உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் ஆரம்பித்து ஆரவாரத்துடன் நடந்துகொண்டிருக்கின்றன. கால்பந்து ரசிகர்கள் அவரவர் அணிகளின் சீருடைகளை அணிந்து உள்ளூர் பப்புகளுக்குச் சென்று தொலைக்காட்சியில் போட்டிகளை ரசிக்கின்றனர். போட்டிகள் பற்றிய தகவல்களையும் ஆர்வத்துடன் சேகரிக்கின்றனர். அந்தத் தகவல்களில் பொருளியல் கருத்துகளுடன் தொடர்புள்ள பல அம்சங்கள் உண்டு. இது ரசிகர்களுக்குப் பிடிக்குமோ என்னவோ எனக்குப் பிடிக்கும்.
உதாரணத்துக்கு, இந்த பெனால்டி வாய்ப்புகளையே எடுத்துக்கொள்ளுங்கள். இரு அணிகளும் சம வலுவுடன் மோதும்போது - அல்லது மோதாமல் இருக்கும்போது - ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் குறைந்துவிடும். அப்போது தற்செயலாக பெனால்டி வாய்ப்பு கிடைத்தால் ஆட்டம் மீண்டும் விறுவிறுப்படையும். ஆனால், இங்கும் எதிர்பார்த்தபடி இல்லாமல் பழையபடியே ஆட்டம் தொடரலாம். அதற்குக் காரணம், பொருளியல் அறிஞர் ஜான் ஃபோர்பஸ் நாஷ் ஜூனியர் வகுத்தளித்த சமநிலைக் கோட்பாடுதான் (நாஷ் ஈக்விலிபிரியம்).
ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அல்லது ஒரு நிறுவனத்தின் முக்கிய திருப்புமுனைகளில் எப்படித் திட்டமிடுவார்கள், எப்படிச் செயல்படுவார்கள் என்று ஊகித்துப் புதிய கோட்பாட்டை அவர் முன்வைத்தார். தொடர்ந்து ஒரே மாதிரி செயல்பட்டுக்கொண்டிருந்தால், எதிராளியும் அதை ஊகித்து அதற்கேற்ப பதில் நடவடிக்கையை எடுப்பார்; திடீரென்று வேறு மாதிரியாக விளையாட ஆரம்பித்தால் எதிராளி நிலைகுலைந்து தோல்வியைத் தழுவுவார். இரண்டு பேர் மட்டும் ஆடும் ஆட்டத்தில் ஒருவருக்கு வெற்றி என்றால் சந்தேகமில்லாமல் இன்னொருவருக்குத் தோல்விதான் கிடைக்கும். எனவே, வெற்றிக்கு ஆட்ட உத்திகளை மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும்.
வெற்றியின் ரகசியம்
நிஜ வாழ்க்கையில் இதைச் சோதித்துப் பார்க்க நாம் பெனால்டி வாய்ப்புகளைப் பயன்படுத்தலாம். கால்பந்தில் முன்கள வீரர் ஒரே திசையில் ஒரே மாதிரி பந்தை உதைத்துக்கொண்டிருந்தால் கோல் கீப்பர் அதை எளிதாகத் தடுத்துவிடுவார். நிஜ வாழ்க்கையில் ஒரு நிறுவனம், ஒரு வங்கி அல்லது ஒரு நாடு ஆகியவற்றின் உத்திகளைக் கொண்டு இதை ஆராய்வது கடினம். அதே வேளையில், ஒரு கால்பந்து அணியின் ஆட்டத் திறன், ஆடும் விதம்குறித்த புள்ளிவிவரங்களிலிருந்து எளிதாக மாற்று வழியைக் கணித்துவிடலாம்.
பல்வேறு நாடுகளில் தொழில்முறை கால்பந்து போட்டிகளில் 1995 செப்டம்பர் முதல் 2012 ஜூன் வரையில் அடித்த 9,017 பெனால்டி கிக்குகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன். நாஷ் கோட்பாட்டில் உள்ளபடி ஆட்டக்காரர்கள் கோல்கீப்பர் எதிர்பாராத வகையில், எதிர்பாராத திசையில் அடிக்கவே முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், சுமார் 60% உதைகள் கோல் வலைக்கு வலது புறமும் 40% இடது புறமும் நோக்கியே கொடுக்கப்பட்டன. இதற்குக் காரணம், ஆட்டக்காரர்களின் இரண்டு கால்களுக்கும் ஒரே மாதிரியான வலு கிடையாது. எல்லா வீரர்களுமே ஒரு பக்கமாகப் பந்தை உதைப்பதில்தான் அதிகத் தேர்ச்சி உள்ளவர்கள். வலுகுறைந்த காலால், அதிகம் உதைத்திராத பகுதி நோக்கி பந்தை உதைப்பதற்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு. கோல்கீப்பரின் வலதுபக்கத்தைவிட இடதுபக்கமாக உதைக்கப்படும் பந்துகள்தான் கோலுக்குள் செல்வது அதிகம். இந்த ஆய்வில் பெனால்டி வாய்ப்புகள் ஒரு சின்ன உதாரணம்தான்.
திறன்மிகு சந்தைக் கோட்பாடு
பங்குச் சந்தையில் யாரும் எந்தப் பங்கையும் சந்தையில் விற்கும் விலையைவிடக் குறைந்த விலைக்கு வாங்கிவிட முடியாது, சந்தையில் விற்கும் விலையைவிட அதிகமாகவும் விற்றுவிட முடியாது என்பதே திறன்மிகு சந்தைக் கோட்பாடாகும். ஆனால், ஒரு நிறுவனம் அடையப்போகும் வளர்ச்சி அல்லது தொய்வுகுறித்து அந்த நிறுவன வட்டாரங்களிலிருந்து ரகசியத் தகவல் கசிந்தால், அதைப் பெற்றவர்கள் அதற்கேற்ப அந்த நிறுவனத்தின் பங்குகளைச் சந்தையில் வாங்கவோ, தள்ளிவிடவோ முயல்வார்கள். ரகசியமாக அல்ல பகிரங்கமாகக் கிடைக்கும் சில தகவல்களும் பங்குச் சந்தையில் விலைகளை உயர்த்துவதையும் தாழ்த்துவதையும் சமீபகாலங்களாகப் பார்த்துவருகிறோம். பகிரங்கத் தகவல்கள் வெளியாகாமல் தடுக்க முடியாது. இந்த இடத்தில்தான் கால்பந்து விளையாட்டு, பொருளியலைப் புரிந்துகொள்ளக் கைகொடுக்கிறது. பொருளாதார நிபுணர்கள் கிராக்சன், ஜே. ஜேம்ஸ் ரீட் ஆகியோர் கால்பந்து போட்டிகளின் ரசிகர்கள் சூதாடுவதை ஆய்வுசெய்துள்ளனர். ஆட்டத்தின் முதல் பாதி முடியும் நேரத்தில் ஏதாவது ஒரு அணி ஒரு கோல் போட்டு முன்னிலை பெற்றால், அடுத்த பாதி நேரத்தில் ஆட்டம் எப்படி முடியும் என்று ரசிகர்கள் தங்களுக்குள் பந்தயம் கட்டுவார்கள். இதுவரை ஆடிய விதம், இரு அணிகளிலும் உள்ளவர்களின் திறமை, அணி மேலாளர்களின் சாமர்த்தியம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பந்தயத் தொகை இருக்கும். பந்தயம் கட்டுகிறவர்கள் ஆட்டத்தின் போக்கை ஊன்றிக் கவனித்துத்தான் கட்டுவார்கள். ஆட்டத்தில் இடம்பெறும் அணியின் மீதான தனிப்பட்ட விருப்புவெறுப்பு காரணமாகப் பந்தயம் கட்ட மாட்டார்கள். இதைத்தான் திறன்மிகு சந்தைக் கோட்பாடு என்கிறோம்.
பாரபட்சம், அச்சம், ஊழல், ஊக்குவிப்பு ஆகியவை காரணமாக ஏற்படும் மாற்றங்களை விளக்கவும் பொருளாதாரத்தில் கோட்பாடுகள் உள்ளன. கால்பந்து ஆட்டம் ரசிகர்களுக்குச் சோர்வை ஏற்படுத்தினாலும் பொருளாதார அறிஞர்களுக்கு சோர்வைத் தராது. அவர்கள் அதன் ஒவ்வொரு அசைவையும் பார்த்து நிஜ வாழ்க்கையில் எடுக்கப்படும் முடிவுகளுடன் ஒப்பிட்டுப் புதிய கோட்பாடுகளைத் தயார் செய்துகொண்டே இருப்பார்கள். என்னைப் பொருத்தவரை எனக்குப் பொருளாதாரமும் பிடிக்கும் கால்பந்தும் பிடிக்கும் என்பதால் இரண்டிலிருந்தும் நான் பெறுவது மகிழ்ச்சியே!
தமிழில்: சாரி © தி நியூயார்க் டைம்ஸ்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago