தேசியத் தலைவராகிறார் தொல்.திருமாவளவன். தமிழ்நாட்டுக்கு வெளியிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை விரிவுபடுத்தத் தொடங்கியிருக்கிறார். இந்த ஆண்டின் இரண்டாவது நாளில், ஆந்திர பிரதேசத்தின் ஓங்கோல் மாவட்டத்தில் அம்பேத்கரின் சிலை திறப்பு விழாவில் அவர் கலந்துகொண்டுள்ளார். இந்நிகழ்வு தொடர்பில் பேசியிருக்கும் விசிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச்செல்வன் கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் கேரளத்தில் மூணாறு மாவட்டத்திலும் விசிக செயல்பட்டுவருவதாகவும் உள்ளாட்சித் தேர்தலில் பங்கெடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இடதுசாரி இயக்கத்துக்குத் தீவிர ஆதரவை அளித்துவந்த தலித் சமூகத்தவர்கள், அதற்கு மாற்றாகத் தற்போது விசிகவைப் பார்க்கிறார்கள் என்கிறார் சிந்தனைச்செல்வன். இடதுசாரி அமைப்புகளும் காங்கிரஸ் கட்சியும் தலித் சமூகத்தினரின் உள்ளக்கிடக்கைகளை எடுத்துரைப்பதில் தவறிவிட்டன என்பது அவர் பார்வையாக உள்ளது. தென்மாநிலங்களில் தலித்துகளுக்கான தனிக்கட்சிக்குத் தேவை எழுந்துள்ளது என்பதும் விசிக அக்குரலைப் பிரதிபலிக்கும் என்பதும் அவரது கருத்து. தமிழ்நாட்டில் அனைவருக்கும் பொதுவான கட்சியாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பும் விசிக, தமிழ்நாட்டுக்கு வெளியே தன்னை தலித் கட்சியாகவே முன்னிறுத்துகிறது என்பது முரணாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில், இருபது ஆண்டுகளுக்கு முன்பு திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் குறைகூறி, தமது மாத இதழில் தொடர் கட்டுரை வெளியிட்டுவந்த விசிக, கடந்த மக்களவைத் தேர்தல் முடிவு வந்த மறுநாளே கி.வீரமணியை அவரது இல்லத்தில் சந்தித்து, ‘இது உங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி’ என்று சொல்லும் அளவுக்கு முழுச் சமாதானமாகிவிட்டது. இப்போது, இடதுசாரி இயக்கங்கள் ஆற்றிய பணிகளில் திருப்தியில்லை என்று குற்றம்சாட்டத் தொடங்கியிருக்கிறது.
தோழமை இருள்
பெரியார் திடலில் மு.க.ஸ்டாலினுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருதளித்த மேடையிலேயே, அவர் காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணியில் சேர்ந்துவிடக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார் திருமாவளவன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ சந்திரசேகர் ராவை நேரடியாகச் சந்தித்து, எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு பாஜகவை எதிர்ப்போம் என்று மணிக்கணக்கில் உரையாடித் திரும்பியிருக்கிறார்கள். ஆனால், மேடையில் இடதுசாரிகளுடன் கைகளை உயர்த்திக்கொண்டே அவர்களது வாக்கு வங்கியைக் கைப்பற்றுவதற்கும் விசிக விரும்புவது தெளிவாகவே தெரிகிறது. அதே நேரத்தில், இடதுசாரிகள் மீது விசிக வைக்கும் குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு உண்மையானவை?
அம்பேத்கரியர்களுக்கும் மார்க்ஸியர்களுக்கும் இடையிலான இந்த அரசியல் விவாதம் முக்கியத்துவம் கொண்டது. மார்க்ஸியர்களும் அதைக் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மார்க்ஸியக் கோட்பாட்டாளர் ந.முத்துமோகன் இருவரும் இணைந்தெழுதி, அண்மையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ‘மார்க்ஸ்-அம்பேத்கர்: தொடரும் உரையாடல்கள்’ என்ற நூல் அவ்வகையில் குறிப்பிடத்தக்க ஒன்று. (என்சிபிஎச் வெளியீடு).
வர்க்கமும் சாதியும்
இந்தியாவில் சமநிலைச் சமுதாயம் ஒன்றைக் காண்பதற்கான மார்க்ஸியர்களின் தொலைநோக்கு இலக்கு, சாதிக்கும் வர்க்கத்துக்கும் உள்ள தொடர்பைத் தவிர்த்துவிட்டுச் சாத்தியமில்லை. வர்க்கப் போராட்டம் என்பது சாதிய வெறுப்பையும் எதிர்த்துப் போராடுவதுதான். சாதியத்துக்கு எதிரான போராட்டம் என்பது அம்பேத்கரின் ஆய்வுகளையும் அவற்றின் முடிவுகளையும் தவிர்த்துவிட்டு முழுமைபெறாது. அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட முற்போக்குச் சிந்தனையாளர்களே இந்திய மார்க்ஸியர்களின் வழிகாட்டிகள்.
இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்தியாவில் வர்க்கப் போராட்டம் என்பதே சாதியத்துக்கு எதிரான போராட்டத்திலிருந்துதான் தொடங்குகிறது. கருத்தியல் நிலையில் மார்க்ஸியர்கள் வந்துசேர்ந்திருக்கும் இந்த முடிவு, செயல்பாட்டுத் தளத்திலும் வெளிப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை, நடந்திருந்தாலும் அதில் தலித் மக்களுக்குத் திருப்தியில்லை என்று குறைபட்டுக்கொள்கிறது விசிக. தலித்துகள் அரசியலதிகாரம் பெறுவது மட்டுமே தீர்வாகிவிடுமா, சாதிகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வில் நிகழும் சில மாற்றங்கள் சமநிலைச் சமுதாயத்தை நோக்கி இட்டுச்செல்ல உதவுமா என்பது போன்ற கேள்விகளும் இங்கு இயல்பாகவே எழுகின்றன.
அம்பேத்கரின் இறுதிக் காலத்தில் அவருடைய முக்கிய விவாதங்கள் பலவும் மார்க்ஸியத்துடன்தான் நிகழ்த்தப்பட்டன என்பதைத் தமது நூலில் சுட்டிக்காட்டும் ராஜாவும் முத்துமோகனும் கம்யூனிஸத்துக்கும் சாதி அடையாள அரசியலுக்கும் இடையே அவ்வப்போது தோன்றும் முரண்பாடுகளையும் எதிர்ப்புகளையும் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளனர். சமய அடிப்படையிலான அடையாள அரசியலில் மட்டுமின்றி, சாதி அடிப்படையிலான அடையாள அரசியலிலும்கூட காலனியத்தின் பிரித்தாளும் கொள்கை இயங்கியதை நினைவுபடுத்துகின்றனர். எனவே, இது குறித்த தெளிவு இடதுசாரி இயக்கம், தலித் அமைப்புகள் இரண்டுக்குமே தேவை என்பதை வலியுறுத்துகின்றனர்.
வர்க்கத்தின் வரையறை
மார்க்ஸின் வர்க்கக் கோட்பாட்டில் ஒடுக்குதல்தான் முதன்மை பெறுகிறதேயொழிய அதைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்றான பொருளாதாரம் அல்ல. சுதந்திரமானவர்-அடிமை, நிலவுடைமையாளர்- பண்ணையடிமை என்று இந்த வர்க்க முரண்பாட்டை விரிவாகப் பொருள்கொள்ள வேண்டும். ‘சுரண்டலுக்கு எதிரான எந்தவொரு போராட்டமும் வர்க்கப் போராட்டம்தான்’ என்ற முன்னணி தலித் ஆய்வாளர் கெயில் ஓம்வெட் கருத்தை விவாதிக்கும் நூலாசிரியர்கள், அதைவிடவும் வர்க்கப் போராட்டம் குறித்த லெனினின் கருத்துகள் இந்தியச் சூழலுக்கு நெருக்கமாக இருப்பதை மேற்கோள்களின் வழியே எடுத்துக்காட்டுகின்றனர்.
ஓம்வெட் பயன்படுத்தும் ‘சமூகக் கட்டுப்பாடு’ என்ற வார்த்தைகளைக் காட்டிலும் லெனின் கூறும் ‘சமூக உறவு’, இந்தியாவில் இயங்கும் வர்க்கமான சாதியப் படிநிலையைப் புரிந்துகொள்ள உதவும் என்ற முடிவுக்கு வருகின்றனர். ‘சமூகவியலைத் தவிர்த்ததொரு அரசியல் இருக்க முடியாது’ என்பதுதான் மார்க்ஸின் உறுதியான கருத்தும். சாதியைக் குறித்த அம்பேத்கரின் ஆய்வுகளிலும் உழைப்பின் பகுப்பை நிராகரித்துவிடவில்லை. உழைப்பாளர்களுக்கு இடையிலான பகுப்பையும் அவர் சேர்த்துக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்.
‘சமயச் சார்பற்ற, முற்போக்கு மக்களாட்சி இயக்கங்களுடன் தலித் மக்கள் சேர்வதைத் தடுத்து, தலித் சாதியினரை ஒரு தனித்த, அரசியல்-சமூக இனத்தவராகத் திரட்ட எடுக்கப்படும் முயற்சிகள் தலித்துகளைப் பலவீனமாக்கும்; அவர்களுடைய போராட்டங்களையும் வலுவிழக்கச் செய்து, அவர்களுடைய நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கும்’ என்ற எச்சரிக்கையையும் இந்நூல் விடுக்கிறது.
வர்க்க-சாதி உறவுகளை இன்றைய இந்திய மார்க்ஸியர்கள் ஏற்றுக்கொள்ளவும், விவாதிக்கவும், அதன் அடிப்படையில் செயல்படவும் தயாராகவே இருக்கின்றனர். இந்த உரையாடல்கள் உடனடியாக முடிவுக்கு வந்துவிடாது என்பதும் டி.ராஜா- ந.முத்துமோகன் இணைந்தெழுதிய இந்நூலின் தலைப்பிலிருந்தே தெரிகிறது. ஆனால், இந்த நட்புமுரண் உரையாடலில் வாக்கு வங்கி அரசியலும் பின்னணியாக இயங்குமெனில், கிடைக்கும் முடிவு என்னவாக இருந்துவிட முடியும்?
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago