அம்பேத்கரின் முதல் நூல்

By ஸாலின் ராஜாங்கம்

தனித்து ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கம்தான் சாதி

அம்பேத்கர் ஒரு அரசியல் செயல்பாட்டாளர் மட்டுமல்ல. அவர் காலத்து தலைவர்களில் அதிகம் எழுதியவர். அன்றைய இந்திய அரசியலில் இருந்த தலைவர்களில் அதிகம் படித்தவர். அம்பேத்கருக்கு நவீன ஆய்வு முறையில் புலமை அதிகம். எதை எழுதினாலும் தேர்ந்த ஆய்வுப் பண்போடு இருக்கும். சாதி பற்றி மட்டுமல்ல, பல்வேறு துறைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய முதல் ஆய்வு நூலின் நூற்றாண்டும் இதுவே.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகவும் சமூகவியல், வரலாறு, தத்துவம், மானுடவியல், அரசியல் ஆகியவற்றைத் துணைப் பாடங்களாகவும் பயின்றார் அம்பேத்கர். மானுடவியல் பாடத்தின் ஓராண்டு முடிவில் 09.05.1916-ல் ஓர் ஆய்வுக் கட்டுரையை அளித்தார். அதுவே ‘இந்தியாவில் சாதிகள்’ எனும் நூல். அம்பேத்கர் எழுதிய முதல் நூல். இந்த ஆண்டு அதன் நூற்றாண்டு. அந்த நூல் அவரது பிற்காலச் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்வதற்கான வேர்.

சாதிகளை ஆயும் நூல்

சாதி ஒழிப்பு என்ற திட்டத்தை நவீன அரசியல் பின்னணியில் ஒரு கோட்பாடாக முன் வைத்தவர் அம்பேத்கர். ஒடுக்கப்பட்டோர் மட்டுமல்லாது சமூக மாற்றத்தை வலியுறுத்தும் பலரின் சிந்தனைகளை முக்கால் நூற்றாண்டாக நேரடியாகவும் மறை முகமாகவும் அந்தக் கோட்பாடு பாதித்திருக்கிறது. அதனாலேயே 1936-ல் வெளியான ‘சாதி ஒழிப்பு’ எனும் அவரது நூல் அதிகம் கவனிக்கப்படுகிறது. சாதியை ஒழித்தல் என்ற நேரடித் தன்மை காரணமாக இயல்பாகவே அந்த நூல் மீது ஈர்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. ஆனால், அதை ஒழிப்பது என்ற சிந்தனைக்குச் செல்லும் முன், சாதி என்றால் என்ன? அது எவ்வாறெல்லாம் செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டாக வேண்டும். அந்த வகையில் சாதியை அவர் எவ்வாறெல்லாம் புரிந்துகொண்டிருந்தார் என்பதை அவரது முதல் நூலில் அறியலாம். ‘சாதி ஒழிப்பு’ நூலைப் புரிந்துகொள்ள ‘இந்தியாவில் சாதிகள்’ நூலிருந்துதான் தொடங்க வேண்டும்.

இரண்டு நூல்களுக்கு இடையே 20 ஆண்டுகள் இடைவெளி. சாதி ஒழிப்பு என்பதை அவர் லட்சியமாகக் கொண்டார் எனில், சமூகத்தில் சாதி நிலவுகிற யதார்த்த நிலைமைகள் பற்றிய ஆவணமாக இந்தியாவில் சாதிகள் நூலை முன் வைத்தார் என்று கூறலாம்.

நவீனமும் தொன்மையும்

இந்தியச் சமூகம் பழமையான சாதிய விதிகளையும் நாகரிகமற்ற காலத்தின் நம்பிக்கைகளையும் விடாமல் பற்றியிருக்கிறது என்ற பார்வை அம்பேத்கரிடம் இருந்தது. அதனாலேயே சாதி இன்றைக்கும் கடைப்பிடிக்கப்படுகிறதென்று கருதினார். இந்தப் பழமைப் பண்புக்கு மாற்றாகவே நவீன சமூகத்தின் மதிப்பீடுகளான சமத்துவம், பகுத்தறிவு, சாதி ஒழிப்பு ,சுதந்திர மனிதன் போன்ற கருத்துகளை அவர் வரித்துக்கொண்டார். இதற்கு அவர் கற்றிருந்த நவீனக் கல்வி தந்த ஆய்வியல் சட்டகம் முக்கியக் காரணம். தொன்மைச் சமுதாயத்தையும் நவீன சமுதாயத்தையும் இரு பிரிவாக அவர் அணுகுகிறார். சாதி பற்றிய அவரின் முக்கியமான பிற்காலப் பார்வைகளுக்கான முக்கியத் தொடக்கம் இந்த நூலில் உள்ளது.

அவர் சாதியமைப்பின் முக்கியப் பகுதியாகக் கூறுவது, ஒரே குழு அல்லது ஒரே சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளும் அகமண வழக்கத்தைத்தான். இந்தக் கருத்துகளின் பொருத்தத்தை சாதி ஆணவக் கொலைகளில் நாம் பார்க்கலாம். அகமண முறை என்பது அம்பேத்கரின் கருத்தல்ல. கெட்கர் என்கிற ஆராய்ச்சியாளர் சுட்டியதை அம்பேத்கர் மேலும் வளர்க்கிறார். அகமண முறை என்பது சமூக வளர்ச்சிப் போக்கில் எவ்வாறு உருவாகியிருக்க முடியும் என்று தேடுகிறார். அந்தத் தேடுதல் வழியாக சாதி பற்றிய அடுத்தடுத்த முடிச்சுகளுக்கும் அவர் வந்து சேர்கிறார். குல ஒழுங்குகளிலிருந்து பிறந்த சாதிக்கான இயல்புகள் பிற்கால மத - சாத்திர நூல்களில் தஞ்சம் பெறுவதை விளக்குகிறார். மேலும், ஒரு பெண்ணைக் குழுவுக்குள்ளேயே அடக்கிவைப்பதன் மூலம் அகமண வழக்கம் காப்பாற்றப்படுவதையும் விளக்குகிறார். அகமண முறையால் சாதி உருவானது மட்டுமல்ல. சாதியைத் தொடர்ந்து தக்கவைக்கவும் அது உதவுகிறது என்று கூறியது அம்பேத்கரின் கூடுதல் பங்களிப்பு.

கதவடைப்பு

தனித்து ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கம்தான் சாதி என்றார் அம்பேத்கர். அவ்வாறான முதல் வர்க்கமாக பிராமணர்களைச் சுட்டுகிறார். வர்க்கம் என்பது மாறக் கூடியது. ஆனால், இந்த வர்க்கங்கள் மாறா தன்மையடைந்த நிலையில் சாதிகளாயின. இந்த நிலைமையைப் பாதுகாப்பதற்காக புரோகித வர்க்கம் தன்னைத்தானே கதவடைப்பு செய்துகொள்கிறது. இந்த நிலையில் சிறிதும் பெரிதுமாகச் சிதறிப் போயிருந்த பிற வர்க்கங்களின் உட்பிரிவினர், வர்க்க அமைப்பின் திறந்த வழித் தன்மையை இழந்து, தம்மைத் தாமே அடைத்துக்கொண்டு தனித்தனி சாதிகளாயினர் என்று இந்த நூலில் அம்பேத்கர் விவாதிக்கிறார். அதன்படி சிலர் தாங்களாகவும் ஏற்கெனவே கதவடைப்பு செய்த சிலரைப் பார்த்தும் சாதிகளாக மாறினர் என்கிறார். தம்முடைய பிற்கால எழுத்துகளில் சாதியமைப்பில் பிராமணர்களுக்கான பாத்திரத்தை விரிவாக ஆய்வுசெய்தார். கதவடைப்பு பிராமணர்களிடமிருந்து ஆரம்பித்தாலும் சாதியமைப்பு உருவாக்கம் அவர்களின் பங்களிப்பு மட்டும்தான் என்று அம்பேத்கர் கருதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘போலச் செய்தல்’

‘போலச் செய்தல்’ என்கிற பண்பு மூலம் சாதிகள் உருப்பெற்றிருக்கக் கூடிய விதங்களை அம்பேத்கர் கூறுகிறார். பிறரால் பார்த்துப் பின்பற்றப்படும் குழுவினர் சமூகத்தில் மதிப்பு பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டுமென்று அவர் கருதுகிறார். அவ்வாறு பிராமணர்கள் இருந்ததால் அவர்களைப் பிற குழுவினர் பின்பற்றினார்கள். மனித மனதின் ஆழத்தில் பொதிந்துள்ள ‘போலச் செய்தல்’ என்கிற மனப்போக்கு கண்ணுக்குப் புலப்படாமல் செயல்படுகிற உளவியலை சாதிகள் ஏற்பு பெற்ற விதத்தைப் புரிந்துகொள்வதற்காக அவர் ஒப்பிடுகிறார். அதாவது, பிராமணர் அல்லாத குழுவினர் சாதியாக மாறியதைப் புரிந்துகொண்ட அவரின் பார்வை என்றே இந்த ‘போலச் செய்தல்’என்ற அணுகுமுறையைக் கூறலாம். மேலும், சாதியைத் தனித்துப் பார்க்காமல் சாதியமைப்பின் அங்கமாக அவர் பார்த்தார். சமூகத்தில் சாதியிலிருந்து பிற அம்சங்களையோ பிற அம்சங்களை விடுத்து சாதியைத் தனித்தோ பார்க்க முடியாது என்பது இதன் அடிப்படை.

இந்த நூலுக்கு இணையாக சாதியின் தோற்றம் பற்றி வேறெந்த நூலும் தெற்கிலிருந்து வெளியாகவில்லை என்பதே நூறாண்டுக்குப் பின்னரும் இந்த நூலை முக்கியமானதாக்குகிறது. இந்த நூல் இன்றைய பொருத்தப்பாட்டுக்கேற்ப விமர்சனபூர்வமாக ஆராயப்பட வேண்டும். உலகெங்கும் முக்கிய நூல்கள் மீது இத்தகைய விவாதங்கள் நடக்கின்றன.

சாதி மறுப்பும் சமூகநீதியும் பேசப்பட்டு வரும் தமிழகத்தில் ஆணவக் கொலைகள், சாதி அடையாளம் மீட்பு போன்றவை பரவலாகவும் வேகமாகவும் நடக்கின்றன. இந்நிலையில், மனிதர்களுக்குச் சாதி ஏன் தேவைப்படுகிறது? திரும்பத் திரும்ப மறு உறுதி செய்யப்படுவது ஏன் என்பன போன்ற யதார்த்தங்கள் சமூகப் பண்பாட்டு உளவியல் சார்ந்து ஆராயப்படவில்லை. அவற்றை அறிந்துகொள்ளாதபட்சத்தில் சாதிக் கலவரங்கள் நடக்கும்போது மட்டும் கொள்கை அளவில் சாதி கூடாது என்று கூறுவதால் அது எவ்வாறு ஒழியும்? இன்றைய சாதியம் செயல்படும் விதங்கள் பற்றிய யதார்த்தமான ஆய்வுகள் நிகழாத நிலையில், அம்பேத்கரின் ‘இந்தியாவில் சாதிகள்’ நூலின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது.

- ஸ்டாலின் ராஜாங்கம்,சனநாயகமற்ற சனநாயகம், தீண்டப்படாத நூல்கள் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

தொடர்புக்கு: stalinrajangam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்