மதுவிலக்கும் வாக்குப் பெட்டியும்

By ஷிவ் விஸ்வநாதன்

மதுவிலக்கை முதலில் பேசிய கட்சிக்கு வாக்குகள் அதிகம் கிடைக்கக்கூடும்



இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையில் மதுவிலக்கு தொடர்பான சூடான விவாதமும் நடந்தது. காந்தியவாதிகளில் பலர் பூரண மதுவிலக்கு என்ற கொள்கையை அரசியல் சட்டத்தின் வழிகாட்டுக் கொள்கைகளில் ஒன்றாகவே சேர்த்துவிட வேண்டும் என்றார்கள்.

அரசியல் சாசன சபையின் பழங்குடி உறுப் பினரான ஜெய்பால் சிங் “உங்களுடைய கோரிக்கை வன்மமாக இருக்கிறது, என்னுடைய மதச் சுதந்திரத்தில் தலையிடுகிறது. நீங்கள் இதை அரசியல் சட்டத்தில் சேர்ப்பீர்களோ, மாட்டீர்களோ தெரியாது - என்னுடைய மத உரிமைகளை விட்டுத்தர நான் தயாரில்லை” என்றார்.

அரிசியை ஊறவைத்து மது தயாரிப்பது பழங்குடிகளின் பண்பாடு. பண்டிகைகளிலும் கூட்டமாக உண்டு களிக்கும்போதும் அரிசி மதுவை அருந்தி மகிழ்வது அவர்களுடைய பாரம்பரியம். ஜெய்பால் சிங் எதிர்ப்பின் பின்னால் உள்ள நியாயத்தை உணர்ந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், “அரசியல் சட்டத்தின் ஆறாவது அட்டவணை விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, பழங்குடிகள் பகுதியில் மதுவிலக்குச் சட்டம் அமல்படுத்தப்படும்” என்றார்.

குடிசைப் பகுதிகளில் நிலவும் குடிப் பழக்கத்தை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பார் அறிவியலாளரான என் நண்பர் சி.வி.சேஷாத்ரி. நொதிக்க வைத்து மதுபானம் தயாரிக்கும் நடைமுறையால் பல ஆண்டுகளாகப் பலன் அடைந்தவர்கள் நம்முடைய முன்னோர்கள். அது அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்பு. அரிசியைப் பக்குவமாக நொதிக்கவைத்தால் சுவையான, ஊட்டச்சத்து மிகுந்த மதுபானம் கிடைக்கும். இயற்கை அறிவியல் நடைமுறையான அதில் கள்ளச்சாராய வியாபாரி செயற்கையாகச் சில பொருட்களைச் சேர்த்து, அதன் தரத்தைக் கெடுத்துவிடுவார் என்பார்.

மதுவிலக்கு அரசியல்

மார்க்சிஸ்ட்டான இன்னொரு நண்பர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்கள் பணியைச் செய்ய சாராயத்தின் துணையை நாடுவதை நினைவுபடுத்துவார்.

நான் இந்த உதாரணங்களையெல்லாம் கூறுவது, மதுபானம் அருந்தும் பழக்கம் மக்களுடைய வரலாற்றில் இயல்பாகத் தொடர்வது. மதுவிலக்கு என்ற கொள்கையோ பின்னாளில் தர்க்கரீதியாக வாதிட்டு உருவாக்கப்பட்டது என்பதைக் காட்டத்தான்.

மதுவிலக்கு அரசியலை நன்கு புரிந்துவைத்திருந்த அஇஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் இதைப் பயன்படுத்தித்தான் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினார். இருப்பினும் மதுவிலக்கு என்பது, மேடைக்குப் பின்னால் நடப்பவற்றைத் திரையிட்டு மறைக்கிறது. அங்கே என்ன நடக்கிறது என்பதை ஆராய்வது அவசியம்.

கள்ளச் சாராய வியாபாரமும் கள்ளக் கடத்தலும் வளர்வதில் அதிகாரிகளிடத்தில் நிலவும் ஊழலுக்கு பெரும் பங்கு உண்டு. கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது, பொருட்களைக் கடத்துவது, பாலியல் தொழிலுக்குப் பெண்களைக் கடத்துவது, மதுவிலக்கு ஆகிய துறைகள் மூலம்தான் போட்டிப் பொருளாதாரம் இன்றைக்கு சமூகத்தில் வளர்ந்து நிற்கிறது.

குறைபாடான கண்காணிப்பு

மதுவிலக்கு எப்போதும் பூரணமாக இருப்பதில்லை என்று சமூகவியலாளர்கள் கூறுவார்கள். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய காவல் துறை பின்னடைவுகள் உள்ள நிர்வாக அமைப்பைக் கொண்டது. மதுவிலக்கை அமல்படுத்த கேரளம் மேற்கொண்டுவரும் இப்போதைய முயற்சிகள் நல்லதொரு உதாரணம். பூரண மதுவிலக்கே லட்சியம் என்ற கேரள அரசு, அதைப் படிப்படியாக அமல் செய்ய முடிவெடுத்தது. முதல் கட்டமாக, 5 நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே மதுபானம் விற்கப்படும் என்று கட்டுப்பாடுகளை விதித்தது. மதுவிலக்கை அமல்படுத்துவது என்ற கேரள அரசின் முடிவு சரிதான் என்று ஆமோதித்த உச்ச நீதிமன்றம், அது மிகவும் கடினமான செயல் என்றும் சுட்டிக்காட்டியது.

தென்னிந்தியாவைச் சேர்ந்த அரசுகளும் அரசியல் தலைவர்களும் பெரிய பாறாங்கல்லை மலையுச்சிக்கு உருட்டிக் கொண்டுபோகும் இந்த மகத்தான முயற்சியை மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்துடன் அறிவித்துவிட்டு, மாநிலத்தின் வருவாய் வற்றத் தொடங்கியதும் மவுனமாக மீண்டும் மதுவைக் கொண்டுவந்துவிடுகின்றனர். மதுவிலக்கு என்பது தேர்தல் காலங்களில் பெண்களின் வாக்குகளைக் கவரும் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது. சுற்றுலா வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்பதால்தான் மதுவை அனுமதிக்க நேர்கிறது என்று பிறகு காரணம் கூறுகின்றனர்.

கேரள அரசு நாட்டுச் சரக்குகளைத் தடை செய்துவிட்டு பீர், ஒயின் குடிக்கலாம் என்று அனுமதிக்கிறது. நீதிமன்றமே இதை, மதுபானத்தை மேலும் குடிக்க வைப்பதற்கான உத்தி என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. குடும்பங்கள் சீரழிகிறதே என்று கவலைப்படும் மக்கள் குழுக்கள் - மதத் தலைவர்கள் ஒரு பக்கம், கேரளத்துக்கு வரும் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குடிக்க முடியவில்லை என்பதற்காக வருவதை நிறுத்திவிடுவார்களோ என்று கவலைப்படும் ஹோட்டல் - சுற்றுலாத் தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் மறு பக்கம் என்று இருவிதமான வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் கேரளக் கட்சிகளுக்கு இருக்கிறது.

மதுவிலக்கு அமல் என்பது உண்மையில் ஊழலுக்கே வழிவகுக்கிறது. மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது என்று கேரள அரசிடம் முறையிட்ட பார் உரிமையாளர்கள், பார் நடத்துவதற்காக கோடிக்கணக்கில் பலருக்கு லஞ்சம் கொடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்கள். ஆனால், குடிப் பழக்கத்தால் சமூக ஒழுக்கமும் நியதிகளும் கெடுவது குறித்து யாருமே அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. குடிப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த மதுவிலக்கு என்பது உடனடித் தீர்வாகக் கருதப்பட்டு, தேர்தலுக்கு முன்னதாக அறிவிக்கப்படுகிறது. அதுவே தோல்வியில் முடிந்து, அரசுக்கு வருவாய் குறைந்து, கள்ளச்சாராயமும் பெருகிய பிறகு மீண்டும் அடுத்த பொதுத் தேர்தல் வரை அனுமதிக்கப்படுகிறது!

தேர்தல் உத்தி

தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம்.. மதுபான விற்பனையை மாநில அரசே நேரடியாக மேற்கொண்டது. அரசின் பல்வேறு விலையில்லா மானிய திட்டங்களுக்குக் கணிசமான வருவாய் மது விற்பனை மூலம் கிடைத்தது. மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்துவதால் பல பூதங்கள் கிளம்பப்போகின்றன.

மதுவிலக்கை முதலில் பேசிய கட்சிக்கு வாக்குகள் அதிகம் கிடைக்கக்கூடும். கள்ளச் சாராயம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டால் எல்லா கட்சிகளுமே அரசைக் கண்டித்தும் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் வாக்குகளை அறுவடை செய்யப் பார்க்கும். பூரண மதுவிலக்கு என்பது இனி சாத்தியமே இல்லை என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உள்ளூரத் தெரியும். அரசாங்கமே மது விற்கலாமா என்று தார்மிகரீதியில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மது விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாய் இல்லாமல் விலையில்லா திட்டங்களை அரசால் மேற்கொள்ள முடியாது. எனவே, முழு விலக்கு என்பதைவிடக் கட்டுப்பாடான விற்பனை என்ற நிலைக்குப் போக முற்படலாம்.

பிஹாரில் மதுவிலக்கு

நிதீஷ் குமாரின் ஆதரவாளர்களில் பெரும்பகுதியினர் பெண்கள்தான். வீட்டில் உள்ள ஆண்களின் குடிப் பழக்கத்தால் அடி உதையுடன் பொருளாதார இன்னல்களுக்கும் ஆளாகுபவர்கள் அவர்கள்தான். எனவே, அவர்களுடைய ஆதரவைப் பெற நிதீஷ் குமார் மதுவிலக்கை அறிவித்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இதை அமல்படுத்துவது எளிதல்ல. சாதாரணமாகவே சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டத் திணறுவதுதான் பிஹார் அரசு.

தார்மிக அடிப்படையில் மதுவிலக்குக் கொள்கை வரவேற்கப்பட வேண்டியதே; அரசுக்கு வருவாய் வேண்டும் என்பதும் அதே அளவுக்கு அவசியமானது. குடிப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை எப்படி மட்டுப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் குழுக்களும் அரசுகளும் இது தொடர்பாக ஆலோசனை கலக்க வேண்டும். சமூக வாழ்க்கை முறையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப முடிவுகளையும் வழிமுறைகளையும் தீர்மானிக்க வேண்டும்.

ஷிவ் விஸ்வநாதன், பேராசிரியர் ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகம்

தமிழில்: சாரி

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்