வங்கதேசம் 50 - தீரமிகு இந்தியா... வீரமிகு இந்திரா!

By ஆ.கோபண்ணா

1971 இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வங்கத்தி லிருந்து அகதிகளாக வந்தவர்கள் ஒரு கோடிப் பேருக்கும் அதிகமாக இருந்ததால், இந்தியா இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கிழக்கு பாகிஸ்தானில் ஆயுதம் ஏந்திப் போராடிய முக்தி வாகினி படையினர், கிழக்கு பாகிஸ்தானை ‘சுதந்திரமான வங்கதேச’மாகப் பிரகடனம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக இந்தியா தன்னுடைய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்துக் குரல்கொடுத்தன.

விடுதலைப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான கருத்தைத் திரட்டுவதற்காக அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, உலகச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். தொலைநோக்குப் பார்வையுடன் சோவியத் ஒன்றியத்துக்குச் சென்று அமைதி, நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது, இந்திரா காந்தியின் மிகப் பெரிய சாதனை. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் தலையீடுகளைத் தடுக்கும் மிகப் பெரிய பாதுகாப்பை இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியா பெற்றது. பாகிஸ்தானின் ராணுவத் தளவாடத் தேவையின் பெரும் பகுதியை அமெரிக்காவும் கணிசமான பகுதியைச் சீனாவும் வழங்கிப் பூர்த்திசெய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசப் பிரச்சினையில் உலகத்தின் ஆதரவைத் திரட்டுவதற்காக இந்திரா காந்தி, மத்திய அமைச்சர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினார். குறிப்பாக, சர்தார் ஸ்வரண் சிங், கே.சி.பந்த், ஒய்.பி.சவான், ஜெகஜீவன்ராம் ஆகியோர் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சரான கிஸிங்கர் இந்தியாவுக்குப் பறந்துவந்தார். “முஜீபர் ரஹ்மானை விடுதலை செய்வதும், கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காண்பதுமே நிலைமையைக் கட்டுப்படுத்தும்” என்று கிஸிங்கரிடம் இந்திரா காந்தி எடுத்துச்சொன்னார். கிழக்கு வங்க மக்கள் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவுசெய்யும் நிலை உருவாகும் என்றும் இந்திரா காந்தி வாதிட்டார்.

அதே சமயம், எந்த நேரத்திலும் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு இந்தியப் படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் இந்திரா காந்தி ரகசிய உத்தரவு பிறப்பித்திருந்தார். 1971 டிசம்பரில் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் திடீரென்று இந்திய விமானத் தளங்கள்மீது தாக்குதல் நடத்தின. அந்தச் சமயம், இந்திரா காந்தி கல்கத்தாவில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார். செய்தி கிடைத்தவுடன் பேச்சை முடித்துக்கொண்டு டெல்லிக்கு இந்திய ராணுவ விமானத்தில் பயணமானார். அமைச்சரவைக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டு, பாகிஸ்தான்மீது போர் தொடுக்க முடிவுசெய்யப்பட்டது.

இந்திய ராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்தது. இந்தியாவின் கவனத்தை மேற்குப் பக்கம் திருப்ப, பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையைத் தாக்கியது. அந்தத் தாக்குதல் இந்தியப் படைகளால் முறியடிக்கப்பட்டது. சீன - அமெரிக்க ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியாவுக்குப் பாதுகாப்பளிக்கும் வாக்குறுதியைச் சோவியத் ஒன்றியம் பகிரங்கமாக அறிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கைக்கு மேஜர் ஜெனரல் மானெக்‌ஷா தலைமை தாங்கினார். இந்தப் போரில் பாகிஸ்தான் படைகள் சுற்றிவளைக்கப்பட்டன. சரணாகதி அடைவதற்கு அவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.

1971, டிசம்பர் மாதம் 16-ம் நாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணாகதி அடைந்தார்கள். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் போர் வீரர்களும் பல்லாயிரக்கணக்கில் போர்க் கைதிகளாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். இந்திரா காந்தியின் ராஜதந்திரத்தாலும் ராணுவ நடவடிக்கையாலும் வங்கதேசம் என்கிற புதிய நாடு உதயமாயிற்று. ஜனாதிபதி யஹ்யா கான் ராஜினாமா செய்தார். எஞ்சியிருந்த மேற்கு பாகிஸ்தானின் நிர்வாகப் பொறுப்பை பூட்டோ ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் உதவியுடன் கிழக்கு பாகிஸ்தான், ‘வங்கதேசம்’ என்கிற சுதந்திர தேசமாக உருப்பெற்றது. ‘மதஉணர்ச்சி மட்டும் ஒரு தேசத்தை உருவாக்கப் போதுமானது அல்ல’ என்கிற உண்மை மீண்டும் ஒருமுறை வரலாற்றில் நிரூபிக்கப்பட்டது. அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளின் அச்சுறுத்தலுக்கு இந்தியா பணியாது என்பதையும் உலகுக்கு நிரூபித்துக் காட்டினார் இந்திரா காந்தி.

- ஆ.கோபண்ணா, ஆசிரியர், ‘தேசிய முரசு’ இதழ். | தொடர்புக்கு: desiyamurasu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்