ஆப்பிரிக்கப் பழங்குடிப் பாடல் ஒன்றில் ‘பாவோபப் மர வேர்களில் எங்கள் மூதாதையர்கள் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று ஒரு வரி இழையோடும். இது நம்பிக்கை சார்ந்த உணர்வெழுச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஓர் இனத்தின் உணர்வெழுச்சி என்பது அந்த இனத்தின் மொழி சார்ந்த கலைகளை மட்டுமல்ல; அந்த இனத்தின் கொண்டாட்டங்களையும் சேர்த்ததுதான். அந்த வகையில் தமிழர்களின் பெருவிழா பொங்கல்தான். ஆயினும், இன்று ஆற அமர யோசித்துப் பார்க்கிறபோது இருபதாண்டுகளுக்கு முன்பு வரை கொண்டாடப்பட்டது போல பொங்கல் விழா இப்போது கொண்டாடப்படுகிறதா என்கிற கேள்வி எழுகிறது. பொங்கல் விழா அதன் வசீகரத்தை இன்னமும் இழக்கவில்லைதான். அதன் அடையாளங்களுடன் தலைமுறைகளைத் தாண்டி நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், அதன் விழுமியங்களில் கொஞ்சம் வெல்லம் கம்மியானதுபோல் தெரிகிறது.
சிறு வயதுப் பொங்கல் நாட்கள் நினைவை விட்டு என்றும் நீங்காதவை. சித்தப்பாக்கள் தூக்க முடியாமல் தூக்கி வந்து கரும்புக் கட்டை முற்றத்து வாரியில் சாய்த்து வைப்பார்கள். திமுக அபிமானியான அப்பா வீட்டு மாடுகளின் கொம்புகளுக்குக் கறுப்பு சிவப்பு வண்ணம் பூசி வைத்திருப்பார். சன்னாநல்லூர் சந்தையில் வாங்கி வந்த பூவன் பழங்களும் மொந்தன் வாழைப்பழங்களும் வீட்டின் காமிரா அறையில் கயிறு கட்டப்பட்டு அதில் நீண்ட வரிசையில் தொங்கும். வயல் வரப்புகளில் வேர்விட்ட மஞ்சள் கொத்துகளின் வாசனை வீடு முழுக்க கமகமக்கும். பரங்கிக்காயும் பூசணிக்காயும் கூடத்தில் உருளும். பொங்கலுக்கு முதல் நாளிலிருந்தே விவசாயத் தொழிலாளர்கள் வீட்டுக்கு வந்து போவார்கள். ஒவ்வொருவருக்கும் வேட்டியும் துண்டும் வாழைப்பழமும் பரங்கிக் கீற்றும், கொஞ்சம் காசும் பித்தளைத் தாம்பாளத்தில் வைத்து அப்பாவும் சித்தப்பாக்களும் வழங்குவார்கள். வருஷம் முழுக்க வயலில் நீர் பாய்ச்சி, விதை விதைத்து, நாற்றுப் பறித்து, நடவு செய்து … பிறக்கப்போகிற தை மாதத்தில் அறுவடையும் செய்யப்போகும் அந்த உழைப்பாளிகளின் முகத்தில் பொங்கல் பண்டிகையின்போது மட்டும் எப்படி இவ்வளவு வசீகரம் வந்து உட்கார்ந்துகொள்கிறது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
மண், மனிதர்கள், மாடுகள் எனும் முக்கோண உறவில் மனிதர்களைத் திளைத்திருக்கச் செய்யும் இவ்விழாவை எந்தப் பண்பாட்டுப் படையெடுப்புகளாலும் சிதைக்கவே முடியாது என்பதற்கு அடையாளமாய்த் தமிழர்கள் மகிழ்ந்து குலாவி இருப்பார்கள். மாட்டுப் பொங்கல் அன்று பெரும்பாலான கிராமங்களில் மஞ்சு விரட்டு நடக்கும். கால்நடையைச் செல்வமாகக் கருதும் மக்கள் எல்லா கிராமங்களிலும் அப்போது இருந்தார்கள். மண்ணுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாட்டங்கள் களைகட்டும். சமூக ஒருங்கிணைப்புக்குப் பொங்கல் பண்டிகையைப் போன்றதொரு விழாவை எந்த மாநிலத்திலும் நாம் பார்த்துவிடவே முடியாது. ‘ஊர் கூடி தேர் இழுத்தல்’ என்பதை நிரூபிக்கத் தமிழர்களுக்குப் பொங்கல் பண்டிகைதான் கைகொடுக்கும். ஊரே திரண்டு மாடுகளைக் கோயில் வாசலிலோ, பொதுத் திடலிலோ கொண்டுவந்து நிற்க வைத்து, அவற்றுக்கு மஞ்சள் தண்ணீர் தெளித்து, சாம்பிராணி புகை காட்டி குதூகலங்கள் நிறைவேறுவதெல்லாம் ஊர் ஒற்றுமையின் தருணங்கள். சமூகத்தோடு சேர்ந்து வாழும் கலையை தமிழர்கள் பண்பாட்டின் அடிப்படையில் கட்டுமானம் செய்திருக்கும் அழகைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்கவே முடியாது. பல கிராமங்களில் மாட்டுப் பொங்கல் அன்று வீட்டு தெய்வங்களுக்கு அல்லது முன்னோருக்குப் படையலிடும் பழக்கம்கூட உண்டு. முன்னோர் படையலில் அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகள் எல்லாம் இலையில் வரிசை கட்டும். முக்கியமாக அசைவ உணவு கண்டிப்பாக ஆஜராகும்.
மூன்றாம் நாள் காணும் பொங்கல் அன்று கலை நிகழ்ச்சிகளால் ஊரே மகிழ்ச்சி தோரணம் கட்டிக்கொள்ளும். கட்டுச் சோறு கட்டிக்கொண்டு பெண்களும் குழந்தைகளும் ஆற்றங்கரைக்கோ கோயில்களுக்கோ செல்வார்கள். தாவணிப் பெண்களின் அணிவகுப்புகளைக் காண்பதற்காகவே இளைஞர்களுக்குப் புதிய பக்தி பிறந்திருக்கும். காணும் பொங்கலில் மிக முக்கியமான அம்சமாக, பெரியவர்களை மதிக்கும் மாண்பை இளம் தலைமுறைக்குப் புரிய வைக்கும் வகையில் ‘காலில் விழும்’ நிகழ்வு நடக்கும். இளம் வயதுள்ளவர்கள் வீடு வீடாகச் சென்று பெரியவர்களைக் கண்டு வணங்கி, அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுவார்கள். அப்படிக் காலில் விழுந்து வணங்க வருபவர்களுக்குக் கரும்புத் துண்டும் வாழைப்பழமும் கையில் தரப்படும்.
இன்று நம் பொங்கல் பண்டிகையில் சிறிது அவசரம் வந்து அமர்ந்துவிட்டதைப் போல தோன்றுகிறது. கூட்டுக் குடும்பங்களின் சிதைவு, பெரும் நெருக்கடியில் தவிக்கும் விவசாயம், நகர்மயம் போன்றவையெல்லாம் பொங்கலின் மெருகைச் சற்று பாதிக்கச் செய்திருப்பது உண்மைதான். பெருநகரமொன்றின் குடும்பத் தலைவர் ஒருவர் மிகுந்த கூச்சத்தோடு ஒற்றைக் கரும்பைத் தூக்கிக்கொண்டு நடந்து வருகிறார். அதை பார்த்த அவரது மகன் கேட்கிறான், “இம்மாம் பெரிய சைஸ் கரும்பு எதுக்குப்பா?” என்று. காஸ் அடுப்பில் குக்கரில் வைக்கப்படும் பொங்கலும் இனிக்கத்தான் செய்யும். ஆனால், அதில் கொண்டாட்டம், பண்பாடு, அடையாளம், மக்களுக்கிடையே ஒற்றுமையுணர்வு என்கிற அம்சங்களுக்கு இடமில்லாமல் போவதுதான் பிசிறு தட்ட வைக்கிறது. கிராமங்களில் இப்போதும் பொங்கல் பண்டிகை, அதன் அடையாளங்களுடன்தான் கொண்டாடப்படுகிறது. அதற்கு சாட்சிதான், சென்னையிலிருந்து கடந்த 4 நாட்களில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் ரயிலிலும் பேருந்துகளிலும் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர் என்கிற செய்தி.
கரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்திலும்கூட அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் குறைவான பார்வையாளர்களுடன் நடத்த அரசு அனுமதியளித்திருப்பது நம் பண்பாட்டு அடையாளங்கள் எவ்வளவு நெருக்கடியிலும் தலைமுறை தலைமுறையாகத் தொட்டுத் தொடரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
- மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago