தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- கலைஞர்களை களமிறக்கிய காங்கிரஸ்!

By ஆர்.முத்துக்குமார்

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருந்த நீதிக் கட்சிக்கு இரண்டு ஆண்டுகளிலேயே சிக்கல்கள் வந்துவிட்டன. உபயம்: உட்கட்சிக் குழப்பம். பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் முதலமைச்சர் முனிசாமி நாயுடுவுக்குப் பதிலாக ரவு ஸ்வெட சல்லபதி ராமகிருஷ்ண ரங்காராவ் என்கிற பொப்பிலி அரசர் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பணிகளுக்கும் பகைகளுக்கும் மத்தியில் நீதிக் கட்சி அரசு இயங்கிக்கொண்டிருந்தது.

1934-ல் சென்னை உள்ளிட்ட மாகாணங்களுக்கும் இந்திய சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், பிரிட்டிஷ் இந்தியாவில் இருக்கும் இரட்டை ஆட்சி முறையில் திருத்தம் கொண்டுவர அமைக்கப்பட்ட சைமன் குழுவின் அறிக்கை வெளியாவதில் காலதாமதம் ஆனது. விளைவு, மத்திய சட்டமன்றத்துக்கு மட்டும் தேர்தலை நடத்திவிட்டு, மாகாண சட்டமன்றத் தேர்தல்களைக் கிடப்பில் போட்டுவிட்டது பிரிட்டிஷ் அரசு.

அதன்படி, சென்னை மாகாணத்தில் இருந்த பொப்பிலி அரசரின் ஆட்சிக் காலம் நீட்டிக்கப்பட்டது. எப்போது தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று தெரியாத விநோதமான சூழல். அது காங்கிரஸ் தலைமையை யோசிக்க வைத்தது. 1934 மே மாதம் பாட்னாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி எதிர்காலத் திட்டம் குறித்து விவாதித்தது. அப்போது காங்கிரஸ் எடுத்த முடிவு பிரிட்டிஷ் இந்தியத் தேர்தல் வரலாற்றில் பெரும் திருப்புமுனை.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இதுவரைக்கும் நடத்திக்கொண்டிருந்த ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தது காங்கிரஸ். அதன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் நேரடியாகக் களமிறங்கும் என்பது தெரிந்தது. பின்னர், சைமன் கமிஷனின் பரிந்துரைகள் வெளியாகின. அவற்றில் பெரும்பாலானவை ஏற்கப்பட்டு, 1935-ல் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் 1937 பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

காங்கிரஸ் கட்சியே நேரடியாகக் களம் காண்பதால் அந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. பி.சுப்பராயன், எஸ்.ராமநாதன் போன்ற நீதிக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் திடீரென காங்கிரஸில் சேர்ந்தது அதை உறுதிசெய்தது. ஆனாலும், வெற்றிவாய்ப்பை அதிகரிக்க காங்கிரஸ் பல காரியங்களைச் செய்தது. முக்கியமாக, மேடைக் கலைஞர்களைப் பிரச்சாரக் களத்துக்கு அழைத்துவந்தது.

திராவிட இயக்கம்தான் மேடைக் கலைஞர்களைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைத்துவந்தது என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு முன்பே கலைஞர்களைப் பயன்படுத்திய கட்சி காங்கிரஸ். அதன் முன்னணித் தலைவர் சத்தியமூர்த்தி நாடகக் கலைஞர்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர். அடிப்படையில் அவரும் ஒரு நாடகக் கலைஞர்.

தேர்தல் களத்தில் மக்களின் கவனத்தைக் கவர்வதற்கு ஏதுவாகப் பாடல்கள், இசைத்தட்டுகள், திரைப்படங்கள் போன்ற ஒலி-ஒளி ஊடகங்களைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினார் சத்தியமூர்த்தி. அதுவும் போதாதென்று தோன்றியதோ என்னவோ, திடீரென்று ஒருநாள் காந்தியை அழைத்துக்கொண்டு ஒரு முக்கியப் பிரமுகரைச் சந்திக்கச் சென்றார்!

- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘மதுவிலக்கு’, ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

(கோஷம் போடுவோம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்