அரசமைப்பின் 16-வது சட்டத்திருத்தம் நிறைவேறவும், அதற்குப் பின் அதுசார்ந்த கொள்கைகள் உருவாகவும் செலிக்மெனின் பொருளாதாரச் சிந்தனைகள் காரணமாக இருந்தன. ‘வருமானத்துக்கேற்ற வரி’ என்பதே செலிக்மேனின் கோட்பாடு. ஏழைகளின் மேம்பாட்டை உறுதிசெய்யும் வகையில் நிதிஆதாரங்களைச் செல்வந்தர்களிடமிருந்து திரட்டுவது, சமத்துவக் கோட்பாட்டுக்கு எதிரானதல்ல என்ற புதிய பொருளாதாரக் கருத்து உருவாகிட செலிக்மென் உதவினார்.

காலனிய அரசுகள் அதற்கு மாறாக, அநீதியான பொருளாதாரக் கொள்கைகளின் வாயிலாக, ஏழைகளின் உழைப்பின் பயன்களைக் காலனிய அரசுக்கும் செல்வந்தர்களுக்கும் மடைமாற்றம் செய்வதை செலிக்மென் உணர்ந்தார். 1927-ல் கொலம்பியா பல்கலைக்கழத்தில் செலிக்மெனிடம் முதுகலைப் பட்ட மாணவராக குமரப்பா சேர்ந்தார். குமரப்பா நியூயார்க் நகரத்தின் தேவாலயம் ஒன்றில் ‘இந்தியாவில் வறுமைக்கான காரணங்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் அதனைச் செய்தியாக வெளியிட்டது. அதனைப் படித்த செலிக்மென் ‘காலனிய ஆட்சியும் இந்தியாவின் வறுமையும்’ என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொள்ளுமாறு குமரப்பாவுக்கு ஆலோசனை கூறினார். குமரப்பாவின் ஆய்வு காலனிய ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் வறுமை, பஞ்சம், பசி, பட்டினி ஆகியவற்றை அதிகப்படுத்த வழிவகுத்தன என்று ஆதாரபூர்வமாக நிரூபித்தது. கணக்குத் தணிக்கையாளராகவும், பொருளாதார ஆய்வாளராகவும் இருந்த குமரப்பா, இந்திய விடுதலைப் போரில் இணைவதற்கு அவரது ஆய்வு வழிவகுத்தது. மையப்படுத்தப்பட்ட பொருளாதாரம் சுரண்டலையும் வன்முறையையும் வறுமையையும் தூண்டுவதாக அமைகிறது என்று அவர் கண்டறிந்தார்.

செலிக்மெனின் வழிகாட்டுதலில் 1925-ல் ‘ஆங்கிலேயர் ஆட்சியில் மாகாண நிதிகளின் வளர்ச்சி’ என்ற தலைப்பில் அம்பேத்கர் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஆய்வு, புத்தகமாக வெளியிடப்பட்டபோது அவரது பேராசிரியர் செலிக்மெனின் முன்னுரை அதில் இடம்பெற்றது. செலிக்மென் மறையும் வரை அம்பேத்கர், குமரப்பா ஆகியவர்களுடன் தொடர்பில் இருந்தார். ஆசிய நாடுகளில் இருந்த செலிக்மெனின் சக பொருளியலர்களும், ஆய்வு மாணவர்களும், நண்பர்களும் செலிக்மெனின் பொருளாதாரக் கருத்துகளைக் காலனியாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். புதிதாக விடுதலை பெற்ற நாடுகள் மக்கள் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு செலிக்மெனின் கருத்துகள் பெரிதும் உதவின.

அம்பேத்கரும் குமரப்பாவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொருளியலை நம்முன் வைத்தனர். வன்முறை இல்லாத ஜனநாயக வழிகளின் மூலமாகவே பொருளாதாரச் சமத்துவத்தை அடைந்திட வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக நின்றனர். சமூக நீதியும், பொருளாதார நீதியும், அரசியல் நீதியும் ஒருசேரக் கிட்டினால் மட்டுமே ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலை சாத்தியம் என்பதை இருவரும் உணர்ந்திருந்தனர்.

பௌத்த சங்கங்களின் பரவலாக்கப்பட்ட ஜனநாயகச் செயல்முறை அம்பேத்கரின் மனதைக் கவர்ந்தது. கிராமத் தன்னாட்சி அமைப்புகளே ஜனநாயகத்தின் அடிமட்ட வேர்கள் என்பது குமரப்பாவின் பார்வை. அம்பேத்கர்-குமரப்பா ஆகிய இருவரும் அறம், எளிமை, நீதி, சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளாதார அமைப்பினை முன்னிறுத்தினார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் மீட்சிக்கான சிந்தனைத் தளத்தில் இருவரும் பயணித்தனர் என்பதை இருவருக்குள்ளும் இருந்த ஒற்றுமை வெளிப்படுத்துகிறது.

- வ.ரகுபதி, பேராசிரியர், அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகவியல் துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம். தொடர்புக்கு: ragugri@rediffmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்