‘மொழிப்போர் தியாகங்களை மறக்க முடியுமா?’ என்ற நடுப்பக்கக் கட்டுரையில் (இந்து தமிழ் திசை, 25-1-2022) முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நடராசன் எப்படி இறந்தார் என்பது பற்றிய முரண்படும் தகவல்களைச் சுட்டும் செல்வ புவியரசன், ‘மொழிப்போரின் முதல் தியாகியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளக்கூட நமக்குத் தெளிவான சான்றாதாரங்கள் இல்லை’ என்று எழுதுகிறார். உண்மையிலேயே வருந்தத்தக்க நிலைதான் இது.
ஆனால், அக்கறையுடன் முயற்சி செய்தால் அவற்றைத் தேடிப் பெறுவது சிரமமல்ல. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறைப்பட்ட இந்தப் போராட்டத்தில் இருவர் உயிர்த் தியாகமும் செய்தனர். இது பற்றிச் சட்டமன்றத்தில் விளக்கம் தர வேண்டிய பொறுப்பில் மாகாண சுயாட்சியின்கீழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அப்போது ஆட்சியில் இருந்தது. ஆகவே, அரசு ஆவணங்களிலும் சட்டமன்ற நடவடிக்கைகளிலும் நடராசன் பற்றிய செய்திகள் உள்ளன.
ல. நடராசன் 1939 ஜனவரி 15-ல் இறந்த மூன்றாம் நாளே சட்டமன்றத்தில் இ.கண்ணன் என்ற உறுப்பினர் பிரதமர் (அக்காலத்தில் முதல்வரை ஆங்கிலத்தில் Premier என்றும் தமிழில் பிரதமர் என்றும் அழைப்பர்.) சி.ராஜகோபாலாசாரியிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பினார்.இக்கேள்விக்கு விளக்கமளிப்பதற்காகச் சென்னைச் சிறையின் கண்காணிப்பாளர் லெப்டினென்ட் கர்னல் எம்.எம்.கான், சென்னைப் பொது மருத்துவமனையின் சர்ஜன், லெப்டினென்ட் கர்னல் வி.மகாதேவன் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள் பல தகவல்களைத் தருகின்றன.
மறியல் செய்து கைதான நடராசன் 1938 டிசம்பர் 5-ம் நாள் ஆறு மாதக் கடுங்காவலும் 50 ரூபாய் அபராதமும் தண்டனையாகப் பெற்றார். சிறையில் அவர் கைதி எண் 5524. 18 வயது. உயரம் 5 அடி 7 அங்குலம். 43 கிலோ எடை. வீட்டு முகவரி 2, பண்ணைக்கார ஆண்டியப்பன் தெரு, ஏழுகிணறு, சென்னை. இந்து ஆதிதிராவிடரான இவருடைய தொழில் தச்சுவேலை. இவருடைய தந்தை கே. லட்சுமணனும் மரத் தச்சு வேலை செய்தவரே. சிறையில் ‘சி’ (கடைசி) வகுப்பு பெற்ற நடராசனுக்கு அரிசி உணவு வழங்கப்பட்டது.
சிறைப்பட்ட மூன்று வாரத்துக்குள் கீழுதட்டில் கொப்புளம் கிளம்பியதால் டிசம்பர் 26-ம் தேதி சிறை மருத்துவமனையிலேயே உள்நோயாளியாக நடராசன் சிகிச்சை பெற்றார். அடுத்த நாள் கொப்புளம் வெடித்தது; 102 டிகிரி காய்ச்சல்; தலையின் இடது பக்கமும் வீங்கிச் சிவந்து, கடும் வலி. டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களிலும் காய்ச்சல் தொடர்ந்ததோடு வலது தொடையிலும் இடது காலிலும் புதிதாக வீக்கம் ஏற்பட்டு தோலும் மென்மையாயிற்று. 30-ம் தேதி காய்ச்சல் சற்றே தணிந்தாலும் முகம் முழுவதும் வீங்கி, உதடுகளும் முன்னங்கழுத்தும் சிவந்துவிட்டன.
இவை சாதாரணக் கொப்புளமும் காய்ச்சலும் அல்ல என்று உணர்ந்த சிறை மருத்துவர் அருகிலிருந்த பொது மருத்துவமனைக்கு அவரை மாற்றிவிட்டார். நடராசனுக்கு வந்த ‘cellulitis complicated with septicaemia and pyaemia’ என்ற நோய், ‘pyaemic abscesses in the brain’ ஆகவும் மாறிவிட்டது:அதாவது கடுமையான சீழ் கொண்ட நோய்த்தொற்று ரத்தத்தில் கலந்து, மூளையையும் பாதித்துவிட்டது. ஸ்ட்ரெப்டோகாக்கல் சீரம் (streptococcal serum), ப்ரோசெப்டாசின் (proseptacine), சொல்யூசெப்டாசின் (soluseptacin) ஆகிய நவீன மருந்துகள் கொடுக்கப்பட்டன என்று சொன்ன அரசு மருத்துவர்கள், நலிந்த உடல்நிலையினரான நடராசனுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு என்றும்கூறினர். நடராசன் இறந்ததற்குத் தாங்கள் பொறுப்பில்லை என்பதற்கு அவர்கள் சொல்லாமல் சொன்ன காரணங்கள் இவை.
பொது மருத்துவமனையில் சேர்த்த இரண்டு வாரம் கழித்து, 1939 ஜனவரி 14-ல் நடராசன் விடுவிக்கப்பட்டார். அடுத்த நாள் பிற்பகல் 2 மணிக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் ஈகி ஆனார் நடராசன் . மேற்கண்ட செய்திகளை உள்ளடக்கிச் சட்டமன்றத்தில் ராஜாஜி விடையளித்ததும் ஏராளமான துணைக்கேள்விகளைப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். நடராசன் மாணவரா என்ற கேள்விக்கு, அவர் எழுத்தறிவற்றவர் என்று பதிலளித்தார் ராஜாஜி. எதிர்க்கட்சிக் தலைவர் குமாரராஜா முத்தையா செட்டியார், நடராசன் விடுவிக்கப்பட்டதைப் பற்றிக் கேட்ட கேள்விக்குச் சட்ட நுணுக்கத்தோடு பதில் வந்தது. ஆர்.எம். பாலாட், அப்துல் ஹமீதுகான் ஆகிய உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பிறகு நடராசனுக்கு மருத்துவம் பார்த்த வல்லுநரின் தகுதியைப் பற்றி எம்.சி.ராஜா வினா எழுப்பினார்.
முன்பே ஏன் அவருடைய நோய் இனங்காணப்படவில்லை என்ற கேள்விக்கு, தெரிந்திருந்தால அவரை ஏன் மறியலுக்கு அனுப்பியிருக்கப் போகிறார் அந்தக் கனவான் என்று பெரியாரைச் சூசகமாக இடித்துரைத்த ராஜாஜி, சிறைக் கண்காணிப்பாளரின் அறிக்கையை அவையில் கையளித்தார். இத்தருணத்தில் இடையிட்ட முத்தையா செட்டியார் நடராசனுக்கு உற்ற நோயின் தீவிரத்தை மருத்துவர்கள் அறிந்திருந்தனரா, ஏன் உடனே அவரைப் பொது மருத்துவமனையில் சேர்க்கவில்லை; கடும் நோயுற்றிருந்தவரை ஏன் உடனே விடுவிக்கவில்லை; அவர் உடல்நிலையைப் பற்றிய முதல் அறிக்கைகள் எப்போது கிடைத்தன என்று சரமாரியாகத் துணைக்கேள்விகளை எழுப்பினார்.
இவற்றுக்கெல்லாம் ராஜாஜி கொடுத்த விடைகள் சட்டமன்ற நெறிகளுக்குட்பட்ட செறிவும் நுட்பமும் கொண்டவையாக இருந்தாலும் அவருடைய மேட்டிமையை வெளிப்படுத்தும் ஏளனம் இழையோட அமைந்திருந்தன. நடராசன் எழுத்தறிவற்றவர் என்பதை ஒருமுறைக்கு இருமுறை அழுத்திக் கூறியவர், கல்லாதவர் என்பதனாலேயே இந்திக்கு எதிராக மறியல் செய்தார் என்றார் சிரித்துக்கொண்டே. நடராசனின் நோய் இயற்கையாக வந்ததா, அடிபட்டதால் வந்ததா என்ற கேள்விக்கு, அது இயற்கையாகவே வந்ததென்றும், அவர் சிறைப்படாமல் இருந்தால் இந்த அளவு சிறந்த மருத்துவம் அவருக்கு வாய்த்திருக்காது என்றும் ராஜாஜி சொன்னது எளிய மக்களின் வறுமையை நகையாடுவதாக இருந்தது.
ராஜாஜியின் பதில்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாயின. எழுத்தறிவற்ற ஆதி திராவிடரின் உயிர் என்ன துச்சமா என்று நீதிக்கட்சியின் ஆங்கில ஏடான ‘ஜஸ்டிஸ்’ வினவியது. மரணத் தருவாயிலும் அவரிடம் மன்னிப்புக் கடிதம் கேட்கப்பட்டதாக ‘சண்டே அப்சர்வர்’ நாளேடு அரசாங்கத்தைக் குற்றம்சாட்டியதோடு, ராஜாஜியின் பதில்களில் இழையோடிய ஏளனத்தையும் கண்டித்தது. நடராசனின் தந்தை கே. லட்சுமணன் மிகுந்த வலியுடன் அறிக்கை விடுத்திருந்தார். தமது ஒரே மகன் எழுத்தறிவற்றவர் என்பதை மறுத்த அவர், ஏழுகிணறு மலையப்பன் தெருவில் இருந்த மாநகராட்சி மாதிரிப் பள்ளியில் 4-ம் வகுப்பு வரை படித்த நடராசன், பிறகு தனியாகக் கல்விப் பயிற்சி பெற்றார் என்றும், அவர் தமிழை வேகமாக வாசிக்கவும் எழுதவும் செய்வார் என்றும், அவர் கையெழுத்திட்ட பல நூல்கள் தம்மிடம் உள்ளதாகவும் சொன்னதோடு இறந்த மகனைப் பற்றி ஒரு பிரதமரே இழிவாகப் பேசியது அவருடைய மரணத்தைவிட அதிகம் துயரம் தருவதாகவும் கூறினார்.
குமாரராஜா முத்தையா செட்டியார் விருப்பப்படி மருத்துவமனையிலிருந்து காரில் கறுப்புக் கொடி போர்த்தி, பெரும் ஊர்வலமாக நடராசனின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது. மறுநாள் ஜனவரி 16-ல் பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட இறுதி ஊர்வலத்தில் அண்ணா, டாக்டர் தர்மாம்பாள், அ. பொன்னம்பலம், கு.மு.அண்ணல்தங்கோ, ஆல்பர்ட் ஜேசுதாசன், காஞ்சி பரவஸ்து ராஜகோபாலாச்சாரி, நாராயணி அம்மை முதலானோர் புகழுரையாற்றினர்.
இதுதான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் களப்பலியான நடராசன் புகழுடம்பு எய்திய கதை. இதற்கடுத்த இரண்டே மாதங்களில் தாளமுத்துவும் தியாகியானார். அந்தக் கதையையும் இனிமேல்தான் எழுத வேண்டும்.
- ஆ.இரா.வேங்கடாசலபதி, வரலாற்றாய்வாளர், ‘வ.உ.சி.யும் காந்தியும் – 347 ரூபாய் 12 அணா’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: chalapathy@mids.ac.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago