ஒற்றை வாக்குறுதி, சில வாக்குறுதிகள் என்று தொடங்கி இன்று முழுமையான தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கக்கூடியதாகத் தேர்தல் அறிக்கைகள் ஆகியுள்ளன. அதில் ‘நாம் தமிழர்’கட்சியின் ஆவணம் அடுத்த கட்டம் என்று சொல்லலாம். அவர்கள் தம்முடைய ஆவணத்தை ‘செயற்பாட்டு வரைவு’ என்கிறார்கள். இது வெறும் அறிக்கையல்லவாம். தாங்கள் ஆட்சியைப் பிடித்தால், அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக முன்வைக்கும் படிப்படியான செயல்பாட்டுத் திட்டம் என்கிறார்கள்.
அன்பான ‘சர்வாதிகாரம்’
இந்த ஆவணம் ஒருவகையில் முக்கியமானது. தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகள் என்று நாம் தமிழர் கட்சியினர் தெளிவாகச் சிலவற்றை முன்வைக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளை எப்படி அணுக வேண்டும் என்பதற்கான ஒரு வரைவை முன்வைத்து, அதன் தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினைக்கான தீர்வுகளையும் முன்வைக்கிறார்கள்.
ஆனால், இந்த ஆவணம் அத்துடன் நின்றுவிடுவதில்லை. தமிழகத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. தமிழரின் கொடி, தேசியகீதம், அரசு முத்திரை எனச் சிலவற்றையும் இது அறிமுகம் செய்கிறது. தங்கள் சிந்தனைகள் உருவாக்கக் காரணமான தமிழக, இந்திய, உலகத் தலைவர்கள் குறித்த அறிமுகம், அவர்களுடைய சிந்தனைத் துளிகள் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்துகிறது. திருவள்ளுவர், காமராஜ், சுபாஷ் சந்திர போஸ், பாரதிதாசன், பிரபாகரன், கார்ல் மார்க்ஸ் எனப் பலரும் இதில் அடக்கம்.
சிங்கப்பூரின் தலைவர் லீ குவான் யூ இவர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளார். அவரைப் பின்பற்றி, நாட்டு மக்களை அதிகம் அறிந்திராத சிறு குழந்தைகளாகவும், நாம் தமிழர் கட்சியினரைக் குழந்தைகளைச் சரியான திசையில் வழிநடத்தும் அன்பான சர்வாதிகாரம் கொண்ட பெற்றோர்களாகவும் இந்த ஆவணம் பார்க்கிறது. சிறு குழந்தைகள் வழிதவறிவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் அவர்கள் எதைச் சாப்பிட வேண்டும், எம்மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டும், எம்மாதிரியான வேலைகளைச் செய்ய வேண்டும், எவற்றையெல்லாம் விலக்க வேண்டும் என்று ஆவணம் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் கட்டளைகளையும் விதிக்கிறது.
உருவமும் உள்ளேயும்
ஆவணத்தைப் பற்றிக் குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும்.. மிக அழகாக வடிவமைக்கப்பட்டு, அழகான எழுத்துருக்கள், கண்ணைக் கவரும் வண்ணப் படங்களுடன் மிகத் தரமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
உருவம் மிகச் சிறந்ததாக இருந்தாலும், உள்ளடக்கத்தில் நிறையப் பிரச்சினைகள் உள்ளன. இவற்றை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். ஒன்று ‘அன்பான சர்வாதிகார’த்தால் விளைந்தது. மக்களின் சுதந்திரத்தில் அதீதமாகத் தலையிடுவது. இரண்டாவது, ஆழமாகச் சிந்திக்காததால் விளைந்தது. பிரச்சினைகளைத் தீர்க்கும் அவசரம் புரிகிறது. ஆனால், இவர்கள் முன்வைக்கும் தீர்வுகள், செயல்படுத்தக்கூடியவையா, நிதி ஆதாரம் எவ்வளவு வேண்டும் போன்றவை குறித்து சிறிதுகூட இவர்கள் யோசித்ததாகத் தெரியவில்லை, அல்லது யாரோ சொன்னதை அப்படியே நம்பி எழுதிவிட்டார்கள் என்று கருத இடமுள்ளது.
தடைகளின் பட்டியல்
‘அன்பான சர்வாதிகாரம்’ கொண்டு நாம் தமிழர் கட்சியினர், கையில் கிடைத்ததையெல்லாம் தடை செய்கிறார்கள். மறைநீர் அதிகம் தேவைப்படும் என்று இவர்கள் கருதும் முட்டை உற்பத்தி, கோழி வளர்ப்பு, கார் தயாரிப்பு, தோல் பதனிடுதல் ஆகியவற்றுக்குத் தடை, ரசாயன வேளாண்மைக்குத் தடை, ஜெர்சி கலப்பின மாடுகளுக்குத் தடை, சீமை மதுவுக்குத் தடை (பனங்கள், தென்னங்கள் குடிக்கலாம்), புதுத் தனியார் பள்ளிகளுக்குத் தடை, மரங்களை வெட்டத் தடை, அனல், அணு மின்உற்பத்திக்குத் தடை, பொது இடத்தில் விளம்பரம் செய்யத் தடை என்று நீள்கிறது இந்தத் தடைகளின் பட்டியல்.
மரண தண்டனையைப் பொதுவாக நீக்கிவிடுவார்களாம். ஆனால், ஊழல் செய்வோருக்கு, பாலியல் குற்றங்கள் செய்வோர் அல்லது சாதி, மதப் பெருமையை காப்பதாகச் சொல்லிக்கொண்டு கொலை செய்வோருக்கு மரண தண்டனை உண்டாம்.
மாறுமா தலையெழுத்து?
இலவசத் திட்டங்கள் அனைத்தும் நீக்கப்படும். ஆனால், விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசம். வீடுகளுக்கு மின்சாரம் யூனிட் ஒன்று 25 பைசாவுக்குத் தரப்படும். ஏன், மிகப்பெரும் வணிகத் தொழிற்சாலைகளுக்கே யூனிட் 4 ரூபாய்க்குத் தரப்படும். இதற்கான சாத்தியங்களே இல்லாத நிலையில், அதுவும் அனல், அணு மின்நிலையங்களைத் தடைசெய்துவிட்டு மரபுசாரா, புதுப்பிக்கும் வகை மின்ஆற்றலை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். எந்தப் பொறியாளர்களின் ஆலோசனையை வைத்து இப்படி இவர்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
நீர்நிலைகளின் முன்னேற்றம் குறித்து ஆழமாக யோசித்திருக்கிறார்கள். இது பாராட்டுக்குரியது. அதேபோல் பொதுச் சுகாதாரம் குறித்த சிந்தனைகளும். ஆனால், சற்றே அதீதமாக, 1,000 பேருக்கு ஒரு பல் மருத்துவர் வேண்டும் என்று சொல்வதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இவர்களுடைய சுகாதாரத் திட்டத்துக்கு ஆகும் செலவும் மிக அதிகமாக இருக்கும். கல்வி குறித்து இவர்களுடைய கருத்தாக்கங்களில் நிறையப் போதாமைகள் உள்ளன.
வேளாண்மை குறித்த இவர்களுடைய கருத்துகள் குழந்தைத்தனமாக உள்ளன. ஒட்டுமொத்தமாக ரசாயன வேளாண்மையைத் தடை செய்துவிட்டு, முழுமையாக இயற்கை வேளாண்மையை மட்டுமே வைத்துக்கொண்டு உணவில் தன்னிறைவை அடைந்துவிடலாம் என்ற கருத்தாக்கம் ஆச்சரியம் தருகிறது. கூடவே, பனைமரம் என்ற ஒன்று தமிழகத்தின் பொருளாதாரத் தலையெழுத்தையே மாற்றிவிடும் என்பதை மிகப்பெரிய கண்டுபிடிப்பாக முன்வைக்கிறார்கள்.
பணத்தைத் தாங்களே அச்சடிப்பதாக நினைத்துக்கொண்டு, எங்கும் எதிலும் அரசு எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யத் தயாராக உள்ளது என்கிறார்கள்.
ஆனால் கல்வி, சுகாதாரம், குடிநீர், கழிவு அகற்றுதல், உள்கட்டுமானம், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவை மிக முக்கியமானவை. இவை குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். இந்தத் துறைகளில் வெறும் வாக்குறுதிகள் போதாது, பெரும் விவாதம் தேவை என்பதையும் அதில் நாம் தமிழர் தரப்பு என்ற ஒன்று உள்ளது என்பதையும் முன்வைப்ப தாலேயே இந்த ஆவணம் முக்கியத்துவம் பெறுகிறது.
கட்டுரையாளர் பதிப்பாளர், எழுத்தாளர்.
- தொடர்புக்கு: badri@nhm.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
26 mins ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago