செயலிகள் கொண்டுவரும் அடிமைத்தனத்தில் இருந்து மீட்சி எப்போது?

By செய்திப்பிரிவு

தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி பார்த்துக்கொண்டிருக்கும்போது இடையிடையே அதிகமான விளம்பரங்கள் வருவதைப் பார்க்க முடியும். அந்த விளம்பரங்கள் பெரும்பாலும் செல்பேசியில் பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலிகளுக்கான விளம்பரங்களாக இருக்கின்றன. தொடுதிரை செல்பேசிகள் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, அதில் புதுப்புதுச் செயலிகள் அறிமுகப்படுத்தப்படுவதை நாம் பார்க்கிறோம். இந்தச் செயலிகள் செல்பேசியோடு நின்றுவிடுவதில்லை. மாறாக, அது நம் அறிவுத் தளத்திலும் உணர்வுத் தளத்திலும் பல்வேறு விதமான நேர்மறை, எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்திவிட்டுச் செல்கின்றன.

செல்பேசியில் பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலிகளைப் புதிது புதிதாக உருவாக்குவதற்குப் பிரத்தியேக நிறுவனங்கள் வந்துவிட்டன. நுகர்வோரின் தேவைக்கேற்பப் பல்வேறு வணிக நிறுவனங்களின் விற்பனையைத் துரிதப்படுத்துவதற்காகவும், நுணுக்கமான வகையில் நுகர்வோரின் தேவைகளைக் கண்டறிவதற்காகவும், அவற்றைப் பல்வேறு வகைகளில் நிறைவேற்றுவதற்காகவும் செல்பேசிச் செயலிகள் உருவாக்கப்படுகின்றன. இவை வணிக நிறுவனங்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் நுகர்வோருக்கும் ஒரே நேரத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டுவருகின்றன.

ஏனென்றால், செல்பேசிச் செயலிகளின் வழியாக நுகர்வோரைச் சென்றடைவது மிகவும் எளிதாக இருக்கிறது. இந்தச் செயலிகள் ஆண்ட்ராய்டு செல்பேசிகளுக்கும் ஆப்பிள் செல்பேசிகளுக்கும் என்று தனித்தனியாக உருவாக்கப்படுகின்றன. இந்த இரண்டு வகை செல்பேசிகளுக்கும் பொதுவாக உள்ள செயலிகளும் உண்டு. தனித்தனியாக உள்ள செயலிகளும் உண்டு. பணம் கொடுத்து வாங்க வேண்டிய செயலிகள் பல உண்டு. இவற்றுக்கு மத்தியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலிகளின் எண்ணிக்கை எண்ண முடியாத அளவுக்குக் கொட்டிக் கிடக்கின்றன.

செல்பேசிச் செயலிகளை இரண்டு பெரும் வகைகளாகப் பிரித்துவிடலாம். ஒன்று, பொருளை விற்பதற்கான செயலிகள். இரண்டு, மனிதர்களுக்குத் தேவைப்படும் பல்வேறு சேவைகளை வழங்கும் செயலிகள். இதில் வணிகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, பயணம், கல்வி, ராசிபலன் ஆன்மிகம், முகூர்த்தக் குறிப்புகள், ஆன்லைன் சூதாட்டம் என்று மனிதர்களுக்கு உதவும் எல்லா விஷயங்களுக்கும் செயலிகள் வந்துவிட்டன. இது நவீன டிஜிட்டல் யுகம் கொண்டுவந்த மாபெரும் புரட்சி. இந்தச் செயலிகள் மனிதர்களுக்கு எண்ணற்ற வசதிகளைக் கொண்டுவந்திருக்கின்றன.

அதாவது, ஒரு மனிதர் தான் இருக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டு தான் நினைத்ததை எல்லாம் சாதித்துவிடும் அளவுக்குப் பல வசதிகளை இந்தச் செயலிகள் செய்கின்றன. வீட்டில் அமர்ந்தவாறு எனக்குத் தேவையான பொருளைக் கேட்டு வாங்கலாம். எனக்குப் பிடித்தமான உணவை வீட்டுக்கே வரவழைத்துச் சாப்பிடலாம். நான் எங்கு பயணிக்க வேண்டும் என்பதை நான் இருக்கும் இடத்திலேயே தீர்மானிக்க முடியும். வங்கிக் கணக்கை செல்பேசி வழியாகவே நிர்வகிக்க முடியும். ஆனால், இந்த வசதிகள் தனிமனிதருக்கு வேண்டுமானால் பெரும் உதவியாக இருக்கலாம். இதனால், ஒட்டுமொத்த சமூகத்துக்கு என்ன பயன்? ஏழைகளும் இதுபோன்ற வசதிகளைப் பயன்படுத்த முடியுமா? இந்த வசதிகளைப் பயன்படுத்துவதில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

இந்தப் பின்னணியில், இந்த செல்பேசிச் செயலிகள் மக்களின் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூகச் சூழலிலும் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்திவிட்டுச் செல்கின்றன என்பதை ஆழமாகச் சிந்திப்பது நல்லது. ஒரு செயலியை நாம் இலவசமாகவோ பணம் கொடுத்தோ வாங்குகிறோம் என்றால், அந்தச் செயலியின் பயன்பாடுகளை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, அந்தச் செயலியை உருவாக்கியவர்கள் நம்மைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஒரு செயலியை என்னுடைய செல்பேசியில் பதிவிறக்கம் செய்தவுடனேயே அது கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் நாம் முன்யோசனையின்றிப் பதில் சொல்லவும், நம்முடைய தனிப்பட்ட தகவல்கள், தரவுகளைத் தருவதற்கும் தயாராகிவிடுகிறோம். பின்விளைவுகளை மனதில் கொள்ளாமல் நம்முடைய தனிப்பட்ட விஷயங்களை அதில் தருகிறோம். ஏறக்குறைய அந்தரங்கப் பகுதி என்று எதுவுமே இல்லாமல் எல்லாத் தகவல்களையும் பொதுவெளியில் வைத்துவிடுகிறோம். இதன் மூலம் பெரிய வணிக நிறுவனங்களுக்கு நம்மைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் தந்துவிடுகிறோம்.

அந்தத் தகவல்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகத் திரட்டி வைத்துக்கொண்டு, நம்மை வணிக நிறுவனங்களுக்கு இந்தச் செயலிகள் மூலமாக விற்றுவிடுகிறார்கள். எனவே, நமது தேவைகள், விருப்பங்கள் என்னென்ன என்று நமக்குத் தெரிவதைவிட வணிக நிறுவனங்களுக்கு அதிகமாகத் தெரிகின்றன. இந்தச் செயலிகளின் வழியாக ஒரு வகையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நாம் விற்கப்படுகிறோம் என்பதை மறந்துவிட்டுச் செயல்படுகிறோம்.

இந்த செல்பேசிச் செயலிகளை அதிகமாகப் பயன்படுத்துகிறவர்கள் பெரும்பாலும் பதின்பருவத்தில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான். இவர்கள்தான் இந்தச் செயலிகளுக்கு அதிகம் அடிமையாகிக் கிடக்கிறார்கள் என்று கூடச் சொல்லலாம். இது ஒரு வகையான நவீன டிஜிட்டல் அடிமைத்தனம். இந்த அடிமைத்தனம் என்பது சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சூழலில் மீட்டெடுக்க முடியாத பல்வேறு விளைவுகளைக் கொண்டுவருகின்றன.

சமூகத் தளத்தில் குழுவாகச் சந்திக்கும், சிந்திக்கும், உரையாடும், சேர்ந்து செயல்படும் கூட்டு மனப்பான்மை பெருமளவு குறைந்துகொண்டே வருகிறது என்பதை நாம் உணர்வதில்லை. குழுவாக இருக்கும் சமயத்தில்கூட நம் கவனமெல்லாம் நம் செல்பேசி மீதுதான் இருக்கிறது. நமக்குப் பிடித்தமான செயலிகளின் வழியாக நாம் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம். இதனால் நமக்கு அருகில் உள்ளவர் யார் என்பதையும், அவரின் தேவை என்ன என்பதும்கூட நமக்குப் பெரிதாகத் தென்படுவதில்லை.

எனவே, நாம் கூட்டத்தில் இருந்தாலும் தனித் தீவுபோலத்தான் இருக்கக் கற்றுக்கொண்டிருக்கிறோம். செயலிகளைப் பயன்படுத்துவதில் தன்னந்தனியாக இருப்பதால், வாழ்வில் சிக்கல்கள் வரும்போதும் தனியாகவே முடிவெடுத்துக்கொள்கிறோம். எது சரி என்றோ, எது தவறு என்றோ நமக்குக் கவலை இல்லை. நாம்தான் அறிவாளி என்னும் தப்புக்கணக்கைப் போட்டுக்கொண்டுவிடுகிறோம். இதன் அடிப்படையில்தான் இளைஞர்கள் பலர் தங்கள் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு அலைகிறார்கள்.

செயலிகளை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் பொருளாதாரத் தளத்தில் பணம், நேரம் இரண்டையும் அளவுக்கு அதிகமாகச் செலவிடுகிறார்கள். பணம் போனால் சம்பாதித்துக்கொள்ளலாம். ஆனால், நேரம் போனால் திரும்பி வராது. வணிக உலகில் இலவசம், தள்ளுபடி என்னும் போர்வையில் நமக்குத் தேவையில்லாத பொருட்களையும் அவசியமில்லாத பண்டங்களையும் வாங்கிக் குவிக்கிறோம். ஒரு நுகர்வு வெறிக்குள் தள்ளப்படுகிறோம். வீட்டில் தனியாக இருக்கும்போது, வாங்கிய பொருட்களையெல்லாம் பிரித்துப் பார்த்தோம் என்றால், அவற்றுள் தேவையற்ற பொருட்கள் அதிகமாக இருப்பதை நாம் கண்டுகொள்ளலாம். சென்னையில் பெருமழை வெள்ளம் வந்தபோது வீடுகளுக்குள் பயன்படுத்தாத, தேவையற்ற பொருட்கள் என்னவெல்லாம் இருந்தன என்பதை எல்லோரும் கண்டுகொண்டோம். அவையெல்லாம்தான் தண்ணீரில் மிதந்தன.

பண்பாட்டுத் தளத்தில் செல்பேசிச் செயலிகள் வழியாக வந்திறங்கும் பல்வேறு செய்திகளை இளைஞர்கள் வயதுக்கு மீறிய வகையில் நுகர்ந்துகொண்டிருக்கிறார்கள். இதில், மேலைநாட்டுப் பண்பாட்டுக் கூறுகள், பாலியல் உறவு குறித்த குழப்பங்கள், உளவியல் சார்ந்த கற்பனைகள், குறுக்கு வழியை சுட்டிக்காட்டும் ஆன்லைன் சூதாட்டம், தடையின்றி எதையும் அனுமதிக்கும் கட்டற்ற சுதந்திரம், இவையெல்லாம் மனித வாழ்வைப் புரட்டிப்போட்டுள்ளன. இன்றைய இளைய தலைமுறையினர் எதிர்காலத்தில் என்ன மாதிரியான பிரச்சினைகளையெல்லாம் தாங்கள் சந்திக்க இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு, செல்பேசிச் செயலிகளுக்குள் புதைந்து கிடக்கிறார்கள்.

எனவே, மனித வாழ்க்கைக்குத் தேவையான வகையில், தேவையான அளவில், செல்பேசிச் செயலிகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில் தவறில்லை. அன்றாட வாழ்க்கைக்கு உகந்த வகையில், எந்தெந்த செல்பேசிச் செயலிகள் நமக்குத் தேவையோ, எவை நமக்கு நன்மை கொண்டுவருகின்றனவோ, எவை நம் வாழ்வை வளப்படுத்துகின்றனவோ அவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அறிவுத் தளத்திலும், உணர்வுத் தளத்திலும் நம்மைப் பண்படுத்துகின்றன என்றால், செல்பேசிச் செயலிகளின் சேவைகள் ஒருவகையில் வரப்பிரசாதமாக மாறும். இல்லையென்றால், அவை நாம் அறியாத வகையில் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் நவீன நஞ்சாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.

- அ. இருதயராஜ், பேராசிரியர்.

தொடர்புக்கு: iruraj2020@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்