முதலில் கேட்டவர்களுக்குச் சற்று விநோதமாகத்தான் இருந்திருக்கும். ‘தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குத் தமிழக அரசு ஒத்துழைப்புத் தருவதில்லை’ - சமீபத்தில் இப்படிக் குற்றம் சாட்டியவர், ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி. தமிழகத்திற்கு நிதி வழங்குவதிலும், வளர்ச்சித் திட்டங்களை அனுமதிப்பதிலும் ஒன்றிய அரசு ஓரவஞ்சனையுடன் நடந்துகொள்கிறது என்றுதான் நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால், இப்போது ஓர் ஒன்றிய அமைச்சர், ‘நாங்கள் பணப் பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழக அரசு எடுத்துக்கொள்ள மறுக்கிறது’ என்று சொன்னார். அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழக முதல்வர் உடனடியாக விடையளித்தார்.
தொழில்துறையில் முன்னேறிய எம் மாநிலத்தில் நெடுஞ்சாலைகளின் அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்று கூறிய முதல்வர் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (National Highway Authority of India- NHAI) பணிகளுக்குத் தமிழக அரசு எல்லா ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் உறுதியளித்தார். ஒன்றிய அமைச்சர் ஏன் குற்றம் சாட்டினார்? தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் என்ன பிரச்சினை? இது ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையிலான உரசலா அல்லது சிவப்பு நாடாச் சிக்கலா?
ஒன்றிய அமைச்சர் சுமத்திய குற்றச்சாட்டுகளில் இரண்டு முக்கியமானவை. முதலாவதாக, தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களுக்குச் சேர்மானங்களை (மண்-கிராவல், மணல், கருங்கல் ஜல்லி) வெட்டி எடுப்பதற்கான அனுமதி மூன்று மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பிறகு நீட்டிக்க வேண்டும். இது பணியின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கிறது. இரண்டாவதாக, நிலம் கையகப்படுத்துவதிலும் வனத் துறை அனுமதி பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
இதற்கு விடையளித்த முதல்வர், தமிழகத்தில் இரண்டு பருவமழை பொழிவதால் ஏரி-குளங்களில் மண் அள்ளுவதை அவ்வப்போதைய நீர்ப்பிடிப்பை உத்தேசித்தே வழங்க முடிகிறது. எனினும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று, சுரங்க விதிகளில் திருத்தம் செய்வோம் என்று சொல்லியிருக்கிறார். இரண்டாவதாக, மாவட்ட நிர்வாகத்தின் நில மதிப்பீட்டைப் பல இடங்களில் ஆணையம் ஒப்புக்கொள்ளாததால் ஏற்படும் சிக்கல்களை விளக்கி, எனினும் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். முதல்வரின் பதிலும் தொடர் நடவடிக்கைகளும் நம்பிக்கை அளிக்கின்றன.
ஒன்றிய அமைச்சரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்துதான் இந்தப் பிரச்சினைக்குப் பரவலான ஊடக கவனம் கிடைத்தது. எனினும், இது கடந்த சில மாதங்களாகவே புகைந்துகொண்டு இருந்திருக்க வேண்டும். 2021 செப்டம்பர் 8-ம் தேதி நெடுஞ்சாலை ஆணையத்தின் தமிழக ஒப்பந்ததாரர்கள் ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து மாநில நிர்வாகம் குறித்துப் புகாரளித்தனர். தொடர்ந்து அக்டோபர் 12-ம் தேதி தமிழகத்தின் சாலைப் போக்குவரத்து அமைச்சர் எ.வ.வேலு ஒன்றிய அமைச்சரைச் சந்தித்தார். டிசம்பர் 12-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விவாதிக்க தமிழக அரசு ஓர் உயர் மட்டக் கூட்டத்தை நடத்தியது. இதில் ஆணையத்தின் பொது மேலாளர் பங்கேற்றார்.
கூட்டத்தின் முடிவில் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாகத்தான் செய்திகள் வந்தன. ஆனால், டிசம்பர் 25-ம் நாள், கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இரண்டு, ஆக நான்கு நெடுஞ்சாலைத் திட்டங்களை முன்னதாகவே நிறுத்திக்கொள்ளப்போவதாக ஆணையம் அறிவித்தது. ஜனவரி 21 அன்று ஒன்றிய அமைச்சர் சென்னையில் நடந்த நிகழ்வொன்றில்தான் மேற்காணும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஜனவரி 24 முதல்வர் விடையளித்தார். என்ன நடக்கிறது?
மாநிலங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலைகளுக்குப் பொறுப்பான தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஒன்றிய அரசின் கீழ் இயங்குகிற தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்ட அமைப்பு. புதிய நெடுஞ்சாலைப் பணிகளைத் திட்டமிடுவதும், ஒப்பந்தப் புள்ளிகள் (tender) கோருவதும், ஒப்பந்தம் வழங்குவதும், பணிகளை மேற்பார்ப்பதும், பராமரிப்பதும், கட்டணச் சாலைகளில் சுங்கம் வசூலிப்பதும் ஆணையத்தின் பணிகள். இவை எல்லாம் மாநிலங்களுக்கு உள்ளேதானே நடைபெற வேண்டும்? அப்போதுதான் மாநில அரசுத் துறைகளுடன் உரசல் வருகிறது.
ஆணையத்தின் ஒப்பந்ததாரர்கள் ஆணையத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். பிழையில்லை. ஒப்பந்ததாரர்களுக்குச் சாலை அமைக்கத் தேவையான சேர்மானப் பொருட்களை வெட்டி எடுப்பதற்கான அனுமதிகளையும், மேலும் நிலம், வனம், போக்குவரத்து தொடர்பான மாநில அரசின் அனுமதிகளையும் ஆணையம்தான் பெற்றுத்தர வேண்டும். இதிலும் பிழையில்லை. ஒப்பந்ததாரரும் உரிமையாளரும் ஒருவருக்கொருவர் பொறுப்பாக இருப்பதுதான் நல்லது. ஆனால், சில பணிகளில் ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின்புதான் ஆணையம், மாநில அரசுத் துறைகளுடனான உரையாடலைத் தொடங்குவதாகச் சொல்லப்படுகிறது.
திட்டமிடும் காலத்திலேயே மாநில அரசுத் துறைகளுடன் உரையாடத் தொடங்குவது சுமுகமான உறவுக்கு வழிவகுக்கும். நிலம் கையகப்படுத்த வேண்டிய பகுதிகள், அவற்றில் அரசு நிலங்கள், தனியார் நிலங்கள், அவற்றின் மதிப்பு, சூழலியல் சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றை முன்கூட்டியே விவாதித்து, ஆணையமும் மாநில அரசுத் துறைகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர வேண்டும். அதைப் போலவே திட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள மண்-கிராவல் அள்ளக்கூடிய இடங்களையும், கருங்கல் ஜல்லி, எம்-சாண்ட் முதலானவற்றை உடைத்து எடுக்கக்கூடிய குவாரிகளையும் அடையாளம் காண வேண்டும். இதற்கான உரிமத் தொகையையும் (royalty) முன்னதாக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். ஆற்று மணலுக்குப் பதிலாக எம்-சாண்ட் பயன்படுத்த வேண்டும். ஆணையமும் மாநில அரசுத் துறைகளும் ஒப்புக்கொண்ட அம்சங்களைத் திட்ட அறிக்கையிலும் (detailed project report), ஒப்பந்தப் புள்ளியிலும் சேர்க்க வேண்டும். இது பிற்பாடு கருத்து வேறுபாடுகள் உருவாவதைத் தவிர்க்கும்.
ஒன்றிய அரசுத் துறைகள் என்பதால் அவை உயர்ந்தவையுமல்ல... மாநில அரசுத் துறைகள் தாழ்ந்தவையுமல்ல. ஒவ்வொரு துறைக்கும் விதிக்கப்பட்டிருக்கும் பணிகளை அவை நிறைவேற்ற வேண்டும். ஆனால், பல இடங்களில் அப்படி நடப்பதில்லை. கடற்கரைக்கும் வேளச்சேரிக்கும் இடையிலான பறக்கும் ரயில் (MRTS) ஒன்றிய அரசின் தென்னக ரயில்வேயால் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பெருநகர மேம்பால ரயில். ஆனால், அந்தப் பெருமையைவிட அது பக்கிங்காம் கால்வாயின் வெள்ளச் சமவெளிகளில் கட்டப்பட்டதுதான் இன்றளவும் விமர்சிக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களால் அப்படிச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஒன்றிய-மாநில அரசுத் துறைகளிடையே இணக்கமான போக்கு நிலவி, முறையாகத் திட்டமிடப்பட்டிருந்தால் இந்தச் சூழலியல் சீர்கேட்டைத் தவிர்த்திருக்க முடியும்.
இன்னொரு எடுத்துக்காட்டு, மதுரவாயல்-துறைமுகம் மேம்பாலப் பாதை. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்தப் பணி 2012-ல் அப்போதைய தமிழக அரசால் இடைநிறுத்தப்பட்டது. காரணம்: மேம்பாலப் பாதை கூவம் நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் நேர் மேலாக அமைக்கப்பட்டது. குறிப்பாக, அதன் அடித்தளம் (pilecap) ஆற்றின் நீர்மட்டத்துக்கு மேலாக அமைக்கப்பட்டது. நீர் வழிப்பாதை இதனால் சுருங்கிவிடும். இது சரியன்று. ஆனால், இதற்கான அனுமதியை முன்னதாகத் தமிழக அரசுத் துறைககள்தான் வழங்கியிருந்தன. பின் ஏன் இடைநிறுத்த வேண்டும்? அரசியல்தான் காரணம். இப்போது பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிகிறது.
ஒன்றிய அரசுப் பணிகளானாலும் தமிழக அரசுப் பணிகளானாலும் அவை மக்களுக்கான பணிகள். இதில் அரசியலுக்கோ சிவப்பு நாடா தடைகளுக்கோ இடம் கொடுக்கலாகாது. தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்குத் தமிழக அரசுத் துறைகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஒன்றிய அரசுத் துறைகளுக்கு மேட்டிமை மனோபாவம் ஆகாது. திட்டமிடும் காலம் முதற்கொண்டே ஒன்றிய - மாநிலத் துறைகள் இணக்கமாகச் செயலாற்ற வேண்டும். அப்போது நெடுஞ்சாலைகள் ஒன்றிய அரசுக்கானதாகவோ மாநில அரசுக்கானதாகவோ இராது. அவை மக்களுக்கானதாக இருக்கும்.
- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago