உள்ளாட்சித் திருவிழா: உள்ளாட்சித் தேர்தல் என்னும் ஆணிவேர்

By செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்கள், தங்களது ஆட்சியாளர்களுக்கான தேடலைத் தொடங்கிவிட்டன. ஆம்! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்டவணையை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புறங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள மாபெரும் மக்களாட்சித் திருவிழா இது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள மொத்தம் 12,838 உறுப்பினர் பொறுப்புகளுக்கு இன்னும் 30 நாட்களுக்குள் மன்ற உறுப்பினர்களும், அதற்கடுத்த சில நாட்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் நகர்ப்புற உள்ளாட்சிகளில் உண்மையான மக்களாட்சி மீண்டும் தொடரப்படவுள்ளது.

இந்திய அரசமைப்பின் 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தாலும், இவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முந்தைய காலத்தைப் போலவே தற்போதும் தேர்தல்கள் தாமதமாகவே நடைபெறுகின்றன.

2016-ல் நடத்தப்பட வேண்டிய இந்தத் தேர்தல்கள் சுமார் ஆறு ஆண்டுகள் தாமதத்துக்குப் பின் தற்போது நடைபெறவுள்ளன. இனிவரும் காலத்திலாவது அரசமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் உறுதிமொழி சரியாகப் பின்பற்றப்படும் என்று நம்புவோம். கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தும் பதற்றமான சூழலில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. மாநிலத் தேர்தல் ஆணையம், பெருந்தொற்று முன்னெச்சரிக்கை குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியுள்ளது. அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அடிப்படையில் நடைபெறும் தேர்தல் இது.

எனவே, அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பரப்புரைகளையும் நடவடிக்கைகளையும், தங்கள் தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் அமைத்துக்கொள்வது நலம். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கும் அரசியல் கட்சியினருக்கும் மக்கள் நலன் காக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது. மக்களாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்துவது எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது மக்கள் நலன் காப்பாற்றப்படுவது.

இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய சமுதாய மாற்றம் அல்லது வளர்ச்சிப் படிநிலையாக ‘மகளிர் இடஒதுக்கீடு உயர்வு’ நடைமுறைக்கு வருகிறது. கடந்த தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் இடஒதுக்கீடு பெற்றிருந்த மகளிர், தற்போது, மக்கள்தொகையில் தங்களுக்கு உள்ள விகிதாச்சாரத்துக்கு இணையான அளவில் 50% இடஒதுக்கீடு பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும், மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, பேச்சளவிலும் கண்துடைப்பாகவும் உள்ள நிலையில், சமூகநீதிக்கான முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில், மக்கள்தொகைக்கு இணையான விகிதாச்சார ஒதுக்கீட்டை மகளிருக்கு வழங்கியதன் மூலம், மற்றுமொரு சமுதாயப் புரட்சி அரங்கேறியுள்ளது. இந்தப் புரட்சிகர, வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைக்குச் சட்டபடியான அங்கீகாரம் எப்போதோ வழங்கப்பட்டுவிட்டது என்றாலும், நகர்ப்புறங்களில் தற்போதுதான் நடைமுறைக்கு வருகிறது.

கடந்த காலங்களில், அது உரிய காலத்தில் நடந்தாலும் சரி, அல்லது தாமதமாக நடந்தாலும் சரி, ஊரகம், நகர்ப்புறம் ஆகிய இரண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால், இம்முறை இந்த இணை பிரிந்துவிட்டது. ஊரக உள்ளாட்சி மன்றங்கள் ஏற்கெனவே தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டன. தற்போது, நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களின் கதவுகள் திறக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளுக்காகக் காத்திருக்கின்றன.

மக்களின் வாழ்வாதார-வாழ்க்கைமுறைச் சூழல் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. உலகளாவிய, நாடு தழுவிய இந்த மாற்றங்களின் தாக்கங்கள் உள்ளாட்சி மன்றங்களின் பொறுப்புகளில் மேலும் மேலும் சுமையைக் கூட்டிவருகின்றன. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழல்களிலும் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து செயல்படத்தான் செய்கின்றன. ஆனால், அவை பெயரளவிலான அல்லது இயந்திரத்தனமான செயல்பாடுகளாக மட்டுமே அமைகின்றன. உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கும் மாறிவரும் கூடுதல் தேவைகளுக்கேற்பவும் திட்டங்கள் வகுக்கவும் அவற்றைச் செயல்படுத்தவும் போதிய அக்கறை காட்டப்படுவதில்லை அல்லது அக்கறை காட்ட இயலாத சூழல் உள்ளது என்பதே நடைமுறை உண்மை. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளே தங்கள் தேவைக்கு வலிமையான குரல் கொடுக்க இயலும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களின் நேரடிப் பயன்பாடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நிர்வாகிகளின் தேர்வு என்பதாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த மக்களாட்சித் திருவிழா, பல புதியவர்களைப் பொது வாழ்க்கைக்கு அறிமுகப்படுத்தும் அறிமுக விழாவாகவும் அமைகிறது. தேர்தல்களில் பங்கேற்பவர் வெற்றிபெற்றாலும் அல்லது தோல்வியைச் சந்தித்தாலும் அதுவே அவர்களது பொது வாழ்க்கைக்கான முதல் படியாக அமைகிறது.

இன்றுள்ள பல நடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் முதல் அறிமுகம் கொடுத்தது உள்ளாட்சித் தேர்தல்கள்தான். கடந்த காலங்களில் நகர்ப்புற உள்ளாட்சிகள் பெரும் தலைவர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. ராஜாஜி, பெரியார் போன்றவர்களின் முதல் அறிமுகம் நகர்ப்புற உள்ளாட்சிகளின் பெருந்தலைவர்கள் என்பதாகத்தான் இருந்தது. ஆகவே, தற்போது நடைபெறவுள்ள இந்தத் தேர்தலும் வழக்கம்போல ஆற்றல்மிக்க இளம் தலைவர்களையும் பல புதியவர்களையும் பொதுவாழ்க்கைக்கு அழைத்துவரும் என்பது திண்ணம்.

தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க நாம் காத்திருப்போம். அதுவரை, தமிழ்நாட்டு உள்ளாட்சிகளின் வரலாறு, தொன்மை, அவற்றின் பொறுப்புகளில் காலம்தோறும் பெற்றுவரும் மாற்றங்கள், தற்சமயம் அவை சந்தித்துவரும் சவால்கள் ஆகியவற்றைப் பற்றி வரும் வாரங்களில் அசைபோடுவோம்.

- ஜெயபால் இரத்தினம், உள்ளாட்சித் துறை அலுவலர் (ஓய்வு), ‘தமிழக வரலாற்றில் பெரம்பலூர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: jayabalrathinam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்