டிசம்பர் 2-ம் நாள் மாநிலங்களவையில் அணைப் பாதுகாப்பு மசோதா விவாதிக்கப்பட்டது. நீர் மேலாண்மை மாநில அரசுகளின் வரம்புக்கு உட்பட்டது; அதில் ஒன்றிய அரசு கைகடத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்த மசோதாவை ஒரு தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரியது திமுக. ‘ஜல் சக்தி’ அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அதற்கு அவசியமில்லை என்று சொல்லிவிட்டார்.
நாடெங்கிலும் உள்ள அணைகளின் பாதுகாப்புக்குச் சீரான விதிகளும் நடைமுறையும் அவசியம் என்றும் இந்த மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானதல்ல என்றும் அவர் கூறினார். மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இனி இது சட்டமாகத் தடையில்லை. இந்தச் சட்டம் எதற்காக? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏன் இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றன?
2009-ல் தொகுக்கப்பட்ட பேரணைகளின் பட்டியலின்படி இவற்றின் எண்ணிக்கை 5,101 ஆக இருந்தது (2019-ல் 5,745). இந்த அணைக்கட்டுகளை வடிவமைப்பதிலும் உருவாக்குவதிலும் பராமரிப்பதிலும் சீர்மை இல்லாமல் இருந்தது. அதில் சீர்மை வேண்டுமென்று வலியுறுத்தியது ஒன்றிய நீர் ஆணையம்.
அது 1986-ல். அதற்கு அடுத்த ஆண்டில் அணைப் பாதுகாப்பு மசோதாவுக்கான ஒரு முன்வரைவு உருவாக்கப்பட்டது. மாநிலங்களின் கருத்துகள் கோரப்பட்டன. அதன் அடிப்படையில், 2002-ல் மசோதா திருத்தப்பட்டது. 2010-ல் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. மசோதாவைப் பரிசீலிக்க ஒரு நிலைக்குழு அமைக்கப்பட்டது. குழு மசோதாவை ஏற்றது. எனினும் அப்போது அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.
2010-ல் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேறாமல் போன மசோதாவுக்கும், 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டு அதே ஆண்டே நாடாளுமன்றத்திலும், கடந்த வாரம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாவுக்கும் இடையில் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. 2010 மசோதாவின் நோக்கம் அணைகளைக் கண்காணிப்பதும் மேற்பார்ப்பதும் இயக்குவதும் பேணுவதும் ஆகும். 2019 மசோதா மேலதிகமாக இவற்றைச் செயல்படுத்துகிற அதிகாரம் மிக்க ஓர் அமைப்பைச் சேர்த்திருக்கிறது.
ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்கள்தான் ஒன்றிய அரசின் மேற்பார்வையில் அணைப் பாதுகாப்பைக் கோரியவை. ஆகவே, 2010 மசோதா அந்த இரண்டு மாநிலங்களை மட்டுமே குறிப்பிடுகிறது. மற்ற மாநிலங்கள் விருப்பப்பட்டால் தத்தமது சட்டமன்றத்தில் இந்தக் கூறுகளை விவாதித்துச் சட்டமாக்கிக்கொள்ளலாம். கட்டாயமில்லை. இப்போதோ மாநிலங்களின் விருப்பம் முக்கியமில்லை. எல்லா மாநிலங்களும் புதிய சட்டத்துக்குக் கீழ்ப்படிந்தே ஆக வேண்டும்.
2010 முன்வரைவு மூன்று அமைப்புகளை உள்ளடக்கியது. அதில் அணைப் பாதுகாப்புக்காக, தேசிய அளவில் ஒரு குழுவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு குழுவும் இருந்தன. மூன்றாவதாக, ஒன்றிய அளவிலான ஓர் அமைப்பும் இருந்தது. பொறியியல் வல்லுநர்களைக் கொண்ட இந்த அமைப்பு தேசியக் குழுவுக்கும் மாநிலக் குழுக்களுக்கும் தொழில்நுட்ப ஆதரவை நல்கும். 2019 மசோதாவிலும் ஒன்றிய மாநிலப் பாதுகாப்புக் குழுக்கள் இருக்கின்றன. ஆனால், ஒன்றிய அளவிலான தொழில்நுட்பக் குழுவுக்குப் பதிலாக, ஒரு தேசிய அணைப் பாதுகாப்பு அதிகார மையம் உருவாக்கப்படும். இந்த மையம் நாடு முழுவதிலும் உள்ள அணைகளை மேற்பார்ப்பதோடு மாநிலங்களுக்கு ஆணையிடும் அதிகாரத்தையும் பெற்றிருக்கும்.
மேலும், அமைப்புகளின் உறுப்பினர்கள் யார் யார் என்பதிலும் மாற்றம் வந்திருக்கிறது. 2010-ல் அணைப் பாதுகாப்பு தேசியக் குழுவில் ஒன்றிய நீர் ஆணையத் தலைவருடன் சூழலியல், பாசனம், நிலஅளவை, வானிலை முதலான அரசுத் துறைகளின் தலைமைப் பொறியாளர்கள் இடம்பெற்றார்கள். இப்போதும் ஒன்றிய நீர் ஆணையத் தலைவர் இடம்பெறுவார். கூடவே, ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்-10, மாநிலங்களின் தலைமைப் பொறியாளர்கள்-7, துறை சார்ந்த வல்லுநர்கள்-3, ஆக 21 பேர்.
மாநிலக் குழுவில் அந்த மாநிலத்தின் பொறியாளர்கள், நதி நீரைப் பங்கிட்டுக்கொள்ளும் அண்டை மாநிலப் பொறியாளர்கள், ஒன்றிய நீர் ஆணைய, மின் ஆணையப் பொறியாளர்கள் என 15 பேர் இருப்பார்கள். இதில் அண்டை மாநில உறுப்பினர்களை அந்தந்த மாநிலங்களும் தேசிய உறுப்பினர்களை ஒன்றிய அரசும் நியமிக்கும். அதாவது, ஒன்றியக் குழுவை ஒன்றியம் மட்டும் நியமிக்கும். மாநிலக் குழுவை அந்த மாநிலமும், அண்டை மாநிலங்களும் ஒன்றியமும் நியமிக்கும். மாநிலக் குழுவில் பொறியாளர்கள் மட்டும் இருப்பார்கள். ஒன்றியக் குழுவில் சரிபாதி ஆட்சியாளர்கள் இருப்பார்கள்.
மிக முக்கியமாக, தேசிய அணைப் பாதுகாப்பு அதிகார மையத்தின் தலைவராக ஒன்றிய அரசு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கும். மையத்தின் உறுப்பினர்கள், அனுபவம், தகுதி எல்லாவற்றையும் ஒன்றிய அரசு முடிவுசெய்யும். இந்த மையத்துக்கு அணைகள் தொடர்பான எல்லா சர்ச்சைகளுக்கும் தீர்வு சொல்லும் அதிகாரம் இருக்கும்.
மாநிலத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பை மேற்பார்க்கும் பொறுப்பு அந்தந்த மாநிலக் குழுவிடம் இருக்கும். ஆனால், அணை அண்டை மாநிலத்தில் இருந்தால், பொறுப்பு ஒன்றிய அரசின் அதிகார மையத்துக்குப் போய்விடும். தமிழ்நாட்டுக்கு உரிமையான முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துன்னக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகள் கேரளத்தில் அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டுப் பொதுப் பணித் துறைதான் இந்த அணைகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருக்கும். ஆனால், இதன் பாதுகாப்பையும் இயக்கத்தையும் பராமரிப்பையும் புதிய அதிகார மையம் மேற்பார்க்கும்.
இந்த அணைகள் தொடர்பான சர்ச்சைகளுக்கு இனி இந்த அதிகார மையம்தான் முடிவு சொல்லுமென்று தெரிகிறது. இப்போது என்ன நடக்கிறது? தமிழ்நாட்டு அரசின் பொதுப் பணித் துறை அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்கிறது. ஒன்றிய நீர் ஆணையம் அதை அங்கீகரிக்கிறது. ஆனால், கேரள அரசு ஏற்க மறுக்கிறது. இது வழக்காகிறது. நீதிமன்றம் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கிறது. இந்தச் சங்கிலியில் ஒன்றிய நீர் ஆணையத்தின் பொறியியல் வல்லுநர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், புதிய சட்டம் நடப்பில் வந்தால் பொறியியல்ரீதியான தர்க்கத்தைத் தீர்க்கிற பொறுப்பு புதிய அதிகார மையத்தின் தலைவரிடத்தில் இருக்கும். அவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர். அவருடைய தீர்ப்பே அறுதியானது. அவர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ள மாட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும்?
நாடெங்கிலும் அணைப் பாதுகாப்புக்குச் சீரான கொள்கை அவசியம்தான். அதுதான் ஆதியில் அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம். ஆனால், இப்போது அது ஒரு புதிய அதிகார மையத்தை உருவாக்கிவிட்டது. இந்த மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று நம்பப் போதிய முகாந்திரங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசு இதன் பொறியியல் கூறுகளையும் நுணுக்கங்களையும் ஆராய்ந்து இதைச் சட்டரீதியாக நேரிட முடியுமா என்று பரிசீலிக்கலாம்.
- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்,
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago