தனியாக வசிக்க விரும்பும் இளைஞர்கள் அதற்காகக் கொடுக்கும் விலை மிக அதிகம்
பொருளாதாரச் சுணக்கம் காரணமாக உலகமே பாதிக்கப்பட்டு வருகிறது. வளரும் நாடுகள் மட்டுமல்லாமல், பணக்கார நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. குழந்தைகளுடன் இருக்கும் குடும்பத்தவர்களைவிடத் தனியாக இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அவதிப்படுவது பணக்கார நாடுகளில் அதிகரித்திருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் 25 வயது முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். ‘தி கார்டியன்’ பத்திரிகை திரட்டிய தரவுகள் இதைத் தெரிவிக்கின்றன.
கைக்கெட்டாத செலவு
சம்பாதிக்கும் இளைஞர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரியைச் செலுத்திய பிறகு, கைக்குக் கிடைக்கும் தொகையில் அனைத்துத் தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியாமல் தவிக்கின்றனர். செலவுகளை எப்படியெல்லாம் குறைக்க முடியும் என்று யோசித்துச் செயல்படுத்துகின்றனர். பலர் கூடுதலாகச் சம்பாதிக்க மற்றொரு வேலையையும் பார்க்கின்றனர். ஓய்வெடுப்பது, சுற்றுலா செல்வது, பொழுதுபோக்குவது போன்றவை குறைந்துவிட்டன. நிலைமை மிகவும் மோசமாகிவிட்ட நிலையில், சிலர் தங்களுடைய பெற்றோருடன் மீண்டும் சேர்ந்து தங்கத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய வளர்ந்த நாடுகளில் இளைஞர்கள் இப்போது சம்பாதிக்கும் பணத்தின் உண்மையான மதிப்பு 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னால் அவர்களுடைய வயதில் இருந்தவர்கள் சம்பாதித்ததைவிட மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. அதே சமயம், அவர்களுடைய சொந்தச் செலவுகள் அதிகமாக இருக்கின்றன. தனி வீடு அல்லது போர்ஷனில் குடியிருப்பவர்கள் வாடகையைச் சமாளிக்க முடியாமல் இன்னொருவருடன் அறையையோ, இன்னும் சிலருடன் வீட்டையோ பகிர்ந்துகொண்டு செலவைக் குறைக்கப் பார்க்கின்றனர்.
அமெரிக்காவில் 2010-ம் ஆண்டுதான் தனிக் கட்டைகளுக்கு மிகவும் மோசமான ஆண்டாக இருந்தது. தனியாக வாழும் இளைஞர்கள் - யுவதிகள் வருமான வரிக்குப் பிறகு பெற்ற ஊதியம் சராசரியாக 27,757 டாலர்களாக இருந்தது. இது தேசிய சராசரி வருமானத்தைவிடக் குறைவு. 1979-ல் வாங்கிய ஊதியத்தின் உண்மை மதிப்பு இதைவிடக் கூடுதல் அதாவது, 29,638 டாலர்கள்.
தனிமையின் விலை
‘தனியாக வாழ்தல்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய எரிக் கிளினன்பர்க் இதை நன்கு அலசியிருக்கிறார். தனியாக வாழ்வது என்பது 1950-களில் தொடங்கி 1980-கள் வரையில் படுவேகமாக வளர்ந்தது. அதற்குப் பிறகு, சற்றே வேகம் தணிந்திருக்கிறது. பிடித்தங்கள் போக கைக்குக் கிடைக்கும் வருவாய் குறைவுதான் என்றாலும் தனியாக வசிப்பதால் ‘பெரியவர்களாகிவிட்டோம்’ என்ற எண்ணத்தால்தான் தனியாக வசிக்கின்றனர். அமெரிக்காவில் 2014-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி 25 வயது முதல் 29 வயது வரையில் தனியாக வசிப்போர் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 27.6%. ஐரோப்பிய நாடுகளில் இது 32.7% என்று சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
படித்த பெண்கள் தனியாக வாழ முற்படுவதும், திருமணமான சில ஆண்டுகளுக்குள்ளேயே மணவிலக்கு பெறுவதும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் தனியாக வசிப்பவர்களுக்கான வீட்டு வாடகை குறைவு. திருமணம் செய்துகொள்வதையும் குழந்தை பெற்றுக்கொள்வதையும் தள்ளிப்போட இளைஞர்கள், யுவதிகள் விரும்புவதாலும் தனியாக வாழ்வோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
தனி வீடும், செலவுக் குறைப்பும்
ஆஷ்லே பால் (29), அமெரிக்காவின் போர்ட்லேண்ட் ஓரிகான் என்ற இடத்தில் வசிக்கிறார். அவருடைய வார்த்தைகள் இவை: “சொந்த அடுக்ககத்தில் தனியாக வசிக்க ஆசைப்பட்டு வந்தேன். என்னுடைய சம்பளம் அதற்கு இடம் தரவில்லை. வீட்டைவிட்டு வந்தபோது 25 வயதுதான் ஆகியிருந்தது. என்னுடைய பெற்றோர் வசித்ததைப் போல வசதியான வீட்டில் வாழ வேண்டும் என்ற ஆசையில் சரியாகக் கவனிக்காமல் வாடகை அதிகமுள்ள தனி வீட்டுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டுவிட்டேன். கடைசியில், என்னுடைய வீட்டுக்குத் தேவையான கட்டில், சோபா, சேர், டேபிள், தரை விரிப்புகள், சுவர் அலங்காரங்கள், பண்ட பாத்திரங்கள் வாங்குவதற்கே அதிகம் செலவிட நேர்ந்தது” என்கிறார் ஆஷ்லே பால். நண்பர்களோடு உல்லாச சுற்றுலா செல்லவும் வெளியிடங்களுக்குச் சென்று விருந்து சாப்பிடவும் ஆசைப்பட்டாலும் பணம் போதாததால் குறைத்துக்கொண்டிருக்கிறார் இவர்.
ஜெர்மனியின் பெர்லின் நகர அடுக்ககத்தில் கடந்த 3 ஆண்டுகளாகத் தனியாக வசிக்கிறார் மார்ட்டின் கிளாஷ் (24). ஜெர்மானியத் தலைநகரின் ஒதுக்குப்புறத்தில் பிறருடன் சேர்ந்து அடுக்ககத்தில் வாழ்ந்தார். “ஒரு பெருநகரத்துக்குச் செல்லும்போது நண்பர்களுடன் சேர்ந்து வசிப்பது பல நன்மைகளைத் தரும். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளராக வேலை கிடைத்திருப்பதால் வீட்டிலிருந்து அலுவலகத்துக்குச் செல்ல நிறையே நேரம் எடுத்துக்கொள்வது நல்லதல்ல; பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே வசிக்க விரும்பினேன். இப்போது அப்படித்தான் குடியிருக்கிறேன். என் வேலைகளை நானே செய்துகொள்கிறேன். என்னை மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்விலிருந்து விடுபட்டிருக்கிறேன். முதலில் மாதம் 300 யூரோ வாடகையில் குடியிருந்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் மேலும் 100 யூரோக்குத் தனி போர்ஷன் கிடைத்திருக்கிறது. இதிலேயே மின் கட்டணம் உள்பட எல்லாச் செலவுகளும் சேர்ந்துவிட்டன. பொறுமையாகத் தேடினால் குறைந்த வாடகைக்கு நல்ல இடம் கிடைக்கும். 4 பேர் ஒன்றாகக் குடியிருந்து திடீரென்று பிரிந்து அவசரத்தில் வீடு தேடினால் குறைந்த வாடகைக்குக் கிடைக்காது.
“எனக்குக் கிடைக்கும் உதவித்தொகை போதவில்லை. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்கிறேன். எனக்கும் என்னுடைய தந்தையின் தலைமுறைக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், நாங்கள் எங்கும் ஓரிடத்தில் நீண்ட காலத்துக்கு நிலையாகத் தங்குவதே இல்லை. ஆசிரியராக இருப்பதால் இந்த வேலைக்கு அதிகப் போட்டி இல்லை என்ற வகையில் நான் அதிர்ஷ்டக்காரன். என்னுடன் படித்தவர்கள் எப்போதும் நாடுவிட்டு நாடு போய்க்கொண்டே இருக்கிறார்கள். 2 வாரங்கள் கோபன்ஹேகன் நகரில் இருந்தால் 2 வாரங்கள் நியூயார்க்கில் ஏதோ பயிற்சிக்காகப் போகிறார்கள். எங்கு வேண்டுமானாலும் வசிக்க வேண்டும், மிகவும் குறுகிய அவகாசத்தில் பெட்டி, படுக்கைகளைத் தயார் செய்துகொண்டு புறப்பட்டுவிட வேண்டும் என்ற பயிற்சி எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் நாங்கள் குழந்தைகள் பெறுவதைத் தள்ளிப்போடுகிறோம்” என்கிறார் கிளாஷ்.
ஜில் மக்காய் (30): தனியாக வசிக்க விரும்புகிறவர்களும் பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஜில் மக்காய்க்கு ஒரேயொரு படுக்கை அறை உள்ள அடுக்ககம் அவருடைய அப்பாவால் கிடைத்தது. “இந்த வீடு மட்டும் இல்லாமல் என்னால் முனைவர் பட்ட ஆய்வை முடித்திருக்கவே முடியாது; வாடகை கொடுக்க வேண்டியிருந்தால் செலவைச் சமாளிக்க முடியாமல் மீண்டும் என் பெற்றோரிடமே போயிருப்பேன். இப்போதும்கூட இதர செலவுகளைச் சமாளிப்பது கடினமாகத்தான் இருக்கிறது. ஒப்பந்த ஊதியத்தில் வேலை செய்கிறேன். ஊதியம் ஆண்டுதோறும் உயராது. செலவுக்குப் பணம் வேண்டும் என்பதற்காக இரவில் தனிப்பாட வகுப்புகளை நடத்துகிறேன். இதனால் பொழுதுபோக்குகளுக்குச் செல்வதற்கு நேரமே கிடைப்பதில்லை. இதனால் படிப்பு, வேலை, ஆசிரியர் பணி, வீட்டில் வேலை என்று தொடர்ச்சியாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதற்குப் பிறகு நண்பர்களுடன் வெளியே செல்ல நேரம் கிடைத்தாலும் உடலில் தெம்பு இல்லாததால் படுத்துத் தூங்கிவிடுகிறேன்”.
தமிழில்: சாரி
© ‘தி கார்டியன்’.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
25 days ago
கருத்துப் பேழை
25 days ago