தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- பாமகவின் தனி அணி முயற்சிகள்

By ஆர்.முத்துக்குமார்

தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடர்த்தியான வாக்கு வங்கி கொண்ட கட்சி பாமக. அந்த வாக்குவங்கியைச் சேதப்படுத்தும் காரியத்தை தேமுதிக செய்தது. போதாக் குறைக்கு, 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் தேமுதிக சேரக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், திடீரென திமுக எதிர்ப்பைக் கைவிட்டார் டாக்டர் ராமதாஸ்.

தனது இல்லத் திருமண விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்க திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்குச் சென்றார். அன்றைய தினமே தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். 2011 சட்டமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஒரு தொகுதி வேறு சில காரணங்களுக்காகத் திரும்பப் பெறப்பட்டது. அதிமுக அணி பலமாக அமைந்துவிட்டதாலும், ஸ்பெக்ட்ரம், ஈழப் பிரச்சினை போன்றவற்றாலும் திமுக அணி படுதோல்வி அடைந்தது. பாமகவுக்கு வெறும் 3 தொகுதிகளே கிடைத்தன.

ராஜீவ் அனுதாப அலையிலேயே 4 தொகுதிகளை வென்ற பாமகவுக்கு இந்தத் தோல்வி அதிர்ச்சியைக் கொடுத்தது. வட மாவட்டங்களில் தேமுதிகவின் வாக்குவங்கி உயர்வும் பாமகவை உரத்த சிந்தனையில் ஆழ்த்தியது. இனியும் பெரிய கட்சிகளுடன் அணி அமைப்பதில் லாபமில்லை, சொந்த வாக்குவங்கியை ஒருங்கிணைத்துப் பலப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது பாமக.

அப்போது தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடந்த காதல் திருமணங்கள் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டன. அந்த விவகாரத்தில் வன்னியர்களுக்கு ஆதரவாக பாமக செயல்பட்டது. உச்சகட்டமாக, தருமபுரி மாவட்டத்தில் நடந்த இளவரசன் - திவ்யா காதல் திருமணம் அந்தப் பகுதியில் மிகப்பெரிய சாதிய வன்முறைக்கு வித்திட்டது. இளவரசனின் மர்ம மரணம், தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் எரிப்பு ஆகியன வட மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின. அதன்மூலம் வன்னியர்கள் மத்தியில் பாமக மீண்டும் செல்வாக்கு பெறுவதாக ஊடகங்கள் எழுதின. போதாக் குறைக்கு, தலித் எதிர்ப்பு இயக்கங்கள் பலவும் பாமகவுடன் கரம்கோத்தன. விளைவு, பாமக தலைமையில் சமூக ஜனநாயகக் கூட்டணி என்ற அணி உருவானது. கூடவே, திராவிட எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் பாமக முன்னெடுத்தது.

“திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்தது. ஆகவே, எதிர்காலத்தில் அவர்களுடன் தேர்தல் கூட்டணி அமைக்க மாட்டோம்” என்றது பாமக. பின்னர், “தேசியக் கட்சிகளுடனும் கூட்டணியில்லை, பாமக தலைமையில் தனி அணி அமைக்கப்படும்” என்றார் ராமதாஸ். 2014 மக்களவைத் தேர்தலில் பாமக அணியின் சார்பில் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துப் பிரச்சாரத்தையும் தொடங்கினார்.

1991 மற்றும் 1996 தேர்தல்களில் கூட்டணிக்குத் தலைமை யேற்ற அனுபவம் பாமகவுக்கு இருக்கிறது. ஆனால், இரண்டி லுமே தோல்விதான். மீண்டும் ஒருமுறை விஷப்பரீட்சை சரியாக இருக்குமா என்ற கேள்வி பாமகவுக்குள் எழுந்தது. அந்தக் கேள்வி விஜயகாந்த் இருந்த அணியில் பாமக சேர்வதில் வந்து முடிந்தது!

- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com (கோஷம் போடுவோம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்