வட்டார வரலாறு கல்வியின் பகுதி ஆகட்டும்!

By அ.கா.பெருமாள்

தமிழக வரலாற்றை ஆரம்ப காலத்தில் எழுதிய வரலாற்றுப் பேராசிரியர்களும் (பி.டி.ஸ்ரீனிவாசன், கே.ஏ.நீலகண்டன் உட்படப் பலரும்), 1950-களுக்குப் பின் தமிழில் எழுதிய சிலரும் (ராஜமாணிக்கனார் உட்படச் சிலரும்) கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்களின் அடிப்படையில் எழுதியவர்கள். இவர்களில் மிகச் சிலரே தமிழகம் முழுக்க அலைந்து செய்திகளைச் சேகரித்தார்கள். பழம் நினைவுச் சின்னங்களைப் பார்த்தார்கள். இவர்கள் எழுதிய வரலாறு ஏற்கெனவே எழுத்து வடிவில் இருந்ததன் பின்னணியில் உருவாக்கப்பட்டது.

நாட்டார் வழக்காற்றியல்

தமிழகத்தில் நாட்டார் வழக்காற்றியல், மானுடவியல், இனவரைவியல், சமூகவியல் துறை அறிஞர்கள் தமிழகப் பண்பாட்டு வரலாறு பற்றி யோசிக்க ஆரம்பித்தபோது, வட்டார வரலாறு புதிய வடிவம் எடுத்தது. பேரா. நா.வானமாமலை, அருள்பணி பிரான்சிஸ் ஜெயபதி, தே.லூர்து போன்றோர் இதற்கு வித்தூன்றினாலும் நாட்டார் வழக்காற்றியல் துறை முறையாகப் பயிலப்பட்டு, ஆய்வை ஆரம்பித்த பின்னர் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் எம்.ஏ. முதுகலை தொடங்கப்பட்ட பின்னர் இது பரவலானது.

தமிழகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் முதுகலை பாடத்திட்டத்தில் இருந்த மொழியியல் பாடம் நகர்ந்ததும், அந்த இடத்தை நாட்டார் வழக்காற்றியல் பாடம் பிடித்துக்கொண்டது. அதோடு, மானுடவியல், இனவரைவியல் பற்றியும் படிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்த நிலையில், பக்தவத்சல பாரதி போன்ற மானுடவியல் அறிஞர்கள் தமிழ்ப் பண்பாட்டுடன் தொடர்பான விஷயங்களை மானுடவியல் பார்வையில் தமிழில் எழுதியிருக்கிறார்கள்.

இது, தமிழ் முதுகலை மாணவர்களிடையே வட்டாரரீதியான பண்பாட்டு வரலாற்றைப் படிக்க வேண்டும், தொகுக்க வேண்டும் என்னும் கட்டாயத்தை ஒரு பொறி அளவில் உருவாக்கியிருக்கிறது. தமிழ் எம்.ஏ., எம்.ஃபில், முனைவர் பட்ட ஆய்வு அறிக்கை தயாரிக்க மாணவர்கள் நாட்டார் வழக்காறு, பண்பாட்டு மானிடவியல் தொடர்பான தலைப்பை எடுத்துக்கொண்டனர். தாங்கள் வாழும் பகுதியின் வாய்மொழிச் செய்திகளையும், பிற வழக்காறுகளையும் சேகரிப்பது இவர்களுக்கு எளிதாக இருந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் காரியம் நடந்துகொண்டிருக்கிறது.

வட்டாரச் சேகரிப்பு

தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் வழக்காறுகள், வாய்மொழி மரபு, கலைகள், புழங்கு பொருட்கள் பற்றிய செய்திகள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. இந்தச் சேகரம் தென்மாவட்டங்களில் மிக அதிகம். இந்தச் சேகரிப்பு எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரு வரலாறு உருவாக்கும் முயற்சியும் நடக்கவில்லை. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஒத்த பண்பாட்டின் வேர்கள் உள்ள இடங்களின் அடிப்படையில் பகுத்து ஒரு வரலாற்றை உருவாக்க முடியும். தமிழகத்தில் இப்போது 38 மாவட்டங்கள் உள்ளன.

இது நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டது. ஒரு காலத்தில் திருநெல்வேலி என்னும் பெரிய மாவட்டம் தூத்துக்குடி, தென்காசி எனப் பிரிந்தாலும் இவற்றின் பண்பாட்டு ஒற்றுமை பிரியவில்லை. நாட்டார் வழக்காற்று ஆய்வாளர்கள் தமிழகத்தை மலை மண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம், நடுநாட்டு மண்டலம், புதுச்சேரி மண்டலம், சோழ மண்டலம், சென்னை மண்டலம் என எட்டு மண்டலங்களாகப் பகுக்கலாம் என்கின்றனர். தமிழகத்தில் இதுவரை சேகரித்த வழக்காற்று வகைமை தொடர்பான செய்திகளை இந்த மண்டலப் பகுப்பின் அடிப்படையில் பகுத்துப் பண்பாட்டு வரலாறு உருவாக்கப்படவில்லை.

பன்முகப் பண்பாடு

பண்பாடு என்பது ஒற்றை நேர்க்கோட்டுச் சிந்தனையில் உருவானதல்ல. தமிழகம் பல்வேறு பண்பாடுகளைக் கொண்டது. பெற்றதும் உண்டு; கொடுத்ததும் உண்டு. ‘தென்குமரி வடவேங்கடம் ஆயிடை தமிழ் கூறு’ நல்லுலகத்தில் தமிழர்கள் ஒரு மொழியைப் பேசுகிறவர்கள் என்றாலும், சாம்பாரின் சுவை எல்லா இடங்களிலும் ஒன்றல்ல; மீன் குழம்பும் அப்படித்தான். கூட்டு, குழம்புகள் பெயர்களிலும் வேறுபாடு உண்டு. கரிசலாங்கண்ணி என்று பொதுவாக அழைக்கப்படும் கீரைக்குத் தமிழகத்தில் வேறுவேறு பெயர்கள் உண்டு. மண்வெட்டி என்ற உழவு கருவிக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. இப்படி எத்தனையோ விஷயங்கள். இவற்றின் பன்முகத்தன்மை கொண்ட பண்பாடு முறையாகத் தொகுக்கப்பட்டு ஒருங்கிணைப்புடன் விரிவாக எழுதப்படவில்லை.

பல்கலைக்கழகங்களின் பணி

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொடக்க விழாவில் பேசிய அப்போதைய அமைச்சர் நெடுஞ்செழியன், அந்தப் பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணி குறித்து முன்வரைவுத் திட்டம் தயாரித்த வ.அய்.சுப்ரமணியத்தின் கருத்தை இப்படிப் பிரதிபலித்தார்: “இந்தப் பல்கலைக்கழகம் தன் ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டங்களைச் சமூக அறிவியல், சூழலியல்ரீதியாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, வரலாற்றுத் துறையும் தமிழ்த் துறையும் இணைந்து வட்டார வரலாறு, பண்பாடு போன்ற விஷயங்களைத் துல்லியமாகச் சேகரிக்கலாம்” ஆனால், அது நடக்கவில்லை.

நிர்வாக வசதிக்காக…

ஒரு இனம், சாதி, உட்பிரிவு ஆகியவற்றின் பண்பாட்டைப் புரிந்துகொள்வது மாவட்டத்தை நிர்வகிப்பவர்களுக்கு வசதி என்பது பிரிட்டிஷ்காரர்கள் காலத்திலேயே உதயமாகிவிட்டது. கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் அபுகுபாயின் ‘Hindu Manners and Customs’ என்ற நூலின் பிரஞ்சு மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். தற்போதோ, அரசியல்வாதிகள் வாக்கு வங்கிக்காக மக்களைப் புரிந்துகொண்டது மாதிரி அதிகாரிகள் புரிந்துகொண்டார்களா என்பது தெரியவில்லை.

குருசாமிப்பிள்ளை (திருவனந்தபுரம்) எழுதிய ‘நம்பிமலை மர்மம்’ நாவலில் (1921) காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டவனின் வேட்டியில் இருந்த சலவைத் தொழிலாளியின் சலவைக் குறியை வைத்து ஆளை அடையாளம் கண்டுபிடிக்கிறார். கி.ராஜநாராயணன் ஒரு கட்டுரையில், பெண்ணின் பிணத்தை அடையாளம் காணத் தாலியை முதலில் பார்ப்பார்கள் என்கிறார். இதுபோன்ற பண்பாட்டு அடையாளங்களைக் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் புரிந்து வைத்திருந்தனர்.

எல்லா தொழில்களிலும் நுட்பம்

‘ஒயிட் காலர் ஜாப்’ எனப்படும் உடலுழைப்பு இல்லாத வேலை சமூகத்தில் மதிப்புக்குரியதாக மாறிய பின்பு, விவசாயம் மற்றும் உடலுழைப்பு செய்தவர்களின் இடம் பின்னகர்ந்தது. படிக்காத குழந்தையைப் பார்த்து ‘நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று சொல்லும் வழக்கம் இப்போதும் உண்டு. ஆடு, மாடு மேய்ப்பது சிரமமான தொழில் என்பது பலருக்குத் தெரியாது. பல வீடுகளிலிருந்து மாடுகளை ஒன்றாகச் சேர்த்து காட்டில் மேய்த்து, அவரவர் வீட்டு மாடுகளைச் சரியாகக் கொண்டுசேர்ப்பதில் நுட்பம் உண்டு. மாடுகளின் கொம்பு, சுழி, வாலின் அமைப்பு, நிறத்தில் வேறுபாடு, பின்புறச் சூடு என்னும் அடையாளங்களை நினைவில் இருத்தி மாடுகளின் உடைமையாளர்களின் வீட்டுக்குத் தினமும் மாலையில் மாடுகளை ஒப்படைப்பது எளிதான செயல் அல்ல. இதற்கு நினைவாற்றலும் தொழில்நுட்பமும் அவசியம்.

அதேபோல் சலவைத் தொழிலாளர் ஆடைகளில் போடும் அடையாளம் முக்கியம். வாடிக்கையாளர்களின் அடையாளக் குறியை நினைவில் வைத்துக்கொள்வதற்குத் திறன் வேண்டும். அறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன் தன் நூல் ஒன்றில், ‘படிச்சவனுக்கு மேல் ஏகாலி/ ஏகாலிக்கு மேல் ஆட்டுக்காரன்” என்னும் தெலுங்குப் பழமொழியைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். படித்தவரைவிட சலவைத் தொழிலாளி நினைவாற்றல் உள்ளவர். அதைவிட ஆடு மேய்ப்பவர் இன்னும் நினைவாற்றல் உள்ளவர். இது இந்தப் பழமொழியின் பொருள். அண்மைக் காலமாக எதையும் நினைவில் நிறுத்த வேண்டிய சூழல் போய்விட்டது.

பொருள்சார் பண்பாடு

மக்கள் தங்கள் சூழலுக்கு, காலநிலைக்கு, குடும்ப நிலைக்கு ஏற்றவாறு விவசாயம் செய்வது, தேவைக்கேற்பப் பொருட்களை உற்பத்திசெய்வது போன்றவை பொருள்சார் பண்பாட்டில் அடங்கும். காந்தி உட்படச் சிலர் இதன் நன்மைகளைப் புரிந்துகொண்டு பேசியுள்ளனர். இதை ஒழித்துக்கட்டுவதில் கிழக்கிந்தியக் கம்பெனி மட்டுமல்ல... இன்று வரை அது தொடர்கிறது.

காபி உயர் வர்க்கத்தினருக்கு, டீ தொழிலாளர்களுக்கு, சாம்பார் உயர் வர்க்கக் குழம்பு, இட்லி எல்லோருக்கும் கிடைக்காத உணவு என்றிருந்த காலம் உண்டு. இது பற்றி சிந்துப் பாடல்கள் வந்திருக்கின்றன. (காபிக்கும் டீக்கும் சண்டை, உப்புமாவிற்கும் பழையதுக்கும் சண்டை, விளக்கெண்ணெய்க்கும் மண்ணெண்ணெய்க்கும் சண்டை). இதுபோன்ற வட்டார வரலாற்று விஷயங்களை ஆ.சிவசுப்பிரமணியன், ஆ.இரா.வேங்கடாசலபதி உள்ளிட்டோர் எழுதியுள்ளனர். தமிழகத்தின் வட்டார வரலாற்றை விரிவாக எழுத வேண்டியது மட்டுமல்ல, அதனைப் பாடத்திட்டத்திலும் சேர்க்க வேண்டியதும் அவசியம்.

- அ.கா.பெருமாள், நாட்டாரியல் ஆய்வாளர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்