தமிழக அரசியலில் 2006-ல் தேர்தல் அறிக்கை மூலம்தான் ஆட்சியைப் பிடித்தது திமுக. ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, விவசாயக் கடன் தள்ளுபடி என்று ஆர்வத்தைத் தூண்டிய திட்டங்கள் அதில் இருந்தன. தொலைக்காட்சிப் பெட்டியெல்லாம் சாத்தியமே இல்லை என்று பலர் நினைத்தனர். நானும்தான். ஆனால், வெற்றி பெற்றதும் திமுக, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வெற்றிகரமாகக் கொடுத்தது.
கிலோ அரிசி இரண்டு ரூபாய் என 20 கிலோ அரிசி தருவோம் என்றும் அதே அறிக்கையில் சொன்னார்கள். செய்தார்கள். விவசாயக் கடன்களை ரத்து செய்வதாகச் சொன்னார்கள். செய்தார்கள்.
சூப்பர் ஹீரோ?
2016-க்கான தேர்தல் அறிக்கையிலும் திமுக இரண்டு பெரும் திட்டங்களை முன்வைத்திருக்கிறது. கொடுக்க இலவசப் பொருள் ஏதும் இல்லாத நிலை. பால் விலையை லிட்டருக்கு ரூ.7 வரை குறைப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். ரூ.200 முதல் ரூ.400 வரை மாதாமாதம் சேமிக்கலாம் என்று நடுத்தர வர்க்கம் உடனேயே, கணக்குப் போட்டிருக்கிறது. அடுத்து, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செய்யப்படும் மின்கட்டணக் கணக்கிடுதலை மாதாமாதம் செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர். அதனால், அனைவருக்கும் கணிசமான சேமிப்பு ஏற்படும் என்கிறது கணக்கு. 2006 போலவே 2016-லும் எங்கள் தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஹீரோ என்கிறார்கள் திமுக விசுவாசிகள்.
இந்தத் தேர்தல் அறிக்கையிலும் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கல்விக்கடன் முழுவதுமாக ரத்து, சிறு/குறு விவசாயிகளுக்கு விவசாயக் கடன் ரத்து என்று சொல்லியுள்ளனர். 16 லட்சம் மாணவர்களுக்கு டேப்லட் பிசி அல்லது மடிக்கணினி, 3ஜி/4ஜி இணையத்தின் இணைப்புடன் தரப்படும் என்றும் அறிவிப்பு வந்துள்ளது.
வழியும் வாக்குறுதிகள்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைகிடைப்பது 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக அதிகரிக்கப்படும். அதுவும் விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு, நெசவாளர்களுக்கு மானியம், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம், உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் திட்டங்கள் நிரம்பி வழிகின்றன.
பால் விலை குறைப்பு, மின்சாரக் கணக்கீட்டு முறை மாற்றம் இரண்டும் நடைமுறைக்கு வந்தால், ஆவினும் மின்வாரியமும் கடுமையான நஷ்டம் அடையும். இவை ஏற்கெனவே பெரும் கடன் சுமையில் உள்ளன. சுமார் 3.5 லட்சம் புதிய அரசுப் பணியாளர்களை வேலைக்குச் சேர்ப்பதாகவும் திமுக அறிக்கை சொல்கிறது. ஊதிய ஆணையம் அமைத்து, அரசு ஊழியர் ஊதியத்தை மறு பரிசீலனை செய்வதாகவும் சொல்லியுள்ளது. ஓய்வூதியத் திட்டத்தையும் பரிசீலனை செய்வார்களாம். இவற்றுக்கு ஆகும் செலவுகளை எப்படிச் சரிக்கட்டப் போகிறார்கள், அரசின் நிதி வரவை எப்படி அதிகரிப்பது என்பதற்கு ஒரு யோசனையும் இல்லை.
மதுவிலக்கும் இழப்பும்
இத்தனையையும் செயல்படுத்தும் அதே நேரத்தில், மதுவிலக்கையும் அமல்படுத்தப்போவதாக திமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது. கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி ஆண்டு வருமானத்தை இதன்மூலம் அரசு இழக்கும். மதுவிலக்கைக் குறிக்கோளாக வைத்திருப்பது தவறல்ல. ஆனால், அதற்கு இணையாக, செலவைக் குறைக்கும் திட்டங்களை முன்வைக்காமல், செலவுகளைக் கடுமையாக அதிகரிக்கும் பல திட்டங்களையே இந்த அறிக்கை முன்வைக்கிறது.
2006 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாநிலத்தின் மது வருவாய் பெரிதும் உதவியது. ஆனால், மது ஒழிப்பினால் ஏற்படும் ரூ.30,000 கோடிகள் வருவாய் இழப்புடன், புதிய வாக்குறுதிகளைச் செயல்படுத்த மேலும் சில 10,000 கோடிகளையும் செலவழிப்போம் என்று பேசும் ஒரு தேர்தல் அறிக்கையை எப்படிப் புரிந்துகொள்வது?
கனிமத்தில் வேலைகள்
அடுத்ததாக, தேர்தல் அறிக்கை முன்வைப்பது வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான சில திட்டங்களை. வேலையில்லா இளைஞர்கள் இரண்டு லட்சம் பேரைத் திரட்டி, ஆளுக்கு ரூ.50,000 முதலீடு செய்யச் சொல்லிக் கேட்பார்களாம். அத்துடன் அரசும் மேற்கொண்டு முதலீடு செய்யுமாம். அரசும் இந்த இளைஞர்களும் சேர்ந்து ஆற்றுமணல், கிரானைட் கற்கள், தாதுமணல், அரளைமண், கருங்கல் ஜல்லி ஆகியவற்றை அகழ்ந்தெடுத்து விற்பனை செய்வார்கள் என்று அறிக்கை சொல்கிறது. அதேபோல், ஒரு லட்சம் பட்டதாரிகளை ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்யவைத்து, அதற்குமேல் அரசும் ஒரு லட்ச ரூபாய் அவர்களுக்கு மானியமாகக் கொடுத்து, தொழில் தொடங்க ஊக்குவிக்கப் போவதாகச் சொல்கிறது. இவையெல்லாம் நடைமுறைப்படுத்தக் கூடியவையாகத் தெரியவில்லை.
நல்ல வேலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஏகப்பட்ட இளைஞர்கள் படித்துவிட்டு நல்ல வேலை தேடி அலைகிறார்கள். ஆனால், இந்த வேலைகளை இந்த மாதிரி ரூ. 50,000, ரூ.1 லட்சம் முதலீட்டில் திறப்பது சாத்தியம் இல்லை. உண்மையான தொழில் முனையும் ஆர்வமும் திறனும் கொண்டோரால்தான் தொழில் தொடங்கி, வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். இல்லாவிட்டால், முதலீடு செய்த பணம் நாசமாகிவிடும். ஓர் அரசு செய்ய வேண்டியது, தொழில்முனைவுக்கான சூழலை உருவாக்குவது மட்டுமே. மண், கிரானைட், ஜல்லி போன்ற வளங்களை எப்படிக் குறைவாகப் பயன்படுத்துவது, எப்படி ஆற்றுநீர் வளங்களைப் பாதுகாப்பது என்று விவாதங்கள் நடக்கும் காலம் இது. அவற்றை வணிகமாக்கலாம் என்று பெரும் இளைஞர் திரளை இந்தத் துறையில் ஈடுபடுத்துவது சரியானதாகத் தோன்றவில்லை.
வரவேற்பும் கவலையும்
நீர்வளம் பெருக்குவது குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்கள். இதுகுறித்து மிக நல்ல யோசனைகள் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல், அரசிடமிருந்து மக்கள் பெறக்கூடிய சேவைகளை உரிமையாக ஆக்கும் சட்டமும் முக்கியமானது. ஒற்றைச் சாளர முறையில் தொழில்முனைவோர்க்கு 100 நாட்களுக்குள் அனுமதி, கட்டடம் கட்ட 60 நாட்களுக்குள் அனுமதி போன்றவையும் வரவேற்கக்கூடியவை.
ஆனாலும், வரவு-செலவுக் கணக்கு பற்றிய சிந்தனை இல்லாது பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவோ என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது.
கட்டுரையாளர் பதிப்பாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: badri@nhm.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 mins ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago