உ.பி.யில் வரிசை கட்டும் கட்சி மாறும் காட்சிகள்- பாஜகவின் ஆயுதத்தையே கையிலெடுக்கும் சமாஜ்வாதிக்குப் பலன் கிட்டுமா? 

By பாரதி ஆனந்த்

உத்தரப் பிரதேச தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெறும் கட்சித் தாவல் பாஜகவுக்கு கடைசி நிமிட ஷாக்காகவும், சமாஜ்வாதிக்கு ட்ரெய்லராகவும் இருக்கிறது என விமர்சிக்கின்றன அம்மாநில ஊடகங்கள்.

உத்தரப் பிரதேச மாநிலத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜனநாயகத் திருவிழா: சட்டப்பேரவை, நாடாளுமன்றம் என எந்தத் தேர்தலாக இருந்தாலும் உத்தரப் பிரதேச தேர்தல் கட்சிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. அதற்கு முதல் காரணம் உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருப்பதே. இந்தியாவிலேயே அதிகமான சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மாநிலம். மக்களவைத் தொகுதிகளும் 80 என்பதால் அதிலும் உ.பி.க்கே முதலிடம். அதனாலேயே, உ.பி.யில் அறுதிப் பெரும்பான்மை பெரும் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும். 2024ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜகவுக்கு இந்தத் தேர்தல் ஒரு முன்னோட்டம். இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிட்டால் அது அக்கட்சிக்கு மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி என்பதற்கான பயணத்தை 'கேக் வாக்' ஆக்கிவிடும். அப்படிப்பட்ட கேக் வாக் நோக்கி தான் பாஜக காய் நகர்த்துகிறது.

அகிலேஷ், மாயாவதி, பிரியங்கா: பாஜகவுக்குத் தேர்தல் களத்தில் சவால்விடும் தலைவர் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, காங்கிரஸின் பிரியங்கா.

பெண்களை நம்பும் பிரியங்கா: கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உ.பி.யில் அத்தனை பிரச்சினைகளிலும் தலையிட்டு, கேள்வி எழுப்பி, கைதாகி கவனம் ஈர்த்து வருகிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. முந்தைய தேர்தல்களில் சோனியாவும், ராகுலும் தலைமை தாங்க துணைக்குச் சென்றுவந்தவர். ஆனால், இன்று ஒட்டுமொத்த காங்கிரஸ் 'பிரியங்காவே துணை' என்று சொல்லித்தான் பிரச்சாரத்தையே செய்கின்ற அளவுக்குத் தனது இருப்பைப் பதிவு செய்துள்ளார். மக்கள் மனங்களிலும் இடம்பிடித்துள்ளார் என்றே அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர். அதனால், இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு இரட்டை இலக்கத்தில் சீட் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பாலான தேர்தல்களில் தோல்வியைத் தழுவிவரும் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும் மீண்டு வரவேண்டியது தேசியக் கட்சி என்ற பெருமையைத் தக்கவைக்கும் நடவடிக்கை. அதை நோக்கிக் காய் நகர்த்தும் பிரியங்கா காந்தி, உ.பி.,யில் ஆண்களை விடப் பெண் வாக்காளர்கள் அதிகம் என்பதால் பெண்களைக் குறிவைத்துச் செயல்படுகிறார். காங்கிரஸ் கட்சியில் 40 சதவீதம் பெண்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும். பட்டதாரி மாணவிகளுக்கு ஸ்கூட்டியும், பிளஸ் 2 மாணவிகளுக்கு ஸ்மார்ட் போனும் இலவசமாக வழங்கப்படும் என்றெல்லாம் அறிவித்துள்ளார்.

பாஜக பாதையில் சமாஜ்வாதி: தேர்தலுக்கு முன்னால் எதிர்க்கட்சியிலிருந்து எம்எல்ஏக்களை ஈர்ப்பது, கோவாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் சிறு கட்சிகளின் எம்எல்ஏக்களைத் தம் பக்கம் இழுப்பது எல்லாம் தேர்தல் அரசியல் களத்தில் பாஜகவின் வியூகமாகப் பார்க்கப்படுகிறது. இந்த முறை அதே ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளார் அகிலேஷ் யாதவ்.

நான் யோகி அமைச்சரவையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். ஆனால் தலித்துகள், விவசாயிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், வேலையில்லாதோர், சிறு வணிகர்கள் மீது பாஜகவின் அடுக்குமுறையால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறி நேற்று சமாஜ்வாதியில் ஐக்கியமானார் சுவாமி பிரசாத் மவுரியா. இன்று, தாரா சிங் சவுகான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அகிலேஷிடம் சரணடைந்துள்ளார். அவரும் அச்சு பிறழாமல் அதே காரணங்களைக் கூறியிருக்கிறார்.

இது வெறும் ராஜினாமா கடிதம் அல்ல. தேர்தலில் வாக்களிக்கக் காத்திருக்கும் மக்களுக்கு சமாஜ்வாதி சொல்லும் சேதி. பாஜகவால் தலித்துகள், விவசாயிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், வேலையில்லாதோர், சிறு வணிகர்கள் நசுக்கப்படுவார்கள். உஷார் என்று எச்சரிக்கும் அக்கட்சியின் சேதி. இவர்களைத் தவிர, பாஜக எம்.எல்.ஏ., ரோஷன் லால் வர்மா, பகவதி பிரசாத் சாகர், பிரஜேஷ் பிரஜபதி ஆகியோரும் பாஜகவிலிருந்து விலகி சமாஜ்வாதியில் இணைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் (ஓபிசி) அடையாள முகங்கள். இதன் மூலம் அகிலேஷ் கணிசமான வாக்குகளைக் கவரும் என்பதில் ஐயமில்லை.

பூமராங் போல் பாயும் அரசியல் வியூகம் பாஜகவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, கட்சி மாறுபவர்கள் அவசரகதியில் முடிவெடுக்கின்றனர். பதறிய காரியம் சிதறும் என்று சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து அமைச்சர்களைத் தன் பக்கம் இழுத்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கும் அகிலேஷ் நிச்சயம் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகளை ஒர்க் அவுட் செய்து பாஜகவை வீழ்த்தலாம் என்ற முழு நம்பிக்கையில் இருக்கிறார்.

ஆனால் அவரது கட்சிக்கு இருக்கும் சாதி அடையாளம் மட்டும்தான் அவருக்கான சவால் எனக் கூறுகின்றனர் உ.பி. அரசியல் கள நிபுணர்கள். முலாயம் சிங் யாதவ் காலத்திலிருந்தே சமாஜ்வாதியை யாதவர்களின் கட்சி என்றே விமர்சிக்கும் பாஜக இந்த முறையும் அதை நிச்சயம் கையிலெடுக்கும். ஏற்கெனவே பிரதமர் பேசும் கூட்டங்களில் எல்லாம் பாஜக குண்டர்கள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது என சமாஜ்வாதியைத் தாக்கி வருகிறார். இந்த அடையாளங்களைத் தாண்டி மக்களின் நம்பிக்கையைப் பெற அமைச்சர்களை இழுப்பதைத் தாண்டியும் அகிலேஷ் அடிமட்டத்திலிருந்து நம்பிக்கையை சம்பாதித்திருக்க வேண்டும். அதற்கு முதல் அடியாக, வேட்பாளர் தேர்வில் தலித்துகள், சிறுபான்மையினருக்கு, ஜாட்டுகள் என அனைத்துத் தரப்பினருக்கும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்பை வழங்க வியூகம் வகுத்துள்ளார் அகிலேஷ். பாஜகவுக்கு மாற்றாக சமாஜ்வாதியை மக்கள் தேர்வு செய்ய இந்த மாற்றம் மட்டுமே ஒரே வழி. ஆனால் அது இந்தத் தேர்தலிலேயே வெற்றியாக பிரதிபலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனென்றால், ஏபிபி சி வோட்டர், டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜகவுக்கு வெற்றி எனக் கணிக்கின்றன. ஆனால், பாஜகவிலிருந்து தொடர் விலகல்கள் நிச்சயமாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். கருத்துக் கணிப்புகள் பொய்யான தேர்தல்களை மேற்கோள் காட்டுகின்றனர்.

முதல்வர் பதவிக்குப் போட்டியில்லை என்ற அகிலேஷின் அறிவிப்பு அவர் யாரை முதல்வர் வேட்பாளராக அடையாளம் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அந்த அறிவிப்பும் வாக்குப்பதிவின் போக்கை நிச்சயமாக மாற்றும் எனக் கூறுகின்றனர்.

காங்கிரஸ் இந்துத்துவத்தைக் கையில் எடுத்துள்ள நிலையில், சமாஜ்வாதி சமூக நீதி என்ற பெயரில் பிரச்சாரத்தை முன்னெடுப்பது மிகப்பெரிய ஆயுதம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சாதி அரசியல் டூ சமூக நீதிப் பார்வை என்பதே சமாஜ்வாதிக்கு மிகப்பெரிய வளர்ச்சி என்று கணிக்கின்றனர்.

மேலும் சமாஜ்வாதிக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் களத்தில் இறங்குகின்றன. அகிலேஷுக்காகப் பிரச்சாரம் செய்யப்போகின்றன. பாஜகவின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடப்போவதாக சிவசேனா தெரிவித்துள்ளது. இவையெல்லாம் சமாஜ்வாதிக்கு பலம் சேர்க்கப்போவது உறுதி எனக் கணிக்கப்படுகிறது.

ஒதுங்கி நிற்கிறாரா மாயாவதி?

இந்தத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதில்லை என்று மாயாவதி அறிவித்துள்ளார். அதேபோல் காங்கிரஸுடனும், சமாஜ்வாதியுடனும் கூட்டணிக்கே வாய்ப்பு இல்லை என்பதே அவரின் இப்போதைய நிலைப்பாடாக இருக்கிறது. அனைத்து வாய்ப்புகளையும், வழிகளையும் எதிர்க்கட்சிகளுக்கு அடைத்துவிட்டு, முதல்வர் வேட்பாளராகவும் போட்டியில்லை என்று முடிவெடுத்துள்ளதால் இந்தத் தேர்தலில் மாயாவதி சற்று ஒதுங்கியே நிற்கிறாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. மாயாவதியின் இந்தப் போக்கு வாக்குகளைப் பிரிக்கும் சக்தியாக மட்டுமே இத்தேர்தலில் இருக்கப்போகிறது.

கள நிலவரம் இப்படியிருக்க உ.பி.யில் வரிசை கட்டும் கட்சி மாறும் காட்சிகள் டெல்லியில் எதிரொலித்துள்ளது. ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு. அகிலேஷின் பூமராங் வியூகத்தை உள்வாங்கிக் கொண்ட அமித் ஷா புதிய உத்திகளுக்குத் தயாராகிவிட்டார் எனக் கூறுகின்றனர் பாஜக பெரும்புள்ளிகள். அகிலேஷின் சைக்கிள் வேகத்தால் யோகி ஆதித்யநாத்தும் சற்றே திகைத்துத்தான் போயிருக்கிறாராம்!

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்