பணியிடங்களிலிருந்து காசநோய் ஒழிப்பைத் தொடங்கலாமே!

By பாரதி ஆனந்த்

"தொற்றுநோய்களைப் பொறுத்தவரையில் 50% பரவல் பணியிடங்களில்தான் நடக்கின்றன. எனவே காசநோய் பரவல் சங்கிலியை உடைக்க இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்"

உலக அளவில் காசநோயை, 2030-க்குள் ஒழித்துவிட வேண்டும் எனும் எல்லைக் கோட்டை நிர்ணயித்துள்ளது, உலக சுகாதார நிறுவனம். 2025-க்குள், இந்தியாவில் காசநோயை ஒழிப்பதுதான் தேசிய அளவிலான குறிக்கோள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ‘காசநோய் இல்லாத இந்தியா’ எனும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும் தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில், காசநோய் ஒழிப்பைப் பணியிடங்களிலிருந்து தொடங்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும், காசநோயாளிகளுக்குப் பணியிடங்களில் சமூகப் புறக்கணிப்பிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி என்பது குறித்தும் இக்கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.

ஏன் பணியிடத்தில் இருந்து தொடங்க வேண்டும்?

காசநோயால் தினமும் 198 நாடுகளில் 4,000 பேர் இறக்கின்றனர். அன்றாடம் 28,000 பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். உலகின் காசநோயாளிகளில் பாதிப் பேர் வங்கதேசம், சீனா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளில் இருக்கின்றனர். உலக காசநோயாளிகளில் 27% பேர் இந்தியர்கள்.
காசநோய் பாதிப்புக்கு ஏழை, பணக்காரர், ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், குடிசைப் பகுதி, மாட மாளிகை வசிப்பிடம் என எந்த பேதமும் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் காசநோய் வரக்கூடும். ஆனால், காசநோய்க்கும் பணியிடச் சூழலுக்கும், காசநோய்க்கும் ஊட்டச்சத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

காசநோய், காற்றின் வழியாகப் பரவக்கூடிய ‘மைக்கோபாக்டீரியம் டியூபர் குளோசிஸ்’ என்கிற பாக்டீரியாவால் உண்டாகிறது. இந்தியாவில் 40 % மக்களுக்குக் காசநோய்த் தொற்று இருக்கிறது. ஆனால், அது நோயாக மாறாத - உள்ளுறைந்த தொற்றாக - உடலில் மறைந்திருக்கிறது. இதை ‘லேட்டன்ட் டிபி’ (latent TB) என மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, இவர்களுக்கு முழுமையான காசநோய் ஏற்பட்டுவிடும்.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் கணிப்பின் படி, எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலைகள், சுரங்கத் தொழிற்சாலைகள், சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், சிலிக்கா தொழிற்சாலைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொழிற்சாலைகள் ஆகியவற்றில் வேலை செய்பவர்களுக்கு காசநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. சுகாதாரமற்ற வேலைவாய்ப்புச் சூழல், காற்று மாசு ஆகியன நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.

இந்தியாவில் உள்ள பீடித் தொழில்துறை, செங்கல் சூளைகள், கல் அரவைத் தொழிற்சாலைகள், ஜவுளி (சணல் மற்றும் பருத்தி), போக்குவரத்துத் துறை ஊழியர்களும் காசநோய் தாக்கத்திற்கு உள்ளாவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் இவற்றையும் உலக சுகாதார நிறுவனம் ஹை ரிஸ்க் தொழில் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தினக்கூலிகளாக இந்தத் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடும் இயல்பாகவே இருக்கும் சூழலில் நோய்க்கான வாய்ப்பும் அதிகமாகிறது.

காசநோய் ஒழிப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது, நோயை அதன் ஆரம்பக் காலத்திலேயே அறிந்து ஒழிப்பது. ஆகையால் காசநோய் ஏற்படும் அதிக அபாயம் உள்ள இந்தத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்காக மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்தலாம். அவர்களுக்கு பொது மருத்துவப் பரிசோதனைகள் செய்யலாம். அவர்களின் யாருக்கேனும் அறிகுறி தெரிந்தால் முறையான அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து சிகிச்சையைத் தொடங்கலாம்.

இதுகுறித்து பொது மருத்துவர் கு.கணேசன் கூறியதாவது:

காசநோயை அது பரவும் அபாயம் உள்ள பணியிடங்களைக் கண்டறிந்து அங்கிருந்தே ஒழிப்பு முயற்சியை மேற்கொள்வது நல்லதொரு நடவடிக்கையாக அமையும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கல்குவாரி, சுரங்கத் தொழிலாளர்கள் பலர் பணியிடத்திலேயே தங்குவது வழக்கம். காசநோய் பரிசோதனைக்குக் காலையில் எழுந்ததும் முதல் முறை வெளியேற்றப்படும் சளியைப் பரிசோதனை செய்வது முக்கியம். CBNAAT பரிசோதனை ஆரம்பநிலை காசநோயைக் கண்டுபிடிக்க உதவும்.நெஞ்சு எக்ஸ்-ரே பரிசோதனை அடுத்த முக்கியம். தொழிற்சாலைகளுக்கு நேரடியாகச் சென்று இவற்றை மேற்கொள்ள முடியும். இப்போதெல்லாம் நடமாடும் எக்ஸ்-ரே வாகனங்கள் நடைமுறையில் உள்ளன.

சிலிக்கோசிஸ் நோய்:

சிலிக்கான் டைஆக்ஸைடு தூசு காற்றில் கலந்து நம் சுவாசப் பைகளுக்குச் சென்று இந்த நோயை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, தங்கச் சுரங்கத் தொழிலாளிகளுக்கு இது ஏற்படுகிறது. தவிரவும், நிலக்கரிச் சுரங்கம், மைக்கா, சில்வர், துத்தநாகம், காரீயம், இரும்பு, செராமிக் போன்ற உலோகத் தொழிற்சாலைத் தொழிலாளர்களிடமும் காணப்படுகிறது. இந்த நோய் வந்தவர்களுக்கு நுரையீரல்கள் நிரந்தரமாக பாதிக்கப்படும். அதனால் கடுமையான இருமலும் மூச்சிளைப்பும் நாட்பட்டுத் தொல்லை தரும். இந்த நோய் கண்டவர்களுக்குக் காசநோயும் ஏற்படலாம்.

காசநோய் தாக்குதல் அதிகமாக இருக்கும் பணியிடங்கள் 1.பஞ்சு தூசு நிறைந்த இடங்களில் பணிபுரிபவர்கள், 2.சிமெண்ட் ஆலைத் தொழிலாளிகள், 3.சர்க்கரை ஆலைத் தொழிலாளிகள், 4. நிலக்கரிச் சுரங்கத்தொழிலாளிகள், 5.தங்கச் சுரங்கத் தொழிலாளிகள்., 6.ஆஸ்பெஸ்டாஸ், சிலிக்கான், கண்ணாடித் தொழிற்சாலைத் தொழிலாளிகள், 7.மணல் குவாரி, கல்குவாரி தொழிலாளிகள், 8. சிறைக் கைதிகள், 9.வறுமையில் உள்ளவர்கள், வீடற்றவர்கள், 10.காற்றோட்டம் இல்லாத குடியிருப்புகளில் வசிப்பவர்கள், 11. சாலையோரம் குடியிருப்பவர்கள், 12. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களில் வசிப்பவர்கள்,13. சத்துக்குறைவு உள்ளவர்கள்,14. நீரிழிவு, ஹெச்.ஐ.வி உள்ளவர்கள்,15. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்,16. புகைப் பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள்,17. நாட்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்கள்,18. நாட்பட்டு ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துபவர்கள்,19. புற்றுநோய் உள்ளவர்கள்,20. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் என மருத்துவர் கணேசன் நீண்ட பட்டியலிட்டார்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் பணியிடங்களில் இருந்தே காசநோய் ஒழிப்பை ஆரம்பிக்கலாம். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்ற குறளுக்கு இணங்க, பணியிடங்களில் காசநோய் ஒழிப்பைத் தொடங்க வேண்டும் Ending Workplace TB (EWTB) என்ற கருத்துருவை, 2020ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு தனது வருடாந்திரக் கூட்டத்தில் முன்வைத்தது.

தொற்றுநோய்களைப் பொறுத்தவரையில் 50% பரவல் பணியிடங்களில் தான் நடக்கின்றன. எனவே, காசநோய் பரவல் சங்கிலியை உடைக்க இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், பணியிடங்களிலேயே காசநோய் ஒழிப்பைத் தொடங்குவதால் 4 நன்மைகள் இருக்கின்றன.

* விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகப் பரவலைத் தடுக்கலாம்.
* பணியிடங்களிலேயே தொற்றைக் கண்டறிவதால் பணி வழங்குநரையும் சிகிச்சைக்கு உதவ வைப்பதால், நோயாளிக்குச் செலவு குறையும்.
* பணியிடத்திலேயே மருத்துவ சிகிச்சை வசதியை ஏற்படுத்தித் தர முடியும்.
* சமூகப் புறக்கணிப்புகளைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

காசநோயாளிகள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் சவால்கள்:

காசநோயைப் பணியிடங்களில் ஒழிப்பது எவ்வளவு அவசியமோ அதே அளவுக்குக் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயம் காசநோயாளிகள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதென்பது. காசநோய் பாதிக்கப்பட்டோர் அமைப்பு சார்ந்த, அமைப்பு சாரா, ஏன் கார்ப்பரேட் என எந்த மாதிரியான பணியிடச் சூழலில் இருந்தாலும் வேலையிழப்புக்கு வாய்ப்புள்ளது. ஆகையால், காசநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு வேலை உறுதியை நிர்வாகம் அளிக்க வேண்டும். அந்த நபர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து திரும்பும் வரை எல்லா வகையில் பணி வழங்குநர் உதவ வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாகவே இருக்கிறது. பணி நேரத்தை மாற்றிக் கொடுத்தல், ரெஸ்ட் பிரேக்ஸ் எனப்படும் ஓய்வுக்கான அனுமதி, மருத்துவப் பரிசோதனைகளுக்காக அலுவல் நேரத்திலும் கூட அனுமதி வழங்குதல், நோய் விடுமுறைகளில் சலுகை, சிகிச்சை முடிந்து திரும்பும் ஊழியரைப் புறக்கணிக்காமல் வேலைக்கு அமர்த்துவது ஆகியனவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்குப் பணியிடத்தில் மனரீதியான சமூக ரீதியான ஆதரவை நல்க வேண்டும் என அரசாங்கம் கூறுகிறது. சிகிச்சையின் போது சம்பளப் பிடித்தம், குறைப்பு இல்லாமல் ஊதியத்தை வழங்க வேண்டும். நீண்ட நாள் விடுப்பு எடுத்தாலும் கூட சம்பளத்தைப் பிடிக்காமல் தரலாம், தேவைப்படும் நேரத்தில் ஊட்டச்சத்தான உணவு, மருத்துவ சிகிச்சைக்கான போக்குவரத்தையும் பணியிடமே உறுதி செய்யலாம்.

பணியிடங்களில் புறக்கணிப்பு குறையும்போது நோயாளி சிகிச்சையை முழுமையாக முடிக்க இயலும். அவ்வாறு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை கொடுக்கப்படும்போது காசநோய் அடுத்தகட்டமான மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக மாறும் அபாயம் குறையும்.

காசநோய் வேலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். காசநோய் பாதிப்பு அபாயம் அதிகமாக இருக்கும் தொழிற்சாலைகள் தங்கள் பணியாளர்களுக்குப் பணியிடத்தில் காற்றோட்டமான, இட வசதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு காசநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு அவ்வப்போது மருத்துவ முகாம் நடத்தி ஸ்க்ரீனிங் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதிகமான ஊழியர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதால் தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை பாதிக்கும். அதேபோல் அடிக்கடி புதிதாகத் தொழிலாளர்களை மாற்றுவது அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்கும்.

காசநோய் கொண்டோரைப் பணியிடங்களிலேயே ஆரம்ப நிலையில் கண்டறிவதும், அவர்களின் குடும்பத்தாரையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவருவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

20,000 ஊழியர்களைக் கொண்ட ஒரு பணியிடம் ஒரு காசநோய் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான தேவை உள்ள தளம் என உலக சுகாதார அமைப்பும், சர்வதேச தொழிலாளர் அமைப்பும் கூறியுள்ளது. அப்படியான தொழிற்கூடங்கள் இந்தியாவில் ஏராளம். அதனால்தான் பணியிடங்களில் காசநோய் ஒழிப்பை முறைப்படுத்தி, ஊக்கப்படுத்தி, நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது

"காசநோயை இந்தியாவில் முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் உலக அளவிலும் அந்த நோயை அகற்ற முடியாது" என்று டெல்லியில் உள்ள காசநோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு எதிரான சர்வதேச ஒன்றியத்தின் அலுவலக இயக்குநர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே கூறியது இங்கே நினைவுகூரத்தக்கது.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்