வானில் கொடியேற்றுங்கள்
கொடியசையுங்கள்
எங்கிருந்து வந்தவர் நீங்கள்
என்பதைக் காட்டுங்கள் இவ்வுலகுக்கு
நாம் அனைவரும் ஒன்றே என்று
காட்டுங்கள் உலகுக்கு
என்று தொடங்குகிறது உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கான அதிகாரபூர்வ கீதம். போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே உலகக்கோப்பைக் கீதங்களுக்கிடையில் கால்பந்து நடக்க ஆரம் பித்தது. பிட்புல்லும் ஜெனிஃபர் லோபஸும் உருவாக்கிய அதிகாரபூர்வ கீதம் அவ்வளவாக ஜொலிக்கவில்லை. ஆனால், போட்டி கீதங்களும் உலகக்கோப்பைக் கால்பந்து எதிர்ப்புக் கீதங்களும் களைகட்டியிருக்கின்றன.
‘பாப் வில் ஈட் இட்செல்ஃப்’ என்ற பழம்பெரும் பிரிட்டிஷ் பாப் இசைக் குழு கடந்த 7-ம் தேதி ஒற்றைப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடல் ஃபிஃபா தலைவர் செப் பிளேட்டரைக் கடுமை யாகத் தாக்குகிறது. கூடவே, பிரேசிலின் வரிப் பணத்திலிருந்து கோடிக் கணக்கில் சுருட்டியதாக, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள்மீதும் இந்தப் பாடல் வசைமாரி பொழிந்திருக்கிறது.
ஜெனிஃபர் இருந்துமா?
போட்டியின் அதிகாரபூர்வ கீதமான ‘நாம் அனைவரும் ஒன்றே’ (வீ ஆர் ஒன்- ஓலே ஓலா) மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. ஜெனிஃபர் லோபஸும் உள்ளூர் பாடகி கிளாதியா லேய்த்தேவும் பங்களிப்புச் செய்திருந்தபோதும் இந்தப் பாடல் போதிய வரவேற்பைப் பெறவில்லை. கலாச்சாரம் தொடர்பான அரைத்த மாவையே திருப்பி அரைத்திருப்பதாகவும் போர்த்துக்கீசிய மொழியை ஊறுகாய் அளவே தொட்டிருப்பதாகவும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைத்தளவாசிகள் அதிகம் காணப்படும் பிரேசிலில் பெரும்பாலான இணையவாசிகளுக்கு 2010-ல் சகிரா பாடி ஆடிய ‘வாகா வாகா’தான் விருப்பப் பாடல்.
போட்டிப் பாடல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ‘பைஸ் தோ ஃபூத்போல்' (கால்பந்து தேசம்) பாடலும் அவற்றுள் அடக்கம். எம்.சி. கிமே பாடிய ஆர்ப்பாட்டமான இந்த ஃபங்க் பாடலை யூடியூபில் 2.3 கோடிப் பேர் பார்வையிட்டிருக்கிறார்கள். இந்த ஆல்பத்தில் ராப் கலைஞர் எமிசிதாவும் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாரும் இடம்பெற்றிருக்கிறார்கள். வறுமையிலிருந்து மீள்வதற்கான வழியாகச் சுயமுன்னேற்றத்தை இந்தப் பாடல் பரிந்துரைக்கிறது. பிரேசிலில் கோடிக் கணக்கானோர் நடுத்தர வகுப்பினராக உயர முயன்றுகொண்டிருக்கும் வேளையில், இந்தப் பாடல் சொன்ன செய்தி பிரேசில் மக்களிடையே பிரபலமாக இருக்கிறது. “எவ்வளவு தூரம் நாம் வந்திருக்கிறோம் பாருங்கள்” என்று இந்தப் பாடலில் கிமே பாடுகிறார்.
கடுமையாக விமர்சிக்கும் பாடல்களும் வெளி வந்திருக்கின்றன. ‘மன்னிக்கவும் நெய்மார்’ (திஸ்குல்பா நெய்மார்) என்ற எது கிரீகரின் பாடல் புலம்பலும் விமர்சனமும் கலந்தது. கடந்த ஆண்டிலிருந்து பிரேசிலில் உலகக்கோப்பைக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களின் முறையீடுகளைப் பற்றி இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. ஆர்ப்பாட்டங்கள், மைதானங்கள் ஆகியவற்றின் படங்களைக் கலவையாகக் கொண்ட இந்தப் பாடலுக்கு யூடியூபில் 1,70,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கிடைத்திருக்கின்றனர்.
“மன்னியுங்கள் நெய்மார், உங்களுக்கு இந்த முறை ஆதரவளிக்க என்னால் முடியாது” என்று அந்தப் பாடலில் வருகிறது. “பிரமாதமான, பிரம்மாண்டமான மைதானங்கள் இருக்கின்றன நம்மிடம். ஆனால், பள்ளிகளும் மருத்துவமனைகளும் பாழடைந்து கொண்டிருக்கின்றன” என்று போகிறது அந்தப் பாடல்.
பிளேட்டர் ஒரு தூசு
‘பாப் வில் ஈட் இட்செல்ஃப்’ பாடலும் சற்றுக் கடுமையாகத்தான் அமைந்திருக்கிறது. இந்தக் குழு முன்பொருமுறை ஒற்றைப் பாடல் வெளி யிட்டிருக்கிறது. ‘சீச்சோலீனா தொட்டுத்தந்த 1990’ என்ற அந்தப் பாடல் வெற்றிக்கோப்பையை இத்தாலியப் பாலியல் பட நடிகை சீச்சோலீனா தன் கைகளால் வெற்றியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரியது. தற்போதைய பாடலில் வழக்கத்துக்கு அதிகமாக அரசியல் நெடி கொச்சை வழக்குடன் கலந்து வீசுகிறது: “செப் பிளேட்டர் ஒரு தூசு, அவர் சேர்த்துக்கிறார் காசு, ஏறுதுபார் கொழுப்பு, நடக்குதுபார் அழிப்பு, விளையாட்டின் அழிப்பு.’’
“அவர்கள் இதை அபகரித்துவிட்டார்கள், அரக்கர்கள் இதை ஆட்டுவிக்கிறார்கள்” என்று போகிறது ‘ஆட்டத்தை மீட்டெடுங்கள்: ஃபிஃபாவைப் புறந்தள்ளுங்கள்’ என்ற பாடல். ரியோ டி ஜெனி ரோவைச் சேர்ந்த ராப் கலைஞர் உருவாக்கியது இந்தப் பாடல். அதிகாரபூர்வ பாடலைப் போல் இந்தப் பாடலுக்கு விளம்பரமோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கு வாய்ப்போ கிடைக்கவில்லை. ஆனால், நஷ்டப்பட்டாலும் சரி, மக்களிடையே தங்கள் செய்தி பரப்பப்பட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்கிறார்கள் இந்தப் பாடலை உருவாக்கியவர்கள்.
விளையாட்டு எங்களுடையது
ஃபிஃபா-வின் ஊழல்கள், உலகக்கோப்பைக்காகச் செய்யப்படும் அதீதச் செலவுகள், கடந்த டிசம்பர் மாதம் நடந்த தகுதிப் போட்டிகளின்போது நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் நேரத்தைக் குறைத்தது போன்றவற்றால் கோபமடைந்து இந்தப் பாடலை உருவாக்கியதாக அவர்கள் சொல்கிறார்கள்.
“நாம் நம்பும் விஷயத்துக்காக நாம் துணிந்து நிற்க வேண்டும்” என்கிறார் அந்தப் பாடலை உரு வாக்கிய குழுவைச் சேர்ந்த பைக்கர். “நாங்கள் உதைப்பது கால்பந்து விளையாட்டையல்ல, கால்பந்தை ஆளும் அதிகார அமைப்பைத்தான். ‘ஃபிஃபாவைக் கடாச வேண்டும்' என்பதுதான் பிரேசிலியர்களின் ஒருமித்த கருத்து. மைதானங்களுக்காக இவ்வளவு பணம் செலவுசெய்யப்பட்டிருப்பதை யாருமே விரும்ப வில்லை” என்கிறார் அவர்.
அந்தப் பாடலின் கூட்டுப் படைப்பாளியான ப்னெகோ அந்தப் பாடலில் போர்த்துக்கீசிய மொழியில் இப்படிப் பாடுகிறார்: “விளையாட்டு எங்களுடையது, கால்பந்து எங்களுடையது, எல்லோருக்கும் சொந்தமானது, மக்களின் உண்மையான உத்வேகம் அது. அதற்கு ஃபிஃபாவின் துணை தேவையில்லை.”
“ஃபிஃபாவைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் நினைப்பதுபோல்தான் நானும் நினைக்கிறேன். அந்த மக்களின் எண்ணங்களுக்குக் குரல்கொடுக்க விரும்பினேன். அந்தக் குரலாக நான் இருந்ததுகுறித்து எனக்கு மகிழ்ச்சியே” என்கிறார் ப்னெகோ. அவர் தன்னை ஒரு போராளி (கெரில்லா) கலைஞர் என்றே குறிப்பிடுகிறார். “பிரேசிலில் உள்ள மையநீரோட்டக் கலைஞர்களால் இதுபோன்ற பாடல்களை உருவாக்க முடியாது. அப்படிச் செய்தால் அவர்களுக்கான எல்லா வாய்ப்புகளும் இங்கே அடைக்கப்பட்டுவிடும். நான் அதற்கெல்லாம் பயந்தவனல்ல. பாப் ஸ்டாராகவோ அதைப் போன்ற ஒன்றாகவோ ஆக நான் ஒருபோதும் விரும்பியதில்லை. எனது கலை வாழ்க்கை முழுவதும் நான் நினைப்பதை வெளிப்படுத்துவதில்தான் வேர் கொண்டிருக்கிறது.”
- கார்டியன், தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago