சமூகநீதி வரலாற்றில் தமிழகமே முன்னோடி. “உள்ளாட்சி நிர்வாகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களையும் நியமிக்க வேண்டும்” என அயோத்திதாசப் பண்டிதரும் இரட்டை மலை சீனிவாசனும் ‘திராவிட மகாஜன சபை’ மாநாட்டில் கோரிக்கை விடுத்தது 1891-ல். ஒருவகையில், அதுவே நவீன இந்திய வரலாற்றில் பதிவான தலித் மக்கள் பிரதிநிதித்துவத்துக்கான முதல் குரல். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவமும் தனித் தொகுதிகளும் எப்படிக் கிடைத்தன எனும் வரலாற்றை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
1919 - இந்தியாவின் ஆட்சியதிகாரத்தில் இந்தியர்களும் பங்கேற்கலாம் என்ற வாய்ப்பை இந்த ஆண்டு வெளியான அரசியல் சாசனம் மூலம் பிரிட்டிஷ் அரசு தந்தது. சொத்துள்ளவர்களுக்குத்தான் வாக்குரிமை. 1920-ல் சென்னை மாகாணத்தின் முதல் தேர்தல் நடந்தது. சட்டமன்றத்துக்கு 98 பேர் தேர்வாகினர். 29 நியமன உறுப்பினர்களில் தலித் மக்களுக்கும் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில்தான் சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எம்.சி.ராஜா நியமிக்கப்படுகிறார். அவர் அப்போது நீதிக்கட்சியில் இருந்தார். முக்கியமான விஷயம் ஆங்கிலேய ஆளுநரால் நியமிக்கப்படும் முறைதான் இருந்தது அப்போது!
1932 - வட்ட மேஜை மாநாடுகளின் தொடர்ச்சியாக, அம்பேத்கரின் பெரும் போராட்டத்தின் விளைவாக ஆங்கிலேய அரசு ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கான ஆணை’யை 1932 ஆகஸ்ட் 16 ல் வெளியிட்டது. 20 வருட காலத்துக்கு என்ற நிபந்தனையுடன் இந்திய அளவில் 71 இடங்கள் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டன. இஸ்லாமியர்களுக்கும் சீக்கியர்களுக்கும் தரப்பட்ட இரட்டை வாக்குரிமை தலித்துகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதன்படி, தலித்துகள் தங்களின் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஒரு வாக்கும் பொதுத்தொகுதி வேட்பாளருக்கு ஒரு வாக்கும் போடலாம்.
காந்தி “தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த உறுப்பினரை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே கூடித் தேர்ந்தெடுக்கும் முறையானது, சமூக இணக்கத்துக்கு மாறாக, சமூகப் பிளவுக்கே வழிவகுக்கும்” என்றார். காந்தியின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, அம்பேத்கருடனான பேச்சுவார்த்தை நடந்தது. சமரச ஏற்பாடாக புனா ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில், இரட்டை வாக்குரிமை போனது. பதிலுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 148 இடங்களானது.
1935 - பிரிட்டிஷாரின் புதிய அரசியல் சாசனம் வந்தது. அதன்படி முதல் தேர்தல் 1937-ல் நடந்தது. 18% தலித்துகளுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், இப்போதும் படித்த/சொத்துரிமை உள்ளவர்களுக்கே வாக்குரிமை.
1950 - சொத்து/படிப்பு நிபந்தனை இல்லாமல் வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை தரும் ஜனநாயக நாடாக இந்தியா மலர்ந்தது.
1951-1952 பிரிவினைக்குப் பிந்தைய சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல். மொத்த நாடாளுமன்றத் தொகுதிகள்: 489. இதில் தலித்துகள், பழங்குடிகளுக்கான ஒதுக்கீடு 94. இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் தலித்/பழங்குடி வேட்பாளர்கள் மட்டுமே நிற்கும் முறையும் சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறையும் - அதாவது ஒரே தொகுதியில் பொது உறுப்பினர் ஒருவர், தலித்/பழங்குடி உறுப்பினர் ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கும் முறையும் - இருந்தன. இவர்களுக்கான ஓட்டுகளை தலித்துகள்/பழங்குடிகள், பொதுப் பிரிவினர் என்று எல்லோருமே அளிப்பார்கள். மாநிலங்களவையில் இப்படியான இடஓதுக்கீடு ஏதும் கிடையாது.
1961 இரட்டை உறுப்பினர் தொகுதி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தனித் தொகுதிகள் இன்றைக்கு உள்ளதுபோல மாறின. அதாவது, பொது உறுப்பினர் ஒருவர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த உறுப்பினர் ஒருவர் என்று இரு உறுப்பினர்கள் அல்லாமல், தனித் தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட வர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்; அனைத்துத் தரப்பினரும் அவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முறை அமலுக்கு வந்தது.
2016 - மக்களவையில் உள்ள மொத்த இடங்கள்: 543. இதில் தனித் தொகுதிகளின் எண்ணிக்கை 131.
தமிழ்நாடு தமிழகச் சட்டப்பேரவையில் உள்ள 235 (ஒரு இடம் ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினருக்கானது்) இடங்களில் தனித் தொகுதிகளின் எண்ணிக்கை: 46. இதில் தலித்துகளுக்கான இடங்கள்: 44. பழங்குடியினருக்கான இடங்கள்: 2. இதேபோல, தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 7 தொகுதிகள் தனித் தொகுதிகள்.
- தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago