அந்தக் காலம்: தேர்தல் ஞாபகங்கள்- எனது முதல் தேர்தல் தோல்வி

By மு.இராமனாதன்

1971-ல் நடந்த பொதுத் தேர்தலை மறக்க முடியாது. அது அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதியின் தலைமையில் திமுக சந்தித்த முதல் தேர்தல். எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பிக்க ஒரு வருடம் இருந்தது. காங்கிரஸ் இரண்டாக உடைந்திருந்தது. இந்திரா காங்கிரஸ் திமுகவுடனும், காமராஜர் ராஜாஜியுடனும் கைகோத்திருந்தனர். நான் முதன்முதலாகக் களப்பணியாற்றிய தேர்தலும் அதுதான். அப்போது நான் 7-ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்.

காரைக்குடி தொகுதியில் சித.சிதம்பரத்துக்கு திமுக டிக்கெட் கிடைத்திருந்தது. ஊரில் அவரை சீனாத்தானா என்றுதான் கூப்பிடுவார்கள். கட்சியில் விசுவாசமாக இருந்துவருவதற்கான பரிசு என்று பேசிக்கொண்டார்கள். சீனாத்தானாவின் வீடு முத்துப்பட்டினம் இரண்டாம் வீதியில் இருந்தது. எனது ஆயாள் (தாய்வழிப் பாட்டி) வீடு முதல் வீதியில் இருந்தது. மேலதிகமாக சீனாத்தானாவின் தாயாரும் எனது ஆயாளும் சிநேகிதிகள். அவரது வீட்டையொட்டிய கார் ஷெட்டில் ‘எழுச்சி மன்றம்’ இருந்தது. மன்றத்துக்குப் பத்திரிகைகள் வரும்; நான் படிப்பேன் - குறிப்பாக முரசொலி. அவரது பிள்ளைகள் எங்களுடன் அழகப்பா பள்ளியில்தான் படித்தார்கள். என்றாலும் அந்தத் தேர்தலில் நான் சீனாத்தானாவை ஆதரிக்கவில்லை. கொள்கைதான் காரணம்.

போஸ்டர் இல்லை

காரைக்குடி தொகுதியை ராஜாஜியின் சுதந்திரா கட்சிக்குக் கொடுத்துவிட்டார் காமராஜர். வேட்பாளர் பெயர் எஸ்.பி.ஆர் ராமசாமி. சட்டமன்றத் தேர்தலுடன் நாடாளுமன்றத் தேர்தலும் நடந்தது. காரைக்குடி சட்டமன்றத் தொகுதி புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டிருந்தது (இப்போது சிவகங்கை). பழைய காங்கிரஸ் சார்பாக ராஜவம்சத்தைச் சேர்ந்த விஜய ரகுநாதத் தொண்டைமானும் திமுக சார்பாக க.வீரையாவும் போட்டியிட்டார்கள்.

ராஜாஜி திமுக ஆதரவை விலக்கிக்கொண்டு காமராஜருடன் கூட்டணி அமைத்திருந்தார். இரண்டு தலைவர்களும் ஒருவர் கையை மற்றவர் ஆதரவோடு பற்றிக்கொண்டிருக்கும் போஸ்டர்கள் தொகுதி எங்கும் ஒட்டப்பட்டன. சுதந்திரா கட்சியின் தற்காலிக அலுவலகம் சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் இருந்தது. அங்கு போய், அரியக்குடியில் ஒட்டுவதற்குப் போஸ்டர்கள் வேண்டுமென்று கேட்டேன். ராஜாஜியை விடக் கொஞ்சம்

‘இளமையானவர்'

அலுவலகத்தில் இருந்தார். போஸ்டர்கள் கையிருப்பில்லை என்று சொல்லிவிட்டார். வெளியே போனவனைக் கூப்பிட்டு விசிட்டிங் கார்டு அளவில் 15 - 20 அட்டைகள் கொடுத்தார். சுதந்திரா கட்சியின் சின்னம் நட்சத்திரம். பழைய காங்கிரஸ் அதன் பாரம்பரியமான இரட்டைக் காளை சின்னத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது. அந்த அட்டைகளில் இரண்டு சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

நான் முதல் அட்டையை அம்மாவிடம் கொடுத்தேன். நான் என்ன செய்தாலும் அம்மாவுக்குப் பெருமைதான். வேட்பாளரே கொடுத்ததுபோல் அந்தச் சிறிய அட்டையை இரண்டு கைகளாலும் வாங்கிக்கொண்டார். அப்பா, காமராஜரின் அபிமானி. நியாயமாக என்னை அவர் உற்சாகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ‘படிக்கிறதை விட்டுவிட்டு இது என்ன வேலை’ என்று முணுமுணுத்தார். என்றாலும் தடுக்கவில்லை. வீட்டுக்கு எதிரில் சோலையண்ணனின் தையற் கடையும் வெள்ளையண்ணனின் சைக்கிள் கடையும் இருந்தன. முன்னவர் திமுக அனுதாபி; பின்னவர் எம்.ஜி.ஆர் ரசிகர். என்றாலும் இருவரும் அட்டைகளை மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டார்கள். பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் கொடுத்தேன். ஆயாளிடமும் கொண்டுபோய் ஒரு அட்டையைக் கொடுத்தேன். கையில் வாங்கின மாத்திரத்தில் தம்பியின் (சீனாத்தானா) சூரியன் சின்னம் அதில் இல்லை என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. என்றாலும், அட்டையை வாங்கி சம்புடத்தில் பத்திரமாக வைத்துக்கொண்டார்.

நள்ளிரவில் எம்ஜிஆர்

அப்போதுதான் ஊரெல்லாம் பேச்சாக இருந்தது. எம்ஜிஆர் வருகிறார். இரவு நேரக் கூட்டம். சோலையண்ணன்தான் கூட்டிக்கொண்டு போனது. காரைக்குடி காந்தி திடல் தளும்பியது. அப்போதெல்லாம் நேரக் கட்டுப்பாடு இல்லை. ஒருவர் பின் ஒருவராகப் பேசினார்கள். இரவு இரண்டு மணியளவில் ‘எம்ஜிஆரால் இன்று வர முடியவில்லை; நாளை வருவார்’ என்று சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள் இரவும் காந்தி திடலில் கூட்டம். ‘மக்கள் திலகம் வந்துகொண்டிருக்கிறார்’என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். கடைசியாக, மூன்றாவது நாளுக்குத் தள்ளி வைத்தார்கள். அதில் ஒரு சிக்கல் இருந்தது. காந்தி திடலை அடுத்த நாள் காமராஜர் கூட்டத்துக்குப் பதிவு செய்திருந்தார்கள். எம்ஜிஆர் கூட்டம் செஞ்சைத் திடலுக்கு மாற்றப்பட்டது. நான் ‘காமராஜரைப் பார்த்துவிட்டு எம்ஜிஆரைப் பார்க்கலாம்’ என்றேன். சோலையண்ணன் ‘இன்று எம்ஜிஆர் சீக்கிரம் வந்துவிடுவார்; எம்ஜிஆரைப் பார்த்துவிட்டு காமராஜரைப் பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டது. செஞ்சையும் தளும்பியது.. காமராஜர் பேசிவிட்டுப் போய்விட்டார் என்ற சேதியும் இடையில் வந்தது. எம்ஜிஆர் வந்தபோது நள்ளிரவு கடந்திருக்கும். உற்சாகமாக இருந்தார். முதலில் காக்க வைத்ததற்குப் பல முறை மன்னிப்புக் கேட்டார். நிதானமாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசினார்.

எம்ஜிஆர் கூட்டம் நடந்த ஒரு வாரத்துக்குள் நான் ஆவலோடு எதிர்பார்த்த சிவாஜி கணேசனும் காரைக்குடிக்கு வந்தார். கூட்டம் உச்சிப்பொழுதில் நடந்தது. எல்லோரும் நின்றுகொண்டிருந்தார்கள். என்னால் சிவாஜியைப் பார்க்க முடியவில்லை. சோலையண்ணன் பிடித்துக்கொள்ள, நான் சைக்கிள் மீதேறி நின்றுகொண்டேன். வெள்ளை கதர் ஜிப்பா, முகமெங்கும் முத்து முத்தாக வியர்வை, இடக்கையில் கைக்குட்டை, வலக்கையை வீசிவீசி உணர்ச்சிகரமாகப் பேசினார் சிவாஜி. பத்து நிமிடத்தில் முடித்துக்கொண்டார்.

சீனாதானா வெற்றி

எனது அம்மாவும் ஆயாளும் சீனாத்தானாவுக்குத்தான் வாக்களித்தார்கள். என் பிரச்சாரத்தின் பலனாக எம்.பி. தேர்தலில் இரட்டைக் காளைக்கு வாக்களித் தார்கள். அப்பாவும் அப்படியேதான் வாக்களித்தார். நான் சொல்லாவிட்டாலும் அதையேதான் செய்திருப்பார். சோலையண்ணனும் வெள்ளையண்ணனும் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது ரகசியமில்லை. என்னுடைய பிரச்சாரத்தால் தொண்டைமானுக்கு இரண்டு வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தன. ஆனால், கிடைத்த மொத்த வாக்கு அவருக்குப் போதுமானதாக இல்லை. வீரையா வெற்றிபெற்றார்.

சீனாத்தானா எல்லா ஊர்களுக்கும் போய் நன்றி சொன்னார். எங்கள் தெருவுக்கும் வந்தார். அப்பா குசலம் விசாரித்தார். வெள்ளையண்ணன் எம்ஜிஆர் படம் போட்ட துண்டை அணிவித்தது. அம்மா அவர்கூட வந்தவர் களுக்கு நீர்மோர் கொடுத்தார். சீனாத்தானா என் முதுகைத் தட்டிக் கொடுத்து ‘நல்லாப் படிக்கணும்’ என்றார். நான் அவருக்கு எதிராகக் களப்பணியாற்றியது அவருக்குத் தெரியவில்லை! நானும் பண்பாடு கருதிச் சொல்லவில்லை. அதுதான் என் முதல் தேர்தல் தோல்வி.

- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்,

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்